Thursday, January 7, 2016

குரான் ஷரீஃபை புரிந்து கொள்ளுதல்

1

முஸ்லீம்கள் இறைவனை யாராலும் எதுவாலும் படைக்கப்படாத யாருடனும் எதுவுடனும் பங்குபோடாத கற்பனைக்கு எட்டாத வார்த்தைகளில் அடங்காத அனுபவித்து தெரிந்து கொள்ளக்கூடியதாக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். 

அவர்கள் மேலும், முஹம்மது நபிகளை இறைவனின் இறுதி தூதர் எனவும் தங்கள் வாழ்க்கையின் அழகிய முன்மாதிரியாகவும் அகிலத்தின் அருட்கொடையாகவும் பார்க்கிறார்கள்.

அதே போல், குரான் ஷரீஃபையும் இறைவனின் பேச்சாகவும், முஹம்மது நபிகளுக்கு அருளப்பட்டதாகவும் நம்புகிறார்கள்.

இப்படி நம்பும் முஸ்லீம்களாகிய நாங்கள் அல்லது முஸ்லீமாகிய நான், அதில் உள்ள வசனங்களை ஆராய்ந்து பார்க்கிறேன் என்றால் அதை சந்தேகப்பட்டு அது சரியானது தானா என்று ஆறுதல் அடையும் பொருட்டாக இருக்க முடியாது. 

ஆனால் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இஸ்லாத்தின் அடிப்படையே நம்பிக்கையில் தான் பிறக்கிறது. இதை நம்புங்கள் என்று கட்டாயப்படுத்துவது சரியில்லை என்ற காரணத்தினால் தான் 'மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை' என குரான் ஷரீஃபே சொல்கிறது.

ஆனால், குரான் ஷரீஃபை ஆராய்வதற்காகவோ அல்லது இஸ்லாத்தின் மீது தாம் கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகவோ அல்லது குரான் ஷரீஃப் இறைவனின் வேதமே அல்ல என்று எப்பாடுபட்டாவது நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவோ அது நல்லதோ கெட்டதோ குரான் ஷரீஃபுடைய பல வசனங்களை எடுத்து கொண்டு 'இது அறிவியல் பூர்வமானதா?' என்ற கேள்விக் கனைகளை தொடுத்து வருகிறார்கள்.
------------------------------------------------------------------------------------------

2

அத்தகைய கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு முன்னர் அவர்கள் குரான் ஷரீஃபை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு குரான் ஷரீஃப் எப்படி அதன் முதன்மையான பெறுநர்களை (இங்கே முதன்மையான பெறுநர்கள் என்று நான் குறிப்பிடுவது அந்த கால அரேபிய மக்களை) அணுகியது என்பதை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

குரான் ஷரீஃப் கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்ப அருளப்பட்டது. சில வாசகங்களை கவனித்தீர்கள் என்றால், 'அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்..' என்று ஆரம்பிப்பதை கவனித்திருக்கலாம்.

குரான் ஷரீஃபானது அந்த கால அரேபியர்களுக்கு விஞ்ஞானத்தை போதித்து கொண்டிருக்கவில்லை, அது விஞ்ஞான புத்தகமுமன்று. ஆனால் அந்த கால அரேபியர்களின் கேள்விகளுக்கோ அல்லது அவர்களின் வாதங்களுக்கோ பதிலளிக்குமுகமாக சில வசனங்களை சொல்லும் போது விஞ்ஞான செய்திகள் கலந்திருக்கலாம்.

ஆனால் அந்த வசனங்களில் விஞ்ஞானம் பிரதானமாக இருக்கவில்லை என்பது தான் உண்மை.

அடுத்து, அப்படி கூறப்படும் விஞ்ஞான செய்திகளில் தற்போதைய கண்டுபிடிப்புகளை வைத்து ஒப்பிட்டு பார்க்கும் போது தவறுதலாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. 

அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், குரான் ஷரீஃப் இறங்கிய காலகட்டத்தில் அரேபியர்கள் இலக்கியத்தை பெரிதாக மதித்தார்கள். அரேபிய மொழியை பேசாதவர்களை 'வாயே இல்லாதவர்கள்' என்று ஏளனமாக பார்த்தார்கள். அவர்களின் குரானின் சொல்நயம் பொருள்நயத்தையும் பார்த்து விட்டு 'இது மனிதனின் சொல்லன்று' என்று சரண்டர் ஆகுமளவுக்கு அதன் இலக்கிய இலக்கண தன்மை அமையப் பெற்றிருந்தது என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.

-----------------------------------------------------------------------------------
3

மேலே நான் சொன்ன கருத்தை ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.

குரான் ஷரீஃபின் 'ஸூரத்துத் தாரிக் (விடிவெள்ளி)' என்ற 86 வது அத்தியாயத்தின் 5, 6, 7, 8 வசனங்களை பார்ப்போம்

86:5 - மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்

86:6 - குதித்து வெளிப்படும் நீரினால் படைக்கப்பட்டான்

86:7 - முதுகுத் தண்டிற்கும், விலா எலும்பிற்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது

86:8 - இறைவன் மீட்டும் (restore) சக்தியுடையவன்

மேலே காணப்படும் வசனத்தில் விஞ்ஞான செய்திகள் அதாவது மனிதன் எதிலிருந்து உருவாகிறான் என்பது இருந்தாலும் இங்கே அதன் முதன்மையான பெறுநர்களுக்கு சொல்ல நினைப்பது விஞ்ஞானத்தை பற்றிய உண்மையை அல்ல. மாறாக, இறைவன் கூற நினைப்பது இறந்து மண்ணோடு மண்ணாகி போன மனிதனை இறைவன் மீண்டும் படைக்க சக்தியுடையவன் என்பதை தான்.
------------------------------------------------------------------------------------
4

அந்த கால அரேபியர்களிடம் முஹம்மது நபிகள் சொல்கிறார்கள், 'நியாய தீர்ப்பு நாள் ஒன்று இருக்கிறது, அது வந்தே தீரும், அப்போது இறைவன் முன்னே மக்கள் அனைவரும் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு கொண்டு வரப்படுவார்கள், அவர்கள் செய்த நல்லவை தீயவை யாவும் நேரான நீதியான தராசில் அளக்கப் பட்டு அவர்கள் செய்ததற்குறிய பிரதிபலனை பெற்று கொள்வார்கள் என்று சொல்கிறார்கள்.

அதற்கு அந்த கால அரேபியர்கள், 'அதெப்படி, நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி மக்கி போன பிறகு எங்களை இறைவன் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்..?' என்று கேட்கிறார்கள்.

அதற்கு இறைவன் பதிலளிக்கும் போது தான்,

மனிதன் எங்கிருந்து வருகிறான் என்பதை அவன் கவனிக்கட்டும், அப்படி கவனித்தான் என்றால் அவன் ஒண்ணுமே இல்லாமல்  முதுகு தண்டிற்கும்  விலா எலும்பிற்கும் நடுவிலிருந்து குதித்து வெளிப்படும் நீரிலிருந்து தான் அவன் படைக்கப்பட்டிருக்கிறான், அப்படியிருக்க மண்ணோடு மண்ணாகி போனவனை உயிர்ப்பிக்க இறைவனால முடியாதா..? அவ்வாறு மீட்டெடுக்க இறைவன் சக்தியுடையவன் தான்' என்பது போல் அமைகிறது அந்த இறை வாக்கியம்.
------------------------------------------------------------------------------------------
5

ஆக, இந்த வசனத்தில் நாம் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன

1. அந்த கால அரேபியர்களுக்கு 'இறந்த பிறகு மீண்டும் படைக்க முடியுமா' என்ற கேள்விக்கு பதிலாக அமைந்தது தான் அந்த வசனம்.

2. விஞ்ஞான உண்மையை அதாவது விந்து எங்கிருந்து உருவாகிறது என்ற விபரத்தை அந்த முதன்மையான பெறுநர்களுக்கு எடுத்து கூற அல்ல

3. அதுமட்டுமல்லாமல், அந்த கால அரேபியர்களின் சந்தேகமான 'இறைவனால் இது சாத்தியமாகுமா..?' என்ற சந்தேகத்துக்கு பதிலளிக்கும் விதமாக தான், 'மனிதர்கள் அவர்களை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் என்ன வெறும் அற்பமான குதித்து வெளியாகும் தண்ணீரிலிருந்து வெளிப்பட்டவர்கள் தானே, ஒண்ணுமே இல்லாமல் இருந்த நிலையிலிருந்து அவர்களை உருவாக்கிய இறைவனுக்கு மனிதனை மறுபடியும் உருவாக்குவதில் என்ன சிரமம் வந்து விடப் போகிறது.' என்று அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது கூடவே தாம் எவ்வாறு படைக்கப்பட்டோம் என்பதை மறந்த மனிதர்களின் திமிரான வாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இவ்விதம் கூறுகிறான். 

4. அப்போது இறைவன் குறிப்பிடுகையில் முதுகுத் தண்டிற்கும் விலா எலும்பிற்கும் இடையில் என்று ஏன் குறிப்பிட வேண்டும், குழப்பமாக இருக்கிறதே, நேரடியாக 'இங்கிருந்து' வெளியாகும் 'விந்து'  என்று கூறியிருக்கலாமே என்ற கேள்வி எழலாம், இங்கே நீங்கள் அரேபிய இலக்கியத்தை பத்தி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

A. உதாரணமாக, குமரி முதல் இமயம் வரை என எழுதுகிறார்கள் என்று வையுங்கள், 'ஏன் அது என்னா குமரி முதல் இமயம் வரை - இந்தியான்னு சொல்ல வேண்டியது தானே' என்று நீங்கள் கேக்க கூடாது? - 

B. அதுவும் தவிர, குமரியிலிருந்து இமயத்திற்கு ஹைவேல நேர்கோடு ஒன்றை வரைந்து இந்த பகுதியை மட்டும் தான் குறிக்கும், இந்த கோட்டில் அடங்காத ஊர்களெல்லாம் அடங்காது என்று சொல்லக் கூடாது.

முதலாவது 'குமரி முதல் இமயம் வரை'  என்பது இந்தியா முழுவதையுமே குறிக்கும் 
இரண்டாவது குமரியிலிருந்து நேர் கோட்டில் எந்த ஊர்கள் வருகிறதோ அந்த ஊரை மட்டும் அது குறிக்காது

ஆக, இங்கே இறைவன் குறிப்பிட விரும்புவது முதுகுத் தண்டிற்கும் விலா எலும்பிற்கும் இடையே என்று குறிப்பிடுவது அந்த இரண்டிற்கும் நேர் கோடு ஒன்றை வரைந்து அங்கிருந்தா விந்து வெளியாகிறது என்ற கேள்வி அர்த்தமற்றதாகி விடுகிறது, ஏனெனில் அது (பேர் சொல்லகூட அருகதையில்லாத) உடலிலிருந்து குதித்து வெளியாகும்  தண்ணீரிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதை குறிக்கிறது.

5. அதுவும் தவிர, 'இந்த இடத்திற்கும் இந்த இடத்திற்கும் நடுவில்' என்பதை அப்படியே நேராக நீங்கள் பார்க்க கூடாது. அதற்கு காரணம் இன்னொரு குரான் ஷரீஃபின் வசனத்தையே நீங்கள் கவனிக்கலாம்.

குரான் ஷரீஃபின் 60வது அத்தியாயம் 
'அல்-மும்தஹினா' வின் 12வது வசனத்தில் '... தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் அவர்கள் எதனை கற்பனை செய்கிறார்களோ.." என்று வரும் வாக்கியத்தில் கைகளுக்கும் கால்களுக்கும் நடுவே உள்ள உறுப்பை பற்றி குறிப்பிடவில்லை என்பது அந்த வசனத்தை நன்கு உணர்ந்து படிப்பவர்களுக்கு விளங்கும்.

குரான் ஷரீஃபுக்கு குரான் ஷரீபே விளக்கம் கொடுத்துள்ளதை நாம் புரிந்து கொள்ள முற்பட வேண்டும்.

-----------------------------------------------------------------------------

கடைசியாக குரான் ஷரீஃப் மனித குலம் முழுமைக்குமான் வேதம் தான்   என்றாலும் அது பயபக்தியுடையவர்களுக்கு மட்டும் தான் நேர்வழி காட்டும்.

தமிழன் டிவியில் இஜட்.ஜபருல்லாஹ் அவர்களின் ஹஜ் பெருநாள் சொற்பொழிவு

அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்


என்னுடைய குர்பான் பதிவின் இறுதியில் ஹமீது ஜாபர் நானா அவர்களின் பதிவில்    இஜட்.ஜபருல்லாஹ் அவர்களின் தமிழன் டிவியில் ஒளிபரப்பான பேச்சை பற்றி படிப்பதற்கு இணைப்பை கொடுத்திருந்தேன். அது எனக்கு போதவில்லை. அவர்களிடம் என் வலையில் பதிய சம்மதம் கேட்டிருந்தேன். அதே போல் ஆபிதீன் நானாஅவர்களின் இந்த பதிவின் மூலமாக தான் அந்த பதிவிற்கு சென்றேன், ஆகையால் அவர்களிடமும் சம்மதம் பெற்று விட்டேன் (யாரும் தமிழன் டிவியிடமும் இஜட்.ஜபருல்லாஹ் அவர்களிடமும் சம்மதம் வாங்கி விட்டீர்களா? என்று கேட்டு விடாதீர்கள்)

நன்றிகள்:


  • ஆபிதீன் நானா
  • ஹமீது ஜாபர் நானா
  • தமிழன் டிவி
  • இஜட்.ஜபருல்லாஹ் நானா


இனி அந்த கட்டுரை.. படியுங்கள்.. பயன்பெறுங்கள்
-------------------------------------------------------------------------------------------------------------
கடந்த 2006 ம் ஆண்டு டிசம்பர் , சத்தாம் ஹுசைனை குர்பானி கொடுத்த தினம் , தமிழன் டி.வி. யில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் நேர்காணலில் கவிஞர் இஸட். ஜஃபருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது சமுதாயத்தை குறை கூறவேண்டும் என்ற எண்ணத்துடனோ இது எழுதப்படவில்லை. உண்மையின் எதார்த்தத்தை விளக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் எழுதப்பட்டது.

 ஹஜ்ஜு பெருநாள் என்பது ஹஜ்ஜை மையமாக வைத்து கொண்டாடப்படும் திருநாள். இதனை தியாகத் திருநாள் என்றும் அழைக்கிறோம். இது முழுக்க முழுக்க இபுறாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர் மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் சுற்றி இருக்கிறது. கஃபத்துல்லாஹ்வை புதுப்பித்து 'வந்தேன், வந்தேன்' எனப் பொருள்தரும் 'லப்பைக், லப்பைக்' என்று சொன்னால் யார் வருவார்?' என்று இபுறாஹிம்(அலை) கேட்டபோது, 'நீ சொல்லு, வருவார்கள்' என்றான் இறைவன். இப்போதும் வந்துகொண்டிருக்கிறார்கள். ரசூல்(சல்) அவர்கள் காலத்திலிருந்து மட்டுமல்ல அதற்கு முந்தியும் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால் ரசூல்(சல்) அவர்கள் ஹஜ்ஜின் முறையை ஒழுங்குப் படுத்தினார்கள்.

 ஓரிறைக் கொள்கைக் கொண்டதினால் வீடு துறந்து, நாடு துறந்து இன்னல் பல அடைந்து மக்கா வந்தடைந்தார்கள் இபுறாஹிம்(அலை). எண்பத்தாறாம் வயதில் அவர்களுக்கு இஸ்மாயில் என்ற மகன் பிறந்தார். இன்னல்கள் தொடர்ந்தன, மனைவியையும் மகனையும் தனியே விடச்சொல்லி இறை உத்தரவு; இருவரையும் சுடும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போகிறேனே உங்கள் இருவரையும் யார் பாதுகாப்பார் எனக் கவலைக் கொள்கிறார்கள். மனைவி ஹாஜிராவிடமிருந்து கேள்வி எழுகிறது, உங்கள் இஷ்டத்திற்கு விடுகிறீர்களா? இல்லை இறைவன் சொல்லி விடுகிறீர்களா? என்று. இறை உத்திரவு என்றதும் எந்த இறைவன் விடச்சொன்னானோ அந்த இறைவன் எங்களை கவனித்துக்கொள்வான், நீங்கள் கவலைக் கொள்ளவேண்டியதில்லை என்று பதில் நல்குகிறார்கள் அன்னை ஹாஜிரா(அலை) 

தனித்து விடப்பட்ட குழந்தைக்கு தாகம் ஏற்பட்டு அழுகிறது; பெற்ற தாய் பரிதவிக்கிறார்; வறண்ட பாலையில் எங்கே தண்ணீர்? தூரத்தே தெரிகிறது தண்ணீர்; ஓடுகிறார் தாய், தெரிந்த இடத்தில் இல்லை; புறப்பட்ட இடத்தில் தெரிகிறது தண்ணீர், திரும்ப ஓடி வருகிறார். இப்படி கானல் நீரைக் கண்டு 'சஃபா - மர்வா'வுக்கு ஒடியதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் நாம் ஏழுமுறை ஓடுகிறோம். இதற்கு தொங்கோட்டம் என்று பெயர்.

 அன்று அவர்கள் ஓடியது தண்ணீருக்காக, ஆனால் இன்று நாமும் ஓடுகிறோம், எப்படி? கையில் மினரல் வாட்டரைப் பிடித்துக்கொண்டு, ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட வழித்தடத்தில் ஓடுகிறோம். அப்படியானால் என்ன அர்த்தம்? பொய்யாகச் செய்கிறோமா? இல்லை, நினைவுகூறுகிறோம். நினைவுகூறுகிறோம் என்று சொல்லும்போது அந்தத் தாயின் மனதில் ஏற்பட்ட பரிதவிப்பை நம் மனதில் இருத்தி ஓடவேண்டும். 'உங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை, உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறேன்' என்று அல்லாஹ் சொல்வதாக பெருமானார் சொல்கிறார்கள். அப்போதுதான் அது உண்மையான தொங்கோட்டமாக அமையும். 

அடுத்தது, 'குர்பானி', இது முக்கியமானது. இபுறாஹிம்(அலை) ஒரு கனவு காண்கிறார்கள், அந்த கனவில் தன்னுடைய மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுகிற மாதிரி வருகிறது. உடனே எழுந்து பார்க்கிறார்கள்; கண்டது கனவு என்றாலும் அதை இறைச் செய்தியாக பாவிக்கிறார்கள்; தயாராகிவிடுகிறார்கள். ஆனால் கனவு இவர்களை மட்டும் சார்ந்ததல்ல, மகனையும் சார்ந்திருக்கிறது. மகனிடம் சென்று கேட்கிறார்கள். சின்ன உதாரணம் சொல்கிறேன், எனக்கு இதேபோல் ஒரு கனவு வருகிறது "உன் மகனை அறுத்து பலியிடு" என்று. நான் என்ன செய்வேன்? முதலில் Reasoning பண்ணுவேன். எப்படி? இது அல்லாஹ்வுடைய கனவாக இருக்கமுடியாது, ஏனென்றால் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், அவன் நரபலியெல்லாம் கேட்கமாட்டான்; இது ஷைத்தானுடைய கனவு, என்று காரணம் கற்பிப்பேன். அப்படித்தான் நாம் பொதுவாகச் சொல்லுவோம். ஏனென்றால அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்துள்ளான்! ஆனால் நாம் கனவு என்று நினைப்பதை அவர்கள் இறைச் செய்தியாக ஏற்றுக்கொண்டார்கள். 

 அடுத்து மகனிடம் செல்கிறார்கள், 'மகனே! நான் இப்படி ஒரு கனவு கண்டேன், நான் உங்களை அறுப்பது போல்' என்று. உடனே மகன், 'நான் ரெடி, நீங்கள் கவலைப் படாதீர்கள்' என்கிறார். நமது மகன் என்ன சொல்லுவான்? ''இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க, நீங்க கனவு கண்டா உங்களெ பலியிட்டுக்குங்க, நம்மளெ தொடக்கூடாது, நான் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல, உம்மாவுக்கும் சொந்தமுள்ளவன். அதுக்கு மீறி செஞ்சீங்கன்னா போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்; வாப்பா என்றெல்லாம் பாக்கமாட்டேன் கொலை முயற்சின்னு சொல்லி உள்ளெ புடுச்சு வச்சுடுவேன், நல்லா இருக்காது' என்று சொல்லுவான்.

 பலியிடுவதற்காக மகனை அழைத்துச் செல்கிறார்கள் இபுறாஹிம்(அலை. வழியில் ஷைத்தான் குறுக்கிடுகிறான். இஸ்மாயிலைப் பார்த்து, 'ஏய் இஸ்மாயிலே! உன் அப்பா ஒன்னை ஏமாத்தி கூட்டிக்கிட்டுப் போறார், ஒன்னை அறுக்கப் போறார்' என்று சொல்கிறான். 'அதெல்லாம் முன்னதாகவே வாப்பா சொல்லிபுட்டாங்க நீ ஒன்னும் சொல்ல வேண்டியதில்லே' என்று கல்லால் அடித்து ஷைத்தானை விரட்டிவிடுகிறார்கள். இதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு கல்லெறிகிறோம். (ஆனால் ஒருசிலர் கல்லை அங்கே விட்டுவிட்டு ஷைத்தானை தன்கூட அழைத்து வந்துவிடுகிறார்கள். அப்போதுதானே அடுத்த மகனுக்கு அதிகமாக வரதட்சணை வாங்கலாம்!)

 குறிப்பிட்ட இடத்தில் தன் மகனை பலியிட தயாராகிவிட்டார்கள் இப்றாஹிம் (அலை). அங்கே கனவு பொய்த்துவிடுகிறது; அவர்கள் பலியிடப்படவில்லை. அப்படியானால் அங்கு என்ன பொருள்? இங்கே இரண்டு மிகப் பெரிய செய்தியை இறைவன் நமக்கு அளிக்கிறான். ஒன்று தியாகம். 

 தியாகம் என்றால் என்ன? அதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். தியாகம் என்றால் ஒன்றை இழப்பது. ஒன்றை என்று சொல்லும்போது எந்த ஒன்றையும் அல்ல, பிரியமான ஒன்றை இழப்பது அல்லது இழக்கத் தயாராகுவது. இந்த இரண்டும் முக்கியம். ஏனென்றால் 'ஒருவனுடை செயல் எண்ணத்திலிருந்து ஆரம்பிக்கிறது' என்று ரசூல்(சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே அந்த எண்ணத்திலேயே உங்கள் செயல் வந்துவிடுகிறது. 

இரண்டாவது செய்திக்கு அந்த கனவை வைத்து கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டும். இங்கே ஒன்றை யோசிக்கவேண்டும். இபுறாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் அல்லாஹ்வுடைய நபியாக இருக்கட்டும், ஆனால் முதலில் அவர்கள் அல்லாஹ்வின் 'அபுது' - அல்லாஹ்வின் அடிமை, அதன்பிறகுதான் நபி. இரண்டுபேரும் ஒத்துக்கொண்டார்கள் பலியாவதற்கு; அல்லாஹ் சொன்னால் செய்யவேண்டும். அவர் பலி கொடுக்கவும் சரி, இவர் இறக்கவும் சரி, இரண்டுபேரும் தயாராகிவிட்டார்கள். அப்படியானால் அவர்களுடைய நிலையில் அவர்கள் சரியாக இருக்கிறார்கள். அந்த நிலையில் அவர் பலி கொடுத்தாரானால் அல்லாஹ் தன் நிலையிலிருந்து, தன் 'தரஜா'விலிருந்து கீழே இறங்கிவிடுவான். ஏன்? அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். எனவே அவன் பார்க்கிறான், நம்முடைய அடியார்கள் தங்கள் நிலையில் சரியாக நிற்கிறார்கள், நாமும் சரியாக இருக்கவேண்டும், நம்முடைய அருளைக் காட்ட வேண்டுமல்லவா? உடனே ஆட்டைக் கொடுக்கிறான். இறைவன் தன்னுடைய நிலையிலிருந்து மாறமாட்டான். வேறு வார்த்தையில் சொன்னால் "அல்லாஹ்வின் மெய்யடியான் அல்லாஹ் சொல்கிற மாதிரி சரியாக அவன் நிலையில் இருந்தானென்றால் அல்லாஹ்வும் தன் நிலையில் உறுதியாக இருப்பான்." என்ற செய்தி நமக்கு காத்திருக்கிறது.

 அவன் சொல்கிறான், 'என்னுடைய மெய்யடியார்கள் நான் கொடுக்கும் செல்வத்திலிருந்து என் வழியில் செலவு செய்துகொண்டே இருப்பார்கள்' என்று. இதிலும் இரண்டு விஷயம் இருக்கிறது. நான் கொடுத்த செல்வம் என்கிறான், அதிலிருந்து பார்த்தீர்களானால் நான் கொடுக்காத செல்வம் என்று ஒன்று இருப்பது தெரியவரும். வட்டி நிறைய வாங்குகிறோம், வட்டி ஹராம் என்கிறோம். வட்டி யாருடைய செல்வம்? ஷைத்தானுடைய செல்வம். ரசூல்(சல்) அவர்கள் சொல்கிறார்கள், 'அல்லாஹ்விடம் கேட்கும்போது எனக்கு ரஹ்மத்தான செல்வத்தைத் தா' என்று கேளுங்கள் என்று சொன்னார்கள். ரஹ்மத்தான செல்வம் என்றால், அல்லாஹ் சொல்கிற மாதிரி, 'நான் கொடுக்கும் செல்வம்'; எப்படி சம்பாதிக்க வேண்டுமோ அப்படி. அதேமாதிரி எப்படி செலவழிக்கவேண்டுமென்றால் 'என் வழியில்' என்கிறான். அப்படி இருந்தீர்களென்றால் அவன் கரெக்டாக இருப்பான். அப்படி இல்லையென்றால் என்னவாகும்? நம்மிடம் செல்வம் இருக்கும், செலவு பண்ணுவோம், எதற்கு செலவு பண்ணுவோம்? கிட்னி ஃபெயிலியருக்கும், ஹார்ட் ஃபெயிலியருக்கும், இன்னும் வேறு தப்பான வகைக்கும். ஆகவே என்ன தெரிகிறது? நாம் நம் நிலையில் சரியாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அல்லாஹ் அவன் நிலையில் சரியாக இருப்பான் என்ற செய்தி உறுதியாகிறது.

மீண்டும் குர்பானிக்கு வருவோம். குர்பானி கொடுப்பதற்கு தகுதியுள்ள மிருகம் ஆடு, மாடு, ஒட்டகம். இந்த மூன்று மட்டுமே. இதையால்லாமல் வேறு எதையும் கொடுக்கவும் முடியாது. தமிழகத்தைப் பொருத்தவரை ஆடு, மாடு மட்டுமே கிடைக்கும். அரபு நாட்டில் ஒட்டகம் வீட்டுப் பிராணி. ஆகவே அங்கு ஒட்டகத்தை குர்பானி கொடுப்பது சாதாரண விஷயம். அதற்காக நாமும் கொடுக்கவேண்டும் என்று ராஜஸ்தானிலிருந்து ஒட்டகத்தைக் கொண்டுவந்து ஊர் முழுவதும் ஊர்வலம் விட்டு கூட்டாகக் குர்பானி கொடுப்பதென்றால் அது அவர்களுக்கு செய்யும் நினைவுக் கடனா? இல்லை நமக்கு நாமே தேடிக்கொள்ளும் விளம்பரமா? குர்பானி எல்லோருக்கும் கடமை, ஹஜ்ஜுக்குப் போயிருப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. ஆடு சாதாரண காலத்தில் 1000, 1500 விற்கிறது. குர்பானி காலத்தில் 4000 ரூபாய். அப்படி இருக்கும்போது வசதி உள்ளவர்களைத் தவிர வேறு யார் கொடுக்கமுடியும்? எனவே அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் 'நீங்கள் கொடுக்கும் குர்பானியை நீங்களும் சாப்பிடுங்கள், தேவை உள்ளவர்களுக்கும் கொடுங்கள்' என்று. 

 குர்ஆனில் இபுறாஹிம்(அலை) அவர்களைப் பற்றி சொல்லும்போது, அவர் என் நண்பன் என்கிறான் அல்லாஹ். அத்துடன் நின்றுவிடாமல், 'என்னுடைய ரசூலிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது, அவற்றைத் தேடிக்கொள்ளுங்கள்' என்று சொல்லும் இறைவன் 'இபுறாஹிம்(அலை) விடத்திலும், அவர்களை சுற்றியுள்ளவர்களிடத்திலும் அழகிய முன்மாதிரி இருக்கிறது' என்று சொல்கிறான். எனவே ஹஜ்ஜு பெருநாள் முழுக்க முழுக்க இபுறாஹிம்(அலை) அவர்களுக்கு அளிக்கும் நன்றிக்கடன், tribute, புகழாரம். அதில் செய்யும் ஒவ்வொரு கிரியையும் அவர்களின் நினைவாகவே இருக்கவேண்டும், அந்த இறைச்செய்தி உட்பட. அன்னை ஹாஜிரா இபுறாஹிம்(அலை) அவர்களிடம் என்ன சொன்னார்கள்? 'நீங்கள் சொன்னால் நீங்கள் காப்பாற்றவேண்டும், அல்லாஹ் சொன்னானென்றால் அல்லாஹ் காப்பாற்றுவான்.அதனால் நீங்கள் கவலைப் படாதீர்கள்'. ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய மிகப் பெரிய செய்தி இது. 

ஆகவே முழுக்க முழுக்க மனித சமுதாயத்திற்கு வாழ்க்கையில் செய்யக்கூடிய படிப்பினை அடங்கிய மிகப் பெரிய செய்தி இந்த ஃபர்ளான ஹஜ்ஜில், அதை பெருநாளாகக் கொண்டாடும் தினத்தில் இருக்கின்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லாருக்கும் நல்லருள் புரிவானாகவும். 

 ***

 நன்றி : இஜட். ஜபருல்லாஹ், தமிழன் டி.வி

 ***

 சுட்டி : ஈ.எம். ஹனிபா அவர்களின் 'ஹஜ்ஜுப் பெருநாள்' (MP3)

குரான் ஷரீஃப் - ஓர் அற்புதம்

1

முஸ்லீம்களுக்கிடையே குரான் ஷரீஃப் இறைவனுடைய பேச்சா இல்லையா என்பதில் சர்ச்சையே இல்லை.  ஆஹா..! இந்த விஷயத்திலாவது சர்ச்சை இல்லாமல் இருக்கிறதே என்று ஆறுதல் அடைய முடியாது. 

ஏனெனில் அவர்களுடைய சர்ச்சை அது எந்த நாளில் இறக்கப்பட்டது என்பதில் உள்ளது. என் போன்றோர் அது ரமலான் மாதத்தின் 27 ஆம் இரவன்று இறங்கியிருக்கலாம் என்றும் இல்லை இல்லை அது கடைசி பத்து தினங்களில் ஒற்றை படை இரவில் ஏதாவது ஒரு இரவில் இறங்கியது என்றும் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் மறுசாரார் பதிலடி கொடுத்தும் வருகிறார்கள். 

சரி, இந்த சர்ச்சை கியாமத் (இறுதி நாள்) வரை நடந்து கொண்டு தானிருக்கும். அதில் நான் அதிகம் கவனம் எடுத்து கொள்ள போவதில்லை.

குரான் ஷரீஃப் உலகத்தின் மிகப்பெரிய அற்புதம் என்று நான் உளப்பூர்வமாக அனுபவித்து கூறுகிறேன். நான் அவ்வாறு கூறுவதற்கு தர்க்க ரீதியான காரணமும் உண்டு.

மூஸா (மோஸல்) நபியவர்கள் கடலை பிளந்து அற்புதம் நிகழ்த்தினார்கள். ஈஸா (ஜீஸல்) நபியவர்கள் இறந்தவர்களை உயிர்பித்தார்கள். இன்னும் புராணங்கள், இதிகாசங்கள் போன்ற எல்லா வற்றிலும் தீர்க்கதரிசிகள் அல்லது அவதாரங்கள் அற்புதங்களை நிகழ்த்தியதாக தான் காண்கிறோம்.

ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செய்த அற்புதம் குரான் ஷரீஃப் தான். இதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள். "இறைவனிடமிருந்து என்ன அற்புதத்தை கொண்டு வந்துள்ளீர்கள்.." என்ற கேள்வி அவர்கள் முன் எழுப்பப் பட்டது.

இந்த கேள்வியில் அப்படி ஒன்றும் ஆச்சர்யமில்லை. தீர்க்கதரிசிகளாக தோன்றியவர்கள் ஏதாவது ஒரு அற்புதத்தை செய்து காட்ட வேண்டும் என்பது நியதி. 

மேற்கூறிய இந்த கேள்விக்கு முஹம்மது நபிகள் எந்த மந்திரங்களையும் செய்து காட்டவில்லை, எந்த தந்திரங்களையும் செய்து காட்டவில்லை. "குரான் ஷரீஃபே இறைவனிடமிருந்து நான் பெற்ற அற்புதம்" என்றார்கள்.

என்ன அற்புதம் செய்து காட்ட போகிறீர்கள் என்ற  வினாவிற்கு  கடலை  பிளக்கிறேன், மலையை தூக்கிறேன் என்றெல்லாம சொல்லாமல் மக்களுக்கு இறைவன் தன்னை எடுத்து கூற சொன்ன கருத்துக்கள் அடங்கிய நூலை (சிறுநூலுக்குள் அடங்கிய பெருநூலகம் - குரான்  ஷரீஃப் பற்றி அடியார் அவர்கள்) அற்புதம் என்று சொல்லியிருப்பதே மிகப் பெரிய அற்புதமான விஷயம் தானே.

2

சஅது பின் ஹிஷாம் என்பவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், "திருத்தூதரின் நற்பண்புகளைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறீர்களா? அவர்களிடம் என்னென்ன குணங்கள் இருந்தன என்பதை விளக்க முடியுமா?" என்று கேட்டார்கள்.

சஅது பின் ஹிஷாம் அவர்கள் கேட்டது அன்னை ஆயிஷா அவர்களிடம், அதாவது பெருமானார் அவர்களின் மனைவியிடம். ஒருவரை பற்றி சரியாக அவர் மனைவியை தவிர வேறு யார் சொல்லி விட முடியும். வெளியிலே ஆயிரம் நல்ல கருத்துக்களை கூறிவிட்டு உள்ளுக்குள் அதற்கு நேருக்கு மாற்றமாக நடந்து கொள்வார்கள். இப்படி நடப்பது வெளியே நண்பர்களுக்கு கூட தெரியாது. ஆனால் மனைவிக்கு தெரிந்து விடும், "ஆமா எஹ தானே.." என்று மனைவிமார்கள் ஆரம்பித்தால் முடிந்தது கதை..

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "நீங்கள் குரான் ஷரீஃபை ஓதுவது இல்லையா?" என்று கேட்டனர்.

'ஆம் ஓதுகிறேன்.." என்றார்கள்

"குரான் ஷரீஃப் போதித்த அத்தனை நற்பண்புகள் அனைத்தும் திருத்தூதரிடம் இருந்தன" என்று தீர்க்கமாக தெளிவாக சொன்னார்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

இதில் இரண்டு செய்திகள் கவனத்திற்குறியவை. ஒன்று பெருமானார் அவர்கள் எதை போதித்தார்களோ அதுவாகவே பெருமானார் வாழ்ந்தது, அதுவும் அவர்களின் மனைவியின் வாயாலேயே அது ஒப்புக் கொள்ளப்பட்டது. இரண்டாவது, பெருமானாரை குரான் ஷரீஃப் நற்பண்புகளுடையவராக மாற்றியது.

3

இரண்டாவதாக சொன்ன கருத்தில் ஒரு சிறு குழப்பம் உள்ளது. பெருமானாரை குரான் ஷரீஃப் நற்பண்புகளுடையவராக மாற்றியதா? அப்படி என்றால் பெருமானாரிடத்தில் குரான் ஷரீஃபுக்கு முந்தைய வாழ்க்கையில் நற்பண்புகள் ஏதும் இல்லாமல் இருந்ததா? என்பதே அந்த குழப்பமாக இருக்கலாம்.

உண்மையில் பெருமானார் அவர்கள் தன்னுடைய நாற்பதாவது வயதில் தான் தன்னை இறைதூதர் என்று அறிவிக்கிறார்கள். நபிபட்டம் வழங்கப்பட்டதற்கு முந்தைய காலகட்டத்திலேயே பெருமானார் அவர்கள் தெருவில் நடக்கும் போது அவர்களை சுட்டிகாட்டி "அதோ அல் அமீன் (நேர்மையின் இருப்பிடம்) செல்கின்றார் என்றும் அதோ அஸ்ஸாதிக் (உண்மையின் உறைவிடம்) போகின்றார் என்றும் மக்கா நகர மக்கள் மனமுவந்து கூறி வந்தனர்.

அல் அமீன் அஸ்ஸாதிக் போன்ற பட்டங்கள் நம்மூரில் கிடைக்கும் டாக்டர் பட்டங்கள் போன்று என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் உள்ளபடி அப்படி வாழ்ந்தார்கள். பெருமானாரின் வாழ்க்கையை படித்து பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை விளங்கும்.

சரி நான் சொல்ல வந்த செய்தி பெருமானாரை (ஸல்) குரான் ஷரீஃப் மேன்மேலும் பண்படுத்தியது என்பது தான் உண்மை. அது எப்படி என்பதை அடுத்தடுத்து வரும் அத்தியாயங்கள் விளக்குகிறது.

4

அந்த காலத்தில் மக்கா நகர மக்கள் தியானத்தில் மூழ்க தனிமையை நாடி மலை குகைக்கு செல்வது வழக்கம். அப்ரஹா என்பவன் யானை படையுடன் மக்காவில் அமைந்துள்ள தேவாலயத்தை இடிக்க வந்த போது பெருமானாரின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் தனிமையை நாடி ஹீரா குகையிலிருந்து விட்டு தான் திரும்பினார்கள். 

அப்படி தான் பெருமானாரும் தனிமையை நாடி ஹீரா எனும் மலை குகைக்கு சென்றார்கள். இரவு பகல் பாராமல் நாள், மாதம், வருடம் தெரியாமல் விளிப்பு நிலையில் இருக்கிறோமா உறக்க நிலையில் இருக்கிறோமா அல்லது இரண்டுக்கும் இடைபட்ட நிலையில் இருக்கிறோமா என்று கூட தெரியாமல் அந்த இருளில் தவம் செய்தார்கள். 

அப்போது ரமலான் மாதம், நள்ளிரவு, தேய்பிறை, ஒளிப்பிழம்பான உருவம் ஒன்று அவர்கள் முன் தோன்றியது, பெருமானார் (ஸல்) அந்த ஒளிப்பிழம்பை பார்த்து பயந்து நடுங்கினார்கள்,  பேச துணியவில்லை, என்ன செய்வது என்றே விளங்க வில்லை, எனினும் சில நாட்களாகவே அந்த உருவம் தான் தன்னை கனவிலும் நினைவிலும் பிடிக்க வந்த  அதே உருவம்  என்றும் அதுவே இப்போது முழுமையாக தன்னிடத்தில் காட்சியளிக்கிறது என்பதையும் உணர்ந்தார்கள். 

அந்த உருவம் அவர்கள் முன் வந்து, "ஓதுவீராக!" என்று கூறியது

'எனக்கு ஓத தெரியாதே..' என்றார்கள் எழுத படிக்க தெரியாத பெருமானார் (ஸல்) அவர்கள்

அந்த உருவம் அவர்களை இறுக கட்டி அணைத்தது. இதயத்தோடு இதயம் இணைத்தது. (இதை தான் சூபியாக்கள் (இறையன்பர்கள்) இதயத்திலிருந்து இதயத்திற்கு என்று கூறுகிறார்கள்)

இப்படியாக மேலே கூறியபடி மூன்று முறை நடந்த பிறகு குரான் ஷரீஃபின் முதல் அத்தியாயமானது அந்த உருவத்தில் தோன்றிய ஜிப்ரீல் (அலை) அவர்களால் ஓதிக் காண்பிக்கப்பட்டது. அதையே பெருமானாரும் ஓதினார்கள்.

ஒதி முடித்த பிறகு அந்த உருவம் மறைந்து விட்டது. அந்த நிலையில் பெருமானாரின் நிலையை சொல்லவே வேண்டாம். அச்சமும் திடுக்கமும் நிறைந்தவர்களாக ஹீரா குகையை விட்டு வீட்டிற்கு வந்து கதவை தட்டி அன்னை கதீஜாவிடம் "என்னை போர்த்துங்கள்!" என்று ஏக்கத்திலும் பயத்திலும் சொன்னார்கள்.

எந்த ஜிப்ரீல் (அலை) அவர்களை முதன் முதலில் பார்த்த போது பயந்து நடுங்கினார்களோ அதே ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு நம்பிக்கை, இஸ்லாம் மற்றும் முக்கியமாக இஹ்ஸான் பற்றியும் பெருமானார் (ஸல்) அவர்கள் விளக்க முடிந்ததற்கு காரணம் அதே குரான் ஷரீஃப் தான். (இதனை பற்றி விளக்கமாக இங்கே எழுத முடியாதமைக்கு வருந்துகிறேன்)

5

இப்படியாக குரான் ஷரீஃப் பல் வேறு சமயங்களில் அதாவது குறிப்பிட்ட ஒரே தடவையாக அல்லாமல் பெருமானார் (ஸல்) அவர்களின் இறுதி 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்டது.

பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், முந்தைய தூதுவர்கள் மற்றும் பிறர்களின் வாழ்க்கை சரித்திரங்கள், இறைவனை பற்றி அவனின் வல்லமை, ஆற்றல், அழகிய திருநாமங்கள்  பற்றிய வசனங்கள், சட்ட திட்டங்கள், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டல்கள் இப்படியாக மனிதனுடைய அறிவு ஆற்றலுக்கும் ஆன்மீக வாழ்விற்கும் உதவும் வசனங்களை கொண்டவையாக இறக்கியருளப்பட்டது.

இதில் உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்று வரும் போது ஒரு முறை உஹது யுத்தத்தின் போது சத்தியத்தின் எதிரிகளால் பெருமானாரின் பல் ஒன்று உடைந்து விட்டது. பெருமானார் (ஸல்) அவர்களின் முகம் எங்கும் இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அப்போது அதை துடைத்துக் கொண்டிருந்த அவர்கள், "தங்களிடம் அனுப்பப்பட்ட தூதரின் முகத்தை இப்படி உதிரத்தால் கோரப்படுத்தும் இவர்கள் எவ்வாறு வெற்றியடையப் போகிறார்கள்?" என்று வருத்தத்தோடு கூறினார்கள்.

இங்கே கவனிக்க வேண்டியது பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களாக முன் வந்து நான் தான் தூதுவர் என்று கூறவில்லை, அவர்களை இறைவன் அவ்வாறு தேர்ந்தெடுத்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுமாறு கேட்டுக் கொண்டான். அதற்காக அவர்கள் எந்த கூலியையும் மக்களிடம் பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இறைவனுக்காக அனுப்பப்பட்ட அவர்களை மக்கள் இவ்வாறு துன்புறுத்துகிறார்களே என்ற வருத்தத்தில் அவர்கள் அவ்வாறு கூறிவிட்டார்கள்.

ஆனால் இறைவனிடமிருந்து இப்படி செய்தி வந்தது, "உபதேசம் செய்வதை தவிர்த்து அவர்கள் விஷயத்தில் உமக்கு வேறு எந்த பொறுப்பும் கிடையாது!" 

இன்னொரு இடத்தில் பெருமானார் (ஸல்) அவர்களை பார்த்து, "உமக்கு ஏற்பட்ட துன்பங்களை சகித்துக் கொண்டு பொறுமையோடு செயலாற்றும்" என்றும் இறைவன் கேட்டுக் கொள்கிறான்

இப்படியாக பெருமானார் அவர்களின் சிறு சிறு செயல்களுக்கு எல்லாம் இறைவன் உடனே எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி விடுவான்.

பெருமானார் (ஸல்) அவர்களும் இறை கட்டளைக்கு அறிவுரைக்கு இணங்கி செயலாற்றி வெற்றியும் பெற்றார்கள்.

பெருமானாரை குரான் ஷரீஃப் மூலமாக பண்படுத்திய இறைவன், "நீர் சிறந்த குணசீலர்.." என்று சான்றிதழையும் அதே குரான் ஷரீஃபிலேயே வழங்கி விட்டான்.

இப்போது நான் இரண்டாவது மற்றும் மூன்றாவது அத்தியாயத்தின் இறுதியில் சொன்னதன் பொருள் விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.

6

குரான் ஷரீஃபிலே அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? முஹம்மது தன் வாயாலேயே தான் சொல்கிறார். இது இறைவனின் வார்த்தையன்று என்றும் தனது வாய்க்கு வந்தவாறு சொல்லினர்.

ஆனால் இப்படி பொய்யுரைத்தவர்களை அல்லது ஏற்க மறுத்தவர்களை பார்த்து இறைவன் குரான் ஷரீஃபின் மூலமாகவே சவால் விடுத்தான். நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் இதை விட சிறப்பான ஒரு வேதத்தை கொண்டு வாருங்கள் என்றும் அப்படி கொண்டு வரவே முடியாது என்றும் கூறினான். பிறகு ஒரு பத்து அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் என்றான், அதுவும் முடியாது போகவே ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் என்றும் சவால் விடுத்தான். 

இறைவன் சவால் விடுத்தது அரேபிய இலக்கிய புலமையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றெல்லாம் சொல்வார்களே அவர்களிடத்தில். அத்தகைய இலக்கிய மேதைகள், கவிஞர்கள் படித்து பார்த்தனர்.

இன்னா அஃதய்னா கல் கவ்ஸர்!
ஃப ஸல்லி லி ரப்பிக்க வன்ஹர்!
இன்ன ஷானி அக ஹுவல் அப்தர்

- குரான் ஷரீஃப் 108 : 1 - 3

இத்தகைய அழகும் ஆழமும் இலக்கிய நடையும் இலக்கன பிழையில்லாமையும் உள்ள அத்தியாயத்திற்கு போட்டியாக அவர்கள் ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வர முயன்றார்கள்;

அவர்களால் இப்படி தான் கடைசியில் கொண்டு வர முடிந்தது, உண்மையில் குரான் ஷரீஃபிடம் சரணடைய முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும்

மா ஹாதா கலாமுல் பஷர் (இது நிச்சயமாக மனிதனுடைய சொல்லன்று)

7

இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரியான அபுஜஹ்ல் தீப்பொறி கக்கினான், ".. முஹம்மதின் தலையை கொன்று வருபவர்களுக்கு என்னிடமிருந்து நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பு.." என்று கஃபாவின் ஹூபல் சிலையின் முன்னே ஆணையிட்டு சத்தியம் செய்தான்.

முப்பத்து மூன்று வயதுடைய இளைஞர் உருவிய வாளுடன் பாய்ந்து சென்றார் முஹம்மதின் தலையை கொய்து வருவதற்கு. வழியில் எதிர்பட்டவர் "எங்கே செல்கின்றீர்?" என்று கேட்டதற்கு "முஹம்மதின் தலையை துண்டிக்க" என்றார் அந்த இளைஞர்.

வழியில் எதிர்பட்ட அவரோ, "முஹம்மதின் தலையை துண்டிப்பது இருக்கட்டும், உம்முடைய தங்கையும் மைத்துனரும் முஹம்மதின் மார்க்கத்தில் சேர்ந்து விட்டனரே.." என்றதும் முஹம்மது நபிகளின் இல்லம் நோக்கி விரைந்த கால்கள் அவர் தம் தங்கையின் இல்லம் நோக்கி விரைந்தது அப்போது.

கதவு தாளிடப்பட்டிருந்தது. உள்ளே பேச்சுக் குரல். ஒட்டுக் கேட்டார். கப்பாப் என்பவர் குரான் ஷரீஃபை அழகொழுக ஓதும் குரல் கேட்டது. அந்த ஒலி நாதத்தில் லயிப்பு ஏற்பட்டு கதவை தட்டி உள்ளே நுழைந்து தங்கையிடம் என்ன "ஓதிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டார்

தங்கையும் மைத்துனரும் நடுக்கத்தில். கப்பாப் பயந்து போய் மறைவில். இளைஞரின் கோபம் தாக்குதலை தொடுத்தது. காயத்துடன் தங்கை இஸ்லாத்தில் சேர்ந்து விட்டதாகவும், ஓதிக் கொண்டிருந்தது குரான் ஷரீஃபின் வசனங்கள் என்றும் சொல்லவே அந்த குரான் ஷரீஃபின் வசனங்களை தன்னிடம் காண்பிக்குமாறு வலியுறுத்தி அதனை ஓதினார். 

கண்களில் கண்ணீர் வழிந்தோடியது, ஓதிக் கொண்டிருக்கும் போதே, "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்று அவர்களை அறியாமலேயே வாய் விட்டு கூறினார்கள். 

அப்படி கூறியது இஸ்லாத்திற்கு மாறிய தனது அடிமையை அடித்து ஓய்ந்து, "உன் மீது இரக்கப்பட்டு நான் உன்னை அடிப்பதை விடவில்லை நான் களைத்துப் போனதால் அடிப்பதை நிறுத்தி விட்டேன்" என்று முன்பு கூறி தங்கை வீட்டில் மேற்கூறிய சம்பவத்தில் இஸ்லாத்தை தழுவி பிற்காலத்தில் இஸ்லாமிய ஆட்சியில் இரண்டாவது கலிபாவாக (ஆட்சி தலைவர்) இஸ்லாமிய உலகை ஆண்ட ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் தான்.

இவ்வாறு குரானின் ஒலியே எத்தனையோ பேர்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்து இருக்கிறது.

8

குரான் ஷரீஃபில் நபியே நீர் கூறும் என்று ஆரம்பிக்குமே தவிர நபி இன்னது கூறினார் என்று இருக்காது. அதாவது குரானில் இருப்பது அனைத்துமே இறைவனின் பேச்சு தானே தவிர முஹம்மது நபிகளின் பேச்சு கிடையாது

குரான் ஷரீஃப் அரபி மொழியில் இறக்கியருளப்பட்டது. அந்த அரபி மொழி வேத மொழி மட்டுமல்ல இன்றைக்கு சவுதி அரேபியா மட்டுமின்றி துபாய் ஈராக் முதல் மொரோக்கோ வரை வழக்கு மொழியாகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான மொழிகளில் குரான் ஷரீஃப் இருந்தாலும் அவை எல்லாம் மூல மொழியான அரேபிய மொழியிலிருந்து அருளப்பட்டதை பதிவு செய்து பிற்காலத்தில் முறையாக தொகுக்கப்பட்டு அப்படியே ஒரு புள்ளியேனும் மாற்றமில்லாமல் மொழிமாற்றம் செய்யப்பட்டவையே ஆகும்

இன்னும் சில வார்த்தைகள், வேதங்கள் மக்களுக்காக என்றால் அதை ஏன் மக்களிடமிருந்து மறைக்க வேண்டும். ஒரு வேளை திருமறை என்பதில் வரும் 'மறை' என்பதை தவறாக 'மறைத்து வைப்பது' என்று புரிந்து கொண்டார்களோ என்னவோ?


ஆனால் குரான் ஷரீஃபை மக்களுக்கு எடுத்து கூறும்படியும் மக்கள் அனைவரும் ஓத வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஆகவே குரான் ஷரீஃபை மக்களுக்கு போதிக்க மதில் சுவர் மேல் எல்லாம் ஏற வேண்டியதில்லை. எல்லா சம்பூகன்களுக்கும் ஓதுவதற்கு அனுமதியுண்டு. குரான் என்றாலே "ஓதக்கூடியது" அல்லது "ஓதவேண்டியது" என்று தான் பொருள்

நான் எனது ரிபோர்டிங் ஆபிஸருடன் பள்ளிவாசலுக்கு நோன்பு திறக்க போயிருந்தேன். அங்கு கிராஅத் ஓதினார்கள். அதை கேட்டவுடன் இஸ்லாம் அல்லாதவரான அவர் கண் கலங்கி விட்டார். 


குரான் ஷரீஃப் அற்புதம் என்றால் அது வினைத் தொகையை போன்று அற்புதம் நிகழ்த்தியது, நிகழ்த்தி கொண்டிருக்கிறது, இன்னும் தொடர்ந்து நிகழ்த்தி கொண்டு தானிருக்கும்.

நோன்பு

பெண்ணாசையை போலவே மனிதனுக்கு வரும் ஆசைகளில் உணவாசையும் மிக வலிமையானது இன்னும் சொல்ல போனால்  பெண்ணாசையை விட உணவாசை வலிமையானது என்றே நான் சொல்வேன். 

ஏனெனில் உணவுக்கும் மனிதனுக்குமான பந்தம் தாயின் கருப்பையிலிருந்தே தொடர்கிறது அல்லவா?. வயிற்றுக்குள் இருக்கும் சிசு தாயின் உணவை தானும் உண்கிறது. கருத்து தெரிந்த பின்னர் வேண்டுமென்றால் பெண்ணாசை அல்லது பொன்னாசை வரலாம். கருப்பையில் இருக்கும் போதே உணவு பழக்கம் தொடங்கி விடுகிறது.

எல்லா ஊரிலும் மனிதர்கள் ஒரு வயிறுக்கு சாப்பிட்டால் எங்க ஊரில் (நாகூரில்) மட்டும் ஏழு வயிறுகளுக்கு சாப்பிடுவார்கள். எனது சின்னாப்பா அவர்கள் அவர்களது நண்பர் ஒருவரை காலையில் தேநீர் அருந்த வீட்டிற்கு அழைத்தார்கள்,  இப்படியாக, "வாருங்கணி, தேத்தனி குடிக்கலாம்", அதற்கு அந்த நண்பர், "இருங்கணி கடைல போய் குடிச்சிட்டு வர்ரேன்.." என்று கிளம்பி போய் கடையில் தேத்தணி குடித்து விட்டு விறுவிறுவென்று வீட்டிற்கு போனார், காலைக் கடனை முடித்தார், திரும்ப வீட்டிற்கு வந்து தேத்தணி குடித்தார், ஏன் இந்த மாதிரி என்றால் வீட்டில் குடிக்கும் நல்லா போட்ட தேத்தணி வயித்துல கொஞ்சம் நேரம் இருக்கணும் அதுக்காக தான் என்கிறார்.

இத்தகைய உணவாசையை கட்டுப்படுத்துவது என்பது கொஞ்சம் அல்ல அதிகம் சிரமமான காரியம். கடவுள் பாதி மிருகம் பாதி என்று தொடங்கும்  பாட்டில் மிருகம் கொன்று கடவுள் வளர்க்க பார்ப்பதாகவும் கடவுள் கொன்று
மிருகம் மட்டும் வளர்கிறதே என்றும் தவிக்கிறது.

மிருகத்தை கொன்று கடவுள் வளர்க்க என்ன பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அந்த  பாடல் சொல்லவில்லை.  

காட்டுக்கே ராஜாவான சிங்கம் கூட சர்க்கஸில்  ரிங் மாஸ்டரின் குச்சிக்கு கட்டுபட்டு நிற்கிறதே. அந்த ரிங் மாஸ்டர் அவரது தலையை சிங்கத்தின் வாயில் விடும் போதும் அந்த சிங்கம் (மிருகம்) ஒன்றும் செய்யாமல் இருக்கிறதே. அந்த ரிங் மாஸ்டர் எப்படி அந்த சிங்கத்தை சொல்பேச்சு கேக்கும் கிளிபிள்ளையாக மாற்றியிருப்பார். 

அங்க தான் இருக்கு விஷயம். பட்டினி போட்டு பழகுவது. கிட்டதட்ட நமக்குள் இருக்கும் மிருகத்தை கட்டுப்படுத்துவது கூட அந்த முறையில் சாத்தியமாகும். 

மோசஸ் (அன்னாரின் மீது சாந்தி உண்டாவதாக) மற்றும் ஜீசஸ் (அன்னாரின் மீது சாந்தி உண்டாவதாக) அவர்களும் 40 நாட்கள் நோன்பு இருந்ததாக எக்ஸோடஸ் 24:18 மற்றும் மேத்திவ் 4:2 லும் முறையே தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் பயபக்தியுடையவர்களாகலாம்" என்று குரான் ஷரீஃப் கூறுகிறது (2:183)

மேலே கண்ட வசனத்தில் "தக்வா" என்ற அரபி வார்த்தைக்கு "பயபக்தி" என்ற தமிழ் வார்த்தையாக அர்த்தம் கொள்ளப்பட்டிருக்கிறது. வேறு சில மொழிபெயர்ப்பில் இதே "தக்வா" எனும் வார்த்தைக்கு "சுயக்கட்டுபாடு" என்பது போலவும் அர்த்தம் காணப்படுகிறது.

கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை வந்து வீட்டில் எல்லாம் இருக்கும் போதே கோபித்துக் கொண்டு பிடிவாதமாக சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படி சாப்பிடாமல் சுயகட்டுபாட்டோடு நோன்பிருந்தாலும் பயபக்தி வந்து விடாது.

இப்படியும் சில நண்பர்கள் கேட்கிறார்கள், "நோன்புங்கறீங்க.. நோன்பு தெறக்கும் போது சேத்து வச்சு சாப்பிடுறீங்களே?" என்று

அதாவது எப்படா நோன்பு திறக்குற நேரம் வரும் என்று பார்த்துக்கிட்டிருந்து நோன்பு திறந்தவுடனே அடக்கி வச்சதை தொறந்து விட்ட மாதிரி 10 சிகரெட்டை ஒரே நேரத்தில் குடித்து தள்ளுவது.

நபிகள் நாயகம் இவ்வுலகை விட்டு பிரிந்த பிறகு இஸ்லாத்தில் தோன்றிய முதல் புதுமை (பித்அத்) வயிறு முட்ட சாப்பிடுவது தான் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாக இமாம் கஸ்ஸாலி (ரலி) அவர்கள் இஹ்யாவில் எழுதியுள்ளார்கள்.

பெருமானார் பெரும்பாலும் தண்ணீரும் பேரிச்சம்பழம் கொண்டு தான் நோன்பு வைப்பார்கள் நோன்பு திறப்பார்கள்.

இது ஒருபுறமிருக்க  வேறு சிலரோ , "ஏன் நீங்கள் இப்படி உங்களையே நீங்கள் எல்லாரும் வருத்திக் கொள்கிறீர்கள்.." என்று மிகவும் அக்கறையாக கேட்கிறார்கள்

எனக்கு மௌலானா ரூமி எழுதி நாகூர் ரூமி அவர்கள் மொழி பெயர்த்த கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது

பால்குடி மறக்கடிப்பது
பட்டினி போடுவதற்கல்ல!
காம்பு மறுக்கப்படுவது
கருணையின் பொருட்டே!

இப்படி உணவு மறுக்கப்படுவது கூட
இறைவனின் கருணையின் பொருட்டு தான்.

நோன்பில் இன்னொரு விசேசம் நோன்பு திறக்கும் நேரம் தான். நம்ம இஷ்டத்திற்கு நாம் நினைத்த நேரத்தில் எல்லாம் நோன்பு திறக்க முடியாது. எல்லோரும் காத்திருப்பார்கள். குறித்த நேரம் வந்தவுடன் நோன்பு திறந்து விடுவார்கள். இதில் என்ன பெரிய விசேசம் இருக்கிறது என்று கேட்கலாம்.


சிலர் தன்னை எப்போதும் மற்றவர்களை விட பெரிய பக்திமானாக காட்ட வேண்டும் என்ற ஆசை உண்டு. அவ்வாறு நினைத்து கொண்டு மற்றவர்களை விட நான் தான் அதிக நேரம் நோன்பிருந்தேன், ஆகவே நான் தான் இறைவனுக்கு மிகவும் உவப்பானவன் என்று கதை விட முடியாது.


நோன்பு என்பது ஒரு பயிற்சி
நோன்பு என்பது சுத்தப்படுத்துதல்

பேசப்பட்ட வார்த்தைகளை விட பேசாத மௌனங்களுக்கு தான் வலிமை அதிகம். வெளிப்படையான வணக்கத்தை விட மறைவான வணக்கத்திற்கு தான் வலிமை அதிகம்

நோன்பு ஒரு மறைவான வணக்கம். 
நீங்கள் யாரிடமும் சொல்லாத வரை யாருக்கும் நீங்கள் நோன்பாளி என்பது இறைவனையும் உங்களையும் தவிர.வேறு யாருக்கும் தெரியாது.

சில ஒழுக்கங்களை கடைபிடிப்பதை தான் "தக்வா" என்று இறைவன் கூறுகிறான் என்ற எண்ணம் எனக்கு உண்டு. அது இறைவனின் எண்ணம் தான் என்று எல்லாம் என்னால் அடித்து கூறி மேடைக்கு அழைத்து வாதாட முடியாது. 

அதுவும் தவிர வாதாடுவதற்கு என்று பிறை பார்ப்பது, தராவிஹ் தொழுகையா இரவு தொழுகையா? அப்படியே எதுவோ ஒன்று என்று வைத்துக் கொண்டாலும் அது 8ஆ 20ஆ? என்று வாதாட நிறைய செய்திகளும் ஆட்களும் மன்னிக்கவும் ஆலிம்களும் இருக்கும் போது நான் வேறு எதற்கு வாதாட வேண்டும்.

நாகேஷ் கௌரவம் படத்தில், "நான் 3 மாசம் தான் கஷ்டப்படுவேனாம்.. " என்பார்

அதற்கு இன்னொருவர் ஆர்வமாக, "அதற்கப்புறம்.." என்று கேட்பார்

'அதுவே பழகிடுமாம்.." என்பார்

இது அர்த்தமுள்ள நகைச்சுவை.

உண்மையில், நல்ல விஷயமாக இருந்தாலும் சரி கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி பழக்கப்படுத்தி விட்டால் கஷ்டமே இருக்காது அல்லது தெரியாது. இது மனித இயல்பு

பசியை பழகுவோம்
ஒழுக்கம் பேணுவோம்