Saturday, February 28, 2009

தௌர் குகை - சிலந்தி

ஒரு அரசியல் கூட்டம் நடக்கிறது. அரசியல் தலைவர் பேசுகிறார். அங்கே திடீரென்று கூச்சல், குழப்பம்,  வெட்டு, குத்து. இதை தொடர்ந்து அந்த கூட்டத்திலிருந்து முதல் ஆளாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப் படுவது அந்த தலைவர் தான். இது தான் இன்றைய தலைவர்களின் முன்மாதிரி.

ஆனால் மக்காவில் சத்திய மார்க்கத்தை பிரச்சாரம் செய்த அகிலத்தின் தலைவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அன்னாரை பின்பற்றியவர்களுக்கும் உயிருக்கு ஆபத்து என்று வந்த போது பெருமானார் அவர்கள் மக்காவிலேயே இருந்து கொண்டு பின்பற்றியவர்களை அபிசினியாவிற்கும், யத்ரிபுக்கும் (பெருமானார் காலடி எடுத்து வைக்கும் வரை மதினாவின் (மதினத்துந் நபி - நபியின் பட்டணம்) முந்தைய பெயர் தான் யத்ரிப்) அனுப்பி வைத்தார்கள்.

இந்த சமய்த்தில் தான் மக்கத்து குறைஷிகள் ஊர்மன்றமாகிய தாருன்னத்வாவில் அமர்ந்து பெருமானாரை கொல்ல சதித்திட்டம் தீட்டினர். வீட்டுக்கு ஒருவர் என வேங்கை போல் புறப்பட்டு கொலை வெறியோடு ஆயுதமேந்தி புறப்பட்டனர்.

அதே நேரத்தில் பெருமானார் அவர்கள் அவர்களது தோழரான அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து மதினா செல்லும் வழியில் மக்காவிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தௌர் எனும் குகைக்கு வந்து சேர்கிறார்கள்.

மூன்று நாட்கள் அந்த தௌர் குகையிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. இதற்கிடையில் கொலை வெறியோடு புறப்பட்டவர்கள் ஆளுக்கொரு திசையாக முஹம்மது நபியவர்களை காணாது தேடி அலைந்தனர்.

அவர்களில் ஒரு சிலர் பெருமானாரும் தோழரும் மறைந்திருந்த தௌர் குகையை நெருங்கினர். அந்த சிலர் அங்கே எதிர்பட்ட ஒரு இடையனை பார்த்து, 'இந்த குகையில் யாரேனும் ஒளிந்திருப்பதை பார்த்தாயா?" என்று கேட்டனர்

அதற்கு அந்த இடையன், "நான் அப்படி யாரையும் பார்க்கவில்லை, நீங்களே நுழைந்து பாருங்கள்! யாரேனும் அங்கே இருந்தாலும் இருக்கலாம்" என்று கூறினான்

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருப்பது பெருமானார் அவர்களுக்கும்  தோழர்அவர்களுக்கும் தெளிவாக கேட்டது.

ஈரக் குலையைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த தோழர் அவர்கள் ,
".. குனிந்து தன் கால் பெரு விரலை பார்த்தால் கூட நாம் உள்ளே இருப்பது தெரிந்து விடுமே.. நிறைய பேர் வந்திருப்பது போல் தெரிகிறதே . நாம் இருவர் தாமே இருக்கிறோம்" என்று ஏக்கத்திலும் பயத்திலும் கூறினார்கள்

இத்தகைய பயம் நியாயமானது தான், அந்த நேரம் சாமானிய நேரமில்லை. கையில் வாளுடன் தலையை சீவுவதற்கு காத்திருக்கும் கொலை வெறி கூட்டம் வெளியே. இரண்டே இரண்டு பேர் மட்டும் அதுவும் நிராயுதபாணியாக யாருக்கும் தெரியாமல் பதுங்கி ஒளிந்து கொண்டு உள்ளே. என்ன செய்வது? வயிற்றுக்குள் பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது.

பெருமானார் அவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் இப்படி பதில் மொழி பகர்ந்தார்கள், "இல்லை, இல்லை, நாம் மூவர் இங்கு இருக்கின்றோம், அல்லாஹ்வும் நம்முடன் இருக்கிறான்.."

யா அல்லாஹ்.! என்ன உறுதி! என்ன நம்பிக்கை! என்ன தெளிவு!

இனி இந்த பிரச்சினை பெருமானாரின் சம்மந்தப்பட்டது அல்ல, இறைவனின் சம்மந்தப்பட்டது.

இறைவன் தன் தூதரை, தன் மீது முழுமையாக பொறுப்பை ஒப்படைத்தவரை எப்படி காப்பாற்ற போகிறான்? எந்த படையை அனுப்ப போகிறான்?  என்பதே படிக்கும் அனைவரும் எதிர்நோக்கும் அடுத்த விநா.

அவன் யானைப் படையையோ அல்லது குதிர்ரைப் படையையோ அனுப்பவில்லை. அவன் அனுப்பியது ஒரே ஒரு சிலந்தி பூச்சி. ஆம், அவன் அனுப்பிய அந்த சிலந்திப் பூச்சி திடீரென்று நுழைவாயிலில் ஒரு வலை பின்னியது. அல்லது இறைவன் அவ்வாறு பின்ன சொல்லி அதற்கு செய்தியை அனுப்பினான். பின்னிய அந்த வலை நுழைவாயிலையே மூடியிருந்தது.

அந்த இடையன் சொன்னதை கேட்டு குகையின் உள்ளே சென்று பார்க்கலாம் என்று குனிந்த ஒருவன், "வீணாக உள்ளே போய் ஏன் பார்க்க வேண்டும்?, இந்த வலையை பார்த்தாலே முஹம்மது பிறப்பதற்கு முன்னாலேயே பின்னப்பட்ட வலை
மாதிரியல்லவா இருக்கிறது.." என்று கூறி விட்டு "வாருங்கள் போகலாம்.." என்று கூறி விட்டு ஊர் திரும்புகிற வழியை பார்த்தான்.

பெருமானார் அவர்கள், "எல்லா புகழும் இறைவனுக்கே!" என்று நன்றி பெருக்குடன் கூறினார்கள்.

------------------------------------------------------------------------------

தன் தூதரை காப்பாற்ற இறைவனுக்கு பெரும் படை எதுவும் தேவையாக இருக்கவில்லை, ஒரு சிலந்தி வலை போதுமானதாக இருந்தது. அதுவும் இறைவனின் பேச்சான குரான் ஷரீபிலே இத்தகைய சிலந்தி வலையை தான் மிகவும் பலஹீனமான வீடு என்று குறிப்பிடுகிறான். இத்தகைய பலஹீனமான ஒன்றை கொண்டே தன் தூதரை காப்பாற்றி விட்டான் இறைவன்.

அல்ஹம்து லில்லாஹ்

------------------------------------------------------------------

சிலந்தி வலை பற்றிய குரான் ஷரீபின் வசனம் கீழே தரப்பட்டுள்ளது

அல்குரான் ஷரீப்:

அத்தியாயம் 29 - அல்-அன்கபூத் -

வசனம் 41:

அல்லாஹ் அல்லதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலவீனத்தை அறிவார்கள்)
--------------------------------------------------------------------------
 இஸ்லாத்தில் கவிஞர்களுக்கு மரியாதை உள்ளது. ஹஸ்ஸானுப்னுதாபித் (ரலி) என்ற பெருமானாரின் தர்பார் வித்வானுக்கு அவர்களின் கவிதையை அனைவரும் கேட்பதற்கென மஸ்ஜித் நபவியில் தனி ஆசனம் அமைக்கப்பட்டிருக்குமாம்.

நம் மதிப்பிற்குறிய தாய்மொழிக் கவிஞர்களும் சிலந்தி மாலை பாடியிருக்கிறார்கள். மெய்சிலிர்க்க வைக்கும் கவிதைகள் இதோ:


கவிக்கோ அப்துற் றஹ்மான்

தொடக்கம் உன் பெயரால்
தொடர்வதெல்லாம் உன் அருளால்
அடக்கம் நீ என் நெஞ்சில்
அடங்காத பேரொளியே
முதல்வா உன்னை என்
முதலாகக் கொண்டதால்
என் வாழ்க்கை வணிகத்தில்
இழப்பே இல்லை

தாள் கண்டால் குனிந்து
தலை வணங்கும் பேனா
உன் தாள் பணியும்
உபதேசம் பெற்ற பின்னர்
எழுத்தல்ல இறைவா
இவையெல்லாம்
என் எழுதுகோல் செய்த
'சஜ்தாவின்' சுவடுகள்
(சஜ்தா - சிரம் பணிதல்)

உன் பெயரில் ஊற்றெடுத்து
ஓடுகிறேன் நதியாக
கலப்புக்கும் நீயே
கடலாகி நில்
எண்ணுவது உன்னையே
எழுதுவது உன்னையே
உண்ணுவது உன்னையே
உயிர்ப்பதும் உன்னையே
என்னை உன் கையில்
எழுதுகோலாய் ஏந்தி
நின்னையே நீ எழுதிக்கொள்

நாமோ
பாவலர் உமரின்
பரம்பரையில் வந்தவர்கள்
சேகுனாப் புலவரின்
செல்லக் குழந்தைகள்
பீரப்பாவின் பேரப்பிள்ளைகள்
காசிம் புலவரின்
கால்வழித் தோன்றல்கள்
வண்ணக் களஞ்சிய
வாரிசானவர்
குலாம் காதிரின்
குலக் கொழுந்துகள்
செய்குத் தம்பியின்
சின்னத் தம்பிகள்
ரகுமான் என்றால்
இது என்ன ரக மான் என்பார்
பொய்மான் பின்னால்
போனவன் அல்ல
நான் 'ஈமான்' பின்னால்
ஏகும் ரகுமான்

இதுவரை ஒட்டடை அடிக்கக்
கோல் ஏந்தினோம்
இன்றோ நான்
ஓர் ஒட்டடையை புகழக்
கோல் ஏந்தினேன்
அன்றொரு நாள் என் வீட்டில்
ஒட்டடை அடிக்கக் கோலெடுத்து நின்றேன்
மூலையில் ஒரு சிலந்தி வலை
அடடா என்ன அழகு
கவிதை மனம் அந்த வலையில்
சிக்கிக் கொண்டது
அழகும் ஒரு வலைதான் - அதனால் தான்
நாமெல்லாம் அகப்பட்டு
கொள்கிறோம் அதற்குள்ளே

உலகத்தை பார்க்கிறேன்
எத்தனை சிலந்திகள்
இதோ இரவு
கறுப்பு இழைகளால் வலை பின்னுகிறது
வலையில் சிக்கித் துடிக்கின்றன
நட்சத்திர ஈக்கள்

இதோ
இருட்டில் ஒருத்தி
ஒப்பனையால் வலை விரித்து
இரைக்காகக் காத்திருக்கிறாள்
பாவம் தானே இரையாகிறாள்
அதோ சூரியன்
கிரணங்களால் வலை பின்னுகிறான்
இருளைப் பிடித்து
உண்பதற்கு

அதோ அரசியல் மேடையில் ஒருவன்
வார்த்தைகளால் வலை பின்னுகிறான்
எதிரே அப்பாவி இரைகள்
பிரபஞ்ச வலையைப் பின்னிவிட்டு
மறைந்து உட்கார்ந்திருக்கிறானே
அவனும் ஒரு சிலந்தி தான்
அவனுடைய இரை நாம் தான்
அவனே படைத்து
அவனே உண்ணும் வரை

எழுதுகோல் ஏந்துகிறவன் நான்
ஒட்டடைக் கோல் ஏந்தியபோதும்
ஊறியது கற்பனை
சிலந்தி வலை பின்ன
சிலந்தியைப் பற்றி நான்
சிந்தனை வலை பின்னி நின்றேன்

அற்பப் பிராணியா சிலந்தி இல்லை
அற்புதப் பிராணி நம்முடைய
வீட்டுக்குள் வீடு கட்டும்
விந்தைப் பிராணி
இதற்குத்தான் எவ்வளவு தன்மானம்
நம்மைப் போல்
அந்நியப் பொருள்களால் வீடு கட்டாமல்
தன் சொந்தப் பொருளாலல்லவா
வீடு கட்டுகிறது
வாயால் ஆகாயக் கோட்டைகளை
கட்டும் மனிதர்களை விட
இச்சிலந்தி உயர்ந்தது
இதுவும் வாயால்தான் கட்டுகிறது
ஆனால் உண்மையாகவே
ஒரு வீட்டைக் கட்டிவிடுகிறது

உணவு, உடை, உறையுள்
இந்த மூன்றையும்
மனிதன் தனித்தனியாக
தேட வேண்டியிருக்கிறது
சிலந்திக்குத்தான்
எத்தனை சாமர்த்தியம்
நூலாலேயே ஒரு
வீடு கட்டிவிடுகிறது அந்த
வீட்டாலேயே உணவையும்
பெற்று விடுகிறது

இந்தச் சிலந்தி
வாயால் பூ வரையும்
ஓவியனா இல்லை
சுவருக்கே ஆடை கட்டும்
பைத்தியமா?
சிலந்திக்கு மட்டும் என்ன
இவ்வளவு அழகிய வாந்தி
எவ்வளவு நூல் நூற்றாலும்
இப்பஞ்சு குறைவதே இல்லை

எங்கள் இதயம்
இரண்டு குகைகளை மறந்து விடாது
ஒன்று 'ஹிரா'
வெளிச்சம் பிரசவமான விடுதி
மற்றொன்று 'தௌர்'
அந்த வெளிச்ச தீபம்
அணைந்து விடாமல்
காப்பாற்றிய கல் சிம்னி

'தௌர்' குகையே
கல் கூடாரமே
சரித்திரத்தில் எத்தனையோ
தங்குமிடங்களைப் பார்த்திருக்கிறோம்
ஆனால்
சரித்திரத்தில் தங்கிவிட்ட
தங்குமிடம் நீ மட்டும்தான்

'தௌர்' குகையே
கல் வாயே
அன்று எவ்வளவு பெரிய ரகசியத்தை
நீ மறைத்து வைத்திருந்தாய்
எங்கே நீ உளறி விடுவாயோ
என்று பயந்துதான்
சிலந்தி உன் உதடுகளைத் தைத்ததோ

சிலந்தியே
இரையைப் பிடிப்பதற்குத்தான்
நீ வலை பின்னுவாய்
ஆனால் அன்று
மக்க நகரத்து
மிருகங்களின் இரையைக்
காப்பாற்றுவதற்கல்லவா
நீ வலை பின்னினாய்

உலகத்தின் ஒட்டடைகளை
அழிக்க வந்த இஸ்லாத்தில்
சிலந்தியே நீ அன்று கட்டிய
வலையை மட்டும்
நாங்கள் அழிக்க விரும்பவில்லை
ஏனென்றால்
ஒட்டடைக் கோலையே காப்பாற்றிய வலை
உன் வலை தான்

மீன் பிடிப்பதற்காக வலை விரிப்பார்கள்
ஆனால் நீயோ ஒரு மீன்
எங்கள் மீன் அல் அமீன்
தப்புவதற்கல்லவா வலை விரித்தாய்
சிலந்தியே அன்று மட்டும்
உன் வலை கொசுவலையாக இருந்தது
சித்தம் மகிழும் செம்மல் நபியின்
ரத்தம் குடிக்க வந்த
குரைஷிக் கொசுக்களை
அண்டாமல் விரட்டியதால்

அகமது நபியின்
ஆள் மயக்கும் அழகு கண்டால்
அகம் அது மயங்கும்
முகமது நபியின்
முத்து நிலா முகம் கண்டால்
மூ உலகும் தான் மயங்கும் என்று
அவர் முகமது மறைக்க
ஒரு முத்திரை போட்டாயோ

நிர்வாண உலகத்திற்கு
ஆடையாய் வந்தவரைப் பாராட்ட
பொன்னாடை நெய்து
போர்த்தினாயோ இல்லை
குபுரியத்திற்கு (குபுரியம் - இறை மறுப்பு)
கபன் நெய்யத் தொடங்கினாய்
(கபன் - இறந்த உடலை மூடும் தையலில்லாத வெண்ணிற ஆடை)
இறைவன் தந்த நூல் மறை நூல்
உன் நூலோ மறை கொணர்ந்த
தூதரை மறைத்த நூல்
அன்று உன் மறை நூலால்
இறைவனின் மறை நூலையே
காப்பாற்றிவிட்டாய்

இறைவா
வீடுகளிலேயே
பலவீனமான வீடு
சிலந்தியின் வீடுதான் என்று
உன் திருமறையில் கூறினாய்
ஆனால் என்ன அதிசயம்
அந்த பலவீனமான வீடு
எவ்வளவு பலமான
கோட்டையை கட்டிவிட்டது

இறைவா நீ நினைத்தால்
ஒரு மேலாம் படையைக் கூட
ஒரு நூலாம் படையால்
தடுத்து நிறுத்தி  விடுகிறாய்
சிலந்திகள்
ஒட்டடைக் கோலால் அழியும்
நீயோ ஓர் ஒட்டடைக் கோலை
காப்பாற்றிய சிலந்தி
இருண்ட மூலைகளில்
வலை பின்னியிருந்த
மூடச் சிலந்திகளை
ஒழிக்க வந்த ஒட்டடைக் கோல்
உன்னாலல்லவா அன்றி காப்பாற்றப்பட்டது

இதோ
என் வாயும் ஒரு சிலந்திதான்
வார்த்தைகளால் கவிவலை பின்னுவதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அது மாநபியை மறைப்பதற்காக
வலை பின்னியது
இது வேத நபியை வெளிப்படுத்துவதற்காக
வலை பின்னுகிறது

என் இதயமும் ஒரு தௌர் குகைதான்
அங்கே ஏந்தல் நபி எழுந்தருளி இருப்பதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அந்தக் குகை அவர்களை வெளியே விட்டது
இந்தக் குகையோ அவர்களை வெளியில் விடாது
இறைவா
அந்தச் சிலந்தியாய் என்னைப்
பிறக்க வைத்திருக்கக் கூடாதா?
இந்த மனிதப் பிறவியை விட
மகத்துவம் பெற்றிருப்பேனே
என் கவிதைகளை நாடு புகழ்கிறது
ஆனால்
என் கவிதைகளை விட
அந்தச் சிலந்தி வலை உயர்ந்ததல்லவா

புனிதமான சிலந்தியே
இதோ என் இதய வீட்டில்
நன்றிக் கண்ணீராலேயே
ஒரு வலை பின்னிக் கொடுக்கிறேன்
நீ இங்கே நிரந்தரமாகவே தங்கிவிடு


மு.மேத்தா


நாயகம் ஒரு காவியம்


சிலந்தி மணிமாலை


கவிக்குரல்

சிலந்தி யென்றால் - அது
சாதாரணச் சிலந்தியா?
இல்லை...
சிங்கத்தின் குகைக்கே
ஆடை தைத்த
சிலந்தி!

பட்டொளி வீசிப்
பறக்கும் வெற்றிப் பதாகைக்குத்
துணி நெய்யத்தான்
அன்று அச்சிலந்தி
நூல் நூற்றதோ?

ஏகத்துவ நெறியெனும்
இனிய குழந்தைக்கு
தௌர்குகைச் செவிலித்
தாய் அவள்
வலைச்சட்டை பின்னி
மனம் மகிழ்ந்தாளோ?

வள்ளல் நபிகளார்
வருகை புரிந்தால்
குட்டைச் சிலந்திப்பெண்
குகையின் வாசலுக்கு - வெண்
பட்டுக் குஞ்சம்
கட்டிப் பார்த்தாளோ?

இன்று
அருமை நபிகளாம்
அண்ணலாரைப் பற்றி
எத்தனையோ நூல்கள்
எழுதப் படுகின்றன
அவற்றுக் கெல்லாம்
ஆதாரம்

சிலந்தி எழுதிய
அந்தச்
சிறுநூல் தானே?

வெறும் -
நூலாம் படைதான்!
ஆனாலும் அது
அண்ணலாரைக்
காட்டிக் கொடுத்து
ஐந்தாம் படையாய்
ஆகவில்லை - ஆதலினால்
அது
நாலாம் படைக்கும்
மேலாம் படைதான்!

உத்தமத் தலைவருக்கு
உறைவிடம் தந்ததனால்
தௌர் குகைக்கு
சிலந்தி என்கிற
சிறிய பிரமுகர்
பொன்னாடை போர்த்திப்
போற்றினாரோ?

சிலந்தி வலை என்னும்
கலங்கரை விளக்கம்
தேடி வந்த
பகைக் கப்பல்களைத்
திசைதிருப்பி அனுப்பியது..
மனித குலத்தின்
மாலுமியைக் காப்பதற்கு!

சிலந்தியே!
பெருமானாருக்கும்
பகைவருக்கும் நடுவே
நீ ஒரு திரை போட்டாய்!
அந்தத் திரையில்தான்
உத்தம நபியாம்
ஓவியக்காரர்
சாந்தி மார்க்கம் என்ற
சித்திரத்தை வெகு
சிறப்பாகத் தீட்டினார்!

சிலந்தியே! நீ பின்னிய
வலையின்
விலை என்ன தெரியுமா?
அன்றாடம் அதை
ஐந்துமுறை செலுத்துகிறார்!
லட்சோப லட்சம்
பள்ளிவாசல்களில் கேட்கும்
பாங்குச் சத்தம் - உன்
பங்குக்கு மார்க்கத்தார்
பகிர்ந்து தரும் சத்தம்!

ஆண்டவனே நீயொரு
அதிசயமானவன்!
உலக எதிரிகளை
ஊதி அழிக்கின்ற
பாதுஷாமாருக்கும்
கிடைக்காத பாக்கியத்தைச்
சாதாரண சிலந்திக்குத்
தந்தவன் நீ!
உன்னுடைய
பேரருளை நினைத்துப்
பிரமித்துப் போகின்றேன்!

இறைவா!
என்ன நாடகம் இது?
இரும்புக் கோட்டைக்குள்
இருப்பதாய் நினைத்தபடி
தருக்கிக்கொண் டிருப்போரின்
தர்பார் புகழையெல்லாம்
ஒரு சிலந்தி வலைமுன்னே
சேதப்படுத்தினாய்..
என்ன நாடகம் இது?

படைத்தவனே! நீ எம்மைப்
பாதுகாக்க நினைத்துவிட்டால்
படைபலங்கள் தேவையில்லை
சின்னஞ் சிறியதொரு
சிலந்தி வலைகூடப்
போதும் - என்பதை
நாங்கள்
புரிந்து கொள்ள முடிகிறது!

Friday, February 13, 2009

கப்ருகளை ஒழுங்குபடுத்த வேண்டும்

ஆதார விரும்பிகளான வஹ்ஹாபிய கருத்துடைய சகோதரர்களிடத்திலே ஒரு வேடிக்கையான குணம் உண்டு, அதாவது அவர்கள் ஒரு கருத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அதை சரி என்று நிரூபனம் செய்வதற்காக அந்த கருத்துக்கு சாதகமான ஆதாரங்களை தேடுவது, அப்படி எதுவும் கிடைக்காமல் போனாலும் கொஞ்சூண்டு பொருத்தமான ஒரு ஹதீதை எடுத்துக் கொண்டு அதற்கு வேறு ஒரு விளக்கத்தை கொடுத்து இந்த ஹதீது இந்த கிதாபிலே உள்ளது என்று ஹதீதின் எண்களை சொல்லி குட்டையை குழப்புவது.

அப்படி குழப்பிய குப்பைகளில் ஒன்று கப்ருகளை தரைமட்டமாக்குங்கள் என்று அள்ளி விட்டது.

இந்த காட்சி பதிவில் வஹ்ஹாபிய சகோதரர்கள் மேற்கோள் காட்டிய அதே ஹதீதை "தரைமட்டமாக்குங்கள்" என்ற விளக்கம் தவறானது என்று "ஒழுங்குபடுத்துங்கள்" என்ற உணமையான விளக்கத்தை தெளிவு படுத்துகிறார்கள்.

அருமையான விளக்கம்.