Friday, May 20, 2016

இமாம் அபுஹனிபா றஹ்மத்துல்லாஹி அலைஹி

இமாமவர்கள் ஈராக்கில் உள்ள கூஃபா நகரில் ஹிஜ்ரி 80ஆம் ஆண்டு பிறந்தார்கள்.  இவர்களது தந்தையார் ஒரு பாரசீக வியாபாரியாக இருந்தார்கள். இவர்களது முழு பெயர் நுஃமான் பின் தாபித் இப்னு ஜவ்தி என்பதாகும்.

ஹஜ்ரத் அலி றலியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சி காலத்தில் கூஃபா நகரம் தலைநகராக கொள்ளப்பட்டது. அச்சமயம் இமாமவர்களது தந்தையான தாபித் என்பவர்கள் ஹஜ்ரத் அலி றலியல்லாஹு அவர்களை சந்தித்து உள்ளார்கள். கூஃபா நகர் வரலாற்றின் ஒரு காலத்தில் மிக முக்கிய கல்வி மையமாகவும் 1000த்திற்கும் மேற்பட்ட ஷஹாபா பெருமக்களும் வாழும் நகரமாகவும் இருந்து வந்தது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உத்தம தோழர்களான ஷஹாபாக்களில் ஒருத்தவர்களையேனும் நேரில் சந்தித்தவர்களை தாபியின் என்று அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் இமாமவர்கள் ஒரு தாபியின் ஆவார்கள்.

இமாமவர்கள் தம்முடைய 20வது வயதில் இஸ்லாமிய சட்ட கல்வியில் பயின்று தேறுவதறுக்கு ஆர்வம் கொண்டார்கள்.

இமாமவர்களுக்கு 4000க்கும் மேற்பட்ட ஷெய்குமார்கள் (மார்க்க குரு) இருந்தார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் இமாம் ஹம்மாத் அவர்கள். இமாம் ஹம்மாத் அவர்கள் மார்க்க கல்வியை உத்தம ஷஹாபாக்களில் ஒருவர்களான அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் றலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கற்றார்கள். இமாம் ஹம்மாத் அவர்கள் ஹிஜ்ரி 120ஆம் ஆண்டு மறைந்தார்கள்.

இமாமவர்கள் அவர்களது ஷெய்கு அவர்கள் மீது எந்த அளவுக்கு மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள் என்றால், 7தெரு தாண்டி வசித்து வந்த தமது ஷெய்கு அவர்களது வீடு இருக்கும் திசையை நோக்கி தமது காலை கூட நீட்டி அமர மாட்டார்களாம்.

இமாமவர்கள் தமது தந்தையாரது துணி வியாபாரத்தில் பங்கெடுத்து மிகுந்த விழிப்போடு நேர்மையாகவும் நியாயமாகவும் அல்லாஹ்வுக்கு பயந்து நடத்தி வந்தார்கள். ஒரு முறை இவர்களது ஊழியர் ஒருவர் ஒரு வாடிக்கையாளரிடம் சிறிய குறைபாடுள்ள துணியை அதை பற்றி வாடிக்கையாளரிடம் தெரிவிக்காமல் விற்று விட்டார், இதை கேள்விபட்டதும் அவர்கள் அந்த வாடிக்கையாளரிடம் பணத்தை திருப்பி கொடுக்க முயன்று முடியாமல் போனது. மிகுந்த வருத்தத்துடன் இருந்த அவர்கள் உடனடியாக வந்த வியாபார வருவாய்களை (30,000 திர்ஹம்கள்) தான தர்மமாக கொடுக்க உத்திரவிட்டார்கள்.

இமாமவர்கள் கல்வியிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் கூஃபா நகரில் ஒரு பள்ளியை நிறுவினார்கள். அது பிற்காலத்தில் இறையியல் பாடத்தில் புகழ் பெற்று விளங்கிற்று. இந்த பள்ளியில் அவர்கள் இஸ்லாமிய சட்டங்கள் சம்மந்தமான பாடங்களை நடத்தினார்கள்.

இங்கே மாணவர்கள் ஃபிக்ஹ் அல்லது இஸ்லாமிய சட்டங்களை திட்டமிட்ட ஒரு பல்கலைக்கழக படிப்பினை போல் இமாமவர்களின் நேரடி மேற்பார்வையில் நிர்வாகத்தில் படித்து வந்தார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக இமாமவர்களிடம் மதித்து தங்கி பயின்ற ஏராளமான அறிவாற்றலுள்ள மாணவர்கள் இருந்தார்கள், இந்த மாணவர்களது முயற்சி  தான் ஹனஃபி மத்ஹப் எனும் பொக்கிஷம் கிடைக்க காரணமானது.

இமாமவர்கள் தான் முதன் முறையாக இஸ்லாமிய சட்டதிட்டங்களை திட்டமிட்ட கல்வி முறை வடிவில் மாணவர்கள் பயில அமைத்து தந்தார்கள்.

இமாமவர்களின் மாணவர்களான இமாம் அபு யூசுஃப் அவர்களும் இமாம் முஹம்மத் அவர்களும் இமாமவர்களின் கருத்துக்களை கிதாபுல் ஆஸார் எனும் நூல் வடிவில் தொகுத்து தந்தார்கள்.

பக்தாதில் அல் மன்சூர் எனும் பனு அப்பாஸ் கலிஃபா என்பவரின் ஆட்சி நடந்த போது இமாமவர்களை நாட்டின் தலைமை காதியாக பொறுப்பேற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் இமாமவர்கள் அந்த வேண்டுகோளை அல்லது அரசு உத்திரவை ஏற்க மறுத்து தாம் தனிப்பட்ட முறையில் செயல்பட விரும்பினார்கள். அந்த பதவிக்கு தாம் பொருந்தவில்லை என்று பதிலனுப்பினார்கள்.

ஆட்சியாளரான மன்சூருக்கு இமாமவர்களை தலைமை காதியாக நியமிக்க அவருக்கான காரணங்கள் இருந்திருக்கலாம் ஆனால் இமாமவர்கள் மறுத்ததை கேட்டு இமாமவர்கள் பொய்யுறைக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தினார்.

இமாமவர்கள் மிகுந்த பொறுமையோடு, “நீங்கள் சொல்வது உண்மையென்றால் நான் மறுப்பது இரண்டு வகையில் சரியாகிறது, ஒரு பொய்யுறைப்பவரை எப்படி தலைமை காதி பதவிக்கு நியமிக்கலாம்” என்று பதிலளித்தார்கள்.

கோபமுற்ற மன்சூர் இமாமவர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களை சிறையிலடைத்தான்.

சிறையில் இருந்த போது தம்மிடம் அனுமதி பெற்று வந்தவர்களுக்கு சட்டதிட்டங்களை போதித்து வந்தார்கள்.

அதே சிறையில் இருக்கும் போது விஷம் கொடுக்கப்பட்டார்கள். தமது மறைவு நெருங்குகிறது என்பதை உணர்ந்த இமாமவர்கள் தொழுகையில் ஸஜ்தாவில் இருக்கும் போதே ஹிஜ்ரி 150ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் மறைந்தார்கள்.

மறைவு செய்தி பக்தாத் முழுக்க பரவியது. ஒட்டு மொத்த நகரமே இஸ்லாமிய உலகின் தலைச்சிறந்த இமாமவர்களது இறுதி மரியாதை செலுத்த திரண்டது. 50,000க்கும் மேற்பட்டவர்கள் முதல் ஜனாஸா தொழுகையில் பங்கேற்றார்கள். கட்டுபடுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதால் ஜனாஸா தொழுகை மட்டுமே மொத்தமாக ஆறு முறை நடந்தது. அன்று வரமுடியாதவர்கள் இன்று வரை தொடர்ந்து அவர்களது மக்ரபாவிற்கு சென்று ஜியாரத் எனும் மரியாதை சந்திப்பை செய்து வருகிறார்கள்.