Sunday, November 8, 2015

யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கோபம்

யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி தேவையில்லாத அவதூறுகளை உலக அறிஞர் ஓதியிருந்ததை பார்த்திருப்போம். இவருக்கு தன்னைத் தவிர எல்லாரையும் ஏளனமாக பார்க்கும் அல்லது புரிந்துகொள்ளும் உளவியல் இருக்கிறது. அது அப்படி தான் இருக்க வேண்டும், அப்போது தான் அது வஹ்ஹாபிய சிந்தனையின் அடிப்படையில் கட்டமைத்திருப்பதாக அர்த்தம். 

அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?

  1. யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வை ”எதிர்த்து பேசினார்... எதிர்த்து நடந்தார்” (இரண்டுமேவா?.. அல்லது இரண்டாவது சொன்னது மட்டும் தானா?.. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா? இல்லையா? பேசிய அவரிடம் தான் கேட்க வேண்டும்)
  2. அல்லாஹ்வின் மீது யுனூஸ் நபி அலைஹிஸ்ஸலாம் கோபப்பட்டுவிட்டார்கள் 
  3. குரான் ஷரீஃபில் “தன்னூனி” என்று அதாவது “மீன் வயிற்றில் இருந்தாரே..” என்று கூறுகிறான் - பேரை கூட சொல்ல மாட்டேன் என்கிறான்”.
  4. யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ”அவர் மீது நமக்கு சக்தி இல்லை என்று நினைத்துக் கொண்டார்” என்றும் சொல்கிறார்.
  5. ”அல்லாஹ் இதுக்காக வேண்டியே கடல்ல கொண்டு தள்ளி, மீன் வயித்தில சிறை வச்சு..” இப்படியெல்லாம் ஏதோ கதை சொல்லி மாதிரி பேசுகிறார், அல்லஹ்வின் வாக்கியத்தை அந்த நயத்தோடு எடுத்துரைக்கவில்லை (இடையிடையே குரான் ஷரீஃபின் வசனத்தை ஓதிக் கொள்கிறார்)
  6. இதில் யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எப்படி அல்லாஹ்வின் மீது கோபப்பட்டார்கள் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்து விட்டு (?) அப்படியே சொல்லிக் (பேசி நடித்து)காட்டுகிறார் பாருங்கள்.. சுபஹானல்லாஹ்... “இவருக்கு கோவம்... என்ன கோவம்..?.. நம்மல்ட்ட அழிக்கிறேன்னு சொல்லிபுட்டு.. இவங்கள ஜேஜேன்னு அல்லாஹ் வச்சிருக்கானே..ன்னு அல்லாஹ்ட்ட கோவம்..” என்று சொல்லிவிட்டு மாடுலேசன் மாத்தி “இவர் என்ன செஞ்சிருக்கணும்.. என்று நபியவர்களுக்கே ஆலோசனை சொல்கிறார்” அப்புறம் தொடர்ந்து பேசும் போது,  ”.. இவர் (யாரு? நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தான்) என்னா பண்றாரு...அது எப்படி எங்கிட்டே அழிக்கிறேன்னு சொல்லிட்டு... கடைசில அவங்கள கொண்டு போய் ஜேஜேன்னு வச்சிகிறதுன்னு.. கோச்சிகிட்டு போறாரு..”

எப்படி இருக்கு? ஏதாவது ஒரு மரியாதை இருக்கா? ஒழுங்கு இருக்கா? 

கீழே வரும் குரான் ஷரீஃபின் ஆயத்தை படிப்போம்:
21வது அத்தியாயம் -ஸூரத்து அன்பியா
87 வது வாக்கியம்

   وَ ذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّـقْدِرَ عَلَيْهِ فَنَادٰى فِى الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌ۖ  اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ‌ۚ‏ 

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் (நக்திர) ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்

(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம்முடைய தூதராக ஆக்கினோம்.) அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம்  (நக்திர)  என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருளிலிருந்த அவர் (நம்மை நோக்கி) "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தனை செய்தார்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்

மேலும், மீன்காரருக்கும் நாம் அருள் பாலித்திருந்தோம். நாம் அவரைப் பிடிக்கமாட்டோம்  (நக்திர)  என்று நினைத்து, கோபப்பட்டுக் கொண்டு அவர் சென்றுவிட்டதை நீர் நினைவுகூரும்! இறுதியில் அவர் இருள்களுக்குள் இருந்துகொண்டு இவ்வாறு இறைஞ்சினார்: “உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை; தூய்மையானவன் நீ! திண்ணமாக, நான் குற்றம் செய்துவிட்டேன்.”

நன்றி: http://www.tamililquran.com/qurandisp.php?start=21 

உலக அறிஞர் 

மீனுடையவர்508 (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். "அவர் மீது நாம் சக்தி  (நக்திர)  பெற மாட்டோம்'' என்று நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன்.10 நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து303 அவர் அழைத்தார்.



உலக அறிஞர் பேசிய பேச்சை கேட்டுவிட்டு இந்த குரான் ஷரீஃபின் ஆயத்தை படித்தால் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய மிக எளிமையான கேள்வி:

1. யூனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மீது கோபப்பட்டார்களா?

2. யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் தம்மீது சக்தி பெற மாட்டான் என்று நினைத்தார்களா?

முதல் கேள்விக்கான புரிதல்:

யுனுஸ் நபி அல்லாஹ்வின் மீது தான் கோபப்பட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக குரான் ஷரீஃபின் மேலே படித்த ஆயத்தின் முதல் பகுதியை அவர் ஓதி காண்பித்தார்.


வத னூனி - மீனை உடையவர் (அரபியில் “நூன்” என்றால் திமிங்கிலம் அல்லது பெரிய மீன் என்று அர்த்தம். எகிப்திய எழுத்து வனப்புடைமையில் (calligraphy) நூன் என்ற எழுத்தை ஒரு பெரிய மீன் தண்ணீரிலிருந்து வெளியே வரும் போது உடலை வளைத்து அதன் மீது தண்ணீர் துளி ஒன்று தெறிப்பது போல் தான் எழுதுவார்களாம். அத்தோடு இந்த சூரா “நூன்” என்ற அரபி சொல்லோடு தான் ஆரம்பமாகிறது, எல்லா நபிமாரின் சரிதம் சொல்லி இறுதியாக மீனை உடையவர்களான யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை சரிதமோடு சூரா நிறைவு பெறுகிறது)

இத் - எப்பொழுது

தஹப - போனாரோ

முகாளிபன் - கோபமாக 

அதாவது, இப்படி படிக்கலாம், “மீனைஉடையவர் (யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம்) கோபமாக வெளியேறிய போது..”

இந்த வாக்கியத்தில் கோபமாக வெளியேறிய போது என்று தானே வருகிறது, அல்லாஹ்வின் மீது கோபமாக வெளியேறிய போது என்று இவராக நினைத்துக் கொண்டு சொல்வதேன்...?

அவர்கள் அல்லாஹ்வின் மீது கோபப்படுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.. ஆனால் நான் கோபப்படவில்லை மக்கள் மீது தான் கோபப்பட்டு சென்றார்கள் என்று சொல்கிறேன் என்று வையுங்கள் எந்த குற்றமும் இல்லை... ஏனெனில் இந்த குறிப்பிட்ட வாக்கியத்தில் யார் மீது கோபப்பட்டார்கள் என்றே குறிப்பிடவில்லை.

ஆனால் யுனுஸ் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் மீது கோபப்படாதிருக்க அவர்கள் மீது இட்டுக் கட்டி அல்லாஹ்வின் மீது கோபப்பட்டார்கள் என்று அபாண்டமாக சொன்னால்... குற்றம் தானே?

இரண்டாவது கேள்வி: - யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் தம்மீது சக்தி பெற மாட்டான் என்று எண்ணுவது?

முதல் புரிதல் அல்லாஹ் தேர்ந்தெடுத்த ஒரு நபியானவர்கள் அப்படி எண்ணுவதற்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை என்று உணருவது. 

சரி புரிகிறோம், ஆனால் இந்த ஆயத்தை எப்படி விளங்குவது? என்று நியாயமாக கேட்டால், புரிதல் பெறுவதற்கு வாய்ப்புகளுண்டு..

சக்தி பெற மாட்டான் என்ற வார்த்தைக்கு ”நக்திர” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

“நக்திர” என்ற வார்த்தை ”கத்ர்” என்ற வார்த்தையிலிருந்து வந்தது, அந்த வார்த்தை குரான் ஷரீஃபில் வேறு சில இடங்களில் வருகிறது, அது எவ்வாறு பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது.


13. ஸூரத்துர் ரஃது (இடி)
26வது வாக்கியம்

 اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ وَفَرِحُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ‏ 

அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் (யக்திர் - restrict, straiten) கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.  

89வது அத்தியாயம் - ஸூரத்துல் ஃபஜ்ரி(விடியற்காலை) 
16வது வாக்கியம்

   وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰٮهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَهَانَنِ‌ۚ‏ 

எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து (ஃபகதர - restrict, straiten), அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.

இங்கே யக்திர், ஃபகதர என்ற வார்த்தைகள் உணவு வசதிகளை குறைப்பதை தான் குறிக்கிறது. இதை ஒத்த வார்த்தையான “நக்திர” என்ற வார்த்தைக்கும் பொருத்தி பார்த்தோமானால், நாம் யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றி விளங்கிக் கொள்ள முடியும்.

ஆக, ஸூரத்துல் அன்பியாவில் உள்ள 87வது வாக்கியத்தை இப்படி படித்து புரிந்து கொள்ளலாம்,

 (யூனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள்)  மீனை உடையவர்கள் (மக்களிடம்) கோபித்துக் கொண்டு சென்ற (அந்த ஊரை விட்டு வெளியேறிய) சமயத்தில், நாம் அவருக்கு (வழங்குபவைகளிலிருந்து - provisions) குறைவு ஏற்படுத்த மட்டோம்  (நக்திர)  என்று எண்ணிக்கொண்டார். 

யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மீது கோபப்பட்டார்கள் என்றோ அல்லாஹ் தம்மீது சக்தி பெற மாட்டான் என்றோ நினைத்தார்கள் என்று ஒருவன் சொன்னான் என்றால் அவன் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நபியையே அல்லாஹ்மறுப்பாளனாக பார்க்கிறான் என்றே பொருள். அப்படி நினைக்க ஒரு அல்லாஹ்மறுப்பாளனாக இருந்தால் தான் முடியும்.

நாம எப்படி பார்க்கிறோம் என்றால், யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களின் சமூகத்திடத்திலே அல்லாஹ் சொன்ன செய்தியை எடுத்து சொல்கிறார்கள். அவர்கள் கேட்கவில்லை. அல்லாஹ்விடம் முறையிடுகிறார்கள், தண்டனை அளிப்பதாக சொல்கிறான். அவர்களும் அல்லாஹ்வின் வார்த்தைகளை சமூகத்திடத்திலே சொல்கிறார்கள். பிறகு அல்லாஹ் சொன்னது போல் அவர்களின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டவர்களுடன் வெளியேறுகிறார்கள்.

யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னது போலவே தண்டனை வருவதற்கான அறிகுறிகள் தெரியவே அந்த சமூகம் உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறார்கள், அல்லாஹ் தண்டனையை இறக்கவில்லை.

யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திரும்ப வந்து பார்க்கும் போது சமூகம் அழிக்கப்படாமல் இருக்கிறது. இதை பார்த்ததும் உலக அறிஞர் போல ஒருவர் இருந்தால் அல்லாஹ்வின் மீது கோபப்பட்டிருக்கலாம், நமக்கு தெரியாது, ஆனால் அவர்கள், மக்களுக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும், அவர்கள் அப்படியே இருக்கிறார்களே என்று அவர்கள் மீது கோபப்பட்டு அவர்களிடம் இருக்க மனமில்லாமல் அந்த சமூகம் இருக்கும் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள்.

அப்பொழுது அவர்கள், அல்லாஹ் நமக்கு எந்த வசதிகளையும் குறைவே வைக்க மாட்டான் என்று நினைத்து விடுகிறார்கள். சாதாரணமாக பார்க்கும் போது, இது அல்லாஹ்வின் மீது வைக்கும் ஆதரவு தானே என்று தோன்றும், ஆனால் ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு படித்தரம்  இருக்கிறது, நபியவர்களுடைய படித்தரமும் நம்முடைய படித்தரமும் ஒன்றல்ல. சாதாரணமான ஒருவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பது அப்படி ஒன்றும் மீன் வயிற்றில் இருக்கும் அளவுக்கு குற்றம் இல்லாமல் இருக்கலாம், தெரியவில்லை.. ஆனால் நபியவர்கள் take it for granted மாதிரி எடுத்துக் கொள்ள கூடாது என்று அல்லாஹ் நினைத்திருக்கலாம்.

சரி, அப்படியே அவர்கள் சக்தி பெற மாட்டான் என்று நினைக்க வில்லை என்றால் இந்த வாக்கியத்தில் தொடர்ந்து வரும் யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துவாவில் ஏன் அவர்கள், “... நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் (மினல்லாழிமீன்) ஒருவனாகி விட்டேன்.” என்று பிரார்த்திக்க வேண்டும்.

மினல்லாழிமீன் என்றால் ‘அவசரப்படுதல் to make haste”, “தவறான நிலைக்கு வருதல் to come to harm” என்ற பொருளும் உண்டு. அது தான் இங்கே பொருந்தி வருகிறது.

“... நிச்சயமாக நான் அவசரப்படுபவர்களில் (மினல்லாழிமீன்) ஒருவனாகி விட்டேன்.”

என்று துக்கத்தில் தவிக்கிறார்கள். உடனே அல்லாஹ், அடுத்த ஆயத்தில் சொல்லி காட்டுகிறான்...

21வது அத்தியாயம் -ஸூரத்து அன்பியா
88வது வாக்கியம்

 فَاسْتَجَبْنَا لَهٗۙ وَنَجَّيْنٰهُ مِنَ الْـغَمِّ‌ؕ وَكَذٰلِكَ نُـنْجِى الْمُؤْمِنِيْنَ‏ 

நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) கஷ்டத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். இவ்வாறே, (கஷ்டத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) நம்பிக்கையாளர்களையும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்.

கடைசியில் அழகாக “.. நமிபிக்கையாளர்களை..” என்று தொடர்பு படுத்தி அல்லாஹ் சொல்லியிருப்பது, யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நம்பிக்கையில் எந்த வித பழுதும் இல்லை, அதை யாரும் குறை சொல்ல எண்ண வேண்டாம் என்பதையே உணர்த்துகிறது போலும்.. அல்லாஹ் அஃலம்.

Thursday, November 5, 2015

நான் + நாம் + அவன் - ஸூரத்துல் கஹ்ஃப் (குகை)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹாகிமில் இடம் பெற்ற ஒரு ஹதீதை நாம் அறிந்திருப்போம்.

“எவரொருவர் வெள்ளிகிழமை தினத்தில் ஸூரா கஹ்ஃபை ஓதுகின்றாரோ அவருக்கு இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடையில் பிரகாசம் கிடைக்கும்”

அந்த வகையில் உலக முஸ்லிம்களால் குரான் ஷரீஃபில் அதிகமதிகம் ஓதக்கூடிய அத்தியாயங்களுள் ஒன்றாக ஸூரத்துல் கஹ்ஃப் இடம் பெற்றிருக்கின்றது.

இந்த ஸூராவில் மூன்று சம்பவங்கள் பிரதானமாக் எடுத்து சொல்லப்படுகிறது.


  • முதலில் ஒரு குத்பா (1 முதல் 8 வரை வரும் ஆயத்துகள்)
  • அதன் பிறகு முதல் சம்பவம் - குகைவாசிகளை பற்றி வருகிறது (9 முதல் 22 வரை வரும் ஆயத்துகள்)
  • மீண்டும் குத்பா (23 முதல் 59 வரை வரும் ஆயத்துகள்)
  • அதன் பிறகு இரண்டாவது சம்பவம்  - ஹிலுறு அலைஹிஸ்ஸலாத்தை மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சந்தித்தது (60 முதல் 82 வரை வரும் ஆயத்துகள்)
  • தொடர்ந்து மூன்றாவது சம்பவம் - துல்கர்னைனை பற்றி வருகிறது. (83 முதல் 98 வரை வரும் ஆயத்துகள்)
  • முடிவுரையாக ஒரு குத்பா (99 முதல் 110 வரை வரும் ஆயத்துகள்)


குகைவாசிகள்  பல வருடங்களாக நித்திரையில் இருந்ததாகட்டும், ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் செயல்களாகட்டும், துல்கர்னைன் இரும்பு பாலங்கள் அமைத்ததாகட்டும் இந்த மூன்று சம்பவங்களுமே அசாதாரணமான சம்பவங்கள் தான்.

இதில் இரண்டாவது சம்பவமான ஹிலுறு அலைஹிஸ்ஸலாத்தை மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சந்தித்த போது 3 செயல்களை ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் செய்கிறார்கள்.

1.  கப்பலில் ஓட்டை போடுவது
2. சிறுவனை கொலை செய்தது
3. புதையல் உள்ள தலத்தில் சுவர் எழுப்பியது

இந்த மூன்று செயல்களையுமே ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் உடல் ரீதியாக (physically) செய்கிறார்கள்.

ஆனால் மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் விளக்கம் கொடுக்கும் போது 3 நிகழ்வையும் நிகழ்த்தியதை வெவ்வேறு வார்த்தையில் சொல்கிறார்கள்.

கீழே குரான் ஷரீஃபின் வாக்கியத்தை படித்து பாருங்கள். அதில் அடிக்கோடிட்ட வார்த்தைகளை கவனியுங்கள்:

18வது ஸூரா - ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)

79, 80, 81 82வது வாக்கியம்
 اَمَّا السَّفِيْنَةُ فَكَانَتْ لِمَسٰكِيْنَ يَعْمَلُوْنَ فِى الْبَحْرِ فَاَرَدْتُّ اَنْ اَعِيْبَهَا وَكَانَ وَرَآءَهُمْ مَّلِكٌ يَّاْخُذُ كُلَّ سَفِيْنَةٍ غَصْبًا‏ 

79. "அக்கப்பல் கடலில் (கூலி) வேலை செய்து கொண்டிருந்த ஏழைகள் சிலருடையது. அதனை குறைபடுத்தவே நான் கருதினேன். (ஏனென்றால், இது செல்லும் வழியில்) இவர்களுக்கு முன் ஓர் (அநியாயக்கார) அரசன் இருக்கின்றான். அவன் (காணும் நல்ல) கப்பல்கள் அனைத்தையும் அநியாயமாக அபகரித்துக் கொள்கின்றான். (அவனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே அதனை குறைப்படுத்தினேன்.)


   وَاَمَّا الْغُلٰمُ فَكَانَ اَبَوٰهُ مُؤْمِنَيْنِ فَخَشِيْنَاۤ اَنْ يُّرْهِقَهُمَا طُغْيَانًا وَّكُفْرًا‌ۚ‏ 

80. (கொலையுண்ட) அந்தச் சிறுவனோ அவனுடைய தாயும் தந்தையும் நல்ல நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அநியாயம் செய்யும்படியும், (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்து விடுவானோ என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம்.


فَاَرَدْنَاۤ اَنْ يُّبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِّنْهُ زَكٰوةً وَّاَقْرَبَ رُحْمًا‏ 

81. அவனுடைய தாய் தந்தைக்கு இறைவன் இவனை விட மேலானவனையும், பரிசுத்தமானவனையும் (தாய் தந்தைமீது) அன்பு கொள்ளக் கூடியவனையும் மாற்றிக் கொடுப்பதை நாம் விரும்பினோம்.


وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَيْنِ يَتِيْمَيْنِ فِى الْمَدِيْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًـا ۚ فَاَرَادَ رَبُّكَ اَنْ يَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا ۖ  رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌‌ ۚ وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِىْ‌ ؕ ذٰ لِكَ تَاْوِيْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَيْهِ صَبْرًا ؕ‏ 

82. அந்தச் சுவரோ அப்பட்டினத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியது. அதற்குக் கீழ் அவர்களுக்குச் சொந்தமான புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை மிக்க நல்ல மனிதராக இருந்தார். ஆகவே, உங்கள் இறைவன் (இறைவனான அவன்) அவ்விருவரும் வாலிபத்தை அடைந்த பின்னர் தங்களுடைய புதையலை எடுத்துக் கொள்ளும்படிச் செய்ய நாடினான். (எனவே, அதுவரையில் அச்சுவர் விழுந்து விடாதிருக்கும்படி அதனைச் செப்பனிட்டேன். இது) உங்கள் இறைவனின் அருள்தான். (இம்மூன்றில்) எதனையும் நான் என் இஷ்டப்படி செய்துவிடவில்லை. நீங்கள் பொறுத்துக்கொள்ள முடியாமல் போன (என்) செய்கைகளின் கருத்து இதுதான்" என்று கூறினார்.


ஆக, முதல் சம்பவமான கப்பலில் ஓட்டை போட்டதை பற்றி சொல்லும் “நான்” என்று சொல்கிறார்கள்.

இரண்டாவது சம்பவமான கொலை செய்ததை பற்றி சொல்லும் போது “நாம்” என்று சொல்கிறார்கள்.

மூன்றாவது சம்பவமான சுவர் எழுப்பியதை பற்றி சொல்லும் போது “அவன்” என்று சொல்கிறார்கள்.

எல்லாவற்றையும் செய்தது ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் என்ற ஒரே நபராக இருக்க, ஏன் இங்கே வெவ்வேறு மாதிரி வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்?

முதல் சம்பவமான கப்பலில் ஓட்டை போடுவது என்பது ஒரு தவறான செயல், நோக்கம் நல்லது தான் செய்த அந்த செயல் ”சேதம் ஏற்படுத்துவது” என்பது சரியான செயல் அல்ல, அதனால் அதை தான் தான் செய்தேன் என்று சொல்கிறார்கள்.

இரண்டாவது சம்பவத்தில் இரண்டு செய்திகள் இருக்கிறது, ஒன்று தீயவன் ஒருவனை கொலை செய்வது அதன் பிறகு பரிசுத்தமான, தாய் தந்தையை நேசிக்கக்கூடிய குழந்தையை தருவது (கவனிக்க, முதல் சம்பவத்தில் கப்பல் கொள்ளையரிடமிருந்து காப்பாற்றப்பட்டிருக்கலாம் ஆனால் சேதமடைந்த கப்பலுக்கு பதிலாக இன்னொரு கப்பல் கிடைக்கப் போவது பற்றி சொல்லவில்லை). ஆக, ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் கொலை செய்ததை தன் பங்காகவும், நல்ல பரிசுத்தவான் அந்த தாய்தந்தையருக்கு கிடைக்கப் பெறுவதை இறைவனின் செயலாகவும் பார்த்து “நாம்” என்று சொல்கிறார்கள்.

மூன்றாவது சம்பவத்தில் அனாதையின் சொத்தை பாதுகாப்பதற்காக சுவர் எழுப்பப்படுவது என்பது முழுக்க முழுக்க நல்ல செயல், இந்த செயலை தனக்கென்று பெருமை தேடிக் கொள்ளாமல் அதை “அவன்” தான் செய்தான் என்று இறைவனையே பொறுப்பு சாற்றி விடுகிறார்கள்.

Tuesday, September 15, 2015

நூருன் அலா நூர் (ஒளிக்கு மேல் ஓளி)

முன்னெச்சரிக்கை: மிகப் பெரிய பதிவு.

குரான் ஷரீஃபில் ரொம்பவும் பிரபலமான சொற்றொடர் “நூருன் அலா நூர்”.
இதனை பற்றி பல அருமையான ஆய்வுகளடங்கிய விளக்கவுரைகள் மார்க்க புத்தகங்கள் எங்கும் வழிந்து கிடக்கின்றது. இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நூருன் அலா நூர் எனும் சொற்றொடரை பற்றி மிக ஆழமான அர்த்தங்களை கொண்ட மிஷ்காதுல் அன்வார் எனும் ஒரு நூலையே எழுதி தந்தார்கள்.

ஒளியை பற்றி இயற்பியல் வல்லுனர்கள் இன்றளவும் ஆச்சர்ய கண்களோடு தான் பார்த்து வருகிறார்கள். அது "particles" ஆகவும் "waves" ஆகவும் செயல்படுகிறது என்று ஆச்சர்யப்படுகிறார்கள்.

பொதுவாக "waves" என்றால் அது செல்வதற்கு ஒரு பொருள் (medium) தேவைப்படும். உதாரணமாக ஒலி அனும் waves செல்வதற்கு காற்று மண்டலம் தேவைப்படுகிறது. காற்று இல்லாத வெற்று மண்டலத்தில் அதாவது vacuum த்தில் ஒலி செல்ல முடியாது.
ஆனால் இந்த ஒளியானது செல்வதற்கு எந்த ஒரு மீடியமும் தேவையே இல்லை. மிக ஆச்சர்யமாக இருக்கிறது (fascinating).

அல்லாஹ் குரான் ஷரீஃபில் பல இடங்களில் ஒளியை பற்றி பேசுகிறான்.

2. ஸூரத்துல் பகரா (பசு மாடு)
257வது வாக்கியம்
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருளின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.

மேலே உள்ள வாக்கியத்தில் அல்லாஹ் வந்து இருள்களிலிருந்து வெளிச்சத்தின் (அரபியில் நூர் என்ற வார்த்தையில் சொல்கிறான்) பக்கம் கொண்டு வருவதாகவும் ஷைத்தான் வெளிச்சத்திலிருந்து (அரபியில் நூர் என்ற வார்த்தையில் சொல்கிறான்) இருளின் பக்கம் கொண்டு வருவதாகவும் சொல்கிறான்.

66. ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்)
8வது வாக்கியம்
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.

மேலே உள்ள வாக்கியத்தில் ஈடேற்றம் பெற்றவர்களுடைய ஒளியை பற்றி (நூர் என்ற அரபி வார்த்தை) அவர்களை சுற்றி இருப்பதாகவும் அவர்கள் அதனை முழுமையாக்கி வைக்குமாறு கேட்பார்கள் என்றும் கூறுவதாக சொல்கிறான்.

இது பத்தாதற்கு தான் அனுப்பிய வேதங்களை நூர் என்று கூறுகிறான்

மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட தவ்றாத் வேதத்தை ஒளியோடு ஒப்பிடும் வாக்கியம்
5. ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)
44வது வாக்கியம்
நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
மேலே உள்ள வாக்கியத்தில் தவ்றாத்தில் பேரொளி இருந்ததாக கூறுகிறான்.

ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இன்ஜிலை ஒளியோடு ஒப்பிடும் வாக்கியம்
5. ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)
46வது வாக்கியம்
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
மேலே உள்ள வாக்கியத்தில் இன்ஜிலில் ஒளி இருந்ததாக கூறுகிறான்.
நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட குரான் ஷரீஃபையும் அல்லாஹ் நூர் என்று சொல்கின்ற வாக்கியம்

64. ஸூரத்துத் தஃகாபுன் (நஷ்டம்)
8வது வாக்கியம்
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம் இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
அல்லாஹ் இங்கே குரான் ஷரீஃப் என்று குறிப்பிடாமலேயே நாம் இறக்கி வைத்த ஒளி என்று கூறுகிறான்.
இது மாத்திரமல்லாமல் அல்லாஹ் முஃமீன்களையே ஒளி என்று தான் குறிக்கிறான். அந்த வாக்கியம் வருமாறு:

57. ஸூரத்துல் ஹதீத்(இரும்பு)
13வது வாக்கியம்
முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: “எங்களை கவனியுங்கள்; உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்” என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும்: “உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.” பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும்; அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும்; ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.
மேலே உள்ள வாக்கியத்தில் முஃமீன்களை பார்த்து முனாஃபிக்கானவர்கள் (நன்கு கவனிக்கவும் - காஃபிரானவர்கள் அல்ல) உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம் என்று கேட்பதாக மிக அற்புதமாக சொல்கிறான்.
நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களை அல்லாஹ் ஒளி என எடுத்தியம்பும் அருமையான வாக்கியத்தையும் பார்ப்போம்:

5. ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)
15வது வாக்கியம்
வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.

மேலே உள்ள வாக்கியத்தில் முக்கியமாக இரண்டு சப்ஜெக்டை பற்றி பேசுகிறான். ஒன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றொன்று குரான் ஷரீஃப். பெருமானாரை பற்றி இரண்டாவது முறை குறிப்பிடும் போது ”பேரொளி” என்கிறான் குரான் ஷரீஃபை பற்றி குறிப்பிடும் போது ”தெளிவு” என்று கூறுகிறான்.

ஆக, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரொளியாக இருக்கிறார்கள். முஃமீன்கள் ஒளியாக இருக்கிறார்கள். வேதங்களும் ஒளியாக இருக்கின்றன.

அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்களில் ஒன்றான அந்நூர் என்ற பெயரை குரான் ஷரீஃபில் உள்ள 24வது அத்தியாயமான ஸூரத்துந் நூரில் வரும் 35வது வாக்கியத்தை பிரதானமாக கொண்டே நாம் அமைத்திருக்கிறோம்.

எனக்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒரு மாதிரி பரவசம் பற்றிக் கொள்கின்ற ஆயத்தாக இந்த ஆயத்து அமைந்திருக்கிறது. அந்த வாக்கியத்தை படிப்போம்.

புரிந்து கொண்டதை இப்படி வெளிப்படுத்த விழைகிறேன்:
24. ஸூரத்துந் நூர் (பேரொளி)
35 வது வாக்கியம்
اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ
அல்லாஹு நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ள் -
அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளியாக இருக்கின்றான்.

கண்களால் எந்த பொருளையும் பார்க்க முடியாது, கண்ணில் ஒளி இல்லை என்றால்.
கண்ணில் ஒளி இருந்தாலும் இருட்டில் எதையும் பார்க்க முடியாது வெளியில் ஒளி இல்லை என்றால்.

இன்று நாம் வானத்தில் உள்ளதையோ அல்லது பூமியில் உள்ளதையோ வெளிச்சத்தில் பார்க்க முடிகிறது என்றாலும் அதனிலிருந்து விளங்கி கொள்ள வேண்டியது அறிந்து கொள்ள வேண்டியதை நீங்கள் perceive செய்ய வில்லை என்றால் அப்பவும் நீங்கள் அந்த பொருளை பார்க்கவில்லை என்று தான் பொருள்.

அப்படி நீங்கள் ஒரு பொருளில் என்ன பார்க்க வேண்டும்? அல்லது அந்த பொருளிலிருந்து எதை perceive செய்ய வேண்டும்?

ஒரு பொருளிலிருந்து எதை விளங்கிக் கொள்ள வேண்டுமோ (perceive) அதனை நீங்கள் விளங்காமல் வேறு விளங்க கூடாத ஒன்றை விளங்கி வைத்திருக்கிறீர்கள் என்றால் அது perception distortion எனப்படும்.

கண்ணில் உள்ள ஒளி என்றாலும் சரி, பார்க்கும் பொருளில் உள்ள ஒளி என்றாலும் சரி அது அல்லாஹ் தான். அதாவது உதாரணமாக கடல் இருக்கிறது அதை நான் பார்க்கிறேன். பெரிதாக என்னால் கடலை பற்றி விவரிக்க முடியாது. ஆனால் கடல் ஆராய்ச்சியாளர்கள் கடலை பற்றி வால்யூம் வால்யூமாக புத்தகம் எழுதுவார்கள். இங்கே ஒளி என்பது நீங்கள் ஒரு பொருளை எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறீர்களோ அந்த அளவிற்கு வேறுபடும்.

ஆனால் நீங்கள் எந்த அளவுக்கு கடலை பற்றி ஆராய்ச்சி செய்தாலும் அதன் மூலமாக அல்லாஹ்வை விளங்கிக் கொண்டீர்களா என்பது தான் முக்கியம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ஹதீதை நான் படித்த ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன், “ஒரு கிணற்றில் தண்ணீர் எடுக்க வாளியை விடும் போது அந்த வாளியானது அல்லாஹ்வை முட்டுகிறது..” என்பது போல் அந்த ஹதீது வரும்.

வானங்கள் பூமி எது என்ற போது அதில் உள்ள ஒளியாக அல்லாஹ்வே இருக்கின்றான்.அந்த அல்லாஹ்வின் ஒளியை பற்றி பேசுகிறான். எந்த ஒரு பொருளுக்குள்ளும் மறைவாக அல்லாஹ் எனும் ஓளியே அமையப் பெற்றுள்ளது.

مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌ‌
மஸலு நூரிஹி கமிஸ்காதி ஃபீஹா மிஸ்பாஹுன் -
அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும்.
அந்த ’ஒளி’க்கான விளக்கத்தை அந்த ஒளியாகிய அல்லாஹ்வே சொல்கிறான்.
அதுவும் உவமை என்று கூறுகிறான். அதாகப்பட்டது ஒரு மாடத்தை பற்றி குறிப்பிடுகிறான். நீங்கள் ஒரு இடம்/வீடு இருட்டடைந்து கிடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வீடு முழுக்க விளக்கின் ஒளி படர வேண்டும் என்பதற்காக ஒரு மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மாடத்தில் தான் விளக்கு உள்ளது.
இதை இன்னும் deeper ஆக விளங்கிக் கொள்ள வீட்டிற்கு பதிலாக மனித உடலை நினைத்துக் கொள்ளுங்கள். அது இருளடைந்து அதாவது உயிரற்று கிடக்கிறது. அதில் உள்ள விலா எலும்புகள் தான் மாடம் என்பதாகும். அதில் உள்ள விளக்கானது இதயத்தை குறிக்கும்.

الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌
அல்-மிஸ்பாஹு ஃபீ ஜாஜதின் -
அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது;
அந்த விளக்கானது ஒரு கண்ணாடியின் உள்ளே இருக்கின்றது. பொதுவாக கண்ணாடி என்றால் எளிதில் அழுக்கடையும், தெறிப்பு ஏற்படும், ஆகவே அடிக்கடி சுத்தம் செய்து ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
கண்ணாடியானது இதயத்தில் சுற்றியுள்ள நப்ஷ் எனும் மனசை குறிக்கும். அது எந்த நேரத்திலும் ஷைத்தானை நோக்கி தூண்டப்படலாம். அதனை அடிக்கடி திக்ர் செய்து சுத்தப் படுத்தி கொண்டே இருக்க வேண்டும்.

اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ
அஜ்ஜுஜாஜதுன் க அன்னஹா கவ்கபுன் துர்ரிய்யுன் -
அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும்.
அந்த கண்ணாடி தான் அந்த வீடு முழுக்க ஒளியை ஊட்டும் நட்சத்திரம் போல இருக்கிறது.
உள்ளே இருக்கின்ற விளக்கு உடம்பு முழுக்க படர வேண்டும் என்றால் கண்ணாடியை ஒழுங்காக வைத்துக் கொள்ள வேண்டும் என்று இங்கே வலியுறுத்தப்படுவதாகவே நான் உணர்கிறேன்.

يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ
யுவ்கது மின் ஸஜரதின் முபாரகதின் ஜய்தூனதின் -
அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது.
இப்போ அந்த விளக்குக்கு திரும்ப வந்து விடுங்கள், வீடு முழுக்க இருளடைந்து உள்ளது, வெளிச்சம் தேவை, வெளிச்சம் வீடு முழுக்க பட வேண்டும் என்றால் மாடம் தேவை, மாடம் உள்ளது, அதில் விளக்கு உள்ளது, விளக்கு கண்ணாடி குவியலின் உள்ளே உள்ளது, இப்போ என்ன தேவை? அந்த விளக்கு ஒளியூட்டப்பட வேண்டும்.. அதற்கு என்ன தேவை? எண்ணெய் தேவை. அந்த எண்ணெய் பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தினால் எறிக்கப்படுகிறது. அந்த எண்ணெய் தான் ரூஹு. அது தான் அல்லாஹ்.

لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ ۙ
லா ஸர்கிய்யதின் வலா கர்பிய்யதின் -
அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று.
அந்த எண்ணெயானது கீழ்த்திசையை சேர்ந்ததுமல்ல...
மேல்திசையை சேர்ந்ததுமல்ல
அல்லாஹ்வானவன் எந்த ஒரு பொருளை போலவும் இல்லை..நீங்கள் பார்க்கின்ற, பார்க்க முடியவில்லை என்று கூறுகின்ற அல்லது கற்பனை செய்கின்ற அல்லது கற்பனை செய்ய இயலாத இப்படி எந்த பொருளாகவும் இல்லை.. அது ஓர் அற்புதம்..

يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ‌
யகாது ஜய்துஹா யுளீஉ வலவ் லம் தம்ஸஸ்ஹு னாருன் -
அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும்,
சாதாரணமாக ஒரு நெருப்புக்கு தேவையான வெப்பம் என்பதே இல்லாமல் போனாலும் அந்த எண்ணெயானது ஒளி வீச தான் முற்படுகிறது.
நீங்கள் இறைவனையே நினைக்கா விட்டாலும் சரி, அந்த ரூஹானது அது அதன் தன்மையை மாறாமல் இருந்து கொண்டே தானிருக்கும். உங்களால் தான் அந்த விளக்குக்கு ஒளி என்று நினைத்து விடாதீர்கள்.

نُوْرٌ عَلٰى نُوْرٍ‌
நூருன் அலா நூர் -
ஒளி மேல் ஒளியாகும்.
உங்களுக்குள் அல்லாஹ் வழங்கியுள்ள அந்த ஒளியை (அல்லாஹ்வை) நீங்கள் ஒளியூட்டினால் அல்லாஹ் தன் புறத்திலிருக்கும் உள்ள ஒளியை உங்கள் மீது அவன் வழங்கியிருக்கும் ஒளியோடு ஒன்று சேர செய்வான். இரண்டு ஒளியும் ஒரே frequency யில் இணையும். அது தான் ஒளி மேல் ஒளியாகும். நூருன் அலா நூர்.
ஒளிக்கு மேல் ஒளி வந்தால் இருள் மறையும், கவலை இருக்காது, துக்கம் இருக்காது. அதனால் தான் அல்லாஹ் அவ்லியாக்களை பற்றி குறிப்பிடும் போது அவர்களுக்கு துக்கமோ கவலையோ இருக்காது என்கிறான்.

يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ‌
யஹ்தில்லாஹி நூரிஹி மய்யஸாஹு -
அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளியின் பால் நடத்திச் செல்கிறான்.
இந்த வாக்கியத்தை இப்படி படிக்க வேண்டுகிறேன்:
யஹ்தில்லாஹி நூரிஹி - அல்லாஹ் ஒளியின் பக்கம் வழிகாட்டுவான்
யஹிதின்னா வழிகாட்டுவது (அல்ஹம்து சூரால யஹ்தி நஸ்ஸிராத்தல் என்று வருமே).
நூரின் அதாவது அல்லாஹ்வின் புரத்திலிருக்கும் ஒளியின் பக்கம் அவன் வழிகாட்டுவான்.
அடுத்த கேள்வி வழி யாருக்கு காட்டுவான்?
மய்யஸாஹு - அதாவது இது இரண்டு அர்த்தம் வருகிறது. முதல் அர்த்தம்: தான் நாடியவருக்கு
இரண்டாவது அர்த்தம்: நாடியவருக்கு (அதாவது ‘தான்’ என்ற வார்த்தையே இல்லாமல்)
ஒரே வார்த்தையில் இரண்டு பேரோட wills ஐயும் ஒன்று சேர்க்கிறான்.
எந்த மனிதன் அந்த ஒளியின் பக்கம் செல்ல வேண்டும் என்று தன் நப்ஷை தூய்மைபடுத்த நினைக்கிறானோ அவனுக்கு - என்றும் சொல்லலாம்
எந்த மனிதன் அந்த ஒளியின் பக்கம் செல்ல வேண்டும் என்று அல்லாஹ் நினைக்கிறானோ அவனுக்கும் - என்றும் சொல்லலாம்.
நூருன் அலா நூர் என்று எப்படி மனிதனுக்கு வழங்கப்பட்ட நூரையும் தன் புறத்திலிருக்கும் நூரையும் ஒன்றன் மீது ஒன்றாக இணைத்தானோ அதே போல மனிதனுடைய எண்ணத்தையும் தனது எண்ணத்தையும் இணைத்து அழகாக சொல்கிறான்.

وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ‌ؕ
வ யள்ரிபுல்லாஹுல் அம்ஸால லின்னாஸி -
மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
இவ்வளவு விளக்கமும் மனிதன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மனிதனை வைத்தே சொல்கிறான்.

وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
வல்லாஹு பி குல்லி ஸய்இன் அலீமுன் -
அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
அந்த அல்லாஹ் எல்லாம் எப்படி எப்படி என்பதை நன்றாகவே அறிந்தவன். எனக்கு ஏன் இன்னும் அந்த அளவிற்கு ஒளி இன்னும் ஒளி வரவில்லை என்றெல்லாம் நீங்கள் எடுத்து குறை சொல்ல வேண்டியதில்லை. அவன் யாவற்றையும் நன்கு அறிந்தவன். அவனுக்கு தெரியும்.

Friday, July 3, 2015

குரான் ஷரீஃப் 12. ஸூரா யூசுஃப் - 24வது வாக்கியம் (படித்தது கேட்டதிலிருந்து புரிந்து கொண்டது)

12. ஸூரத்து யூஸூஃப்
24 வது வாக்கியம்

وَلَقَدْ هَمَّتْ بِهِ ۖ وَهَمَّ بِهَا لَوْلَا أَن رَّأَىٰ بُرْهَانَ رَبِّهِ ۚ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ ۚ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ

டாக்டர் முஹம்மது ஜானின் தமிழாக்கம்:
நன்றி: http://www.tamililquran.com/qurandisp.php?start=12

ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தை கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.

உலக அறிஞரின் தமிழாக்கம்:
நன்றி: http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thaw…/…/yusuf/…
24. அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்).229 இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர்.

இப்பொழுது வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பை கவனிப்போம்:
வலகத் - And Certainly - அத்துடன் நிச்சயமாக
ஹம்மத் - She did desire - அவள் விருப்பம் கொண்டாள்
பிஹி - him - அவர் மீது
வஹம்ம - and he would have desired - அவரும் விரும்பம் கொண்டே இருந்திருப்பார்
பிஹா - her, - அவள் மீது
லவ்லா - if not - இப்படி நடக்கவில்லையெனில்
அன் - that he - அதாவது அவர்
ரஆ - saw - பார்த்தார்
புர்ஹான - the proof - ஆதாரத்தை
ரப்பிஹி - (of) his Lord. - அவருடைய இறைவனிடமிருந்து
கதாலிக - Thus, - இப்படியாகத்தான்
லிநஸ்ரிஃப - that, We might avert - நாம் விலக்கிவிட்டோம்
அன்ஹு - from him - அவரிடமிருந்து
அஸ்ஸுவஅ - the evil - தீயவைகளை
வஉல்ஃபஹ்ஸாஅ - and the immorality. - மானக்கேடான செயல்களை
இன்னஹு - Indeed, he - நிச்சயமாக, அவர்
மின் - (was) of - இல் (இந்த வார்த்தையை அடுத்த வார்த்தையோடு சேர்த்து படிக்க வேண்டும் - அதாவது ”நம்முடைய அடியார்களில்”)
இபாதினா - Our slaves - நம்முடைய அடியார்கள்
ல்-முஹ்லஸீன் - the sincere - உண்மையானவர் / நேர்மையானவர்

மேலே உள்ள உலக அறிஞரின் தமிழாக்கத்தில் ”அவள் அவரை நாடினாள், அவரும் அவளை நாடி விட்டார்..” என்று எழுதப்பட்டுள்ளது. இப்படி மொழி தமிழாக்கம் செய்வதன் மூலமாக இந்த உலக புத்திசாலி என்ன நிறுவ விரும்புகிறார் என்றால், யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் சபலம் இருந்துள்ளது என்று தான். நஊதுபில்லாஹி..

அல்லாஹ் மிக அழகாக இந்த வார்த்தைகளை அமைத்து இருக்கிறான்.
நிச்சயமாக அவள் விருப்பம் கொண்டாள் என்று முதலில் சொல்கிறான்...
அடுத்து “வ” என்ற அரபி வார்த்தையை பயன்படுத்துகிறான்.
”வ” என்றால் ஆங்கிலத்தில் "and" என்று சொல்கிறோமே அதே போல் அரபியில் உள்ள இணைப்பு வார்த்தை..
ஒரு உதாரணம் சொல்கிறேன்..
ஆண் பெண் இரண்டு பேர் இட்லி சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..
அரபியிலும் சரி ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி, ”பெண் இட்லி சாப்பிட்டார் ஆணும் இட்லி சாப்பிட்டார்” என்று எழுத தேவையில்லை.. ஒரே வார்த்தையில் “இருவரும் இட்லி சாப்பிட்டார்கள்” என்று சொல்லிவிடலாம்.
"She ate idly and he ate idly" என்று "and"ஐ பயன்படுத்தி எழுத தேவையில்லை, ஒரே வார்த்தையில், "Both of them ate idly" என்று சொல்லிவிடலாம். "and" என்ற வார்த்தையே தேவையில்லை.
இன்னொரு உதாரணம் - இப்படி வைத்துக் கொள்ளுங்கள், ஒருவர் இட்லி சாப்பிடுகிறார், இன்னொருவர் தோசை சாப்பிடுகிறார் என்று. அப்பொழுது தமிழில் பிரித்து தான் சொல்ல வேண்டும். அதே போல ஆங்கிலத்தில் "and" பயன்படுத்தி தான் எழுத வேண்டும்.

“பெண் இட்லி சாப்பிட்டார் ஆண் தோசை சாப்பிட்டார்” என்று தமிழிலும் "She ate idly and he ate dosai" என்று "and"ஐ பயன்படுத்தி தான் எழுத வேண்டும்.

இப்போ இங்கே படித்து பாருங்கள்..
அல்லாஹ் எப்படி சொல்கிறான் என்று கவனியுங்கள்..

நிச்சயமாக அவள் விருப்பம் கொண்டாள். (அதில் எந்த மாற்றமும் இல்லை)
அவரும் விருப்பம் கொண்டார் என்பதை ”வ” (and) என்ற வார்த்தையை போட்டு அல்லாஹ் பிரிச்சிட்டான்.
ஏனெனில் இரண்டு பேரும் கொண்டது ஒரே மாதிரியான விருப்பம் கிடையாது.
ஏன் கிடையாது?
அதற்கு பின்னர் விளக்கம் சொல்கிறான்..
அவருடைய இறைவனிடமிருந்து வந்த ஆதாரத்தை அவர் பார்த்தார்.

இதற்கு அடுத்து வருகின்ற 25வது வாக்கியத்தின் முதல் செய்தியை மட்டும் படியுங்களேன்..
வஉஸ்தபக ல்-பாப - And they both ran/raced towards the door - அத்துடன் அவர்கள் இருவரும் கதவை நோக்கி (ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு) ஓடினார்கள்.

இங்கே பார்த்தீர்கள் என்றால், இரண்டு பேரும் ஓடினதை இருவரும் ஓடினார்கள் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டான். அவர் ஓடினார். அவள் ஓடினாள் என்று சொல்லவில்லை. 

அப்போ (நாம படிச்சிக்கிட்டு இருக்கின்ற) இந்த 24வது வாக்கியத்தை எப்படி தமிழாக்கம் செய்யப்பட வேண்டும் என்று இந்த 24வது வாக்கியமும் 25வது வாக்கியமும் suggest செய்கிறது என்றால்,
”நிச்சயமாக அவள் விருப்பம் கொண்டாள்..
அவர் தன்னுடைய இறைவனுடைய ஆதாரத்தை கண்டிராமல் இருந்திருந்தால் அவர் விருப்பம் கொண்டிருப்பார்” என்று தான்.
அவர் விருப்பம் கொள்ளவே இல்லை என்பதற்கு தொடர்ந்து வரும் சொற்களும் அழகாக சொல்கிறது...

கதாலிக - Thus, - இப்படியாகத்தான்
லிநஸ்ரிஃப - that, We might avert - நாம் விலக்கிவிட்டோம்
அன்ஹு - from him - அவரிடமிருந்து
அஸ்ஸுவஅ - the evil - தீயவைகளை
வஉல்ஃபஹ்ஸாஅ - and the immorality. - மானக்கேடான செயல்களை
”இப்படியாகத்தான் நாம் அவரிடமிருந்து தீயவைகளையும் மானக்கேடான செயல்களையும் அவரிடமிருந்து விலக்கிவிட்டோம்” என்று சொல்கிறான்.
என்ன அழகாக சொல்லப்பட்டிருக்கிறது...!
நல்லா கவனிங்க... மிக நுணுக்கமாக கவனிக்க வேண்டிய செய்தி

கம்ப்யூட்டர், வைரஸ் இவைகளை வைத்து இரண்டு செய்திகள் ஓரு உதாரணத்துடன் சொல்கிறேன்.
முதல் செய்தி:
கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கி விட்டது. ஆகையினால் தாக்கப்பட்ட கம்ப்யூட்டரை வைரஸிலிருந்து விடுவிப்பது.
இந்த முறைப்படி சொல்வதென்றால்... இப்படி சொல்ல வேண்டும்....
நாம் (அல்லாஹ்) தீயவையும் மானக்கேடானவையிலிருந்தும் யூசுப் அலைஹிஸ்ஸலாத்தை விலகிவிட்டோம்.
Allah removed Yusuf alaihissalaam from evil and shamelessness
இது எப்படி என்றால் தீயதையும் மானக்கேடானதையும் யூசுப் அலைஹிஸ்ஸலாம் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள், அல்லாஹ் அவர்களை விலக்கி விட்டுவிட்டான்.

இரண்டாவது செய்தி:
கம்ப்யூட்டரை வைரஸ் தாக்க இருந்தது. ஆனால் அந்த கம்ப்யூட்டரை தாக்குவதற்கு முன்பாகவே ஏதோ ஒரு வெளியில் உள்ள கருவி மூலமாக விலக்கப்பட்டது.
இந்த முறைப்படி சொல்வதென்றால்... இப்படி சொல்ல வேண்டும்...
நாம் (அல்லாஹ்) யூசுப் அலைஹிஸ்ஸலாத்திடமிருந்து தீயதையும் மானக்கேடானதையும் விலக்கி விட்டான்
Allah removed evil and shamelessness from Yusuf alaihissalaam
இது எப்படி என்றால் தீயதும் மானக்கேடானது என்ற ஷைத்தான்கள் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றிப் பிடிக்க வந்தது, அல்லாஹ் அவைகளை விலக்கி விட்டான்.

அல்லாஹ் இந்த வாக்கியத்தில் எப்படி சொல்கிறான் என்று நன்றாகவே தெரிகிறது. இரண்டாவது செய்தியில் உள்ள உதாரண முறைப்படி தான் சொல்கிறான்.

அல்ஹம்துலில்லாஹ்..! 
ஆக, மொத்த வாக்கியத்தை எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றால்..

தீயவைகளும் மானக்கேடான செயல்களும் யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடைய வந்தன..
அல்லாஹ் அவைகளை யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடைய விடாமல் அதை விலக்கிவிட்டான்.
யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அப்படி அல்லாஹ் தட்டி விடுவதை கண்டார்கள்.
அல்லாஹ் அப்படி தட்டி விடவில்லை என்றால்..
அது அவர்களை அடைந்திருந்தால் அவர்களும் விருப்பம் கொண்டு தானிருப்பார்கள்..

அல்லாஹ் எந்த அளவுக்கு யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை தூய்மையாக அடையாளப்படுத்தியிருக்கிறான் என்று நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

கடைசியாக ஒரு செய்தி..
யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர்களாவது, யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உடலை தான் கிணற்றின் கீழே இறக்கினார்கள்.

ஆனால் இந்த கேடு கெட்ட உலக அறிஞர் யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் characterஐயே கீழே இறக்கி விட்டர்.
இந்த தீய மானக்கேடான காரியத்தை செய்தவரின் வாடை கூட நம்மீது படாமல் நம்மை பாதுகாக்க இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம்.