Friday, June 10, 2016

62. ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)

முன்னுரை

இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தினை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதை எப்படி அழிக்கலாம் என்று யோசித்து பார்த்த போது அவர்கள் மூன்று விஷயங்கள் இஸ்லாத்தில் இருக்கும் வரை அதை அழிக்க முடியாது என்று இறுதி முடிவுக்கு வந்தார்களாம்.

அந்த மூன்றாவது
1. கஃபா எனும் இறையில்லம்
2. குரான் ஷரீஃப் எனும் இறைவேதம்
3. ஜும்ஆ எனும் வெள்ளிக்கிழமை தொழுகை.

ஜும்ஆ என்ற அரபி வார்த்தைக்கு பிரார்த்தனை அல்லது பிரசங்க கூட்டம் என்று பொருள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனமா நகருக்கு சென்ற ஐந்தாவது நாளே ஜுமுஆ தொழுகையை செயல்படுத்தினார்கள்.

ஷஹீஹ் புஹாரி ஷரீஃபில் இடம் பெற்றுள்ள ஜும்மா பற்றிய ஹதீதுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்.

ஆங்கிலம் - புஹாரி ஷரீஃபில் இடம் பெற்றுள்ள ஜும்மா பற்றிய ஹதீதுகள்

தமிழ் - புஹாரி ஷரீஃபில் இடம் பெற்றுள்ள ஜும்மா பற்றிய ஹதீதுகள்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழக்கமாக வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்வார்கள்.

இதற்கிடையே சிரியாவிலிருந்து ஒரு வியாபார கூட்டம் மதினமா நகருக்கு வந்திருந்தது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் ஊருக்கு வந்திருந்த அந்த வியாபார கூட்டம், சந்தை முடிந்து ஊருக்கு புறப்பட்டு போவதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டி  பறை கொட்ட ஆரம்பித்தது.

அந்த பறையொலியை கேட்டதும் 12 பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போதே  வியாபாரத்தை முடித்து விட, இன்னும் சிலர் வேடிக்கை பார்க்க வெளியேறி விட்டனர்.

இந்த கட்டத்தில் தான் நாம் வெள்ளிக் கிழமை பிரசங்கத்தின் போது கடைபிடிக்க வேண்டிய நன்னெறிகளை ஒழுங்குமுறைகளை இந்த ஆயத்தின் மூலமாக எடுத்து கூறுகிறான்.

இந்த ஸூரா மதினாவில் இறங்கப்பட்டது.

’யுஸப்பிஹ்” என்று அல்லாஹ்வை புகழ்ந்துரைக்கும் வார்த்தையை முதல் வார்த்தையாக வரும் ஸூராக்களுக்கு ”முஸப்பிஹத்” என்று பெயர். அந்த வகையில் இது ”முஸப்பிஹத் ஸூரா”வாகும். (குரான் ஷரீஃபில் இருக்கும் பிற முஸப்பிஹத் ஸூரக்களாவன: 57 அல் ஹதீத், 59. அல் ஹஷ்ர், 61. அஸ் ஸஃப்ஃபு, 64 அத் தஃகாபுன்)

இந்த ஸூராவை 4 பகுதிகளாக பிரிக்கலாம்

1. அல்லாஹ்வை பற்றி கூறுவது (1வது ஆயத்)
2. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி கூறுவது (2 லிருந்து 4 வரை உள்ள ஆயத்)
3. வேதத்தின் படி நடக்காதவர்களை பற்றி கூறுவது (5 லிருந்து 8வரை உள்ள ஆயத்)
4. ஜும்ஆ வைப் பற்றி கூறுவது (9லிருந்து 11வரை உள்ள ஆய்த்)

பகுதி 1 - அல்லாஹ்வை பற்றி கூறுவது

1வது வாக்கியம்
   يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِيْزِ الْحَكِيْمِ‏ 

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன; (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

யுஸப்பிஹ் -  சிறப்பு செய்வது, புகழ் சேர்ப்பது, மேன்மைப் படுத்துவது

யாரை?

லில்லாஹி - அல்லாஹ்வை

யார் சிறப்பு செய்கிறார்கள் அல்லாஹ்வை?

மா ஃபிஸ் ஸமாவாதி - வானங்களில்லுள்ளவையும்

நமக்கு தெரிந்து வானத்தில் பல இருக்கின்றன, தெரியாமல் என்னென்னவோ இருக்கின்றன. இதில் ’மா’ என்றால் எதுவெல்லாம் நமக்கு தெரியாமல் இருக்கின்றதோ அது அத்தனையையும் குறிக்கும்.

- மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால் and

மா ஃபில்அர்ள் - பூமியிலுள்ளவையும்

இங்கேயும் “மா” வருவதால் நமக்கு தெரியாமல் பூமியில் இருக்கின்றதோ அவைகள் அனைத்தையும் குறிக்கும்.

ஆக, வானத்திலும், பூமியிலும் மறைவாக உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வை சிறப்பு செய்கின்றன, புகழ் சேர்க்கின்றன, மேன்மை படுத்துகின்றன.

இப்போது அத்தகைய அல்லாஹ் யாரென்று சொல்கிறான். வழக்கமாக குரான் ஷரீஃபில் தன்னை யாரென்று சொல்லி ஆயத்தை முடிக்கும் போது இரண்டு பெயர்களை மட்டுமே சொல்லும் அல்லாஹ் இந்த இடத்தில் மட்டும் தனது நான்கு பெயர்களை சொல்கிறான். அவையாவன...

1. மலிகில் - உச்ச அதிகாரம், (இது மாலிக் அல்ல - மாலிக் என்றால் உடமையாளர் என்று அர்த்தம்)
2. குத்தூஸில் - இயல்பாகவே தூய்மையான (அதாவது தூய்மையானது அல்லாஹ்வின் இயல்பிலேயே உள்ளது. ஜகாத் என்றாலும் தூய்மை தான் ஆனால் காசு தூய்மையாக இல்லை ஜகாத் கொடுத்ததும் தூய்மையாகி விடுகிறது, தஜ்கியா என்றாலும் தூய்மை என்று தான் பொருள், ஆனால் இயல்பில் தூய்மையில்லை, தஜ்கியா எனும் நற்செயல்கள் செய்தால் தூய்மையாகலாம். ஆனால் குத்தூஸ் என்றால் இயல்பிலேயே தூய்மையாக இருப்பதையும் எல்லா தூய்மைக்கும் மூலமாக இருப்பதையும் குறிக்கும்.)
3. அஜீஜில் - அதிகாரமும் மரியாதையும் (சிலருக்கு அதிகாரம் இருக்கும், மக்களிடம் மரியாதை இருக்காது வேறு சிலருக்கு மரியாதை இருக்கும் ஆனால் அதிகாரம் இருக்காது, இங்கே அஜீஜ் என்ற வார்த்தை அதிகாரத்தையும் மரியாதையையும் சேர்த்தே குறிக்கும்)
4. ஹக்கீம் - விவேகமும், ஞானமும்

உச்ச அதிகாரமுடைய, இயல்பாகவே தூய்மையுடைய, அதிகாரமும் மரியாதையும் கொண்ட, விவேகமும், ஞானமும் நிறைந்த அல்லாஹ்வை வானங்களிலும் பூமியிலும் நாம் அறியாத பல படைப்பினங்கள் சிறப்பு செய்கின்றன, புகழ் சேர்க்கின்றன, மேன்மை படுத்துகின்றன.


பகுதி 2 - பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி கூறுவது

2வது வாக்கியம்

   هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ 
وَالْحِكْمَةَ 
 وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏ 
     
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.

ஹுவ - அவன்

யார்?
அல்லாஹ் தான்

அல்லதி - (அவன்) தான்

பஃஸ - அனுப்பினான்

ஃபி -  (அவர்கள்) இடையே

ல் உம்மிய்யின - எழுத்தறிவில்லா

ரசூலன் - ஒரு தூதரை

மின்ஹும் - அவர்களிலிருந்து

(முன் ஆயத்தில் படித்தோமே அத்தகைய அல்லாஹ்வாகிய) அவன் தான் எழுத்தறிவில்லா மக்களிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து தனது தூதராக அவர்களிடையே அனுப்பினான்.

பக்கத்து தேசங்களான ரோமும் பாரசீகமும் நாகரீகத்தில் கல்வியில் தேர்ந்தவர்களாக இருக்கும் போது அல்லாஹ் படிப்பறிவில்லாத சமூகத்திலிருந்து ஒருத்தவர்களை தேர்ந்தெடுத்ததாக சொல்கிறான். (இதனை அல்லாஹ் வழங்கிய கொடை என்றும் அடுத்த ஆயத்தில் சொல்கிறான்)

அந்த தூதர் என்ன செய்கிறார்கள்?

4 விஷயங்கள் செய்கிறார்கள்

1.
யதுலு - ஓதுகிறார்கள்
அலைஹிம் - அவர்களிடம்
ஆயாதிஹி - வாக்கியங்களை

2.
வ யுஜக்கீஹிம் - தூய்மையும் படுத்துகிறார்கள்.

3.
வ யுஅல்லிமுஹும் - போதிக்கவும் செய்கிறார்கள்
ல் -கிதாபி - புத்தகத்தை

4.
வ உல் ஹிக்மத - விவேகத்தையும், ஞானத்தையும்.

முதல் ஆயத்தில் அல்லாஹ் அவனை பற்றி நான்கு பெயர்களை சொன்னான்.

1. உச்ச அதிகாரமுடைய (அரசன்),

2. இயல்பாகவே தூய்மையுடைய,

3. அதிகாரமும் மரியாதையும் கொண்ட,

4. விவேகமும், ஞானமும் நிறைந்த

இரண்டாவது ஆயத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 4 திருப்பணிகளை செய்வதாக சொல்கிறான். அல்லாஹ்வின் பெயருக்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பணிக்கும் உள்ள ஒற்றுமையை புரிந்து கொள்ளலாம்.

1. ஆயத்துகளை ஓதிக் காட்டுவது - ஆயத்தில் அல்லாஹ்வின் அதிகாரம் (ஆட்சி) இருக்கும் உதாரணமாக, இம்மையில் உள்ளவை மறுமையில் இருக்க போறவை இவை அனைத்தையும் குறிக்கும்,  அதனை ஓதிக் காட்டுகிறார்கள்

2. தூய்மைப்படுத்துகிறார்கள் - இறைவன் இயல்பாகவே தூய்மையானவன், மனிதன் அப்படியல்ல, அவனை தூய்மைப்படுத்தி இறைவன் நேசிக்க கூடியவர்களாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாற்றுகிறார்கள்.

3. கிதாபை போதிக்கிறார்கள் - கிதாபில் தான் அல்லாஹ்வின் அதிகாரம் கட்டளைகள் இருக்கும் (ஹராம், ஹலால்)

4. விவேகம் நிறைந்தவர்களாக ஞானம் மிக்கவர்களாக மாற்றுகிறார்கள் - அல்லாஹ் விவேகமிக்கவன் ஞானமிக்கவன்.

அல்லாஹ் எந்த தன்மையில் இருக்கின்றானோ அந்த தன்மைக்கு மனிதனை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மாற்றுகிறார்கள். அல்லாஹ் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளான் மனிதர்களை அவ்வாறு மாற்றுவதற்கு.

வ இன் - இருந்த போதிலும்

கானு - அவர்கள்

மின் - இருந்து

கப்லு - முன்னர்

லஃபி - தெளிவான

ழலாளன் - வழிகேடு

அவர்கள் முன்னர் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர்.


(அல்லாஹ்வாகிய) அவன் தான் எழுத்தறிவில்லா மக்களிலிருந்து ஒருவரை தனது தூதராக  தேர்ந்தெடுத்து அவர்களிடையே அனுப்பினான். (அந்த தூதரான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) ஆயத்துகளை (அல்லாஹிவின் அதிகாரம் எத்தகையது என்பதை) ஓதிக்காட்டுகிறார்கள், தூய்மை படுத்துகிறார்கள், (அல்லாஹ்வின் அதிகாரங்கள், கட்டளைகள் நிரம்பிய) கிதாபை போதிக்கிறார்கள், ஞானவான்களாக மாற்றுகிறார்கள். அவர்கள் (இதற்கு) முன்னர் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர்.

3வது வாக்கியம்
وَّاٰخَرِيْنَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوْا بِهِمْ‌ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ 

(இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

வ ஆஹரீன - மற்றும் அவர்களல்லாத

மின்ஹும் - அவர்களிலிருந்து

லம்மா - இன்னும் இல்லை

யல்ஹகூ - சேர்வது

பிஹிம் - அவர்கள்

வ ஹுவ - மற்றும் அவன்

ல் - அஜீஜு - அதிகாரமும் மரியாதையும் கொண்டவன்

ல் - ஹகீம் - விவேகமும், ஞானமும் நிறைந்தவன்

இன்னும்  அவர்களல்லாத (வ ஆஹரீன)

யார் அல்லாத?

படிப்பறிவில்லாதவர்களை குறிக்கலாம்
 மக்காவாசிகளல்லாதவர்களை குறிக்கலாம்

அவர்கள் (அதாவது மக்காவாசிகளல்லாதவர்கள்) இவர்களோடு இன்னும் சேரவில்லை (அதாவது முஸ்லிமாக வில்லை அல்லது இன்னும் பிறக்கவே யில்லை)

அதாவது இனிமேல் சேரலாம், அப்படி சேருகின்ற நான் நீங்கள் உள்பட முஸ்லிமாக பிறக்கின்ற அல்லது மாறுகின்ற அனைவரையும் இது குறிக்கும்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதி தூதுவர் என்பதற்கு இந்த ஆயத்து கூட சாட்சி தான் பகர்கின்றது.

மக்காவாசிகளல்லாத (பிற மக்கள், அதாவது) இன்னமும் (முஸ்லிமாக மாறி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தூதராக ஏற்று அவர்களிடம் போதனை பெறாத) வேறு சிலர் இருக்கிறார்கள். (கியாமத் நாள் வரை வர இருக்கும் அவர்களுக்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தூதராக இருப்பார்கள், போதனை செய்வார்கள்). அன்றியும் அவன் தான் அதிகாரமும் மரியாதையும் கொண்டவன், விவேகமும், ஞானமும் நிறைந்தவன்

4வது வாக்கியம்
   ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ

அதுவே அல்லாஹ்வின் அருளாகும், தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான்; மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

தாலிக - அது

ஃபழ்லு - கொடை

ல் லாஹி - அல்லாஹ்வின்

அது அல்லாஹ்வின் கொடை.

எது?

அல்லாஹ் எழுத்தறிவில்லாத ஒருவரை தூதராக அனுப்பியது

யூதர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ”உம்மி (எழுத்தறிவில்லாதவர்கள்)” என்று ஏளனம் செய்தார்கள். ’உம்மி’யான ஒருவரை தூதராக ஏற்க முடியாது என்றார்கள். ”உம்மி’களில் எந்த இறைத்தூதரும் வரமுடியாது , இறைத்தூதார் என்பவர் யூத இனத்தவராகவே இருக்க முடியும் என்று பெருமை பேசினார்கள்.

ஆனால் அல்லாஹ் அப்படி”உம்மி’யான ஒருவர்களை தமது தூதராக தேர்ந்தெடுத்ததோடு அவர்கள் தூய்மைபடுத்துகிறார்கள் என்கிறான், அவர்களை நாம் தூதராக பெற்றது நமக்கு அல்லாஹ் வழங்கிய கொடை என்கிறான்.

அதுவும் பெருமானார் 4 செய்திகளை சொல்வதாக குறிப்பிடும் போது முதல் செய்தியில் “யுத்லு ஆயத்திஹி” வாக்கியங்களை படிக்கிறார்கள் என்று கூறினான். எழுத்தறிவில்லாத அவர்களை இறைவன் படிக்க வைத்தது இறைவனின் கொடையாகும்.

1400 வருடங்களுக்கு பிறகு வாழ்கின்ற நமக்கு அவனுடைய ஆயத்துகளை, தூய்மையாக மாறுவதை, கிதாபை விளங்கி கொள்வதை, ஞானவானாக மாறுவதை அதுவும் உலகின் மிக சிறந்த மனிதரான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக கிடைக்க பெறுவதை கொடை என்கிறான்.

யூதிஹி - அவன் வழங்குகின்றான்

மன் - யாருக்கு

யஸாஉ - நாடுகிறானோ

இத்தகைய கொடை எல்லோருக்கும் கிட்டுவதில்லை. எவருக்கு அல்லாஹ் நாடுகிறானோ அவருக்கு மட்டுமே அந்த கொடையை பெறும் பாக்கியம் கிடைக்கும்.

வல்லாஹு - மற்றும் அல்லாஹ்

து - உடைமையாளன்

ல் ஃபழ்லி - கொடை

ல் அழீம் - தலை சிறந்த

அல்லாஹ் தான் மேலான கொடைகளின் தலைசிறந்த உடைமையாளன்

(எழுத்தறிவில்லாத பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாம் தூதராக பெற்றது, அவர்கள் மூலமாக இறைவனின் ஆயத்துகளை கேட்பது, தூய்மையடைவது, கிதாபை புரிவது, ஞானவானாக உயர்வது, இப்படியாக,) அது (யாவும்) அல்லாஹ்வின் (அருட்) கொடையாகும். (இத்தகைய கொடையை) அவன் (யாருக்கு) நாடுகிறானோ அவருக்கு வழங்குகின்றான். அவனே (அருட்) கொடைகளின் தலைசிறந்த உடைமையாளன். 


பகுதி 3 - வேதத்தின் படி நடக்காதவர்களை பற்றி கூறுவது

5வது வாக்கியம்

مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰٮةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا‌ ؕ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏ 

எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

மஸலு - ஒப்புமை/ உதாரணம்

அல் லதீன - யாருக்கு

ஹும்மிலு - சுமத்தப்பட்டு/ ஒப்படைக்கப்பட்டு/ பொறுப்பு சாற்றப்பட்டு (கர்ப்பினி பெண்களை ’ஹமலா’யிட்டாஹா என்று சொல்வோம் அல்லவா... ஹமல் என்றால் சுமப்பது... ஹும்மிலு என்றால் கடுமையான சுமை (powerful burden))

ல் தவ்ராத - தவ்ராத் என்ற இறைவேதம்

சும்ம - பிறகு

லம் - இல்லாமல்/ செய்யாமல்

யஹ்மிலூஹா - பொறுப்புகளை (ஏற்றுக் கொள்ளவில்லை)

கமசலி - (அவர்களின்) உதாரணம்

ல் ஹிமாரி - கழுதை

யஹ்மிலு - சுமப்பது

அஸ்ஃபாரன் - புத்தகங்கள்

பிஃஸ - கொடுமையான/ மோசமான

மஸலு - ஒப்புமை/ உதாரணம்

ல் கவ்மி - அந்த நாட்டு மக்கள்

ல் லதீன - யார்

கத்தபு - மறுப்பு

பி ஆயாதில்லாஹி - அல்லாஹ்வின் வாக்கியங்கள்

வல்லாஹு - மற்றும் அல்லாஹ்

லா - இல்லை

யஹ்தி - வழிகாட்டுதல்

ல் கவ்ம - அந்த நாட்டு மக்கள்

ல் ழாழிமீன் - (வழிகாட்டுதல் கிடைக்கப் பெற்றும்) வழி தவறியோர்

ஒரு மக்களுக்கு தவ்ராத் எனும் கடுமையான சுமையை மகத்தான பொறுப்பை சுமக்கும்படி ஒப்படைத்தான். ஆனால் அவர்கள் அந்த பொறுப்பை கொஞ்சம் கூட ஏற்று அதன்படி நடக்கவில்லை.

இந்த இடத்தில் அல்லாஹ் யஹூதிகள் என்றோ பனி இஸ்ராயீல்கள் என்றோ சொல்லவில்லை... உதாரணமாக சொல்கிறான்.... ”ஒரு மக்களுக்கு...” என்று.

அப்படி என்றால் இந்த உதாரணம் எல்லா மக்களுக்கும் பொருந்தும். ஒரு வேளை முஸ்லிம்கள் குரான் ஷரீஃபை பெற்றுக் கொண்டு அந்த மகத்தான பொறுப்பை சுமக்க தவறினால்... என்றும் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம்.

இத்தகையோரின் உதாரணமாவது ஒரு கழுதை புத்தகங்களை சுமந்து செல்வதை போன்றதேயாகும். கழுதையானது தனது முதுகில் புத்தகங்களை சுமந்து செல்கிறது. அதே போல் வேதத்தை அவர்கள் தங்கள் முதுகுக்கு பின்னால் வைத்து விட்டனர்.

இதே போன்றதொரு ஆயத் 2 வது ஸூராவான ஸூரத்து பகராவில் 101 வது ஆயத்தில் வரும்.. (அதன் மொழிபெயர்ப்பு: )

“... அல்லாஹ்வின் வேத்தத்தை தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.”

ஆக, இங்கே அல்லாஹ்வின் வேதத்தை பெற்று அதை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் ஆனால் அந்த வேதத்தை பேருக்கு வைத்திருக்கும் இவர்களின் உதாரணாமானது (இவர்களை கழுதை என்று சொல்லவில்லை... இவர்களின் உதாரணம் என்று தான் வருகிறது) புத்தக மூட்டையை சுமக்கும் கழுதையை போன்றது.

அல்லாஹ் இறக்கியருளிய வேதத்தை நிராகரித்து அல்லது அதிலிருந்து படிப்பினைகள் பெறாமல்/ அதனை பின்பற்றாமல்/ அதில் சுமத்தப்பட்டிருக்கும் சுமைகளை ஏற்றுக் கொண்டு சுமக்காமல்/ செல்லும் நாட்டு மக்களின் உதாரணம் எவ்வளவு மோசமான/ கொடுமையான/ கொடூரமான உதாரணம் பாருங்கள்.

அல்லாஹ் இவ்வாறு தவறிழைக்கும் மக்களுக்கு வழிகாட்ட மாட்டான்.

தவ்ராத் (போன்ற) வேதத்தை சுமத்தப் பெற்று (தவ்ராத் வேதம் என்பது சுமை) அதிலிருந்து கொஞ்சம் கூட சுமந்து செல்லாமல் (படித்து பயன்பெறாமல்) இருந்த நாட்டு மக்களின் உதாரணம். அவர்களின் உதாரணமாவது, அடுக்கடுக்காய் புத்தகங்களை சுமந்து செல்லும் கழுதைக்கு ஒப்பானதாகும். (அல்லாஹ்வின் வேதங்களை நிராகரித்தவர்கள்/ படித்து பயன்பெறாமல் போன) அந்த நாட்டு மக்களின் உதாரணம் எவ்வளவு கொடூரமான உதாரணமாக இருக்கின்றது, அல்லாஹ் தவறிழைக்கும் நாட்டு மக்களுக்கு வழிகாட்டுதல் வழங்க மாட்டான்.

6வது வாக்கியம்
   قُلْ يٰۤاَيُّهَا الَّذِيْنَ هَادُوْۤا اِنْ زَعَمْتُمْ اَنَّكُمْ اَوْلِيَآءُ لِلّٰهِ مِنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏ 

(நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.”

குல் - சொல்லுங்கள்..!

யா அய்யுஹல்லதீன - ஓ..!

ஹாதூ - யூதவியத்தை கடைப்பிடிப்பவர்களே..!

இன் - ஒருவேளை

ஜஅம்தும் - உரிமை கோருவது

அன்னகும் - அதாவது நீங்கள்

அவ்லியாஉ - நேசர்கள்

லில்லாஹி - அல்லாஹ்வின்

மின் - லிருந்து

தூனி - தவிர்த்து

ல் னாஸி - மனிதர்கள்

ஃபதமன்னஉ - அப்போ விரும்புங்கள்

ல் மவ்த - மரணத்தை

ன் குன்தும் - நீங்கள் இருந்தால்

சாதிகீன் - உண்மையாளர்களாக


சில செய்திகள் விளங்க வேண்டும்:
குரான் ஷரீஃபில் அல்லாஹ் இறை நேசர்களை பற்றி குறிப்பிடும் போது அவர்களுக்கு பயம், கவலை எல்லாம் கிடையாது என்கிறான்.
அவர்களுக்கு மரணம் பற்றியும் கூட பயமோ, கவலையோ, துக்கமோ கிடையவே கிடையாது.
அதனால் தான் இறை நேசர்களின் மரண இரவை “உரூஸ்” என்று சொல்கிறோம். உரூஸ் என்பது பாரசீக மொழி.  சரியான வார்த்தை “அரூஸ்” என்பதாகும். ’ஷபே - அரூஸ்’ என்றால் ”திருமண இரவு” என்று பொருள். அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். இது தான் மருவி “உரூஸ்” என்றானது.

இங்கே யூதவியத்தை பின்பற்றும் மக்கள் உண்மையிலேயே மற்றவர்களை விட நாங்கள் தான் இறைவனுக்கு நேசத்துக்குறியவர்கள் என்று சொல்கிறார்கள் அல்லவா? அப்படி அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால் எங்கே மரணத்தை விரும்புங்கள் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யூதவியத்தை பின்பற்றும் மக்களை நோக்கி கூறும்படி கூறுகிறான்.

(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே!, நீங்கள்) சொல்லுங்கள்..! யூதவியத்தை பின்பற்றும் மக்களே..! மற்ற மனிதர்களை விட நீங்கள் தான் அல்லாஹ்வுக்கு நேசத்துக்குறியவர்கள் (உற்ற தோழர்கள்/ பாதுகாக்கப்பட்ட நண்பர்கள்) என்று உரிமை கொண்டாடுகிறீர்களே..! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (எங்கே?) மரணத்தை விரும்புங்கள்... (பார்க்கலாம்?)!?” (என்று கூறுங்கள்)

7வது வாக்கியம்
   وَلَا يَتَمَنَّوْنَهٗۤ اَبَدًۢا بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ‏ 

ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.

வலா - ஆனால் இல்லை

யதமன்னவ்னஹு - அவர்கள் விரும்புவது

அபதன் - எப்பொழுதும்

பிமா - எதனை

கத்தமத் - முன்னர் அனுப்பி வைத்த

அய்தீஹிம் - கைகள்

வல்லாஹு - அல்லாஹ்

அலீமுன் - எல்லாம் அறிந்தவன்

பிழ்ழாழிமீன் - தவறிழைப்பவர்களை

ஆனால் அவர்கள் மரணத்தை விரும்புவதில்லை.

இப்பொழுது நமக்கும் இந்த கேள்வியை கேட்டு கொள்ளலாம்? நாம் மரணத்தை விரும்புகிறோமா? என்று

யார் தான் மரணத்தை விரும்புவார்கள்?
அவனுடைய நேசர்கள் மட்டும் தான் விரும்புவார்கள்.

ஏன் அவ்வாறு விரும்புவார்கள்?
அவர்கள் மரணத்திற்கு பிறகு தேவைப்படும் பொருள்களை சம்பாதித்து அனுப்பி வைத்து விட்டார்கள். அவர்கள் இங்கே செய்த அமல்கள் இரட்டிப்பாகி அவர்களுக்கு லாபம் தரும் இடமாக காட்சியளிக்கிறது.

யார் மரணத்தை விரும்ப மாட்டார்கள்?
யார் மரணத்திற்கு பிறகு தேவையானதை இன்னும் சம்பாதித்து அனுப்பவில்லையோ அவர்கள் தான் விரும்ப மாட்டார்கள்.

அவர்கள் கைகள் முன்னர் அனுப்பி வைத்த (செய்த பாவங்கள்) காரணத்தினால் அவர்கள் அதனை (மரணத்தை) ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். மற்றும் அல்லாஹ் தவறிழைக்கும் மக்களை முழுதுமாக அறிந்தவனாகவே இருக்கின்றான்.


8வது வாக்கியம்
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ‌ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ 
“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.

குல் - சொல்லுங்கள்..!

இன்ன - நிச்சயமாக..!

ல் மவ்த - மரணமானது

ல் லதீ - எது

தஃபிர்ரூன - நீங்கள் விரண்டு ஓடுகிறீர்களோ

மின்ஹு - அதனை விட்டும்

ஃப இன்னஹு - அது நிச்சயமாக

முலாகீகும் - சந்திக்கும்

மரணம் நாம் விரும்பாமல் போனதற்காக நமக்கு வராமல் போய்விடுமா என்ன?

அல்லாமா இக்பால் ஒரு கவிதையில் இப்படி எழுதியிருப்பார்கள், “மக்கள் எல்லோரும் மரணத்தை கண்டு விரண்டு ஓடுகிறார்கள். ஆனால்... ஏ மரணமே..! அவர்கள் உன்னை நோக்கி தான் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்..” என்று

சும்ம - அப்பொழுது

துரத்தூன - நீங்கள் அனுப்பி வைக்கப்படுவீர்கள்

இலா - நோக்கி

ஆலிமி - அறிந்தவன்

ல் கைபி - மறைவானவையும்

வஷ்ஷஹாததி - வெளிப்படை யானவற்றையும்

ஃப யுனப்பி  ஊகும் - அவன் உங்களுக்கு அறிவிப்பான்

பிமா - எதை

குன்தும் - வழமையாக

தஃமலூன் - செய்து கொண்டிருந்தீர்களோ (அதனை)


(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே!, நீங்கள்) சொல்லுங்கள்..!  எந்த மரணத்தை கண்டு விரண்டு ஓடிக் கொண்டிருக்கிறீர்களோ..! நிச்சயமாக அந்த மரணமானது உங்களை சந்தித்தே தீரும் (அது வழியில் வந்து கொண்டிருக்கிறது) அதன் பிறகு நீங்கள் அனைவரும் (மரணம் வந்ததும்), மறைவானவற்றையும் (நாம் யாரும் இல்லாத சமயத்தில் வெளியே தெரியாமல் செய்ததையும்), பகிரங்கமானவற்றையும் (வெளிப்படையாக தைரியமாக கொஞ்சம் கூட பயமோ கவலையோ படாமல் செய்ததையும்) அறிந்தவனிடம் அனுப்பி வைக்கப் படுவீர்கள். அப்பொழுது நீங்கள் என்னென்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று (ஒன்று விடாமல் அனைத்தையும் உங்களிடமே) அறிவிப்பான்.


                                        பகுதி 4 - ஜும்மாவை பற்றி கூறுவது

9வது வாக்கியம்
  يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ 
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

யா அய்யுஹல்லதீன ஆமனு - ஓ..! ஈமான் கொண்டவர்களே..!

இதா - எப்பொழுது

நூதிய - அழைப்பு விடுக்கப்படுகிறது

லிஸ்ஸலாதி - தொழுகைக்கு

மின் - (நாளில்) ஒரு பகுதி

யவ்மி - நாள்

ல் ஜும்அதி - வெள்ளிக் கிழமை

வெள்ளிக்கிழமையின் ஒரு பகுதி (60 நிமிடங்கள் - 1 மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரம்)யினை பள்ளியில் கழிக்க உங்களுக்கு அழைப்பு விடப் படுகிறது.

யூதர்களுக்கு ‘சப்த்து’ (சபாத்து நாள் என்போமே, அது) எனும் சனிக்கிழமை வரையறை இருந்தது, அது ஒரு நாள் முழுமைக்கும் பொருந்தும். அதாவது ‘அந்த முழு நாளையும் அவர்கள் ஓய்வுக்கும் வணக்க வழிபாட்டுக்கும்  ஒதுக்கி விட வேண்டும். எந்த உலக அலுவல்களிலும் அவர்கள் ஈடுபடக் கூடாது’ என்று சட்டம் பிறப்பிக்கப் பட்டிருந்தது.

ஆனால் அவர்கள் அதனை மீறி விட்டார்கள் அவர்களை இறைவன் எவ்வாறு தண்டித்தான் என்று ஸூரத்துல் பகறாவில் 65, 66 ஆயத்துகளில் விளக்குகிறான்.

ஆனால் இங்கே முஸ்லிம்களுக்கு வெள்ளிக் கிழமையில் ஒரு பகுதி மட்டுமே வேலைக்கு ஓய்வு கொடுக்க கட்டளையிடப் பட்டிருக்கிறது.

ஃபஸ் அவ் - விரைந்து செல்லுங்கள்

இலா - நோக்கி

திக்ரில்லாஹி - அல்லாஹ்வை நினைவு கூற

அல்லாஹ்வை நினைவு கூற - அதாவது முழுமையாக அல்லாஹ்வின் நினைவில் மூழ்கி இருக்க விரைந்து செல்ல வேண்டும்.

இங்கே அல்லாஹ்வை நினைவு கூற என்று வரும் போது முன்னர் கூறிய வசனங்களிலிருந்து தொடர்பு படுத்தி பார்ப்பது உகந்ததாகும்.

அல்லாஹ்வை நினைவு கூர்வது என்றால் அல்லாஹ் மலிக்காகவும், குத்தூஸாகவும், அஜீஜாகவும், ஹகீமாகவும் இருக்கிறான்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கிடைத்த கொடை, அவர்கள் மூலமாக நாம் மலிக்கை பற்றியும், குத்தூஸை பற்றியும், அஜீஜை பற்றியும் ஹகீமை பற்றியும் தெரிந்து அதுவாக மாறுகிறோம்.

கைகளால் நாம் நன்மையை முற்படுத்தி அனுப்பி வைத்ததன் காரணத்தால் மரணத்தை விரும்புகிறோம்.

இத்தகைய நன்மையை அடைவதற்காக நாம் எதையாவது கொடுக்க வேண்டுமா?

ஆம்

எதனை?

வதரு - அதோடு விட்டும் விடுங்கள்

ல் பைஅ - வியாபாரங்களை (விற்பனைகளை)

வியாபாரம் என்றால் பல வேலைகள் இருக்கும், சரக்கு வாங்குவது, சம்பளம் தருவது, கடனில் வாங்கிய பொருளுக்கு காசு கொடுப்பது, இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். வியாபாரத்தில் எல்லா வேலைகளும் நமக்கு நாட்டம் வந்துவிடுவதில்லை. ஒரு பணம் போட்ட முதலாளிக்கு வியாபார வேலைகளில் பிடித்தமானது பொருள் விற்பனை நடந்து அதற்குறிய லாபத்தோடு பணம் வருவது தான்.

அல்லாஹ் இங்கே “பைஅ” என்று சொல்கிறான். “பைஅ” என்றால் வியாபாரம் என்ற பொது அர்த்தம் பொருந்தாது. “பைஅ” என்றால் குறிப்பாக விற்பனையை தான் குறிக்கும். ஆக, அல்லாஹ் ரொம்ப குறிப்பாக ஒரு வியாபாரத்தில் அல்லது வேலையில் எதில் நாட்டம் வருமோ அந்த காசு வரும் விற்பனையை(/ சம்பளம் வாங்குவதை அல்லது காசு வருவதை) விட்டுவிட்டு அல்லாஹ்வை நினைவு கூற நாளின் ஒரு பகுதியை மட்டும் செலவிட விரைந்து செல்லுங்கள் என்று கூறுகிறான்.

தாலிகும் - அது

ஹைருன் - சிறந்தது

லகும் - உங்களுக்கு

இன் - எப்பொழுது

குன்தும் - நீங்கள்

தஃலமூன் - அறிவீர்களானால்

நாம் (அல்லாஹ்வை) அறிந்திருந்திருந்தால் நமக்கு வழங்கியிருக்கின்ற வாய்ப்பை பற்றி விளங்கியிருந்தால் நாம் விற்பனையை விட அல்லாஹ்வை நினைவு கூற பள்ளிக்கு விரைவது தான் சிறந்தது என்று தெரிந்திருக்கும்.

வெள்ளிக்கிழமையன்று நாளின் ஒரு பகுதியில் (அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் பள்ளியில் செலவழிக்க) தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால் (பாங்கு சொல்லப்பட்டால்) விற்பனையை (காசு வரும் அந்த வியாபாரத்தை) விட்டுவிட்டு அல்லாஹ்வை (முற்றிலுமாக) நினைவு கூற (காசை பத்தியெல்லாம் நினைக்காமல் அல்லாஹ்வை பற்றி நினைக்க) பள்ளிக்கு விரைந்து செல்லுங்கள். நீங்கள் (அல்லாஹ்வை, ஹக்கை) அறிந்திருந்தால் (காசை பற்றி நினைப்பதை விட அல்லாஹ்வை பற்றி நினைப்பது தான்) அது தான் உங்களுக்கு சிறந்தது.

10வது வாக்கியம்
   فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 

பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.

ஃப இதா - அதன் பிறகு

குழியதி - முடிந்து விட்டால்

ல்  ஸலாது - தொழுகை

ஃப அன்தஸிரு - பரவிச் செல்லுங்கள்

ஃபில் அர்ழி - பூமியை நோக்கி

வப்தகூ - அதோடு தேடுங்கள்

மின் ஃபழ்லில்லாஹி - அல்லாஹ்வின் அருட் கொடைகளை

நாள் பூரா பள்ளியிலேயே இருக்க சொல்லவில்லை, தொழுகை முடிந்ததும் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருட் கொடைகளை தேடுங்கள் என்று சொல்கிறான்.

பள்ளியிலிருந்து வெளியேறி வந்து விட்டால் வியாபார நாட்டத்தில் அல்லாஹ்வை நினைக்க வேண்டியதில்லை அல்லவா? என்று கேட்க தோன்றும்.

அது தான் கிடையாது? பள்ளியிலிருந்து வெளியே வந்தவுடன் தான் இன்னும் அதிகமதிகமாக நினைக்க வேண்டும்.

பள்ளிவாசல் என்பது பயிற்சி கூடம், அங்கே பெற்றதை வெளியே வந்தவுடன் வழமையாக மாற்ற வேண்டும்.

வத் குருல்லாஹ -  அத்தோடு அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்

கஸீரன் - அதிகமாக

லஅல்லகும் - அதனால் நீங்கள்

துஃபிலிஹூன் - வெற்றி பெறலாம்

அருள்கொடையை தேடுங்கள் என்று சொல்லிவிட்டு நிறுத்தவில்லை, அல்லாஹ்வை நினைவு கூற பள்ளிக்கு சென்றோம், தொழுது முடிந்து அருளை தேடுகிறோம்,

அருள் காசு பணம் என்று வைத்துக் கொண்டால் காசு பணம் தேடுகிறோம், சம்பாதிக்கிறோம். ஆனால், பள்ளியில் எவ்வாறு அல்லாஹ்வை நினைவு கூறினோமோ அதே போல் வியாபாரம் செய்யும் போதும் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் அப்போது தான் அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும் என்று சொல்கிறான்.

தொழுகையை முடித்ததும் பூமியை நோக்கி பரவிச் சென்று அல்லாஹ்வின் அருட்கொடைகளை தேடிக் கொள்ளுங்கள், அத்தோடு வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுங்கள் இதனால் நீங்கள் வெற்றி பெறலாம்

11வது வாக்கியம்
وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا۟ اۨنْفَضُّوْۤا اِلَيْهَا وَتَرَكُوْكَ قَآٮِٕمًا‌ ؕ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ‌ ؕ وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ‏ 

இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

வ இதா - அத்தோடு எப்பொழுது

ர அவ் - அவர்கள் பார்த்தார்களோ

திஜாரதன் - வியாபாரத்தை

அவ் - அல்லது

லஹுவன் - கேளிக்கையை

ன் ஃபழ்ழு - விரைகிறார்கள்

இலைஹா - அதனை நோக்கி

இங்கே தான் எந்த சூழலுக்கு இந்த ஆயத் இறக்கப்பட்டதோ அந்த விஷயத்துக்கு வருகிறான்.

ஒரு சாரார் பள்ளிக்கு அல்லாஹ்வை நினைவு கூற விரையவில்லை, மாறாக பள்ளியிலிருந்து ஒரு வியாபாரத்தையோ அல்லது வேடிக்கையையோ பார்த்ததும் அங்கே விரைந்து செல்கிறார்கள்.

இங்கே இரண்டு விஷயங்களை தேடி மக்கள் ஓடுகிறார்கள்.
1. வியாபாரம்
2. வேடிக்கை

இதில் வியாபாரம் என்றால் தனது பொருளை விற்பனைக்கு செய்து லாபம் பார்க்க விரைகிறார்கள்.
வேடிக்கை என்றால் அங்கே எதையும் விற்கவோ வாங்கவோ அல்ல, விண்டோ ஷாப்பிங் என்று சொல்கிறோமே அப்படி வேடிக்கை பார்க்க வேண்டியும் செல்கிறார்கள்.

எப்போது தெரியுமா செல்கிறார்கள்?

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது...

வதரகூக - அத்தோடு விட்டுவிடுகிறார்கள்

காயிமன் - நின்ற நிலையில்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்க அவர்களை பேச விட்டு விட்டு அந்த கூட்டத்திலிருந்து எழுந்து செல்வது என்பது மிகவும் அவமரியாதையான நன்னடத்தை இல்லாத செயலாகும்.

குல் - சொல்லுங்கள்..!

மா - எது

இன்தல்லாஹி - அல்லாஹ்விடத்தில் உள்ளது

ஹைருன் - சிறந்தது

மினல் லஹ்வி - கேளிக்கையை விடவும்

வமினல் திஜாரதி - வியாபாரத்தை விடவும்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து சொல்ல சொல்கிறான்..

என்ன சொல்ல சொல்கிறான்?

அல்லாஹ்விடத்தில் உள்ளது மேலே கண்ட இரண்டையும் விட சிறந்தது என்கிறான்.

ஆனால் மேலே சொல்லும் போது முதலில் வியாபாரத்தையும் இரண்டாவது வேடிக்கையையும் சொல்லிவிட்டு அல்லாஹ்விடம் உள்ளது சிறந்தது என்று வரும் போது முதலில் வேடிக்கையையும் வியாபாரத்தையும் விட சிறந்தது என்று மாற்றி சொல்கிறான்.

முதலில் சொன்னது மக்கள் விரைந்து செல்வது வேடிக்கையை விட வியாபாரத்திற்கு தான். அல்லது வேடிக்கைக்கு செல்பவர்களை விட விற்பனைக்கு செல்பவர்கள் அதிகமாக விரைந்து முடிக்க பார்ப்பார்கள்.

ஆனால், இரண்டிலும் எது தவறானது என்று கேட்டால், அது வேடிக்கைக்காக செல்வது தான், அதனால் தான் வேடிக்கையையும் வியாபாரத்தையும் என்று சரியான இடத்தில் முன் பின் பொருத்தி அல்லாஹ்விடத்தில் உள்ளது இதனை விட சிறந்தது என்கிறான்.

வல்லாஹு - மற்றும் அல்லாஹ்

ஹைரு - சிறந்த

ல் ராஜிகீன் - வழங்குபவன்

மற்றும் அல்லாஹ் தான் நமக்கு வழங்குபவன், அந்த நேரத்து விற்பனைக்கு வாங்க வரும் வியாபார குழு அல்ல.

இன்னும் (நபியவர்களே. நீங்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, (ஊருக்கு திரும்புவதை) கண்டால் அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், (நீங்கள் நின்று பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது,) நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.