Sunday, November 19, 2017

ஸூரத்துல் பகரா - ஆயத் 104 - விரிவுரை

ஸூரத்துல் பகரா - ஆயத் 104 - விரிவுரை

 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَ قُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ‌ؕ وَلِلْڪٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ‏ 

வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்

யா அய்யுஹல்லதீன - ஓ! (அழைப்பது)
ஆமனு - ஈமான் கொண்டவர்களே!
லா - தகூலு - அழைக்காதீர்கள்
ராயினா - இரண்டு அர்த்தங்கள் உள்ளது, ஒன்று - ”மீண்டும் சொல்லுங்கள்” என்பது, இன்னொன்று - ”செம்மறி ஆட்டுக்காரர்” என்பது.
வ - கூலு - ஆனால், சொல்லுங்கள்!
உன்ளுர்னா - தயைகூர்ந்து, எங்களை அன்புடன் நோக்குவீர்களாக! 
வ-ஸ்மஉ - அத்தோடு, கவனியுங்கள்!
வலில் - காஃபிரீன - (பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம் இரட்டை அர்த்தம் தரும் வார்த்தையை மரியாதை இல்லாமல் பேசும் மறுப்பாளர்களுக்கு) 
அதாபுல் அலீமுன் - வலிகள் தரக்கூடிய வேதனை உண்டு!


விளக்கம்:
குரான் ஷரீஃபில் 89 முறை ”யா அய்யுஹல்லதீன ஆமனு” என்ற வார்த்தை வருகிறது. அதில் இந்த ஆயத்து தான் முதல் முறை. இதே சூரத்துல் பகறாவில் இதற்கு முன்னர் “யா அய்யுஹன்னாஸ் (2:21)” என்று ஒரு முறை வருகிறது, அதாவாது ஒட்டு மொத்த மனித இனத்தையே விளிக்கும் சொல் அது, அடுத்து இன்னொரு முறை, “யா பனீ இஸ்ராயீல் (2:40)” என்றும் அதாவது ”இஸ்ராயீலின் சந்ததிகளே!” என்றும் வருகிறது.

ஆனால் முதல் முறையாக “ஈமான் கொண்டவர்களே!” என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை யுடையவர்களை நோக்கி அழைத்து இறைவன் சொல்லும் முதல் கட்டளை இது தான்.

அப்படி என்ன கட்டளை?

லா தகூலு “ராயினா”

- இது தான் அந்த கட்டளை, அதாவது “ராயினா’ என்று சொல்லாதீர்கள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது யூதர்களில் சிலர் “ராயினா” என்று சொல்வார்கள். “சரியா கேட்கலை, மறுபடி சொல்லுங்க..” என்று ஒரு சாதாரண மனிதரிடம் இயல்பாக பேசுவதை போன்ற தொனியை யுடைய வார்த்தை இது.

இந்த வார்த்தையை தேர்ந்தெடுத்து அவர்கள் சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருந்தது, “செம்மறி ஆட்டை உடையவரே!” அதாவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் தானே, நம்மை போன்ற ஒரு மனிதர் தானே எனும் தொனி இருந்தது.

இதை பார்த்து விட்டு ஈமான் கொண்டவர்களில் சிலரும் அவ்வாறே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுக்கு யூதர்களுக்கு இருந்தது போல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களை மதிக்காத மரியாதை கொடுக்காத எண்ணம் இல்லை என்றாலும் அவர்கள் அவ்வாறே அழைத்தார்கள்.

ஆனால், தன் நபியை ஈமான் கொண்டவர்கள் அவ்வாறு அழைப்பதை இறைவன் விரும்பவில்லை.

அவ்வாறு “ராயினா” என்று சொல்லாதீர்கள் என்று கட்டளையிடுகிறான்.

வேறு எப்படி சொல்வது?

வ - கூலு ”உன்ளுர்னா”

- அதாவது, “உன்ளுர்னா” என்று அழையுங்கள்.

கிட்டதட்ட “ராயினா”விற்கும் “உன்ளுர்னா”விற்கும் ஒரே அர்த்தம் தான். ஆனால் “உன்ளுர்னா” எனும் வார்த்தையில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் உள்ளது. “எங்களை அன்புடன் பாருங்கள், தயவுசெய்து..” என்று கெஞ்சி கேட்பது போல் உள்ளது.

இத்தகைய வார்த்தையை தான் தன் நபியை ஈமான் கொண்டவர்கள் அழைக்க வேண்டும் என்று சொல்கிறான்.

வஸ்மஉ

- கவனமாக கேளுங்கள்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசினால் கவனமாக கேளுங்கள், இதனால் நீங்கள் திரும்பி சொல்லுங்கள் என்று கேட்க வேண்டிய தேவையே இருக்காது. 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் கவனமாக கேட்பது, மிக மரியாதையான வார்த்தைகளைக் கொண்டு பேசுவது இவைகளே ஈமான் கொண்டவர்களுக்கு குரான் ஷரீஃபில் இறைவன் இட்ட முதல் கட்டளையாகும்.

வலில் காஃபிரீன அதாபுல் அலீமுன் 

- மேலும் அந்த காஃபிர்களுக்கு வலிகள் தரும் வேதனை உண்டு

பொதுவாக இறைவன் குரான் ஷரீஃபில் யூதர்களை அழைக்கும் போது “அஹ்லில் கிதாபு” என்று அழைப்பது உண்டு. ஆனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மதிக்காதவர்களை சொல்லும் போது இறைவன் “மறுப்பாளர்கள்” என்று தான் அழைக்கிறான். 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மதிக்காத அந்த காபிர்களுக்கு வலிகள் தரும் துன்பம் நிறைந்த வேதனை உண்டு.

இத்தகைய காபிர்களை போல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மதிக்கத் தெரியாதவர்களாக அல்லாமல் அவர்களை போற்றும் புகழும் சுன்னத் வல் ஜமா அத்தில் இணையக் கூடியவர்களாக நம்மை ஆக்கி இறைவன் அருள் புரிவானாகவும்! ஆமீன்.

மீலாதுந் நபி முபாரக்!