Thursday, August 2, 2007

இறைவனின் ஆசனம்

உலகின் உள்ள அனைத்திற்கும் இறைவனே முதலானவன். அவனுக்கு முந்தியது என்று எதுவும் இல்லை. அது போல் அனைத்திற்கும் முடிவும் இறைவனே ஆவான். அவனைத் தவிர அனைத்தும் அழிந்து விடும்.
இறைவன் அமரும் ஆசனம் ஒன்று நம்மிடம் உள்ளது. ஆனால் அது தூசியுடனும் கரை படிந்தும் அழுக்குகள் நிறைந்தும் காணப்படுகிறது. இறைவனுக்கென இருக்கும் அந்த ஆசனத்தில் நாம் தான் இறைவனை அமர விடாமல் தடுத்து பெருங் குற்றத்தை புரிந்து வருகிறோம்.
நான் எந்த ஆசனத்தைப் பற்றி பேச வருகிறேன் என்று தெரிகிறதா? ‘கல்ப்’ என்ற இதயத்தைப் பற்றித் தான். நம் இதயத்தில் ஷைத்தானிற்கு தான் முதலிடம் கொடுத்திருக்கிறோம். ஏராளமான குப்பைகள் நம் இதயத்திற்குள் இருக்கின்றன.
அறிவு கூட ஒரு வகையில் குப்பையை சேர்ந்தது தான். அறிவு தான் சிறந்தது என்றால் இப்லீஸ் இறைவனிடம் வாதிட்டது சரி என்றாகி விடும். இறைவன் விரட்டியடித்தது கூட அறிவு என்ற இப்லீஸை தான்.
இறைநேசர்களை நம் அறிஞர்களுக்கு புரியாமல் போனது அப்படி ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்ல. ஹிளுர்(அலை) அவர்களின் செயல்கள் நபி மூஸா(அலை) அவர்களுக்கு புரிந்ததா என்ன?.
இறைவன் தனது திருமறையில் (25:53 மற்றும் 55:20) இரு கடல்களுக்கு இடையில் திரையையும் மீற முடியாத தடையையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறான்.
கடல் இரண்டு சேரும் போது ஏற்படும் திரையை(உஷ்ணம், உப்பின் அளவு) நீங்கள் அறிவை வைத்து கடலில் சென்று ஆராய்ந்து பார்க்கலாம். ஜாக்ஸ் காஸியோ என்ற கடல் நீர் ஆராய்ச்சியாளர் அப்படி தான் ஆராய்ச்சி செய்து இஸ்லாத்தை தழுவினார் என்பது உண்மை வரலாறு.
ஆனால் மூஸா நபியவர்கள் ஹிள்ர்(அலை) அவர்களை காண செல்லும் போது ‘இரு கடல்கள் சந்திக்கும் இடத்தை அடையும் வரை நான் செல்வேன்..’(திருமறை 18:60) என்று கூறுகிறார்கள்.
‘தப்ஸீர் பைழாவி’யில் இரண்டு கடல்கள் என்பது புற அறிவாகிய மூஸாவும் உள் அறிவாகிய ஹிள்ரும் ஒன்று சேருதல் என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது. சிந்திக்க வேண்டும்.
மனித உறுப்புகள் எனும் புற அவயங்கள் என்று எதை எடுத்து வைத்துக் கொண்டும் இறைவனை அறிய முடியாது. இறைவனின் குரலை நபி மூஸா(அலை) அவர்கள் கேட்டார்கள் என்பது உண்மை தான். ஆனால் நாம் நினைக்கிற படி புற காதுகளால் அல்ல- இறைவனின் குரல் தொண்டையில் இருந்து வந்திருந்தால் அதை கேட்க புற காது தேவைப் பட்டிருக்கலாம். ஆனால் ஒலியுமற்ற ஓசையுமற்ற குரலை கேட்க இந்த புற காதுக்கு சக்தியில்லை என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஹிள்ர்(அலை) அவர்கள்(திருமறை 18:78), ‘எனக்கும் உங்களுக்கும் இடையில் இதுவே பிரிவினை(க் குரிய நேரம்)’ என்று சொன்னார்கள். புற அறிவிற்கும் உள் அறிவிற்கும் எத்தகைய தடையை ஏற்படுத்தி வைத்திருக்கிறான் என்று உணர்ந்து படிப்பவர்களுக்கே விளங்கும்.
எங்கள் ஹஜ்ரத் இறைஞானி மௌலவி எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் ‘ரசூலுல்லாவை பார்த்தவர்கள் சொர்க்கம் செல்வார்கள்’ என்றார்கள்.
ஓர் அறிஞர் குறுக்கிட்டார், ‘அதெப்படி.. அபுஜஹ்லும் தான் ரசூலுல்லாவ பார்த்திருக்கான். அவன் நரகம் புகுவான் என்று ஆதாரம் உள்ளதே’ என்றார்.
எங்களது கண்ணியத்திற்குறிய ஹஜ்ரத் அவர்கள் சற்றும் தாமதிக்காமல் சொன்னார்கள், ‘அபுஜஹ்ல் எங்கே ரசூலுல்லாவ பார்த்தான். அவன் முஹம்மது பின் அப்துல்லாவை அல்லவா பார்த்தான்’ என்று. இப்பொழுது புரிகிறதா? உங்கள் பார்வைகளை மாற்றிக் கொள்ளுங்கள். ஹதீஸ்களை மாற்றாதீர்கள்.
‘இறைநேசர்கள் ‘அஸ்ஹாபுல் கஹ்•ப்’ என்ற குகைத்தோழர்களை போன்றவர்கள். அசைவிலும் விழிப்பிலும் அவர்கள் உறக்கத்தில் தான் உள்ளார்கள். அதாவது இறைவனே அவர்களை அசைக்கிறான். அவர்களே அறியாமல் அவர்கள் மூலமாக அவனே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறான்...’ என்று மௌலானா ரூமி அவர்கள் மஸ்னவியில் குறிப்பிடுகிறார்கள். ‘கற்றாரை கற்றாரே காணுறுவர்’- எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.
பெருமானார் அவர்கள் ‘இறைவனிடம் உங்களை முழுமையாக ஒப்படைத்து விடுங்கள்’ என்று கூறியது இந்த நிலையைத் தான்.
இத்தகைய நிலையை அடைய இதயத்தை துய்மைப் படுத்தி கண்ணாடியாக்க வேண்டும். காலம் கனியும் போது மனித ஆத்மா தன்னை படைத்தவனோடு நெருக்கமடையும்.
எண்ணற்ற மக்களுக்கு அகக்கண்ணை திறந்த மெய்ஞான பேரரசர் முஹ்யித்தின் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள், ‘மெய்ஞான வழி பயணத்தின் முதலாவது குறிகோள் உளத்தூய்மையே’ என்றார்கள்.
உள்ளத்தை தூய்மையாக்குவது சிரமமான காரியம் தான். அதற்கு சில அல்லது பல தியாகங்கள் புரிய வேண்டும். பெருமானாரின் வாழ்க்கையை ஆதாரத்திற்காகவும் பேச்சு திறனால் மற்றவர்களை மடக்குவதற்காகவும் படிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
பெருமானாரின் வரலாற்றை உள்ளத்தால் படிக்க வேண்டும். நபித்தோழர்கள் வரலாற்றை சிந்திக்க வேண்டும்.
ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள் ‘என் எஜமானனின் ஒளியைக் கொண்டே என் இதயம் எஜமானனைக் காண்கிறது’ என்று கூறினார்கள் என்றால் உமர்(ரலி) அவர்களின் இதயம் எப்படி கண்ணாடியாகி இறை அத்தாட்சியை பிரதிபலித்தது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
இறைவன் நமக்கு நெருக்கமாக இருக்கிறான். நமக்குள் இரகசியமாக இருக்கிறான். அதனால் தான் இறைவன் மனிதனை படைத்த பிறகு, ‘என் இரகசியமே..’ என்று கூறியதாக ஹதீஸ் குத்ஸி உள்ளது.
நாம் நம் இறைவன் அமரும் ஆசனமான இதயத்தை தூய்மைப் படுத்த தவறி விட்டால் மனிதர்களை நான் படைக்க போகிறேன் என்று இறைவன் கூறிய போது மலக்குகள் நகைத்தது மிகை அல்ல என்று ஆகி விடும்.

No comments: