முஸ்லீம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமை ஹஜ் என்பதாகும். ஹஜ் என்றால் ஒரு இடத்திற்கு செல்வது என்று பொருள். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் உலகின் மையப் பகுதியும் இஸ்லாமிய ஆன்மீக மையமுமான 'கஅபா' என்ற இறையில்லத்தை நோக்கி செல்வதை இது குறிக்கும்.
'கஅபா' என்ற இறையில்லம் அகிலத்தின் அருட்கொடை ஹஜ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு மட்டும் சம்மந்தப்பட்ட இடமல்ல. நாயகம் அவர்களுக்கு முன்னால் தோன்றிய பல நபிமார்களுக்கும் அது தொடர்புடைய இடமாகும். குறிப்பாக இப்ராஹீம் நபி (ஸல்) மற்றும் இஸ்மாயில் நபி (ஸல்) அவர்களோடும் சம்மந்தப்பட்ட இடமாகும்.
இப்ராஹீம் நபியவர்கள் அவர்களுடைய எண்பத்தாறாவது வயதில் இஸ்மாயில் என்ற பிள்ளை கனியமுதை பெற்றெடுக்கிறார்கள். முதுமை பருவத்தில் பிறந்த குழந்தையின் மீது தந்தையின் பாசமானது எப்படி இருந்திருக்கும் என்று எதுவும் எழுதாமலே எல்லோராலும் விளங்கிக் கொள்ள முடியும். அந்த பிள்ளையை தவிர வேறு ஒரு உவப்பான பொருள் எதுவும் எந்த தந்தைக்கும் இருக்க முடியாது என்பது தெளிவு.
இந்த கட்டத்தில் தான் இப்ராஹீம் நபியவர்களுக்கு ஒரு மிகப் பெரிய சோதனை காத்திருந்தது. நெஞ்சை உலுக்கும் அந்த சோதனை இறைவனிடமிருந்து சமிக்ஞை மூலமாக இப்ராஹீம் நபியவர்களுக்கு வருகிறது. அதாவது தனது அருந் தவப் புதல்வனை ஆருயிர் செல்வனை குழந்தை இஸ்மாயிலை அறுத்து பலியிட வேண்டும் என்பது தான் அது.
இந்த இடத்தில் சற்று உணர்ந்து சிந்தித்தல் நல்லது. இப்ராஹீம் நபியவர்கள் உள்ளம் எப்படி இருந்திருக்கும்..? நினைத்து பார்க்கையில் ஈரக்குலை எல்லாம் நடுங்குகிறது.
இறைவனின் திருப்பொருத்தத்தை தவிர வேறு எதையும் நாடிராத இப்ராஹீம் நபியவர்கள் இறைவனின் செய்தியை இஸ்மாயிலிடம் வெளியிடுகிறார்கள். குணக்குன்றான இஸ்மாயில் அவர்கள் சொன்னார்கள், 'இறைவனின் கட்டளையை தயக்கமின்றி நிறைவேற்றுங்கள்.. அல்லாஹ் அருள் கூர்ந்தால் அவற்றைப் பொறுத்து கொண்டு உறுதியாக இருப்பவனாகவே என்னைக் காண்பீர்கள்..' என்று. இப்ராஹீம் நபியவர்கள் திருவாயிலிருந்து, 'அல்ஹம்து லில்லாஹி ஹம் தன் கதீரா..' என்ற நன்றிமொழி வெளிவந்தது.
இஸ்லாமிய ஆண்டின் கடைசி மாதமாகிய துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் இறைவனுடைய கலீல் என்பதற்கு பொருத்தமான இப்ராஹீம் நபியவர்களது கூரிய வாள் மினா எனுமிடத்தில் கழுத்தை உறுதி படக் காட்டிக் கொண்டிருந்த தமது அருமை மைந்தன் இஸ்மாயிலை குறி பார்த்தது.
அப்போது தான் வல்ல இறைவன் கூறினான், 'இப்ராஹீமே! நீர் கண்ணுற்றதை மெய்ப்பித்து காட்டி விட்டார். நல்லவர்களுக்கு யாம் இவ்வாறே வெகுமதி அளிப்போம் திட்டமாக் இஃது ஒரு தெளிவான பெரும் சோதனையாகும்!' என்று.
அதன் பிறகு இறைவன் இஸ்மாயில் அவர்களுக்கு பதிலாக ஒரு ஆட்டுக் கிடாவை பலியிடச் செய்தான். இதை தனது திருமறை குரானில் 'மகத்தான பலியின் மூலம் அவரை மீட்டோம். அவருடைய புகழை அவருடைய வழித்தோன்றல்களின்கண் நிலைத்திடவும் செய்தோம். இப்ராஹீமுக்கு சாந்தி உண்டாவதாக!' என்று மிக அழகிய சொற்களால் எடுத்துரைக்கின்றான்.
'மகத்தான பலி' என்றால் சினம் கொண்ட கடவுளின் கோபத்தை தணிப்பதற்கு கொடுக்கப்படும் பலி என்றோ அல்லது இகபர உலகில் நாடியது நிறைவேற வேண்டி கடவுளை களிப்பூட்டவோ செய்யப்பட்ட பலி அல்ல என்பது தான்.
'முஸ்லீம்' என்றால் இறைவனுக்கு முற்றிலும் வழிபடுதல் என்று பொருள். எனவே இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட ஒரு உண்மை முஸ்லீமின் உலகம் போற்ற வேண்டிய உன்னத தியாகமே இந்த மகத்தான பலியாகும்.
இந்த 'மிருக பலியான' குர்பான் எனப்படுவது புறச் சடங்குகளை மட்டும் குறிப்பிடுவது ஆகாது. உள்ளத்தில் ஏற்படும் கீழான இச்சைகளை வேரறுத்து ஊன் உருக, உளம் உருக இறைவனுக்கு முற்றிலும் வழிபடுவதையே குறிக்கும்.
இதை தான் இறைவன் தனது அற்புத திருமறையில் '(இவ்வாறு குர்பான் செய்த போதினும்) அதன் மாமிசமோ அதன் இரத்தமோ இறைவனை அடைந்து விடுவதில்லை. உங்களுடைய இறையச்சமே அவனை அடையும்' என்று அத்தியாயம் 22 வசனம் 37ல் மிக அற்புதமாக விளக்குகின்றான்.
திருமறையின் இந்த வசனங்கள் இஸ்லாமிய தியாகத்தின் தத்துவத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அழுத்தமாகவும் விளக்கி விடுகின்றன.
இப்ராஹீம் நபியவர்களின் மாபெரும் தியாகத்தை நினைவு கூர்வது மட்டுமின்றி தியாகத்தை நெஞ்சில் நிறுத்திடவும் நிறுத்திய தியாகம் நிலைத்திடவும் வல்ல அல்லாஹ்(ஜல்)விடம் பிரார்த்திப்போம்
No comments:
Post a Comment