Tuesday, September 15, 2015

நூருன் அலா நூர் (ஒளிக்கு மேல் ஓளி)

முன்னெச்சரிக்கை: மிகப் பெரிய பதிவு.

குரான் ஷரீஃபில் ரொம்பவும் பிரபலமான சொற்றொடர் “நூருன் அலா நூர்”.
இதனை பற்றி பல அருமையான ஆய்வுகளடங்கிய விளக்கவுரைகள் மார்க்க புத்தகங்கள் எங்கும் வழிந்து கிடக்கின்றது. இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நூருன் அலா நூர் எனும் சொற்றொடரை பற்றி மிக ஆழமான அர்த்தங்களை கொண்ட மிஷ்காதுல் அன்வார் எனும் ஒரு நூலையே எழுதி தந்தார்கள்.

ஒளியை பற்றி இயற்பியல் வல்லுனர்கள் இன்றளவும் ஆச்சர்ய கண்களோடு தான் பார்த்து வருகிறார்கள். அது "particles" ஆகவும் "waves" ஆகவும் செயல்படுகிறது என்று ஆச்சர்யப்படுகிறார்கள்.

பொதுவாக "waves" என்றால் அது செல்வதற்கு ஒரு பொருள் (medium) தேவைப்படும். உதாரணமாக ஒலி அனும் waves செல்வதற்கு காற்று மண்டலம் தேவைப்படுகிறது. காற்று இல்லாத வெற்று மண்டலத்தில் அதாவது vacuum த்தில் ஒலி செல்ல முடியாது.
ஆனால் இந்த ஒளியானது செல்வதற்கு எந்த ஒரு மீடியமும் தேவையே இல்லை. மிக ஆச்சர்யமாக இருக்கிறது (fascinating).

அல்லாஹ் குரான் ஷரீஃபில் பல இடங்களில் ஒளியை பற்றி பேசுகிறான்.

2. ஸூரத்துல் பகரா (பசு மாடு)
257வது வாக்கியம்
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருளின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.

மேலே உள்ள வாக்கியத்தில் அல்லாஹ் வந்து இருள்களிலிருந்து வெளிச்சத்தின் (அரபியில் நூர் என்ற வார்த்தையில் சொல்கிறான்) பக்கம் கொண்டு வருவதாகவும் ஷைத்தான் வெளிச்சத்திலிருந்து (அரபியில் நூர் என்ற வார்த்தையில் சொல்கிறான்) இருளின் பக்கம் கொண்டு வருவதாகவும் சொல்கிறான்.

66. ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்)
8வது வாக்கியம்
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.

மேலே உள்ள வாக்கியத்தில் ஈடேற்றம் பெற்றவர்களுடைய ஒளியை பற்றி (நூர் என்ற அரபி வார்த்தை) அவர்களை சுற்றி இருப்பதாகவும் அவர்கள் அதனை முழுமையாக்கி வைக்குமாறு கேட்பார்கள் என்றும் கூறுவதாக சொல்கிறான்.

இது பத்தாதற்கு தான் அனுப்பிய வேதங்களை நூர் என்று கூறுகிறான்

மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட தவ்றாத் வேதத்தை ஒளியோடு ஒப்பிடும் வாக்கியம்
5. ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)
44வது வாக்கியம்
நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
மேலே உள்ள வாக்கியத்தில் தவ்றாத்தில் பேரொளி இருந்ததாக கூறுகிறான்.

ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இன்ஜிலை ஒளியோடு ஒப்பிடும் வாக்கியம்
5. ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)
46வது வாக்கியம்
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
மேலே உள்ள வாக்கியத்தில் இன்ஜிலில் ஒளி இருந்ததாக கூறுகிறான்.
நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட குரான் ஷரீஃபையும் அல்லாஹ் நூர் என்று சொல்கின்ற வாக்கியம்

64. ஸூரத்துத் தஃகாபுன் (நஷ்டம்)
8வது வாக்கியம்
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம் இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
அல்லாஹ் இங்கே குரான் ஷரீஃப் என்று குறிப்பிடாமலேயே நாம் இறக்கி வைத்த ஒளி என்று கூறுகிறான்.
இது மாத்திரமல்லாமல் அல்லாஹ் முஃமீன்களையே ஒளி என்று தான் குறிக்கிறான். அந்த வாக்கியம் வருமாறு:

57. ஸூரத்துல் ஹதீத்(இரும்பு)
13வது வாக்கியம்
முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: “எங்களை கவனியுங்கள்; உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்” என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும்: “உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.” பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும்; அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும்; ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.
மேலே உள்ள வாக்கியத்தில் முஃமீன்களை பார்த்து முனாஃபிக்கானவர்கள் (நன்கு கவனிக்கவும் - காஃபிரானவர்கள் அல்ல) உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம் என்று கேட்பதாக மிக அற்புதமாக சொல்கிறான்.
நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களை அல்லாஹ் ஒளி என எடுத்தியம்பும் அருமையான வாக்கியத்தையும் பார்ப்போம்:

5. ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)
15வது வாக்கியம்
வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.

மேலே உள்ள வாக்கியத்தில் முக்கியமாக இரண்டு சப்ஜெக்டை பற்றி பேசுகிறான். ஒன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றொன்று குரான் ஷரீஃப். பெருமானாரை பற்றி இரண்டாவது முறை குறிப்பிடும் போது ”பேரொளி” என்கிறான் குரான் ஷரீஃபை பற்றி குறிப்பிடும் போது ”தெளிவு” என்று கூறுகிறான்.

ஆக, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரொளியாக இருக்கிறார்கள். முஃமீன்கள் ஒளியாக இருக்கிறார்கள். வேதங்களும் ஒளியாக இருக்கின்றன.

அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்களில் ஒன்றான அந்நூர் என்ற பெயரை குரான் ஷரீஃபில் உள்ள 24வது அத்தியாயமான ஸூரத்துந் நூரில் வரும் 35வது வாக்கியத்தை பிரதானமாக கொண்டே நாம் அமைத்திருக்கிறோம்.

எனக்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒரு மாதிரி பரவசம் பற்றிக் கொள்கின்ற ஆயத்தாக இந்த ஆயத்து அமைந்திருக்கிறது. அந்த வாக்கியத்தை படிப்போம்.

புரிந்து கொண்டதை இப்படி வெளிப்படுத்த விழைகிறேன்:
24. ஸூரத்துந் நூர் (பேரொளி)
35 வது வாக்கியம்
اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ
அல்லாஹு நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ள் -
அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளியாக இருக்கின்றான்.

கண்களால் எந்த பொருளையும் பார்க்க முடியாது, கண்ணில் ஒளி இல்லை என்றால்.
கண்ணில் ஒளி இருந்தாலும் இருட்டில் எதையும் பார்க்க முடியாது வெளியில் ஒளி இல்லை என்றால்.

இன்று நாம் வானத்தில் உள்ளதையோ அல்லது பூமியில் உள்ளதையோ வெளிச்சத்தில் பார்க்க முடிகிறது என்றாலும் அதனிலிருந்து விளங்கி கொள்ள வேண்டியது அறிந்து கொள்ள வேண்டியதை நீங்கள் perceive செய்ய வில்லை என்றால் அப்பவும் நீங்கள் அந்த பொருளை பார்க்கவில்லை என்று தான் பொருள்.

அப்படி நீங்கள் ஒரு பொருளில் என்ன பார்க்க வேண்டும்? அல்லது அந்த பொருளிலிருந்து எதை perceive செய்ய வேண்டும்?

ஒரு பொருளிலிருந்து எதை விளங்கிக் கொள்ள வேண்டுமோ (perceive) அதனை நீங்கள் விளங்காமல் வேறு விளங்க கூடாத ஒன்றை விளங்கி வைத்திருக்கிறீர்கள் என்றால் அது perception distortion எனப்படும்.

கண்ணில் உள்ள ஒளி என்றாலும் சரி, பார்க்கும் பொருளில் உள்ள ஒளி என்றாலும் சரி அது அல்லாஹ் தான். அதாவது உதாரணமாக கடல் இருக்கிறது அதை நான் பார்க்கிறேன். பெரிதாக என்னால் கடலை பற்றி விவரிக்க முடியாது. ஆனால் கடல் ஆராய்ச்சியாளர்கள் கடலை பற்றி வால்யூம் வால்யூமாக புத்தகம் எழுதுவார்கள். இங்கே ஒளி என்பது நீங்கள் ஒரு பொருளை எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறீர்களோ அந்த அளவிற்கு வேறுபடும்.

ஆனால் நீங்கள் எந்த அளவுக்கு கடலை பற்றி ஆராய்ச்சி செய்தாலும் அதன் மூலமாக அல்லாஹ்வை விளங்கிக் கொண்டீர்களா என்பது தான் முக்கியம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ஹதீதை நான் படித்த ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன், “ஒரு கிணற்றில் தண்ணீர் எடுக்க வாளியை விடும் போது அந்த வாளியானது அல்லாஹ்வை முட்டுகிறது..” என்பது போல் அந்த ஹதீது வரும்.

வானங்கள் பூமி எது என்ற போது அதில் உள்ள ஒளியாக அல்லாஹ்வே இருக்கின்றான்.அந்த அல்லாஹ்வின் ஒளியை பற்றி பேசுகிறான். எந்த ஒரு பொருளுக்குள்ளும் மறைவாக அல்லாஹ் எனும் ஓளியே அமையப் பெற்றுள்ளது.

مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌ‌
மஸலு நூரிஹி கமிஸ்காதி ஃபீஹா மிஸ்பாஹுன் -
அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும்.
அந்த ’ஒளி’க்கான விளக்கத்தை அந்த ஒளியாகிய அல்லாஹ்வே சொல்கிறான்.
அதுவும் உவமை என்று கூறுகிறான். அதாகப்பட்டது ஒரு மாடத்தை பற்றி குறிப்பிடுகிறான். நீங்கள் ஒரு இடம்/வீடு இருட்டடைந்து கிடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வீடு முழுக்க விளக்கின் ஒளி படர வேண்டும் என்பதற்காக ஒரு மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மாடத்தில் தான் விளக்கு உள்ளது.
இதை இன்னும் deeper ஆக விளங்கிக் கொள்ள வீட்டிற்கு பதிலாக மனித உடலை நினைத்துக் கொள்ளுங்கள். அது இருளடைந்து அதாவது உயிரற்று கிடக்கிறது. அதில் உள்ள விலா எலும்புகள் தான் மாடம் என்பதாகும். அதில் உள்ள விளக்கானது இதயத்தை குறிக்கும்.

الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌
அல்-மிஸ்பாஹு ஃபீ ஜாஜதின் -
அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது;
அந்த விளக்கானது ஒரு கண்ணாடியின் உள்ளே இருக்கின்றது. பொதுவாக கண்ணாடி என்றால் எளிதில் அழுக்கடையும், தெறிப்பு ஏற்படும், ஆகவே அடிக்கடி சுத்தம் செய்து ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
கண்ணாடியானது இதயத்தில் சுற்றியுள்ள நப்ஷ் எனும் மனசை குறிக்கும். அது எந்த நேரத்திலும் ஷைத்தானை நோக்கி தூண்டப்படலாம். அதனை அடிக்கடி திக்ர் செய்து சுத்தப் படுத்தி கொண்டே இருக்க வேண்டும்.

اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ
அஜ்ஜுஜாஜதுன் க அன்னஹா கவ்கபுன் துர்ரிய்யுன் -
அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும்.
அந்த கண்ணாடி தான் அந்த வீடு முழுக்க ஒளியை ஊட்டும் நட்சத்திரம் போல இருக்கிறது.
உள்ளே இருக்கின்ற விளக்கு உடம்பு முழுக்க படர வேண்டும் என்றால் கண்ணாடியை ஒழுங்காக வைத்துக் கொள்ள வேண்டும் என்று இங்கே வலியுறுத்தப்படுவதாகவே நான் உணர்கிறேன்.

يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ
யுவ்கது மின் ஸஜரதின் முபாரகதின் ஜய்தூனதின் -
அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது.
இப்போ அந்த விளக்குக்கு திரும்ப வந்து விடுங்கள், வீடு முழுக்க இருளடைந்து உள்ளது, வெளிச்சம் தேவை, வெளிச்சம் வீடு முழுக்க பட வேண்டும் என்றால் மாடம் தேவை, மாடம் உள்ளது, அதில் விளக்கு உள்ளது, விளக்கு கண்ணாடி குவியலின் உள்ளே உள்ளது, இப்போ என்ன தேவை? அந்த விளக்கு ஒளியூட்டப்பட வேண்டும்.. அதற்கு என்ன தேவை? எண்ணெய் தேவை. அந்த எண்ணெய் பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தினால் எறிக்கப்படுகிறது. அந்த எண்ணெய் தான் ரூஹு. அது தான் அல்லாஹ்.

لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ ۙ
லா ஸர்கிய்யதின் வலா கர்பிய்யதின் -
அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று.
அந்த எண்ணெயானது கீழ்த்திசையை சேர்ந்ததுமல்ல...
மேல்திசையை சேர்ந்ததுமல்ல
அல்லாஹ்வானவன் எந்த ஒரு பொருளை போலவும் இல்லை..நீங்கள் பார்க்கின்ற, பார்க்க முடியவில்லை என்று கூறுகின்ற அல்லது கற்பனை செய்கின்ற அல்லது கற்பனை செய்ய இயலாத இப்படி எந்த பொருளாகவும் இல்லை.. அது ஓர் அற்புதம்..

يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ‌
யகாது ஜய்துஹா யுளீஉ வலவ் லம் தம்ஸஸ்ஹு னாருன் -
அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும்,
சாதாரணமாக ஒரு நெருப்புக்கு தேவையான வெப்பம் என்பதே இல்லாமல் போனாலும் அந்த எண்ணெயானது ஒளி வீச தான் முற்படுகிறது.
நீங்கள் இறைவனையே நினைக்கா விட்டாலும் சரி, அந்த ரூஹானது அது அதன் தன்மையை மாறாமல் இருந்து கொண்டே தானிருக்கும். உங்களால் தான் அந்த விளக்குக்கு ஒளி என்று நினைத்து விடாதீர்கள்.

نُوْرٌ عَلٰى نُوْرٍ‌
நூருன் அலா நூர் -
ஒளி மேல் ஒளியாகும்.
உங்களுக்குள் அல்லாஹ் வழங்கியுள்ள அந்த ஒளியை (அல்லாஹ்வை) நீங்கள் ஒளியூட்டினால் அல்லாஹ் தன் புறத்திலிருக்கும் உள்ள ஒளியை உங்கள் மீது அவன் வழங்கியிருக்கும் ஒளியோடு ஒன்று சேர செய்வான். இரண்டு ஒளியும் ஒரே frequency யில் இணையும். அது தான் ஒளி மேல் ஒளியாகும். நூருன் அலா நூர்.
ஒளிக்கு மேல் ஒளி வந்தால் இருள் மறையும், கவலை இருக்காது, துக்கம் இருக்காது. அதனால் தான் அல்லாஹ் அவ்லியாக்களை பற்றி குறிப்பிடும் போது அவர்களுக்கு துக்கமோ கவலையோ இருக்காது என்கிறான்.

يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ‌
யஹ்தில்லாஹி நூரிஹி மய்யஸாஹு -
அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளியின் பால் நடத்திச் செல்கிறான்.
இந்த வாக்கியத்தை இப்படி படிக்க வேண்டுகிறேன்:
யஹ்தில்லாஹி நூரிஹி - அல்லாஹ் ஒளியின் பக்கம் வழிகாட்டுவான்
யஹிதின்னா வழிகாட்டுவது (அல்ஹம்து சூரால யஹ்தி நஸ்ஸிராத்தல் என்று வருமே).
நூரின் அதாவது அல்லாஹ்வின் புரத்திலிருக்கும் ஒளியின் பக்கம் அவன் வழிகாட்டுவான்.
அடுத்த கேள்வி வழி யாருக்கு காட்டுவான்?
மய்யஸாஹு - அதாவது இது இரண்டு அர்த்தம் வருகிறது. முதல் அர்த்தம்: தான் நாடியவருக்கு
இரண்டாவது அர்த்தம்: நாடியவருக்கு (அதாவது ‘தான்’ என்ற வார்த்தையே இல்லாமல்)
ஒரே வார்த்தையில் இரண்டு பேரோட wills ஐயும் ஒன்று சேர்க்கிறான்.
எந்த மனிதன் அந்த ஒளியின் பக்கம் செல்ல வேண்டும் என்று தன் நப்ஷை தூய்மைபடுத்த நினைக்கிறானோ அவனுக்கு - என்றும் சொல்லலாம்
எந்த மனிதன் அந்த ஒளியின் பக்கம் செல்ல வேண்டும் என்று அல்லாஹ் நினைக்கிறானோ அவனுக்கும் - என்றும் சொல்லலாம்.
நூருன் அலா நூர் என்று எப்படி மனிதனுக்கு வழங்கப்பட்ட நூரையும் தன் புறத்திலிருக்கும் நூரையும் ஒன்றன் மீது ஒன்றாக இணைத்தானோ அதே போல மனிதனுடைய எண்ணத்தையும் தனது எண்ணத்தையும் இணைத்து அழகாக சொல்கிறான்.

وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ‌ؕ
வ யள்ரிபுல்லாஹுல் அம்ஸால லின்னாஸி -
மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
இவ்வளவு விளக்கமும் மனிதன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மனிதனை வைத்தே சொல்கிறான்.

وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
வல்லாஹு பி குல்லி ஸய்இன் அலீமுன் -
அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
அந்த அல்லாஹ் எல்லாம் எப்படி எப்படி என்பதை நன்றாகவே அறிந்தவன். எனக்கு ஏன் இன்னும் அந்த அளவிற்கு ஒளி இன்னும் ஒளி வரவில்லை என்றெல்லாம் நீங்கள் எடுத்து குறை சொல்ல வேண்டியதில்லை. அவன் யாவற்றையும் நன்கு அறிந்தவன். அவனுக்கு தெரியும்.

No comments: