Thursday, November 5, 2015

நான் + நாம் + அவன் - ஸூரத்துல் கஹ்ஃப் (குகை)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹாகிமில் இடம் பெற்ற ஒரு ஹதீதை நாம் அறிந்திருப்போம்.

“எவரொருவர் வெள்ளிகிழமை தினத்தில் ஸூரா கஹ்ஃபை ஓதுகின்றாரோ அவருக்கு இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடையில் பிரகாசம் கிடைக்கும்”

அந்த வகையில் உலக முஸ்லிம்களால் குரான் ஷரீஃபில் அதிகமதிகம் ஓதக்கூடிய அத்தியாயங்களுள் ஒன்றாக ஸூரத்துல் கஹ்ஃப் இடம் பெற்றிருக்கின்றது.

இந்த ஸூராவில் மூன்று சம்பவங்கள் பிரதானமாக் எடுத்து சொல்லப்படுகிறது.


  • முதலில் ஒரு குத்பா (1 முதல் 8 வரை வரும் ஆயத்துகள்)
  • அதன் பிறகு முதல் சம்பவம் - குகைவாசிகளை பற்றி வருகிறது (9 முதல் 22 வரை வரும் ஆயத்துகள்)
  • மீண்டும் குத்பா (23 முதல் 59 வரை வரும் ஆயத்துகள்)
  • அதன் பிறகு இரண்டாவது சம்பவம்  - ஹிலுறு அலைஹிஸ்ஸலாத்தை மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சந்தித்தது (60 முதல் 82 வரை வரும் ஆயத்துகள்)
  • தொடர்ந்து மூன்றாவது சம்பவம் - துல்கர்னைனை பற்றி வருகிறது. (83 முதல் 98 வரை வரும் ஆயத்துகள்)
  • முடிவுரையாக ஒரு குத்பா (99 முதல் 110 வரை வரும் ஆயத்துகள்)


குகைவாசிகள்  பல வருடங்களாக நித்திரையில் இருந்ததாகட்டும், ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் செயல்களாகட்டும், துல்கர்னைன் இரும்பு பாலங்கள் அமைத்ததாகட்டும் இந்த மூன்று சம்பவங்களுமே அசாதாரணமான சம்பவங்கள் தான்.

இதில் இரண்டாவது சம்பவமான ஹிலுறு அலைஹிஸ்ஸலாத்தை மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சந்தித்த போது 3 செயல்களை ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் செய்கிறார்கள்.

1.  கப்பலில் ஓட்டை போடுவது
2. சிறுவனை கொலை செய்தது
3. புதையல் உள்ள தலத்தில் சுவர் எழுப்பியது

இந்த மூன்று செயல்களையுமே ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் உடல் ரீதியாக (physically) செய்கிறார்கள்.

ஆனால் மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் விளக்கம் கொடுக்கும் போது 3 நிகழ்வையும் நிகழ்த்தியதை வெவ்வேறு வார்த்தையில் சொல்கிறார்கள்.

கீழே குரான் ஷரீஃபின் வாக்கியத்தை படித்து பாருங்கள். அதில் அடிக்கோடிட்ட வார்த்தைகளை கவனியுங்கள்:

18வது ஸூரா - ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)

79, 80, 81 82வது வாக்கியம்
 اَمَّا السَّفِيْنَةُ فَكَانَتْ لِمَسٰكِيْنَ يَعْمَلُوْنَ فِى الْبَحْرِ فَاَرَدْتُّ اَنْ اَعِيْبَهَا وَكَانَ وَرَآءَهُمْ مَّلِكٌ يَّاْخُذُ كُلَّ سَفِيْنَةٍ غَصْبًا‏ 

79. "அக்கப்பல் கடலில் (கூலி) வேலை செய்து கொண்டிருந்த ஏழைகள் சிலருடையது. அதனை குறைபடுத்தவே நான் கருதினேன். (ஏனென்றால், இது செல்லும் வழியில்) இவர்களுக்கு முன் ஓர் (அநியாயக்கார) அரசன் இருக்கின்றான். அவன் (காணும் நல்ல) கப்பல்கள் அனைத்தையும் அநியாயமாக அபகரித்துக் கொள்கின்றான். (அவனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே அதனை குறைப்படுத்தினேன்.)


   وَاَمَّا الْغُلٰمُ فَكَانَ اَبَوٰهُ مُؤْمِنَيْنِ فَخَشِيْنَاۤ اَنْ يُّرْهِقَهُمَا طُغْيَانًا وَّكُفْرًا‌ۚ‏ 

80. (கொலையுண்ட) அந்தச் சிறுவனோ அவனுடைய தாயும் தந்தையும் நல்ல நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அநியாயம் செய்யும்படியும், (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்து விடுவானோ என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம்.


فَاَرَدْنَاۤ اَنْ يُّبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِّنْهُ زَكٰوةً وَّاَقْرَبَ رُحْمًا‏ 

81. அவனுடைய தாய் தந்தைக்கு இறைவன் இவனை விட மேலானவனையும், பரிசுத்தமானவனையும் (தாய் தந்தைமீது) அன்பு கொள்ளக் கூடியவனையும் மாற்றிக் கொடுப்பதை நாம் விரும்பினோம்.


وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَيْنِ يَتِيْمَيْنِ فِى الْمَدِيْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًـا ۚ فَاَرَادَ رَبُّكَ اَنْ يَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا ۖ  رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌‌ ۚ وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِىْ‌ ؕ ذٰ لِكَ تَاْوِيْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَيْهِ صَبْرًا ؕ‏ 

82. அந்தச் சுவரோ அப்பட்டினத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியது. அதற்குக் கீழ் அவர்களுக்குச் சொந்தமான புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை மிக்க நல்ல மனிதராக இருந்தார். ஆகவே, உங்கள் இறைவன் (இறைவனான அவன்) அவ்விருவரும் வாலிபத்தை அடைந்த பின்னர் தங்களுடைய புதையலை எடுத்துக் கொள்ளும்படிச் செய்ய நாடினான். (எனவே, அதுவரையில் அச்சுவர் விழுந்து விடாதிருக்கும்படி அதனைச் செப்பனிட்டேன். இது) உங்கள் இறைவனின் அருள்தான். (இம்மூன்றில்) எதனையும் நான் என் இஷ்டப்படி செய்துவிடவில்லை. நீங்கள் பொறுத்துக்கொள்ள முடியாமல் போன (என்) செய்கைகளின் கருத்து இதுதான்" என்று கூறினார்.


ஆக, முதல் சம்பவமான கப்பலில் ஓட்டை போட்டதை பற்றி சொல்லும் “நான்” என்று சொல்கிறார்கள்.

இரண்டாவது சம்பவமான கொலை செய்ததை பற்றி சொல்லும் போது “நாம்” என்று சொல்கிறார்கள்.

மூன்றாவது சம்பவமான சுவர் எழுப்பியதை பற்றி சொல்லும் போது “அவன்” என்று சொல்கிறார்கள்.

எல்லாவற்றையும் செய்தது ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் என்ற ஒரே நபராக இருக்க, ஏன் இங்கே வெவ்வேறு மாதிரி வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்?

முதல் சம்பவமான கப்பலில் ஓட்டை போடுவது என்பது ஒரு தவறான செயல், நோக்கம் நல்லது தான் செய்த அந்த செயல் ”சேதம் ஏற்படுத்துவது” என்பது சரியான செயல் அல்ல, அதனால் அதை தான் தான் செய்தேன் என்று சொல்கிறார்கள்.

இரண்டாவது சம்பவத்தில் இரண்டு செய்திகள் இருக்கிறது, ஒன்று தீயவன் ஒருவனை கொலை செய்வது அதன் பிறகு பரிசுத்தமான, தாய் தந்தையை நேசிக்கக்கூடிய குழந்தையை தருவது (கவனிக்க, முதல் சம்பவத்தில் கப்பல் கொள்ளையரிடமிருந்து காப்பாற்றப்பட்டிருக்கலாம் ஆனால் சேதமடைந்த கப்பலுக்கு பதிலாக இன்னொரு கப்பல் கிடைக்கப் போவது பற்றி சொல்லவில்லை). ஆக, ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் கொலை செய்ததை தன் பங்காகவும், நல்ல பரிசுத்தவான் அந்த தாய்தந்தையருக்கு கிடைக்கப் பெறுவதை இறைவனின் செயலாகவும் பார்த்து “நாம்” என்று சொல்கிறார்கள்.

மூன்றாவது சம்பவத்தில் அனாதையின் சொத்தை பாதுகாப்பதற்காக சுவர் எழுப்பப்படுவது என்பது முழுக்க முழுக்க நல்ல செயல், இந்த செயலை தனக்கென்று பெருமை தேடிக் கொள்ளாமல் அதை “அவன்” தான் செய்தான் என்று இறைவனையே பொறுப்பு சாற்றி விடுகிறார்கள்.

No comments: