Sunday, November 8, 2015

யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கோபம்

யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி தேவையில்லாத அவதூறுகளை உலக அறிஞர் ஓதியிருந்ததை பார்த்திருப்போம். இவருக்கு தன்னைத் தவிர எல்லாரையும் ஏளனமாக பார்க்கும் அல்லது புரிந்துகொள்ளும் உளவியல் இருக்கிறது. அது அப்படி தான் இருக்க வேண்டும், அப்போது தான் அது வஹ்ஹாபிய சிந்தனையின் அடிப்படையில் கட்டமைத்திருப்பதாக அர்த்தம். 

அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?

  1. யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வை ”எதிர்த்து பேசினார்... எதிர்த்து நடந்தார்” (இரண்டுமேவா?.. அல்லது இரண்டாவது சொன்னது மட்டும் தானா?.. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா? இல்லையா? பேசிய அவரிடம் தான் கேட்க வேண்டும்)
  2. அல்லாஹ்வின் மீது யுனூஸ் நபி அலைஹிஸ்ஸலாம் கோபப்பட்டுவிட்டார்கள் 
  3. குரான் ஷரீஃபில் “தன்னூனி” என்று அதாவது “மீன் வயிற்றில் இருந்தாரே..” என்று கூறுகிறான் - பேரை கூட சொல்ல மாட்டேன் என்கிறான்”.
  4. யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ”அவர் மீது நமக்கு சக்தி இல்லை என்று நினைத்துக் கொண்டார்” என்றும் சொல்கிறார்.
  5. ”அல்லாஹ் இதுக்காக வேண்டியே கடல்ல கொண்டு தள்ளி, மீன் வயித்தில சிறை வச்சு..” இப்படியெல்லாம் ஏதோ கதை சொல்லி மாதிரி பேசுகிறார், அல்லஹ்வின் வாக்கியத்தை அந்த நயத்தோடு எடுத்துரைக்கவில்லை (இடையிடையே குரான் ஷரீஃபின் வசனத்தை ஓதிக் கொள்கிறார்)
  6. இதில் யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எப்படி அல்லாஹ்வின் மீது கோபப்பட்டார்கள் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்து விட்டு (?) அப்படியே சொல்லிக் (பேசி நடித்து)காட்டுகிறார் பாருங்கள்.. சுபஹானல்லாஹ்... “இவருக்கு கோவம்... என்ன கோவம்..?.. நம்மல்ட்ட அழிக்கிறேன்னு சொல்லிபுட்டு.. இவங்கள ஜேஜேன்னு அல்லாஹ் வச்சிருக்கானே..ன்னு அல்லாஹ்ட்ட கோவம்..” என்று சொல்லிவிட்டு மாடுலேசன் மாத்தி “இவர் என்ன செஞ்சிருக்கணும்.. என்று நபியவர்களுக்கே ஆலோசனை சொல்கிறார்” அப்புறம் தொடர்ந்து பேசும் போது,  ”.. இவர் (யாரு? நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தான்) என்னா பண்றாரு...அது எப்படி எங்கிட்டே அழிக்கிறேன்னு சொல்லிட்டு... கடைசில அவங்கள கொண்டு போய் ஜேஜேன்னு வச்சிகிறதுன்னு.. கோச்சிகிட்டு போறாரு..”

எப்படி இருக்கு? ஏதாவது ஒரு மரியாதை இருக்கா? ஒழுங்கு இருக்கா? 

கீழே வரும் குரான் ஷரீஃபின் ஆயத்தை படிப்போம்:
21வது அத்தியாயம் -ஸூரத்து அன்பியா
87 வது வாக்கியம்

   وَ ذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّـقْدِرَ عَلَيْهِ فَنَادٰى فِى الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌ۖ  اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ‌ۚ‏ 

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் (நக்திர) ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்

(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம்முடைய தூதராக ஆக்கினோம்.) அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம்  (நக்திர)  என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருளிலிருந்த அவர் (நம்மை நோக்கி) "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தனை செய்தார்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்

மேலும், மீன்காரருக்கும் நாம் அருள் பாலித்திருந்தோம். நாம் அவரைப் பிடிக்கமாட்டோம்  (நக்திர)  என்று நினைத்து, கோபப்பட்டுக் கொண்டு அவர் சென்றுவிட்டதை நீர் நினைவுகூரும்! இறுதியில் அவர் இருள்களுக்குள் இருந்துகொண்டு இவ்வாறு இறைஞ்சினார்: “உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை; தூய்மையானவன் நீ! திண்ணமாக, நான் குற்றம் செய்துவிட்டேன்.”

நன்றி: http://www.tamililquran.com/qurandisp.php?start=21 

உலக அறிஞர் 

மீனுடையவர்508 (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். "அவர் மீது நாம் சக்தி  (நக்திர)  பெற மாட்டோம்'' என்று நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன்.10 நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து303 அவர் அழைத்தார்.



உலக அறிஞர் பேசிய பேச்சை கேட்டுவிட்டு இந்த குரான் ஷரீஃபின் ஆயத்தை படித்தால் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய மிக எளிமையான கேள்வி:

1. யூனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மீது கோபப்பட்டார்களா?

2. யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் தம்மீது சக்தி பெற மாட்டான் என்று நினைத்தார்களா?

முதல் கேள்விக்கான புரிதல்:

யுனுஸ் நபி அல்லாஹ்வின் மீது தான் கோபப்பட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக குரான் ஷரீஃபின் மேலே படித்த ஆயத்தின் முதல் பகுதியை அவர் ஓதி காண்பித்தார்.


வத னூனி - மீனை உடையவர் (அரபியில் “நூன்” என்றால் திமிங்கிலம் அல்லது பெரிய மீன் என்று அர்த்தம். எகிப்திய எழுத்து வனப்புடைமையில் (calligraphy) நூன் என்ற எழுத்தை ஒரு பெரிய மீன் தண்ணீரிலிருந்து வெளியே வரும் போது உடலை வளைத்து அதன் மீது தண்ணீர் துளி ஒன்று தெறிப்பது போல் தான் எழுதுவார்களாம். அத்தோடு இந்த சூரா “நூன்” என்ற அரபி சொல்லோடு தான் ஆரம்பமாகிறது, எல்லா நபிமாரின் சரிதம் சொல்லி இறுதியாக மீனை உடையவர்களான யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை சரிதமோடு சூரா நிறைவு பெறுகிறது)

இத் - எப்பொழுது

தஹப - போனாரோ

முகாளிபன் - கோபமாக 

அதாவது, இப்படி படிக்கலாம், “மீனைஉடையவர் (யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம்) கோபமாக வெளியேறிய போது..”

இந்த வாக்கியத்தில் கோபமாக வெளியேறிய போது என்று தானே வருகிறது, அல்லாஹ்வின் மீது கோபமாக வெளியேறிய போது என்று இவராக நினைத்துக் கொண்டு சொல்வதேன்...?

அவர்கள் அல்லாஹ்வின் மீது கோபப்படுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.. ஆனால் நான் கோபப்படவில்லை மக்கள் மீது தான் கோபப்பட்டு சென்றார்கள் என்று சொல்கிறேன் என்று வையுங்கள் எந்த குற்றமும் இல்லை... ஏனெனில் இந்த குறிப்பிட்ட வாக்கியத்தில் யார் மீது கோபப்பட்டார்கள் என்றே குறிப்பிடவில்லை.

ஆனால் யுனுஸ் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் மீது கோபப்படாதிருக்க அவர்கள் மீது இட்டுக் கட்டி அல்லாஹ்வின் மீது கோபப்பட்டார்கள் என்று அபாண்டமாக சொன்னால்... குற்றம் தானே?

இரண்டாவது கேள்வி: - யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் தம்மீது சக்தி பெற மாட்டான் என்று எண்ணுவது?

முதல் புரிதல் அல்லாஹ் தேர்ந்தெடுத்த ஒரு நபியானவர்கள் அப்படி எண்ணுவதற்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை என்று உணருவது. 

சரி புரிகிறோம், ஆனால் இந்த ஆயத்தை எப்படி விளங்குவது? என்று நியாயமாக கேட்டால், புரிதல் பெறுவதற்கு வாய்ப்புகளுண்டு..

சக்தி பெற மாட்டான் என்ற வார்த்தைக்கு ”நக்திர” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

“நக்திர” என்ற வார்த்தை ”கத்ர்” என்ற வார்த்தையிலிருந்து வந்தது, அந்த வார்த்தை குரான் ஷரீஃபில் வேறு சில இடங்களில் வருகிறது, அது எவ்வாறு பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது.


13. ஸூரத்துர் ரஃது (இடி)
26வது வாக்கியம்

 اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ وَفَرِحُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ‏ 

அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் (யக்திர் - restrict, straiten) கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.  

89வது அத்தியாயம் - ஸூரத்துல் ஃபஜ்ரி(விடியற்காலை) 
16வது வாக்கியம்

   وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰٮهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَهَانَنِ‌ۚ‏ 

எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து (ஃபகதர - restrict, straiten), அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.

இங்கே யக்திர், ஃபகதர என்ற வார்த்தைகள் உணவு வசதிகளை குறைப்பதை தான் குறிக்கிறது. இதை ஒத்த வார்த்தையான “நக்திர” என்ற வார்த்தைக்கும் பொருத்தி பார்த்தோமானால், நாம் யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றி விளங்கிக் கொள்ள முடியும்.

ஆக, ஸூரத்துல் அன்பியாவில் உள்ள 87வது வாக்கியத்தை இப்படி படித்து புரிந்து கொள்ளலாம்,

 (யூனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள்)  மீனை உடையவர்கள் (மக்களிடம்) கோபித்துக் கொண்டு சென்ற (அந்த ஊரை விட்டு வெளியேறிய) சமயத்தில், நாம் அவருக்கு (வழங்குபவைகளிலிருந்து - provisions) குறைவு ஏற்படுத்த மட்டோம்  (நக்திர)  என்று எண்ணிக்கொண்டார். 

யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மீது கோபப்பட்டார்கள் என்றோ அல்லாஹ் தம்மீது சக்தி பெற மாட்டான் என்றோ நினைத்தார்கள் என்று ஒருவன் சொன்னான் என்றால் அவன் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நபியையே அல்லாஹ்மறுப்பாளனாக பார்க்கிறான் என்றே பொருள். அப்படி நினைக்க ஒரு அல்லாஹ்மறுப்பாளனாக இருந்தால் தான் முடியும்.

நாம எப்படி பார்க்கிறோம் என்றால், யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களின் சமூகத்திடத்திலே அல்லாஹ் சொன்ன செய்தியை எடுத்து சொல்கிறார்கள். அவர்கள் கேட்கவில்லை. அல்லாஹ்விடம் முறையிடுகிறார்கள், தண்டனை அளிப்பதாக சொல்கிறான். அவர்களும் அல்லாஹ்வின் வார்த்தைகளை சமூகத்திடத்திலே சொல்கிறார்கள். பிறகு அல்லாஹ் சொன்னது போல் அவர்களின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டவர்களுடன் வெளியேறுகிறார்கள்.

யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னது போலவே தண்டனை வருவதற்கான அறிகுறிகள் தெரியவே அந்த சமூகம் உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறார்கள், அல்லாஹ் தண்டனையை இறக்கவில்லை.

யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திரும்ப வந்து பார்க்கும் போது சமூகம் அழிக்கப்படாமல் இருக்கிறது. இதை பார்த்ததும் உலக அறிஞர் போல ஒருவர் இருந்தால் அல்லாஹ்வின் மீது கோபப்பட்டிருக்கலாம், நமக்கு தெரியாது, ஆனால் அவர்கள், மக்களுக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும், அவர்கள் அப்படியே இருக்கிறார்களே என்று அவர்கள் மீது கோபப்பட்டு அவர்களிடம் இருக்க மனமில்லாமல் அந்த சமூகம் இருக்கும் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள்.

அப்பொழுது அவர்கள், அல்லாஹ் நமக்கு எந்த வசதிகளையும் குறைவே வைக்க மாட்டான் என்று நினைத்து விடுகிறார்கள். சாதாரணமாக பார்க்கும் போது, இது அல்லாஹ்வின் மீது வைக்கும் ஆதரவு தானே என்று தோன்றும், ஆனால் ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு படித்தரம்  இருக்கிறது, நபியவர்களுடைய படித்தரமும் நம்முடைய படித்தரமும் ஒன்றல்ல. சாதாரணமான ஒருவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பது அப்படி ஒன்றும் மீன் வயிற்றில் இருக்கும் அளவுக்கு குற்றம் இல்லாமல் இருக்கலாம், தெரியவில்லை.. ஆனால் நபியவர்கள் take it for granted மாதிரி எடுத்துக் கொள்ள கூடாது என்று அல்லாஹ் நினைத்திருக்கலாம்.

சரி, அப்படியே அவர்கள் சக்தி பெற மாட்டான் என்று நினைக்க வில்லை என்றால் இந்த வாக்கியத்தில் தொடர்ந்து வரும் யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துவாவில் ஏன் அவர்கள், “... நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் (மினல்லாழிமீன்) ஒருவனாகி விட்டேன்.” என்று பிரார்த்திக்க வேண்டும்.

மினல்லாழிமீன் என்றால் ‘அவசரப்படுதல் to make haste”, “தவறான நிலைக்கு வருதல் to come to harm” என்ற பொருளும் உண்டு. அது தான் இங்கே பொருந்தி வருகிறது.

“... நிச்சயமாக நான் அவசரப்படுபவர்களில் (மினல்லாழிமீன்) ஒருவனாகி விட்டேன்.”

என்று துக்கத்தில் தவிக்கிறார்கள். உடனே அல்லாஹ், அடுத்த ஆயத்தில் சொல்லி காட்டுகிறான்...

21வது அத்தியாயம் -ஸூரத்து அன்பியா
88வது வாக்கியம்

 فَاسْتَجَبْنَا لَهٗۙ وَنَجَّيْنٰهُ مِنَ الْـغَمِّ‌ؕ وَكَذٰلِكَ نُـنْجِى الْمُؤْمِنِيْنَ‏ 

நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) கஷ்டத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். இவ்வாறே, (கஷ்டத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) நம்பிக்கையாளர்களையும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்.

கடைசியில் அழகாக “.. நமிபிக்கையாளர்களை..” என்று தொடர்பு படுத்தி அல்லாஹ் சொல்லியிருப்பது, யுனுஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நம்பிக்கையில் எந்த வித பழுதும் இல்லை, அதை யாரும் குறை சொல்ல எண்ண வேண்டாம் என்பதையே உணர்த்துகிறது போலும்.. அல்லாஹ் அஃலம்.

No comments: