Thursday, January 7, 2016

நோன்பு

பெண்ணாசையை போலவே மனிதனுக்கு வரும் ஆசைகளில் உணவாசையும் மிக வலிமையானது இன்னும் சொல்ல போனால்  பெண்ணாசையை விட உணவாசை வலிமையானது என்றே நான் சொல்வேன். 

ஏனெனில் உணவுக்கும் மனிதனுக்குமான பந்தம் தாயின் கருப்பையிலிருந்தே தொடர்கிறது அல்லவா?. வயிற்றுக்குள் இருக்கும் சிசு தாயின் உணவை தானும் உண்கிறது. கருத்து தெரிந்த பின்னர் வேண்டுமென்றால் பெண்ணாசை அல்லது பொன்னாசை வரலாம். கருப்பையில் இருக்கும் போதே உணவு பழக்கம் தொடங்கி விடுகிறது.

எல்லா ஊரிலும் மனிதர்கள் ஒரு வயிறுக்கு சாப்பிட்டால் எங்க ஊரில் (நாகூரில்) மட்டும் ஏழு வயிறுகளுக்கு சாப்பிடுவார்கள். எனது சின்னாப்பா அவர்கள் அவர்களது நண்பர் ஒருவரை காலையில் தேநீர் அருந்த வீட்டிற்கு அழைத்தார்கள்,  இப்படியாக, "வாருங்கணி, தேத்தனி குடிக்கலாம்", அதற்கு அந்த நண்பர், "இருங்கணி கடைல போய் குடிச்சிட்டு வர்ரேன்.." என்று கிளம்பி போய் கடையில் தேத்தணி குடித்து விட்டு விறுவிறுவென்று வீட்டிற்கு போனார், காலைக் கடனை முடித்தார், திரும்ப வீட்டிற்கு வந்து தேத்தணி குடித்தார், ஏன் இந்த மாதிரி என்றால் வீட்டில் குடிக்கும் நல்லா போட்ட தேத்தணி வயித்துல கொஞ்சம் நேரம் இருக்கணும் அதுக்காக தான் என்கிறார்.

இத்தகைய உணவாசையை கட்டுப்படுத்துவது என்பது கொஞ்சம் அல்ல அதிகம் சிரமமான காரியம். கடவுள் பாதி மிருகம் பாதி என்று தொடங்கும்  பாட்டில் மிருகம் கொன்று கடவுள் வளர்க்க பார்ப்பதாகவும் கடவுள் கொன்று
மிருகம் மட்டும் வளர்கிறதே என்றும் தவிக்கிறது.

மிருகத்தை கொன்று கடவுள் வளர்க்க என்ன பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அந்த  பாடல் சொல்லவில்லை.  

காட்டுக்கே ராஜாவான சிங்கம் கூட சர்க்கஸில்  ரிங் மாஸ்டரின் குச்சிக்கு கட்டுபட்டு நிற்கிறதே. அந்த ரிங் மாஸ்டர் அவரது தலையை சிங்கத்தின் வாயில் விடும் போதும் அந்த சிங்கம் (மிருகம்) ஒன்றும் செய்யாமல் இருக்கிறதே. அந்த ரிங் மாஸ்டர் எப்படி அந்த சிங்கத்தை சொல்பேச்சு கேக்கும் கிளிபிள்ளையாக மாற்றியிருப்பார். 

அங்க தான் இருக்கு விஷயம். பட்டினி போட்டு பழகுவது. கிட்டதட்ட நமக்குள் இருக்கும் மிருகத்தை கட்டுப்படுத்துவது கூட அந்த முறையில் சாத்தியமாகும். 

மோசஸ் (அன்னாரின் மீது சாந்தி உண்டாவதாக) மற்றும் ஜீசஸ் (அன்னாரின் மீது சாந்தி உண்டாவதாக) அவர்களும் 40 நாட்கள் நோன்பு இருந்ததாக எக்ஸோடஸ் 24:18 மற்றும் மேத்திவ் 4:2 லும் முறையே தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் பயபக்தியுடையவர்களாகலாம்" என்று குரான் ஷரீஃப் கூறுகிறது (2:183)

மேலே கண்ட வசனத்தில் "தக்வா" என்ற அரபி வார்த்தைக்கு "பயபக்தி" என்ற தமிழ் வார்த்தையாக அர்த்தம் கொள்ளப்பட்டிருக்கிறது. வேறு சில மொழிபெயர்ப்பில் இதே "தக்வா" எனும் வார்த்தைக்கு "சுயக்கட்டுபாடு" என்பது போலவும் அர்த்தம் காணப்படுகிறது.

கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை வந்து வீட்டில் எல்லாம் இருக்கும் போதே கோபித்துக் கொண்டு பிடிவாதமாக சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படி சாப்பிடாமல் சுயகட்டுபாட்டோடு நோன்பிருந்தாலும் பயபக்தி வந்து விடாது.

இப்படியும் சில நண்பர்கள் கேட்கிறார்கள், "நோன்புங்கறீங்க.. நோன்பு தெறக்கும் போது சேத்து வச்சு சாப்பிடுறீங்களே?" என்று

அதாவது எப்படா நோன்பு திறக்குற நேரம் வரும் என்று பார்த்துக்கிட்டிருந்து நோன்பு திறந்தவுடனே அடக்கி வச்சதை தொறந்து விட்ட மாதிரி 10 சிகரெட்டை ஒரே நேரத்தில் குடித்து தள்ளுவது.

நபிகள் நாயகம் இவ்வுலகை விட்டு பிரிந்த பிறகு இஸ்லாத்தில் தோன்றிய முதல் புதுமை (பித்அத்) வயிறு முட்ட சாப்பிடுவது தான் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாக இமாம் கஸ்ஸாலி (ரலி) அவர்கள் இஹ்யாவில் எழுதியுள்ளார்கள்.

பெருமானார் பெரும்பாலும் தண்ணீரும் பேரிச்சம்பழம் கொண்டு தான் நோன்பு வைப்பார்கள் நோன்பு திறப்பார்கள்.

இது ஒருபுறமிருக்க  வேறு சிலரோ , "ஏன் நீங்கள் இப்படி உங்களையே நீங்கள் எல்லாரும் வருத்திக் கொள்கிறீர்கள்.." என்று மிகவும் அக்கறையாக கேட்கிறார்கள்

எனக்கு மௌலானா ரூமி எழுதி நாகூர் ரூமி அவர்கள் மொழி பெயர்த்த கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது

பால்குடி மறக்கடிப்பது
பட்டினி போடுவதற்கல்ல!
காம்பு மறுக்கப்படுவது
கருணையின் பொருட்டே!

இப்படி உணவு மறுக்கப்படுவது கூட
இறைவனின் கருணையின் பொருட்டு தான்.

நோன்பில் இன்னொரு விசேசம் நோன்பு திறக்கும் நேரம் தான். நம்ம இஷ்டத்திற்கு நாம் நினைத்த நேரத்தில் எல்லாம் நோன்பு திறக்க முடியாது. எல்லோரும் காத்திருப்பார்கள். குறித்த நேரம் வந்தவுடன் நோன்பு திறந்து விடுவார்கள். இதில் என்ன பெரிய விசேசம் இருக்கிறது என்று கேட்கலாம்.


சிலர் தன்னை எப்போதும் மற்றவர்களை விட பெரிய பக்திமானாக காட்ட வேண்டும் என்ற ஆசை உண்டு. அவ்வாறு நினைத்து கொண்டு மற்றவர்களை விட நான் தான் அதிக நேரம் நோன்பிருந்தேன், ஆகவே நான் தான் இறைவனுக்கு மிகவும் உவப்பானவன் என்று கதை விட முடியாது.


நோன்பு என்பது ஒரு பயிற்சி
நோன்பு என்பது சுத்தப்படுத்துதல்

பேசப்பட்ட வார்த்தைகளை விட பேசாத மௌனங்களுக்கு தான் வலிமை அதிகம். வெளிப்படையான வணக்கத்தை விட மறைவான வணக்கத்திற்கு தான் வலிமை அதிகம்

நோன்பு ஒரு மறைவான வணக்கம். 
நீங்கள் யாரிடமும் சொல்லாத வரை யாருக்கும் நீங்கள் நோன்பாளி என்பது இறைவனையும் உங்களையும் தவிர.வேறு யாருக்கும் தெரியாது.

சில ஒழுக்கங்களை கடைபிடிப்பதை தான் "தக்வா" என்று இறைவன் கூறுகிறான் என்ற எண்ணம் எனக்கு உண்டு. அது இறைவனின் எண்ணம் தான் என்று எல்லாம் என்னால் அடித்து கூறி மேடைக்கு அழைத்து வாதாட முடியாது. 

அதுவும் தவிர வாதாடுவதற்கு என்று பிறை பார்ப்பது, தராவிஹ் தொழுகையா இரவு தொழுகையா? அப்படியே எதுவோ ஒன்று என்று வைத்துக் கொண்டாலும் அது 8ஆ 20ஆ? என்று வாதாட நிறைய செய்திகளும் ஆட்களும் மன்னிக்கவும் ஆலிம்களும் இருக்கும் போது நான் வேறு எதற்கு வாதாட வேண்டும்.

நாகேஷ் கௌரவம் படத்தில், "நான் 3 மாசம் தான் கஷ்டப்படுவேனாம்.. " என்பார்

அதற்கு இன்னொருவர் ஆர்வமாக, "அதற்கப்புறம்.." என்று கேட்பார்

'அதுவே பழகிடுமாம்.." என்பார்

இது அர்த்தமுள்ள நகைச்சுவை.

உண்மையில், நல்ல விஷயமாக இருந்தாலும் சரி கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி பழக்கப்படுத்தி விட்டால் கஷ்டமே இருக்காது அல்லது தெரியாது. இது மனித இயல்பு

பசியை பழகுவோம்
ஒழுக்கம் பேணுவோம்

No comments: