Sunday, August 4, 2019

மூஸா நபி அலைஹிஸ்ஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் ஹஜ்ஜுடைய காலம்

28. ஸூரத்துல் கஸஸ்(வரலாறுகள்) - ஆயத் 22லிருந்து 27வரை (நேரடி மொழி பெயர்ப்பு அல்ல)

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்திலிருந்து மத்யன் எனும் நகருக்குள் நுழைகிறார்கள். அங்கே ஆண்கள் பலர் தமது ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட வேண்டி தண்ணீரை கிணற்றுக்குள் இருந்து இறைத்து கொண்டிருக்கிறார்கள். சற்று தள்ளி, இரு பெண்கள் தமது ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட வேண்டி ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறார்கள்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த இரண்டு பெண்களிடம் விபரம் கேக்க அவர்களோ, தாங்கள் அந்த ஆடு மேய்ப்பவர்களான ஆண்கள் அவர்களது ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டி முடியும் வரை தாங்கள் எடுக்க முடியாது என்றும் அவர்களது தந்தை வயோதிகர் என்றும் கூறுகின்றனர். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டுகிறார்கள்.

உதவியவுடன் நிழலில் ஒதுங்கி,”என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் ஒரு ஃபகீராக இருக்கின்றேன்” என்று துவா செய்கிறார்கள்.

பிறகு அந்த இரு பெண்களும் தமது வயோதிகமடைந்த தந்தையிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் பற்றி கூறுகிறார்கள். அந்த தந்தையோ தமது இரு மகளில் ஒரு மகளை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து வருமாறு கோருகிறார்கள்.

அந்த பெண் நாணத்துடன் மூஸா நபியவர்களிடம் வந்து, “எங்களுக்காக நீங்கள் தன்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்கள்” என்று கூறுகிறார்கள்.

மூஸா நபி அவர்களுடன் அவர்களுடைய இல்லம் வந்தடைந்து அவர்களின் தந்தையிடம் தாம் எகிப்திலிருந்து மத்யன் வந்ததற்கான காரணத்தை ஒன்று விடாமல் தாம் எகிப்தி ஒருவரை எவ்வித நோக்கமும் இல்லாமல் கொலை செய்தது உள்பட எல்லாவற்றையும் சொல்கிறார்கள்.

அதற்கு அந்த இரு பெண்களின் தந்தை, ”பயப்படாதீங்க! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்து விட்டீர்” என்று பதில் கூறினார்கள்.

அப்போது அவர்களின் இரு மகள்களில் ஒருவர், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது விருப்பமுள்ளவர்களாக, தமது தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் வேலைக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.” என்று கூறுகிறார்கள்.

தந்தை மகளின் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீதான விருப்பத்தை உணர்ந்தவர்களாக, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம், “நீங்கள் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உங்களது விருப்பம், நான் உங்களுக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்கள்’ என்று கூறுகிறார்கள்.

28. ஸூரத்துல் கஸலில் வரும் 27 வது ஆயத்

قَالَ اِنِّىْۤ اُرِيْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَى ابْنَتَىَّ هٰتَيْنِ عَلٰٓى اَنْ تَاْجُرَنِىْ ثَمٰنِىَ حِجَجٍ‌ۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ‌ۚ وَمَاۤ اُرِيْدُ اَنْ اَشُقَّ عَلَيْكَ‌ؕ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِيْنَ‏

மேலே  உள்ள ஆயத்தில் 8 ஆண்டுகளை பற்று குறிப்பிடும் போது “ஆண்டு” எனும் பதத்திற்கு  ”ஸனதுன்” அல்லது ”ஆமுன்” அல்லது “ஹவ்லுன்” என்ற பிற வார்த்தைகளை பயன்படுத்தாமல்  “ஹிஜஜின்” என்ற வார்த்தையை அந்த தந்தை பயன்படுத்தியதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

இந்த வார்த்தை ”ஹஜ்ஜுன்” என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. அதாவது இது வருடத்திற்கு ஒரு முறை வரும் ஹஜ்ஜு யாத்திரையை குறிக்கும். அதாவது எட்டு ஹஜ் சீஸனுக்கு நீங்கள் எனக்காக வேலை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.

அதாவது கஃபாவை பற்றியும் ஹஜ் யாத்திரையை பற்றியும் அந்த தந்தைக்கும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்று நம்பலாம். இதிலிருந்து யஹீதிகளுக்கும் தெரிந்திருக்கிறது என்று நம்ப முடிகிறது.

ஆகையினால் தான் இறைவன் தமது திருமறையில் 2. ஸுரத்துல் பகரா 146வது வாக்கியத்தில் எவர்களுக்கு நாம் வேதங்களை கொடுத்தோமே அவர்கள் (யஹீதிகள்) தமது சொந்த மக்களை அறிவதைப் போல் (குரான் ஷரீஃபை - பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை) அறிவார்கள் என்று குறிப்பிடுகிறான்.

Monday, May 6, 2019

மில்குல் யமீன் (மலகத் அய்மானுஹும் எனும் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்)

குரான் ஷரீஃப் 23வது அத்தியாயம் ஸூரத்துல் முஃமுனூன் (விசுவாசிகள்): 6 வது வாக்கியம்

 اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏ 

ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

குரான் ஷரீஃப் 70வது அத்தியாயம் ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்): 30 வது வாக்கியம்

 اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏ 

தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.

இது தவிர கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களிலும் ”மலகத் அய்மானுஹும்” பற்றி வருகிறது

குரான் ஷரீஃப் 4வது அத்தியாயம் ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) :24வது வாக்கியம் +  குரான் ஷரீஃப் 33வது அத்தியாயம் ஸூரத்துல் அஹ்ஜாப் (சதிகார அணியினர்) :52வது வாக்கியம்

படித்தவுடன் என்னால் என்ன புரிந்து கொள்ள முடிகிறது என்றால் வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்களிடம் உறவு கொள்ளலாம் என்பது தான் அது.

அப்படி என்றால் இதையொட்டி கீழே வரும் கேள்விகள் எனக்கு தோன்றுகிறது என்றால்..

1. மலகத் அய்மானுஹும் என்றால் யார்?
2. மலகத் அய்மானுஹும் என்பவர்களை நிகாஹ் செய்யாமலே உடல் உறவு கொள்ளலாமா?

இதற்கு பதில் தெரிவதற்கு முன்னர் அரபு நாட்டில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆண்டுகளுக்கு முன்னாளில் இருந்தே இருந்த “அடிமைகள்” இனம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

----------------------

இஸ்லாம் ஒருவரை இரண்டு வழிகளில் மட்டுமே அடிமைகளாக ஆக்கி கொள்வதை அனுமதி தந்தது.

1. போரில் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகள்
2. ஏற்கனவே அடிமைகளாக இருப்பவர்களை அவர்களின் முதலாளியிடமிருந்து விலை கொடுத்து வாங்குதல்.

முக்கியமாக ஏதாவது ஒரு காலனைஸ்டாக இருக்கும் நாட்டிற்கு சென்று அடிமைகளை கடத்தி வந்து விற்பது அல்லது அவர்களை ஏமாற்றி அழைத்து வந்து வாங்குவது விற்பது  போன்றவைகள் தடை செய்யப்பட்டன ஹராம் ஆக்கப்பட்டன. அதாவது ஸ்மக்லிங் ஆஃப் ஸ்லேவ்ஸ் தடை செய்யப்பட்டது.

இஸ்லாம் அடிமைகளை சமூகத்தில் இருந்தே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திற்கு முன்பே சமூக அமைப்பில் வேலை செய்யும் சமூகமாக அடிமைகளாக இருந்த அவர்களை (வேலை செய்யும் சமூகத்தில் இத்தகைய அடிமைகள் தான் பெரும்பான்மையாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம் மட்டுமே) உடனடியாக தடை செய்து அன்றாட வேலையில் தேக்கத்தையோ நிறுத்தத்தையோ ஏற்படுத்தவும் இல்லை.

உதாரணமாக, ஒரு நாட்டில் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பான்மையாக வேலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு நடக்கும் அநீதிகளை வைத்து அவர்களை திடீரென்று தடை செய்து விட முடியாது அனைத்து வேலைகளும் அல்லது பெரும்பாலான வேலைகளும் செயலற்று போய்விடும். மாறாக அவர்களுக்கான நியாயமான வேலை சூழல்களை உருவாக்கி தர முயற்சிக்கலாம். அதை தான் இஸ்லாம் செய்தது. அடிமைகளாக இருந்த அவர்களுக்கான நீதியை பற்றித் தான் இஸ்லாம் முதலில் பேசியது.

(அரபு நாட்டில் அன்று சமூக வேறுபாடுகள் அடுக்குகளாக இருந்தன, மத குருக்கள் முதல் தட்டிலும், பெருவியாபாரிகள் இரண்டாவது தட்டிலும், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மூன்றாவது தட்டிலும் அடிமைகள் நான்காவது தட்டிலும் இருந்தார்கள்.
இஸ்லாம் மத குருக்களை முற்றிலுமாக மாற்றி இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வசம் தந்தது.(இது தவிர்த்து, புது குழுவான முஜாஹிதீன் எனும் போராளிகளை உருவாக்கியது.)

ஆக, புதிதாக போர்க் கைதிகளை அல்லாமல் அடிமைகள் சமூகத்தில் வர முடியாத நிலையைக் இஸ்லாம் தான் கொண்டு வந்தது.

அத்தோடு விட்டுவிடவில்லை, இருக்கும் அடிமை முறைகளை சரி செய்ய ஒரு சட்டத்தை இஸ்லாம் அறிமுகப்படுத்தியது. அதன் படி, அடிமைகளுக்கு அது ஒரு உரிமையை வழங்கியது.

அது என்ன உரிமை என்றால், ஒரு அடிமையானவர் தனது எஜமானிடத்தில் போய் “எனக்கு விடுதலை வேண்டும், அதற்கு நான் என்ன விலை கொடுக்க வேண்டும்?” என்று கேட்டால் அவரது எஜமானர் அதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது. இப்போது அந்த எஜமானருக்கு உள்ள ஒரே வழி அவர் அந்த அடிமையை விடுதலை செய்வதற்கான விலையை குறிப்பிட்டே ஆக வேண்டும். இதை அந்த எஜமானருக்கு வாஜிபாக்கியது அதாவது கடமையாக்கியது.

அந்த விலையையும் அந்த அடிமையால் பூர்த்தி செய்ய முடியாததாக இருக்கக் கூடாது என்று கைட்லைன்ஸ் வழங்கியது. அப்படி நிறைவேற்ற முடியாத விலையை சொன்னால் அந்த அடிமை தனது எஜமானரை ஷரியா கோர்ட்டில் நிறுத்த முடியும். அதன் பிறகு அந்த வழக்கை ஷரியா கோர்ட் கவனித்துக் கொள்ளும்.

ஆகவே, அவர் விடுதலை பெறுவதற்கு எத்தனை காலம் ஆகும் என்பதை கணக்கிட்டு அந்த கால அவகாசம் வரை அந்த அடிமை அவருடைய அந்த எஜமானரிடத்தில் வேலை பார்த்து விட்டால் அவர் விடுதலை பெற்றவராகி விடுவார். அதன் பிறகு அவர் அடிமை இல்லை. அவர் சமூகத்தில் ஒருவராக வலம் வரலாம்.

இப்படி தான் பிற்காலத்தில் மிகச்சிறந்த நபித்தோழராக விளங்கிய சல்மான் பின் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஏராளமான அருமை சஹாபாக்களும் விடுதலை பெற்று உற்ற நபித்தோழர்களாக பெருமை பெற்றார்கள்.

இஸ்லாம் சட்டம் இயற்றாமல் வாழ்வியல் நடைமுறை வழி அடிமைகளை ஒழிக்கவும் செய்த்து. உதாரணமாக, ஒரு முஸ்லிம் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை என்றால பகரமாக சில அனுமதிக்கப்பட்ட செயல்களை செய்ய வேண்டும் அதில் ஒன்று தனக்கு அடிமை இருந்தால் அந்த அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

அடிமைகளுக்கு தான் உண்ணும் உணவையே வழங்க வேண்டும், நல்ல ஆடைகள் வழங்க வேண்டும், கனிவான சொற்களை சொல்ல வேண்டும் என்று கற்றுத் தந்தது.

இப்படியாக இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழித்து அதே போல் வேலை சமூகம் ஒன்று இருக்குமானால் அவர்களுக்கான நீதியை வழங்கியது.

இப்போது போருக்கு வரும் பெண்களை பிடித்து கைது செய்த போர்வீரர் மூன்று வகைகளில் அந்த கைதிகளை அடிமைகளாக வைத்துக் கொள்ளலாம்.

1. அமா - போர்க்கைதியான பெண் அடிமை - அமா என்றால் சாதாரண வீட்டு வேலை செய்யக் கூடியவர் - இந்த வகையில் அடிமையாக பிடிக்கப்பட்டவர்களை அவரது எஜமானர் தனது இல்லத்தில் வீட்டு வேலைகள் செய்ய பணியில் அமர்த்திக் கொள்வார்.

2. மில்குல் யமீன் (பன்மையில் மலகத் அய்மானுஹும்) - வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்கள் - மில்குல் யமீன் என்றால் மனைவியை போன்று வைத்துக் கொள்ளலாம் ஆனால் அதற்கு அந்த அடிமை பெண்ணின் அனுமதி வேண்டும் - இந்த வகையில் அடிமையாக பிடிக்கப்பட்டவர்களுக்கு அவரது எஜமானர் தனி வீடு கொடுக்க வேண்டும். மனைவியை போன்று எல்லா உரிமையும் உண்டு ஒன்றைத்தவிர, மனைவிக்கு கணவரின் சொத்தில் பங்குண்டு ஆனால் மில்குல் யமீனுக்கு தனது எஜமானரிடத்திலிருந்து சொத்தில் பங்கு கிடையாது.

3. உம்முல் வலத் - குழந்தையின் தாய் - மில்குல் யமீனாக இருப்பவர்கள் ஒரு குழந்தையை ஈன்றெடுத்து விட்டால் அல்லது எஜமானரின் பிற மனைவியின் மூலம் பிறந்த குழந்தைக்கு பால் கொடுத்தால் அவர் விடுதலை பெற்றவராகிறார், அதோடு தனது எஜமானரிடமிருந்து வரும் சொத்திலும் பங்கு கொள்வதோடு அவர் அவரது எஜமானரின் குடும்பத்தில் ஒருவராகவும் ஆகி விடுவார், அதாவது எஜமானர் தவறி விட்டால் அவரை அந்த குடும்பத்தினர் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஆக, இஸ்லாம் முதலாவதாக புதிதாக அடிமைகள் உருவாவதை தடுத்தது, இரண்டாவதாக இருக்கும் அடிமைகளை பல வழிகளில் விடுதலை பெற உதவியது. மூன்றாவதாக, அடிமைகளாக இருப்பவர்களின் உரிமைகளை பெற்று தந்தது.

Wednesday, February 6, 2019

ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம்

1

இந்த மாதம் ஜமாத்துல் ஆஹிர் மாதம். இந்த மாதத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது யாரென்று சொல்லவே தேவையில்லை... நம் கண்மனி பாதுஷா நாயகம்.

 எஜமான் என்று மிகுந்த முஹப்பத்தோடு நாம் அழைக்கும் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் தான்.

இவர்கள் ஹிஜ்ரி 910, ஜமாத்துல் ஆஹிர் பிறை 10ல் பிறந்தார்கள்.

2

இவர்களின் உஸ்தாது முஹம்மது கௌது ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குவாலியர் என்ற ஊரில் வசித்தவர்கள்.

கௌது குவாலியர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் ஏராளமானவர்கள் தஸவ்வுஃப் ஞானம் பயின்று வந்தாலும் குறிப்பாக இரண்டு பேர்கள் பிரசித்தி பெற்றவர்கள். ஒன்று நம் எஜமான் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகமவர்கள். மற்றொன்று அக்பர் அவையில் மாபெரும் சிறந்த இசைகலைஞராக விளங்கிய தான்சேன் என்பவர்.

அவர் வெள்ளைக்காரர் என்றும் இஸ்லாத்திற்கு வந்தவர் என்றும் நான் எனது உஸ்தாது வாய் வழி கேட்ட செய்தி உள்ளது.

3

எஜமான் என்றதும் நம் உடனே அவர்களிடம் எதையாவது கேட்டு பெறுவதிலேயே நமக்கும் எஜமானுக்குமான தொடர்பு நின்று விடுகிறது. அல்லது அப்படி கேட்பது ஷிர்க்காகி விடுமோ என்று உலக அறிஞரின் (பிஜே) கூற்றின் இன்ஃபுலியன்சில் மனதில் புகுந்த கேள்விக்கு பதில் தேடுவதிலேயே காலம் கடந்து கொண்டிருக்கிறது.

4

எஜமான் எப்போதும் கடற்கரைக்கு செல்வது வழக்கம். அப்போது செல்லும் போது வழியில் ஒரு ஏழை முஸாபிர் வாசலிலேயே உட்கார்ந்து இருப்பார்.

அவருக்கு ஒரு முறை அவர்களின் மகனார் யூசுஃப் தாதாவிடம் “நீங்கள் எடுத்து போய் அவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வாருங்கள்” என்று சொல்கிறார்கள்.

சின்ன எஜமான் அவர்கள் “அவருக்கா..?” என்பது போல் கேட்க, வந்ததே கோபம் பெரிய எஜமானுக்கு, “ஏன் அவர்க்கு என்ன... அப்படி இருப்பது தவறில்லை.. நீங்கள் நினைத்ததில் தவறு உள்ளது.. போங்கள்.. போய் கொடுத்து விட்டு வாருங்கள்..” என்று கடிந்து பக்குவப்படுத்தினார்கள்.

இன்னைக்கும் தர்ஹாவை கடக்கும் போது முஸாபிர்கள் இருப்பார்கள். அவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வது எஜமானுக்கு பிடிக்காது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

5

சாப்பிடும் போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போலவே இவர்களும் பேச மாட்டார்கள்.

6

நம் நாகூரில் மட்டும் 28 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்கள். மீனவர்களோடு மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். அவர்கள் ஏற்றி வைத்த விளக்கு தான் இன்னமும் எஜமானின் தலைமாட்டில் எரிந்து கொண்டிருக்கிறது.

7

அவர்கள் ஹிஜ்ரி 978 ஜ்மாத்துல் ஆஹிர் பிறை 10ல் அதிகாலை 4:20 மணிக்கு வஃபாத்தானார்கள்.

ஆசரஹான் என்ற இடத்தில் எஜமானின் உடலை வைத்து மழை நீரில் தான் கழுவினார்கள்.அந்த தண்ணீர் சேர்ந்த இடம் தான் தர்கா குளம்.

பீர் மண்டபம் என்ற இடத்தில் வைத்து தான் ஜனாசா தொழுகை நடத்தப்பட்டது. பின்னாளில் போர்ச்சுகீசியர்களும், டச்சுக்காரர்களும் தான் பீர் மண்டபத்தை கட்டிக் கொடுத்தார்கள். போர்ச்சுகீசியர்களும் டச்சுக்காரர்களும் இந்தியாவிற்கு வரும் போது முஸ்லிம்களுக்கு சொல்லொணா துன்பமிழைத்தார்கள், அந்த அட்டூழியங்களை எதிர்த்து போராட குஞ்சாலி மரைக்காயரை தயார் செய்து போருக்கு அனுப்பியவர்கள் எஜமான் அவர்கள். அத்தகையவர்களே எஜமானை புரிந்து கொண்டு பீர் மண்டபத்தை கட்டிக் கொடுத்தார்கள்.

8

எஜமான் அவர்கள் வஃபாத்திற்கு பிறகு அவர்களின் சீடர்கள் 404 பேரும் பான்வா, மலங்கு,மதாரி, ஜலாலி என்றும் பல குழுக்களாக பல ஊர்களுக்கு அடுத்த ஆண்டு வஃபாத்தான நாளில் சந்திப்பது என்ற நிய்யத்தோடு பிரிந்து சென்றனர்.

அடுத்த வருடம் அவர்களின் வருகையை எண்ணி சின்ன எஜமான் அவர்கள் அரிசி, பருப்பு, கறி, நெய், விறகு, எண்ணெய், காய்கறிகள், பாய்கள், தென்னங்கீற்றுகள் இன்னும் வேண்டியவை அனைத்தையும் தயார் செய்து வைத்து காத்திருந்தார்கள்.

சொன்னது போலவே கூட்டம் கூட்டமாக மக்கள் அதே நாளில் வந்தார்கள்.

எல்லோரும் ஃபக்கீர்மார்கள். ஏழைகள். வந்து தொழுதார்கள், ஓதினார்கள்,

ரிலாயத் எனும் எஜமான் கற்றுக் கொடுத்த பயிற்சியை மேற்கொண்டார்கள்.

இன்னமும் அந்த நான்கு பிரிவினரும் வருகிறார்கள், அவர்கள் திரும்பி செல்லும் போது மேற்சொன்ன அத்தனையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தான் கந்தூரி.

9

நீங்கள் எங்கிருந்தாலும் அந்த ஜமாத்துல் ஆஹிர் பிறை 10ல் 4 மணி முதல் 4:40 வரை எஜமானுடைய தரீக்காவில் உள்ளதை நல்ல ஆலிமுடன் கன்சல்ட் பண்ணி உட்கார்ந்து ஓதிக் கொண்டிருக்க வேண்டும் என்று எங்கள் ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் அவர்க்ள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அப்படி ஓதும் போது எஜமானின் மக்பரா ஷரீஃபை மனக்கண் முன் நிறுத்த வேண்டும் என்பதும் உத்திரவு.

10

சின்ன எஜமான் அவர்களுக்கு கவிதை எழுதும் வழக்கம் இருந்தது. அவர்க்ளின் கவிதையில் எஜமானை பற்றி அவர்களின் உணவு பழக்கம், படுக்கும் முறையை பற்றி எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் கவிதையில் பாடி பதிவு செய்யவில்லை என்றால் அவர்களின் நடைமுறை யாருக்குமே தெரிந்திருக்க நியாயமில்லை.

11

நாகூர் தர்ஹாவின் நாலாபுறமும் பள்ளிவாசல். நவாப் பள்ளி, சின்ன ஹொத்துவா பள்ளி, பானா சாபு பள்ளி மற்றும் திவான்ஷா பள்ளி.

12