Monday, May 6, 2019

மில்குல் யமீன் (மலகத் அய்மானுஹும் எனும் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்)

குரான் ஷரீஃப் 23வது அத்தியாயம் ஸூரத்துல் முஃமுனூன் (விசுவாசிகள்): 6 வது வாக்கியம்

 اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏ 

ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

குரான் ஷரீஃப் 70வது அத்தியாயம் ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்): 30 வது வாக்கியம்

 اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏ 

தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.

இது தவிர கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களிலும் ”மலகத் அய்மானுஹும்” பற்றி வருகிறது

குரான் ஷரீஃப் 4வது அத்தியாயம் ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) :24வது வாக்கியம் +  குரான் ஷரீஃப் 33வது அத்தியாயம் ஸூரத்துல் அஹ்ஜாப் (சதிகார அணியினர்) :52வது வாக்கியம்

படித்தவுடன் என்னால் என்ன புரிந்து கொள்ள முடிகிறது என்றால் வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்களிடம் உறவு கொள்ளலாம் என்பது தான் அது.

அப்படி என்றால் இதையொட்டி கீழே வரும் கேள்விகள் எனக்கு தோன்றுகிறது என்றால்..

1. மலகத் அய்மானுஹும் என்றால் யார்?
2. மலகத் அய்மானுஹும் என்பவர்களை நிகாஹ் செய்யாமலே உடல் உறவு கொள்ளலாமா?

இதற்கு பதில் தெரிவதற்கு முன்னர் அரபு நாட்டில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆண்டுகளுக்கு முன்னாளில் இருந்தே இருந்த “அடிமைகள்” இனம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

----------------------

இஸ்லாம் ஒருவரை இரண்டு வழிகளில் மட்டுமே அடிமைகளாக ஆக்கி கொள்வதை அனுமதி தந்தது.

1. போரில் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகள்
2. ஏற்கனவே அடிமைகளாக இருப்பவர்களை அவர்களின் முதலாளியிடமிருந்து விலை கொடுத்து வாங்குதல்.

முக்கியமாக ஏதாவது ஒரு காலனைஸ்டாக இருக்கும் நாட்டிற்கு சென்று அடிமைகளை கடத்தி வந்து விற்பது அல்லது அவர்களை ஏமாற்றி அழைத்து வந்து வாங்குவது விற்பது  போன்றவைகள் தடை செய்யப்பட்டன ஹராம் ஆக்கப்பட்டன. அதாவது ஸ்மக்லிங் ஆஃப் ஸ்லேவ்ஸ் தடை செய்யப்பட்டது.

இஸ்லாம் அடிமைகளை சமூகத்தில் இருந்தே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திற்கு முன்பே சமூக அமைப்பில் வேலை செய்யும் சமூகமாக அடிமைகளாக இருந்த அவர்களை (வேலை செய்யும் சமூகத்தில் இத்தகைய அடிமைகள் தான் பெரும்பான்மையாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம் மட்டுமே) உடனடியாக தடை செய்து அன்றாட வேலையில் தேக்கத்தையோ நிறுத்தத்தையோ ஏற்படுத்தவும் இல்லை.

உதாரணமாக, ஒரு நாட்டில் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பான்மையாக வேலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு நடக்கும் அநீதிகளை வைத்து அவர்களை திடீரென்று தடை செய்து விட முடியாது அனைத்து வேலைகளும் அல்லது பெரும்பாலான வேலைகளும் செயலற்று போய்விடும். மாறாக அவர்களுக்கான நியாயமான வேலை சூழல்களை உருவாக்கி தர முயற்சிக்கலாம். அதை தான் இஸ்லாம் செய்தது. அடிமைகளாக இருந்த அவர்களுக்கான நீதியை பற்றித் தான் இஸ்லாம் முதலில் பேசியது.

(அரபு நாட்டில் அன்று சமூக வேறுபாடுகள் அடுக்குகளாக இருந்தன, மத குருக்கள் முதல் தட்டிலும், பெருவியாபாரிகள் இரண்டாவது தட்டிலும், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மூன்றாவது தட்டிலும் அடிமைகள் நான்காவது தட்டிலும் இருந்தார்கள்.
இஸ்லாம் மத குருக்களை முற்றிலுமாக மாற்றி இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வசம் தந்தது.(இது தவிர்த்து, புது குழுவான முஜாஹிதீன் எனும் போராளிகளை உருவாக்கியது.)

ஆக, புதிதாக போர்க் கைதிகளை அல்லாமல் அடிமைகள் சமூகத்தில் வர முடியாத நிலையைக் இஸ்லாம் தான் கொண்டு வந்தது.

அத்தோடு விட்டுவிடவில்லை, இருக்கும் அடிமை முறைகளை சரி செய்ய ஒரு சட்டத்தை இஸ்லாம் அறிமுகப்படுத்தியது. அதன் படி, அடிமைகளுக்கு அது ஒரு உரிமையை வழங்கியது.

அது என்ன உரிமை என்றால், ஒரு அடிமையானவர் தனது எஜமானிடத்தில் போய் “எனக்கு விடுதலை வேண்டும், அதற்கு நான் என்ன விலை கொடுக்க வேண்டும்?” என்று கேட்டால் அவரது எஜமானர் அதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது. இப்போது அந்த எஜமானருக்கு உள்ள ஒரே வழி அவர் அந்த அடிமையை விடுதலை செய்வதற்கான விலையை குறிப்பிட்டே ஆக வேண்டும். இதை அந்த எஜமானருக்கு வாஜிபாக்கியது அதாவது கடமையாக்கியது.

அந்த விலையையும் அந்த அடிமையால் பூர்த்தி செய்ய முடியாததாக இருக்கக் கூடாது என்று கைட்லைன்ஸ் வழங்கியது. அப்படி நிறைவேற்ற முடியாத விலையை சொன்னால் அந்த அடிமை தனது எஜமானரை ஷரியா கோர்ட்டில் நிறுத்த முடியும். அதன் பிறகு அந்த வழக்கை ஷரியா கோர்ட் கவனித்துக் கொள்ளும்.

ஆகவே, அவர் விடுதலை பெறுவதற்கு எத்தனை காலம் ஆகும் என்பதை கணக்கிட்டு அந்த கால அவகாசம் வரை அந்த அடிமை அவருடைய அந்த எஜமானரிடத்தில் வேலை பார்த்து விட்டால் அவர் விடுதலை பெற்றவராகி விடுவார். அதன் பிறகு அவர் அடிமை இல்லை. அவர் சமூகத்தில் ஒருவராக வலம் வரலாம்.

இப்படி தான் பிற்காலத்தில் மிகச்சிறந்த நபித்தோழராக விளங்கிய சல்மான் பின் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஏராளமான அருமை சஹாபாக்களும் விடுதலை பெற்று உற்ற நபித்தோழர்களாக பெருமை பெற்றார்கள்.

இஸ்லாம் சட்டம் இயற்றாமல் வாழ்வியல் நடைமுறை வழி அடிமைகளை ஒழிக்கவும் செய்த்து. உதாரணமாக, ஒரு முஸ்லிம் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை என்றால பகரமாக சில அனுமதிக்கப்பட்ட செயல்களை செய்ய வேண்டும் அதில் ஒன்று தனக்கு அடிமை இருந்தால் அந்த அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

அடிமைகளுக்கு தான் உண்ணும் உணவையே வழங்க வேண்டும், நல்ல ஆடைகள் வழங்க வேண்டும், கனிவான சொற்களை சொல்ல வேண்டும் என்று கற்றுத் தந்தது.

இப்படியாக இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழித்து அதே போல் வேலை சமூகம் ஒன்று இருக்குமானால் அவர்களுக்கான நீதியை வழங்கியது.

இப்போது போருக்கு வரும் பெண்களை பிடித்து கைது செய்த போர்வீரர் மூன்று வகைகளில் அந்த கைதிகளை அடிமைகளாக வைத்துக் கொள்ளலாம்.

1. அமா - போர்க்கைதியான பெண் அடிமை - அமா என்றால் சாதாரண வீட்டு வேலை செய்யக் கூடியவர் - இந்த வகையில் அடிமையாக பிடிக்கப்பட்டவர்களை அவரது எஜமானர் தனது இல்லத்தில் வீட்டு வேலைகள் செய்ய பணியில் அமர்த்திக் கொள்வார்.

2. மில்குல் யமீன் (பன்மையில் மலகத் அய்மானுஹும்) - வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்கள் - மில்குல் யமீன் என்றால் மனைவியை போன்று வைத்துக் கொள்ளலாம் ஆனால் அதற்கு அந்த அடிமை பெண்ணின் அனுமதி வேண்டும் - இந்த வகையில் அடிமையாக பிடிக்கப்பட்டவர்களுக்கு அவரது எஜமானர் தனி வீடு கொடுக்க வேண்டும். மனைவியை போன்று எல்லா உரிமையும் உண்டு ஒன்றைத்தவிர, மனைவிக்கு கணவரின் சொத்தில் பங்குண்டு ஆனால் மில்குல் யமீனுக்கு தனது எஜமானரிடத்திலிருந்து சொத்தில் பங்கு கிடையாது.

3. உம்முல் வலத் - குழந்தையின் தாய் - மில்குல் யமீனாக இருப்பவர்கள் ஒரு குழந்தையை ஈன்றெடுத்து விட்டால் அல்லது எஜமானரின் பிற மனைவியின் மூலம் பிறந்த குழந்தைக்கு பால் கொடுத்தால் அவர் விடுதலை பெற்றவராகிறார், அதோடு தனது எஜமானரிடமிருந்து வரும் சொத்திலும் பங்கு கொள்வதோடு அவர் அவரது எஜமானரின் குடும்பத்தில் ஒருவராகவும் ஆகி விடுவார், அதாவது எஜமானர் தவறி விட்டால் அவரை அந்த குடும்பத்தினர் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஆக, இஸ்லாம் முதலாவதாக புதிதாக அடிமைகள் உருவாவதை தடுத்தது, இரண்டாவதாக இருக்கும் அடிமைகளை பல வழிகளில் விடுதலை பெற உதவியது. மூன்றாவதாக, அடிமைகளாக இருப்பவர்களின் உரிமைகளை பெற்று தந்தது.

No comments: