Thursday, January 7, 2016

மன்சூர் அல் ஹல்லாஜ் (ரஹ்) - (858 - மார்ச் 26 922) - அன்னாரின் நினைவாக...

போலிகளும் உண்மைகளும்:

தீவிரவாதிகள் குண்டு வைத்து மக்களை கொன்று விட்டு அவர்கள் உடைமைகளையும் அழித்து விட்டு“அல்லாஹு அக்பர்” என்று கூறுகிறார்கள்

அமெரிக்க அதிபர் புஷ் ஒஸாமாவை பிடிக்க ஆப்கானிஸ்தானிலும், சதாமை ஒழிக்க ஈராக்கிலும் குண்டு மழை பொழிந்து விட்டு ‘

... The Holy Qur'an. It teaches the value and the importance of charity, mercy, and peace” என்று (நவம்பர் 19, 2001 - இஃப்தாருக்கு பிறகு) சொல்கிறார்.

எல்லோரும் குரான் ஷரீஃபையும் ஹதீதுகளையும் காட்டி சொல்கிறார்கள், ”நாங்கள் தான் நேர் வழியில் இருக்கிறோம்..” என்று.

தாடி தஸ்பீஹுடன் தங்களை சூஃபிகள் என்றும் கூறிக் கொள்கிறார்கள்.

இப்படி நான் எழுதியதை வைத்து ’பீடி மஸ்தான்’, ‘பல்லக்கு அவ்லியா’, ‘காத்தாடி அவ்லியா’ மேற்படி பேர்களில் உடையவர்களை தான் குறிக்கிறேன் என்று அர்த்தம் கற்பிக்க வேண்டாம்.

என்னை பொறுத்த வரை பெயருக்கும் அவர் குணத்திற்கும் அவ்வளவாக சம்மந்தமில்லை. ‘செவிட்டு வாத்தியார்’ என்பவர் தான் எனக்கு எழுத படிக்க கற்றுக் கொடுத்தார்.

செவிட்டு வாத்தியார் என்ற பெயரை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு ”இவரெல்லாம் வாத்தியாராம்.. இவர் பாடம் சொல்லி கொடுத்தாராமாம்? இவருக்கே யாரு சொன்னாலும் கேட்காது” என்று யாரும் முடிவுக்கு வந்து விட முடியாது.

மூஸா நபியவர்கள் பிர்அவ்னிடம் போய் தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்றும் இறைவனையே வணங்க வேண்டுமென்றும் அடிமையான இஸ்ராயீல்களை விடுவிக்க கோரியும் நின்றார்கள்.

பிர்அவ்ன் மறுக்கவே மூஸா நபியவர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார்கள்.

அதை தொடர்ந்து கையிலுள்ள அசாவை எறிகிறார்கள். அது பாம்பாக மாறியது.

அதன் பின்பு பிர்அவ்ன் நாட்டில் உள்ள சக்தி வாய்ந்த மந்திரம் தந்திரம் அறிந்தவர்களை எல்லாம் கொண்டு வந்து சபை முன் நிறுத்தி மூஸா நபியவர்களோடு போட்டி போட நிறுத்தினான்.

அதாவது இறைவனால் அருள்பாலிக்கப்பட்ட மூஸா நபியவர்களுடைய அஸாவோடு போட்டி போட போலியான குறைகள் நிறைந்த இன்னொரு அஸாவை தேடிப் பிடித்து கொண்டு வருகிறான்.

இதனை தான் மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் மஸ்னவியில் பாடும் போது,

‘உரைகல் மக்களின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டிருந்த போது கள்ள நாணயம், தங்கத்தை பார்த்து, ‘நாம் இருவரும் சமமே. உன்னை விட நான் எந்த வகையில் தாழ்ந்தவன் ?’ என்று சொன்னதாம்.

அதற்குத் தங்க நாணயம், ‘என்னுடைய சகாவே! உரைகல் வந்து கொண்டிருக்கிறது, தயாராயிரும்!’ என்று மிகவும் அருமையாக ரூமி (ரஹ்) அவர்கள் பாடியிருப்பார்கள்.

ஆனால் உரைகல்லில் கூட போலிகள் உலாவரும் காலம் இது என்பதால் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

-----------------

ஏகத்துவத்தின் படித்தரங்கள்:

ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், ‘நீங்கள் தௌஹீது வாதியா, அல்லது கபுரு வணங்கியா?’ என்று

அதாவது தவ்ஹீது என்ற ஏகத்துவ கொள்கையை உடையவர்கள் கபுரடிக்கு செல்ல மாட்டார்கள் என்பது அவரது கருத்து.

நான் சொன்னேன், ‘நான் கபுரடிக்கு செல்கின்ற ஒரு தௌஹீது வாதி’ என்று.

குழப்புபவர்களையே குழப்புவது என்பது அப்படி என்ன லேசான காரியாமா என்ன?

பொதுவாக இறைவன் ஒருவன் என்று நம்புவதை தான் ஏகத்துவம் அல்லது தௌஹீது என்று கொள்வார்கள்.

தவ்ஹீது என்பது ஆழங்காண முடியாத பெருங்கடல் என்று இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் கூறியிருப்பதாக எங்கள் ஹஜ்ரத் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இமாம் கஜ்ஜாலி (றஹ்) அவர்கள் ‘நூஹ் நபிக்குக் கொடுக்கப்பட்டது போல் நீண்ட ஆயுள் (950 ஆண்டுகள்) எனக்குக் கொடுக்கப்பட்டாலும் அதை எழுதி முடிப்பது சாத்தியமில்லை என்பதை நான் உணர்கிறேன்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்களாம்.

நான் வந்து வேலையிட பாதுகாப்பு எனும் துறையில் இருக்கிறேன். ஹஜார்ட், ரிஸ்க் என்ற ஆங்கில வார்த்தைக்க்கு சிங்கப்பூர் சட்டப்படி தனி விளக்கமும் இருக்கிறது. எந்த வேலையையும் செய்யும் முன்பு ‘ரிஸ்க் அஸ்ஸெஸ்மெண்ட் (ஆபத்தின் விளைவுகள் பற்றிய பகுப்பாய்வு)’ செய்ய வேண்டும் என்பது சிங்கப்பூர் சட்டம்.

ரிஸ்க் அஸ்ஸெஸ்மெண்ட் என்பது நாம் பார்க்கும் வேலையை தனித்தனி பகுதியாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஆபத்துகளையும், விளைவுகளையும், தடுக்கும் முறைகளையும் பற்றி ஆய்வு செய்வதை குறிக்கும். இதனை முன்பு ஹஜர்ட் அனலிஸிஸ் என்று வழங்கி வந்தார்கள்.

நான் எதுக்கு இதனை சொல்கிறேன் என்றால், இமாம் கஜ்ஜாலி (றஹ்) அவர்கள் எதனையும் பகுதி பகுதியாக பிரித்து அலசி ஆராய்ந்து அனலிஸிஸ் செய்து அஸ்ஸெஸ்மெண்ட் செய்து முடித்து விடுவார்கள்.

அப்படி அவர்கள் ஆய்ந்து தௌஹீது எனும் ஏகத்துவத்தை நான்கு படித்தரங்களாக பிரிக்கிறார்கள். இதனை வேறொரு முறையில் விளக்கம் தருகிறேன்.

நான் கேட்ட ஒரு உதாரணமத்தை இங்கே சொல்கிறேன்..

முதல் படித்தரம்:
நிலவுக்கு மனிதன் சென்றான். இது உண்மை. இதை யாரும் நம்பலாம். ஒரு படமோ அல்லது கிரிக்கெட்டோ பார்த்துக் கொண்டிருக்கும் போது, ‘இந்தாப்பா.. மனுசன் நிலவுக்கெல்லாம் போயிருக்கான்ப்பா..” என்று சொன்னால்

பதிலுக்கு படம் பார்த்து கொண்டிருப்பவர், ‘அங்கே ஷாருக்கானும் அய்ஸ்வர்யா ராயும் டூயட் பாடினால் சூப்பரா இருக்கும்” என்பார், கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருப்பவர், ‘அங்கே இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் செமி ஃபைனல் நடந்தால் சூப்பரா இருக்கும்’ என்பார்.

‘அதுக்கென்ன இப்போ..’ என்பது மாதிரியான நம்பிக்கை இது.

இரண்டாவது படித்தரம்:
பேப்பரை படித்து, டிவியை பார்த்து, யுடியுபில் பார்த்து நிலவில் மனிதன் சென்றதை ஊர்ஜிதப்படுத்திய பிறகு ‘யெஸ்.. நிலவுக்கு மனிதன் சென்றது உண்மை தான்..’ என்று நம்பிக்கை கொள்கின்ற மனதை உடைய படித்தரம். இதில் தான் நான் உள்பட ஏராளமானோர் அடங்கியிருக்கிறோம். அறிவை கொண்டு நம்புகின்ற பாமரர்கள் அனைவரையும் இந்த படித்தரத்தில் இணைக்கலாம்.

மூன்றாவது படித்தரம்:
இது நிலவுக்கு சென்ற மனிதனிடம் அருகில் இருந்து கவனித்த சக விஞ்ஞானிகளுடைய நம்பிக்கைக்கு ஒத்து இருக்கின்றது. இவர்களும் நம்புகிறார்கள். ஆனால் முன்னர் இரண்டு படித்தரங்களில் உள்ளவர்களை விட இவர்களுடைய நம்பிக்கை இன்னும் கொஞ்சம் விசாலமானது. நிலவுக்கு பயணம் செய்தவர்களுடனேயே இவர்கள் பழக்கம் உடையவர்கள். அதற்குறிய அலுவலிலும் ஈடுபட்டவர்கள்.

நான்காவது படித்தரம்:
இந்த படித்தரத்தை நம்பிக்கை என்ற வார்த்தையிலேயே அடங்காது. இதை குறிக்க சரியான வார்த்தை இல்லா விட்டாலும் ஓரளவு நெருக்கமான வார்த்தை ‘அனுபவம்’ என்றே நான் கருதுகிறேன். இது அந்த நிலவுக்கு சென்ற மனிதனுடைய் அனுபவத்தை உடையது. நிலவுக்கு சென்ற மனிதன் தான் நிலவில் தான் இருக்கிறோம் என்று நம்புவதை விட நிலவில் இருப்பதை சொந்தமாக அனுபவிப்பான் அல்லவா அந்த வகையான நம்பிக்கை அனுபவம் அல்லது அனுபவப்பூர்வ நம்பிக்கை இது.

கிட்டதட்ட இப்படி தான் இறைவன் ஒருவன் என்று நம்புவதை இமாமவர்கள் ’கிதாபுத் தவ்ஹீது’ என்று பதிவு செய்திருப்பார்கள்.

-----------------
ஹக் எனும் பேருண்மை:

கீழே வருவது பெருமானார் (ஸல்) அவர்களுடைய ஹதீதில் உள்ளதாகும்.

Uthman:
Volumn 009, Book 087, Hadith Number 125.
-----------------------------------------
Narated By Abu Qatada : The Prophet said, "Whoever sees me (in a dream) then he indeed has seen the truth."



http://forum.ziyouz.com/index.php?topic=1440.125;wap2 

மேலே குறிப்பிட்டிருக்கும் ஹதீதில் ‘இன் எ டிரீம்’ என்று பிரேக்கட்டில் ஏன் போட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த வார்த்தைக்குறிய அரபி பதம் ஹதீதில் இல்லை.

அதாவது பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், ‘யார் என்னை பார்த்தாரோ அவர் உண்மையை (ஹக்கை) கண்டார்’ என்று.

‘ஹக்’ என்பது இறைவனின் பெயராகும்.

கவனிக்க: http://wahiduddin.net/words/99_pages/haqq_51.htm 

இதை வைத்துக் கொண்டு யாரும் பெருமானாரை பார்த்தவர் இறைவனை பார்த்துவிட்டதாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக ‘என்னை எவர் (கனவில்) கண்டாரோ அவர் உண்மையையே (அதாவது பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்களையே) கண்டார்’ என்று பொருள் வரும்படியாக எடுத்து கூறியுள்ளனர்.

ஆனால் உண்மை என்னவென்று அல்லாஹ்வுக்கும் பெருமானாருக்கும் (ஸல்) தான் தெரியும்.

கிட்டதட்ட இதே பொருளை உடைய ஒரு மிகவும் பிரபலமான, மிகவும் சர்ச்சைக்குறிய வார்த்தையான, ‘அனல் ஹக் (நானே பேருண்மை)’ என்று ஒரு மிகப் பெரும் ஞானி சொன்னார்.

அவர் தான் மன்சூர் அல் ஹல்லாஜ் (றஹ்) அவர்கள்.

உள்ளபடி அவர்கள், ‘அன்தல் ஹக் (நீயே உண்மை)’ என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் மன்சூர் அல் ஹல்லாஜ் அவர்கள் ஏகத்துவத்தின் படித்தரங்களை கடந்து அல்லது உடைத்து உச்சகட்டத்தில் இருக்கும் போது ‘அனல் ஹக்’ என்று சொல்லி விடுகிறார்கள்.

ஒரு நம்ரூதோ அல்லது பிர்அவ்னோ சொன்னது போல் அகம்பாவத்தில் சொன்னது அல்ல, ஆனந்தத்தில் சொன்ன வார்த்தை அது.

குரான் ஷரீஃபில் ஒரு செய்தி இருக்கிறது.

ஸீரத்துந் நஹ்ல் (தேனி) எனும் அத்தியாயம். மூன்றாவது வசனம்.

“அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் (ஹக்) கொண்டு படைத்துள்ளான்;

உண்மையை கொண்டு படைத்த இறைவன் இவையத்தனைக்கும் கலீஃபாவாக மனிதனை தான் படைத்துள்ளான், அதாவது உண்மைகளின் தலைவனாக மனிதன் இருக்கின்றான்.

அலி(ரலி) அவர்கள் சொன்னார்கள், ‘அதஹ்ஸிபு அன்னக ஜிஸ்முன் ஸகீருன் வஃபீக்கன்தவல் ஆலமுல் கபீரு’  என்று பாடினார்கள்


- அதாவது ‘மனிதனே, நீ சிறிய சடலம் என்றா நினைக்கிறாய் ?, உனக்குள்ளே பெரிய உலகமே அமைந்து கிடக்கின்றதே’ என்று அர்த்தம்

அந்த உலகினை அந்த உண்மைகளை இனங் கண்டு கொண்டமனிதன் உண்மைகளின் உண்மைகளை புரிந்து கொள்வான்.

அதனால் தான் இறைவன் அதே 13 வது வசனத்திலேயே ‘த ஆலா அம்மா யுஸ்ரிகூன்’ அதாவது ‘அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் மிக்க மேலானவன்’ என்று அந்த வசனத்தை முடிக்கிறான். இதுவே உண்மைகளின் உண்மை.

அதற்கு அடுத்த 14 வது வசனத்தில் ’மனிதனை இந்திரியத்துளியால் படைத்தோம்..’ என்று ஆரம்பிக்கிறான். என்னா ஹிக்மத் இறைவனுடைய ஹிக்மத். நான் கொண்டு வந்த அற்புதம் என்று பெருமானார் (ஸல்) குரான் ஷரீஃபை சொன்னார்கள்.

இப்னு அரபி எனும் மிகப் பெரிய சூஃபி ஞானி சொல்வார்கள்:

அல் அப்து அப்துன் ஃப இன் தரக, வர் ரப்பு ரப்புன் ஃப இன் தனஜ்ஜல்

என்று

அதாவது
அடிமை அடிமை தான் எவ்வளவு தான் மேலே போனாலும் - இறைவன் இறைவன் தான் எவ்வளவு தான் தனஜ்ஜலில் இருந்தாலும்

(இங்கே நான் தனஜ்ஜல் என்றே குறிக்க விரும்புகிறேன், கீழே வந்தாலும் என்று குறிக்க மனமில்லை - ஏனெனில் இறைவன் ஃபிஸிகலாக கீழே இறங்கி வருகிறான் என்ற பொருள் வரவே வராது, உண்மையில் இதன் அர்த்தத்தை எல்லோராலும் விளங்கிக் கொள்ளவே முடியாது)

------------------
முக்கியமான அந்த கேள்வியும் அதை விட முக்கியமான பதிலும்:

மௌலானா ரூமியும் ஷம்ஸ் தப்ரேஜ் (இருவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவுமாக) அவர்களும் சந்தித்து கொண்டது வரலாற்று கிரந்தங்களில் முக்கியமான நிகழ்வு.

ரூமி (றஹ்)அவர்கள் குதிரையில் கம்பீரமாக அமர்ந்து மாணவர் புடை சூழ வந்து கொண்டிருந்தார்கள்.

ஷம்ஸ் தப்ரேஜ் அவர்கள் ரூமி (றஹ்) அவர்களை பார்க்கிறார்கள்.

கூட்டத்தை விலக்கி கொண்டு வந்து கத்தலான தொனியில் கேட்டார்கள், “முஸ்லீம்களின் ஆசிரியரே! யார் சிறந்தவர்? அபு யஜித் பிஸ்தாமியா? அல்லது இறைத்தூதர் முஹம்மதா (ஸல்) ? என்று

அபு யஜித் பிஸ்தாமி ஈரான் பிஸ்தாம் என்ற ஊரில் பிறந்தவர்கள். இறைவன் மீது அளப்பறிய காதல் கொண்டவர்கள். சூஃபியிசம் பற்றி பிஸ்தாமி அவர்கள், ‘அனைத்தையும் இழந்து சங்கடத்தை பெறுவது’ என்று விளக்கம் கொடுத்தார்கள்.

‘ஷெய்கு மார்கள் எனும் ஆசிரியர் இல்லாதவருக்கு ஷைத்தானே ஆசிரியன்” என்றும் உண்மையை பட்டென்று உடைத்தவர்.

இந்த பிஸ்தாமியை தான் அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) அவர்களோடு ஒப்பிட்டு யார் சிறந்தவர் என்று கேள்வி கேட்டார்கள் ஷம்ஸ் தப்ரேஜ் அவர்கள்.

மௌலானா ரூமி (றஹ்) அவர்கள், (இதென்ன கேள்வி என்பது போல்) முஹம்மதே (ஸல்) சிறந்தவர்” என்றார்கள்.

ஷம்ஸ் அவர்கள் விடவில்லை, “முஹம்மது (ஸல்) சொல்லவில்லையா?, “இறைவனை எப்படி அறியப்பட வேண்டுமோ அப்படி இறைவனை நான் அறியவில்லை” என்று, ஆனால் பிஸ்தாமியோ, “என்னுடைய மாண்பு மிகப் பெரிதாகும், நானே பெரியவன், என் கண்ணியம் உயர்வானது, நானே சுல்தானுக்கெல்லாம் சுல்தான்” என்று

அதாவது ஒருவர் தனக்கு தெரியாதது இருக்கிறது என்கிறார்கள் இன்னொருவர் தான் தெரிந்து கொண்டதை உண்மைகளை பற்றி பெரிதும் புகழ்ந்துரைக்கிறார். இவர்களில் யார் பெரியவர்? என்பதே கேள்வி.

மௌலானா ரூமி (றஹ்) அவர்கள் சொன்னார்கள், “பயாஜித்தின் தாகம் வாயளவு தண்ணீர் கண்டவுடன் தீர்ந்து விட்டது, ஆனால் முஹம்மதின் (ஸல்) தாகமோ இன்னும் இன்னும் என்று தண்னீரை தேடிக் கொண்டே இருந்தது. பயாஜித் இறைவனிடமிருந்து பெற்றதை வைத்து அவ்வளவு தான் என்று திருப்தி அடைந்து விட்டார், ஆனால் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மதோ (ஸல்) நாளுக்கு நாள் நேரத்திற்கு நேரம் முழுமையடையாத இறைவனின் ஒளியை ஞானத்தை பெற்றுக் கொண்டே இருந்தார்கள்.. அதனால் தான் முஹம்மது (ஸல்) இறைவனை எப்படி அறிய வேண்டுமோ அப்படி அறியவில்லை என்று சொன்னார்கள்” என்று சொன்னவுடன்..

ஷம்ஸ் தப்ரேஜ் உடனே ஸஜ்தாவில் விழுந்து அழ ஆரம்பித்து விட்டார்கள். (இன்னொரு வரலாற்று குறிப்பில் ரூமி (றஹ்) அவர்கள் இந்த பதிலை சொல்லி விட்டு மயக்கமடைந்து விட்டார்கள் என்று வருகிறது)

ரூமி (றஹ்) அவர்கள் ஷம்ஸின் தலையை தொட்டார்கள்.

சூரியனும் சந்திரனும் தழுவிக் கொண்டன.

------------------
கேள்வி - யார் நீ?; பதில் - நீ:

மன்சூர் அல் ஹல்லாஜ் (றஹ்) அவர்களும் பயாஜித் (றஹ்) அவர்களைப் போல் தான் தாகம் தீர்ந்தவர்கள் தான், அதனால் தான் ரகசியத்தின் ஆரம்பத்தை முடிவு என்று கருதி வெளிப்படுத்தினார்கள்.

இதனால் அப்பாஸிய ஆட்சியாளர்களால் பெரிதும் சித்திரவதைக்கு ஆளானார்கள்.

ஷரீயத்திற்கு முரணானதை சொன்னார்கள் என்று ஷரீயத்திற்கு முரணான வழியிலேயே தண்டனையும் கொடுக்கப்பட்டார்கள்.

ஆனால் கொடுக்கப்பட்ட தண்டனைகளையும் அனுபவித்த சித்திரவதைகளையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள்.

அப்ரஹா என்பவன் கஃபத்துல்லாஹ்வை ஹரம் ஷரீஃபை இடித்து தரை மட்டமாக்கி விட எண்ணி நூற்றுக்கணக்கான யானைகளுடன் மக்கமா நகர் மீது படையெடுத்தான்.

பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பவர்கள் அந்த ஊரிலே மிகப் பெரிய புள்ளி. மக்கள் அவர்களை தேடினார்கள். அவர்கள் ஹிரா குகையிலிருந்து தான் எப்போதும் செய்யும் தியானங்களை முடித்து விட்டு திரும்புகிறார்கள். அவர்களிடம் செய்தி சொல்லப்படுகிறது.

அவர்கள் அப்ரஹாவை நோக்கி வருகிறார்கள்.

அப்ரஹா என்ன நினைத்தார் என்றால், ‘இவர் நம்மிடம் கஃபாவை விட்டு விடும்படி கெஞ்சத்தான் வருகிறார்..’ என்று நினைத்து மெத்தனமாக அமர்ந்திருக்க அருமை பெருமானாரின் அருமை பாட்டனார் அவர்களோ ’நீங்கள் பிடித்து வைத்திருக்கும் ஒட்டகங்களை விடுவித்து விடுங்கள்’ என்பது போல் கூறுகிறார்கள்.

அப்ரஹா கேட்கிறான், “உமக்கு கஃபாவை விட ஒட்டகங்கள் முக்கியமாக இருக்கிறதே..” என்று

அதற்கு பாட்டனார் இப்படி பதில் சொன்னார்களாம், “நான் ஒட்டகங்களில் எசமானாயுள்ளேன். எனவே அவற்றைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். கஃபாவின் எசமான் வேறொருவன் அவன் அதைக் காத்துக்கொள்வான்..” என்று.

(அதனை தொடர்ந்து படையெடுத்து அழிக்க முற்பட்ட போது தான் எங்கிருந்தோ வந்த பறவைகள் கூட்டம் சிறு கற்களை எறிந்து வீரர்களும் யானைகளும் சுருண்டு விழுந்தன என்பது அப்ரஹாவின் அழிவு வரலாறு
- குரான் ஷரீஃப் வசனம் 105: 1- 5)

மன்சூர் அல் ஹல்லாஜ் அவர்கள் ’அனல் ஹக்’ என்று சொன்னது இறைவனின் நாட்டப்படி தான் எனும் போது இது என்னுடைய பிரச்சினை அல்ல அதை அவன் பார்த்துக் கொள்ளட்டும் என்பது போல் மகிழ்ச்சியோடு தண்டனைகளை ஏற்றுக் கொண்டார்கள்.

"Allah, Most High, the very One Who Himself affirms His unity by the tongue of whomsoever His creatures He wishes. If He affirms His unity in my tongue it is He who does so,and it is His affair. Otherwise, my brother, I myself have nothing to do with affirming Allah's Unity"

I have seen my Lord with the eye of my heart, and 
I said: "Who are You?" 
He said:"You."
(Diwan al-Hallaj, M. 10)

No comments: