Thursday, January 7, 2016

மீலாதுந்நபி

1

உலகம் பூராவும் சவுதி அரேபியா தவிர மற்ற முஸ்லீம் நாடுகள் அனைத்திலும் மீலாதுந்நபியன்று விடுமுறையாம். அது சவுதி அரேபியா  நாட்டின் சிறப்புகளில் ஒன்றா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.

ஆனால் எனக்கு நாகூரின் சிறப்புகளில் ஒன்றினை பற்றி தெரியும். அது, நாகூரில் இருக்கும் கிட்டதட்ட அனைத்து மதரஸாக்களில் ஓதும் பிள்ளைகளும் பிறை கொடி ஏந்தி "நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்" முழங்கி இந்த மீலாது தினத்தை நினைவு கூர்வார்கள்.

சிறு வயதில் நாகூரின் தெரு பள்ளி தெருவில் அமைந்திருந்த வஹ்ஹாப் சாஹிப் பள்ளியின் சார்பாக பிறை கொடி ஏந்தி மீலாது விழாவில் கலந்து கொண்டு நாகூர் தெருக்களில் ஊர்வலமாக நடந்து சென்றதில் என் கால்களுக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறது என்பதில் மகிழ்கிறேன். Too be child was very heaven.

மீலாதுந்நபி என்றால் நபி பெருமானார் அவர்கள் பிறந்த தினம் என்று கொள்ளலாம். மீலாது என்ற வார்த்தை 'விலாதத்' என்ற பிறப்பை குறிக்கும் அரேபிய வார்த்தையிலிருந்து வந்தது. 

மீலாதுந்நபி என்றால் 'ஹேப்பி பர்த்டே' பாடி கேக்கில் வைக்கப் பட்டிருக்கும் மெழுகுவர்த்தியை கொளுத்தி அதை ஊதி அனைத்து கேக் ஊட்டி கொண்டாடும் நிகழ்வு அல்ல. 

மீலாதுந்நபி என்பது பெருமானாரின் ஒட்டு மொத்த வாழ்வையும் நினைத்து பார்த்து அவர்களை பற்றி தெரியாத அறியாத பல செய்திகளை அறிந்து கொள்வதை நோக்கமாக கொண்டதாகும்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் மீலாது விழா தான் பெரியோர்களை தலைவர்களை அவர்களின் பிறந்த நாளில் எப்படி நினைவு கூர வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருக்கிறது.

நாங்கள் தெரு பூராவும் கொடி ஏத்தி பேனர்களில் வார்த்தைகள் எழுத நாகூரின் சொல்லரசு மரியாதைக்குறிய மர்ஹும் மு.ஜாபர் முஹ்யித்தீன் மாமா அவர்களிடம் போய் நிற்போம். 

அவர்கள் பெருமானாரை பற்றி நூறு புகழ் வார்த்தைகள் எழுதி வைத்து உங்களுக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் என்பார்கள். 
திருக்குறள் மாதிரி இரண்டு அடியில் இருக்கும் அந்த வாசகங்களை தேர்ந்தெடுக்க நாங்கள் திணறி போவோம் எதை எடுப்பது எதை விடுப்பது என்று. 

அரபு மண்ணின் அழியா காவியம்
மரபுக் கவிதை மாநபி வாக்கியம்

- இது ஒரு சோறு தான், பானை நிறைய சோறு இருந்தது. சொல்லரசு மாமா சமைத்தது.

2

இன்றைக்கு அறிஞர்கள் நிரம்பிய உலகமாகி விட்ட படியால் 'பெருமானாருக்கு பிறந்த நாள் விழாக்கள் தேவையா?, மார்க்க அனுமதி உண்டா?' என்று கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்கிறார்கள் கேள்விகளாலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.(excuse my language)

மார்க்கத்தை பிரிந்துவிடாது தூக்கி பிடித்து நிறுத்தும் (யாரும் சிரிக்க வேண்டாம்) இவர்களின் மீலாது பற்றிய ஆதார கேள்விகளுக்கெல்லாம்  பதில் சொல்லி மாளாது அல்லது எனக்கு அவர்களுக்கு புரிகின்ற மாதிரி பதில் சொல்ல தெரியாது. 

எப்படி அவர்களால் என்னை இதுவரை மீலாது  வேண்டாம் என்று அத்தனை ஆதாரங்களை முன்வைத்தும் மீலாது பற்றிய என் எண்ணங்களிலிருந்து பின் வாங்க வைக்க முடியவில்லையோ அதே போல என்று வைத்துக் கொள்ளலாம்.

சரி, மீலாதுக்கு அதாவது பெருமானாரின் வாழ்வை நினைவு கூர்வது தான் மீலாது என்று நான் சொல்லியிருந்தேன் அல்லவா? அதை அந்த நினைவு கூர்தலை பற்றி சிந்திப்போம்.

மனைவி அல்லது லாத்தா அல்லது தங்கச்சி இப்படி யாரும் வீட்டில் பிள்ளை உண்டாகியிருந்தாலே நமக்கெல்லாம் சந்தோஷம் தாங்க முடியாது, அதுவும் அழுது கொண்டே குழந்தை பிறந்து விட்டது என்று வையுங்கள், நம் வீட்டின் சந்தோஷ சிரிப்பொலி சொல்லில் அடங்காது.

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், 'நபி அவர்களே! நான் என்னை விட உங்களை அதிகமாக நேசிக்கிறேன்' என்று.

இது உமர் (ரலி) அவர்களின் கூற்று மற்றுமன்று. ஒவ்வொரு முஸ்லீமின் வார்த்தையாகவும் எடுத்து கொள்ளலாம். அதனால் தான் பெருமானாரின் பிறப்பை நம் வீட்டில் குழந்தை பிறந்தால் ஏற்படும் சந்தோஷத்தை விட அதிகமான மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறோம்.

அது சரி, நாட்களை அல்லது பிறப்பை நினைத்து பார்ப்பது ஏற்புடையது தானா? என்றால் குரான் ஷரீஃபிலேயே விளக்கம் இருக்கிறது. இது ஃபாஸ்ட் புட் காலம் என்பதால் நம்மில் பலர் 'சீக்கிரம் சொல்லுங்கள், எங்கே டைரக்டாக இருக்கிறது, எனக்கு வேறு வெட்டி முடிக்கும் வேலைகள் நிறைய இருக்கிறது, இன்னும் நிறைய ஆதார கேள்விகள் தயாரிக்க வேண்டும் (state board questions, central board questions, international board questions எல்லாம் பிச்சை எடுக்கணுமாக்கும்)' என்கிற ரீதியிலேயே கேட்கிறார்களே தவிர சிந்தித்து பார்க்கவோ அல்லது ஆராய்ந்து அணுகவோ தயாராக இல்லை.

3

குரான்ஷரீஃப் 
அத்தியாயம் 19
வசனம் 15

"அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், அவர் உயிர் பெற்றவராக எழுப்பப்படும் நாளிலும் அவர் மீது சாந்தி உண்டாவதாக" 

-  இறைவன் ஹஜ்ரத் யஹ்யா (அலை) அவர்களை பற்றி குறிப்பிடும் பொழுது தான் மேற்கண்டவாறு கூறுகிறான். 

இந்த 15ம் வசனத்திற்கு முந்தைய வசனங்கள் பூராவும் யஹ்யா நபியவர்களின் பிறப்புக்கு முந்தைய சம்பவங்களையும் அவர்கள் பிறந்த பின்னர் அவர்களின் எப்படி பெற்றோருக்கு நன்மை செய்பவராகவும்  பெருமை கொண்டவராகவோ அல்லது மாறு செய்பவராகவோ இருக்கவில்லை என்பதையும் விளக்குகிறான்.

இதை தான் முழுமையான மீலாதுந்நபி என்று சொல்கிறோம். இன்னும் சொல்லப் போனால் நபி ஈஸா (அலை) அவர்கள் தமக்கு தாமே மீலாது விழா கொண்டாடுகிறார்கள்.

குரான்ஷரீஃபின் அதே 19வது அத்தியாயம் 16வது வசனம் அன்னை மர்யம் (அலை) அவர்களை பற்றி நினைவு கூர்கிறது. தொடர்ந்து  33வது வசனத்தில் நபி ஈஸா (அலை) அவர்களின் பேச்சை பற்றி இறைவன் அவர்களின் வார்த்தையையே குறிப்பிடுகிறான். 

"நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் நான் உயிர் பெற்றவனாக எழுப்பப்படும் நாளிலும், சாந்தி என் மீது உண்டாவதாக" - என்று வசனம் வருகிறது.

இந்த 13வது வசனத்திற்கு முன்னர் மர்யம் அவர்கள் கர்ப்பமுற்றது, ஈஸா நபியின் அற்புத பிறப்பை எடுத்து சொல்லும் முறை எல்லாமே மீலாதின் முன் மாதிரிகள் தான்.

4

குரான் ஷரீஃபின் அத்தியாயம் 14 வசனம் 5ல் மூஸா நபியவர்களுக்கு இறைவன் அனுப்பிய செய்தியை பற்றி சொல்லும் போது,

"... இன்னும் அல்லாஹ்வின் நாட்களை பற்றி அவர்களுக்கு நினைவூட்டுவீராக!..."  - என்று இறைவன் கூறுகிறான்.

அது என்ன நாட்கள் என்பதை பற்றி வசனம் 6ல் குறிப்பிடும் போது "பிர் அவ்னிடமிருந்து காப்பாற்றிய பொழுது இறைவனின் நிஃமத்துகளை நினைவு  கூர சொல்வதோடு, பிர் அவ்ன் புரிந்த கொடிய செயல்களை பற்றியும் எடுத்து சொல்கிறான், அவன் கொடிய வேதனை செய்தது, ஆண் மக்களை கொன்று விட்டு பெண் மக்களை விட்டு விட்டது - 

- இப்படியாக இறைவன் மூஸா நபிக்கு அளித்த செய்தியில் சொல்கிறான். இதுவே என்னளவில் மீலாது தான். 

முஸ்லீமாகிய நாங்களும் எங்களுக்கு இறைவன் புரிந்த அருட்கொடைகளை நினைவு கூர்கிறோம். எங்களின் அருட்கொடை முஹம்மது நபிகளன்றி வேறொன்றும் இல்லை.

குரான் ஷரீஃபின் அத்தியாயம் 21ல் வரும் வசனம் 107ல் இறைவன் பெருமானாரை பற்றி கூறும் பொழுது, 

"(நபியே!) உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை" என்றல்லவா கூறுகிறான்.

நாம் நினைத்து பார்க்க அதாவது மீலாது செய்ய இறைவன் நமக்கு புரிந்த அருள் பெருமானாரின் பிறப்பன்றி வேறென்ன இருக்க முடியும்.

5

நாம் செய்யும் அனைத்து மார்க்க காரியங்களுக்கும் பெருமானார் தான் அழகிய முன்மாதிரி. இதில் எந்த மாற்றமும் இல்லை. 

ஆனால் நாம் பெருமானாரின் மீது ஸலவாத்து சொல்கிறோமே அதற்கு யார் முன் மாதிரி?

அல்குரான் ஷரீஃப் 

அத்தியாயம்:33; வசனம்:56

நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்து(அருள் பிரார்த்தனை)ச் செய்கிறார்கள். (ஆகவே) விசுவாசிகளே! நீங்கள் அவர் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். ஸலாமும் கூறுங்கள். 

பெருமானாரின் மீது ஸலவாத்து சொல்வதற்கு அல்லாஹ்வும் மலக்குமார்களும் தான் அழகிய முன்மாதிரி. 

அல்லாஹ் கலிமா சொல்ல வில்லை, தொழுவதுமில்லை, 100க்கு 2.50 காசு ஜகாத்தும் கொடுக்கிறதில்லை, ஹஜ்ஜும் செய்வதில்லை. 

அவன் பெருமானாரின் மீது ஸலவாத்து சொல்கிறான். நாமும் இறைவனோடு சேர்ந்து பெருமானாரை நினைவு கூர்வோம். இதுவும் மீலாது தான்.

(அல்லாஹும்ம சல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி)

6

பெருமானாரை பற்றி பேசுவதென்பதே நாவை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போல தான் என்று நான் எழுதிய ஒரு கதையில் சொல்லியிருப்பேன்.

பெருமானாரை பற்றிய கவிதைகளில் நம்மை முழுமையாக சுத்தப்படுத்தும் சக்தி 'கஸீதத்துல் புர்தாஹ்'வுக்கு உண்டு என்று நம்புகிறேன்.

அந்த கஸீதாவிலிருந்து..

35 வது கஸீதா

எமது (நபி பெருமானார் (ஸல்)) அவர்கள் (நன்மையானவற்றை ஏவி, (தீமையானவற்றை) விலக்குபவராவர். எனவே, "ஆம்" அல்லது "இல்லை" என்ற வாக்கில்  அவர்களை விட வேறெவரும் சக்தி வாய்ந்தவரல்லர். 

50 வது கஸீதா

கனவுகளை கண்டு அவையே போதுமென திருப்தியடைந்து கொள்ளும் துயில் கொண்ட கூட்டத்தினர், இவ்வுலகில் அ(ந் நபிய)வர்களின் அந்தரங்கத்தை எங்கனம் உணர முடியும்?

7

இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களை பற்றி ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். அதில் 'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு.." என தொடங்கும் மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்த பாடல் வரிகள் அற்புதம்



இதோ அந்த வரிகள்..

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
கொஞ்சம் நில்லு
எங்கள் திருநபியிடம் போய் சொல்லு
சலாம் சொல்லு

தன்மார்க்கம் தந்த நபி
துன்மார்க்கம் வென்ற நபி
சாத்வீக மெய்ஞ்ஞான பெருமான்
கண்ணோடு கண்ணாகி
கல்புக்குள் நிறைவாகி
கருணைக்கு பொருள் தந்த எம்மான்
அவரை காண துடிக்கின்றேன் இந்நாள் 
அவரை காண துடிக்கின்றேன் இந்நாள் (தென்றல் காற்றே)

மடமையாம் இருள் போக்கி
மதுவையும் விஷம் ஆக்கி
மாந்தரின் நலம் காத்த பெருமான்
மண்ணோடு பெண்மகவை
மகிழ்வோடு புதைத்திட்ட
மாபாத(க)ச் செயல் தடுத்த எம்மான்
அந்த மஹமூதை காண்பேனோ இந்நாள் 
எங்கள் மஹமூதை காண்பேனோ இந்நாள் (தென்றல் காற்றே)

கடல்காடு மலைபாலை
கடக்கின்ற இறைவேதம்
கனிவாயில் இதழ் விண்ட பெருமான்
கடல்போன்ற பகைமுன்னே
உடைவாளை கரமேந்தி
படை கொண்டு பகைவென்ற எம்மான்
பத்ருபடைஅரசர் முகம் காண்பதென்னாள்? 
பத்ருபடைஅரசர் முகம் காண்பதென்னாள்? (தென்றல் காற்றே)

எந்நாளும் அவர்நாமம் 
இயம்பாத கணமேது
இறையில்ல பாங்கோசை பெருமான்
கைநகம் கண்தொட்டு
கனிகின்ற ஸலவாத்தில் 
கஸ்தூரி மணம் கமழும் எம்மான்
அவரின் கருணைக்கு அழுகின்றேன் இந்நாள்
அவரின் கருணைக்கு அழுகின்றேன் இந்நாள் (தென்றல் காற்றே)

8

குரான் ஷரீஃபில் 
பெருமானாரை பற்றி இறைவன்

அத்தியாயம் 68
வசனம் 4
"(நபியே!) நிச்சயமாக மகத்தான நற்குணத்தின் மீதும் நீர் இருக்கின்றீர்"
(truly you are of a magnificient charachter)

அத்தியாயம் 10
வசனம் 58

"அல்லாஹ்வின் பேரருளைக் கொண்டும், அவனுடைய அருளைக் கொண்டுமுள்ளதாகும்.; ஆகவே அதைக்கொண்டு அவர்கள்சந்தோஷமடையட்டும்; இது அவர்கள் சேகரித்து வைத்திருப்பவற்றைவிட மிகச் சிறந்தது" என்று (நபியே) நீர் கூறுவீராக

முஸ்லீம்களாகிய நம்மை பொறுத்த வரை பெருமானாரை தவிர வேறொன்றும் பேரருள் கிடையாது, அவர்களின் பிறப்பை வாழ்வை நினைவு கூர்ந்து சந்தோஷமடைவோம். இந்த சந்தோஷம் நாம் சேகரித்து வைத்திருக்கிறோமே வீடு, வாசல், சொத்து, நகை எல்லாம் இவை எல்லாவற்றையும் விட சிறந்தது.

No comments: