Thursday, January 7, 2016

குரான் ஷரீஃப் - ஓர் அற்புதம்

1

முஸ்லீம்களுக்கிடையே குரான் ஷரீஃப் இறைவனுடைய பேச்சா இல்லையா என்பதில் சர்ச்சையே இல்லை.  ஆஹா..! இந்த விஷயத்திலாவது சர்ச்சை இல்லாமல் இருக்கிறதே என்று ஆறுதல் அடைய முடியாது. 

ஏனெனில் அவர்களுடைய சர்ச்சை அது எந்த நாளில் இறக்கப்பட்டது என்பதில் உள்ளது. என் போன்றோர் அது ரமலான் மாதத்தின் 27 ஆம் இரவன்று இறங்கியிருக்கலாம் என்றும் இல்லை இல்லை அது கடைசி பத்து தினங்களில் ஒற்றை படை இரவில் ஏதாவது ஒரு இரவில் இறங்கியது என்றும் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் மறுசாரார் பதிலடி கொடுத்தும் வருகிறார்கள். 

சரி, இந்த சர்ச்சை கியாமத் (இறுதி நாள்) வரை நடந்து கொண்டு தானிருக்கும். அதில் நான் அதிகம் கவனம் எடுத்து கொள்ள போவதில்லை.

குரான் ஷரீஃப் உலகத்தின் மிகப்பெரிய அற்புதம் என்று நான் உளப்பூர்வமாக அனுபவித்து கூறுகிறேன். நான் அவ்வாறு கூறுவதற்கு தர்க்க ரீதியான காரணமும் உண்டு.

மூஸா (மோஸல்) நபியவர்கள் கடலை பிளந்து அற்புதம் நிகழ்த்தினார்கள். ஈஸா (ஜீஸல்) நபியவர்கள் இறந்தவர்களை உயிர்பித்தார்கள். இன்னும் புராணங்கள், இதிகாசங்கள் போன்ற எல்லா வற்றிலும் தீர்க்கதரிசிகள் அல்லது அவதாரங்கள் அற்புதங்களை நிகழ்த்தியதாக தான் காண்கிறோம்.

ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செய்த அற்புதம் குரான் ஷரீஃப் தான். இதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள். "இறைவனிடமிருந்து என்ன அற்புதத்தை கொண்டு வந்துள்ளீர்கள்.." என்ற கேள்வி அவர்கள் முன் எழுப்பப் பட்டது.

இந்த கேள்வியில் அப்படி ஒன்றும் ஆச்சர்யமில்லை. தீர்க்கதரிசிகளாக தோன்றியவர்கள் ஏதாவது ஒரு அற்புதத்தை செய்து காட்ட வேண்டும் என்பது நியதி. 

மேற்கூறிய இந்த கேள்விக்கு முஹம்மது நபிகள் எந்த மந்திரங்களையும் செய்து காட்டவில்லை, எந்த தந்திரங்களையும் செய்து காட்டவில்லை. "குரான் ஷரீஃபே இறைவனிடமிருந்து நான் பெற்ற அற்புதம்" என்றார்கள்.

என்ன அற்புதம் செய்து காட்ட போகிறீர்கள் என்ற  வினாவிற்கு  கடலை  பிளக்கிறேன், மலையை தூக்கிறேன் என்றெல்லாம சொல்லாமல் மக்களுக்கு இறைவன் தன்னை எடுத்து கூற சொன்ன கருத்துக்கள் அடங்கிய நூலை (சிறுநூலுக்குள் அடங்கிய பெருநூலகம் - குரான்  ஷரீஃப் பற்றி அடியார் அவர்கள்) அற்புதம் என்று சொல்லியிருப்பதே மிகப் பெரிய அற்புதமான விஷயம் தானே.

2

சஅது பின் ஹிஷாம் என்பவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், "திருத்தூதரின் நற்பண்புகளைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறீர்களா? அவர்களிடம் என்னென்ன குணங்கள் இருந்தன என்பதை விளக்க முடியுமா?" என்று கேட்டார்கள்.

சஅது பின் ஹிஷாம் அவர்கள் கேட்டது அன்னை ஆயிஷா அவர்களிடம், அதாவது பெருமானார் அவர்களின் மனைவியிடம். ஒருவரை பற்றி சரியாக அவர் மனைவியை தவிர வேறு யார் சொல்லி விட முடியும். வெளியிலே ஆயிரம் நல்ல கருத்துக்களை கூறிவிட்டு உள்ளுக்குள் அதற்கு நேருக்கு மாற்றமாக நடந்து கொள்வார்கள். இப்படி நடப்பது வெளியே நண்பர்களுக்கு கூட தெரியாது. ஆனால் மனைவிக்கு தெரிந்து விடும், "ஆமா எஹ தானே.." என்று மனைவிமார்கள் ஆரம்பித்தால் முடிந்தது கதை..

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "நீங்கள் குரான் ஷரீஃபை ஓதுவது இல்லையா?" என்று கேட்டனர்.

'ஆம் ஓதுகிறேன்.." என்றார்கள்

"குரான் ஷரீஃப் போதித்த அத்தனை நற்பண்புகள் அனைத்தும் திருத்தூதரிடம் இருந்தன" என்று தீர்க்கமாக தெளிவாக சொன்னார்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

இதில் இரண்டு செய்திகள் கவனத்திற்குறியவை. ஒன்று பெருமானார் அவர்கள் எதை போதித்தார்களோ அதுவாகவே பெருமானார் வாழ்ந்தது, அதுவும் அவர்களின் மனைவியின் வாயாலேயே அது ஒப்புக் கொள்ளப்பட்டது. இரண்டாவது, பெருமானாரை குரான் ஷரீஃப் நற்பண்புகளுடையவராக மாற்றியது.

3

இரண்டாவதாக சொன்ன கருத்தில் ஒரு சிறு குழப்பம் உள்ளது. பெருமானாரை குரான் ஷரீஃப் நற்பண்புகளுடையவராக மாற்றியதா? அப்படி என்றால் பெருமானாரிடத்தில் குரான் ஷரீஃபுக்கு முந்தைய வாழ்க்கையில் நற்பண்புகள் ஏதும் இல்லாமல் இருந்ததா? என்பதே அந்த குழப்பமாக இருக்கலாம்.

உண்மையில் பெருமானார் அவர்கள் தன்னுடைய நாற்பதாவது வயதில் தான் தன்னை இறைதூதர் என்று அறிவிக்கிறார்கள். நபிபட்டம் வழங்கப்பட்டதற்கு முந்தைய காலகட்டத்திலேயே பெருமானார் அவர்கள் தெருவில் நடக்கும் போது அவர்களை சுட்டிகாட்டி "அதோ அல் அமீன் (நேர்மையின் இருப்பிடம்) செல்கின்றார் என்றும் அதோ அஸ்ஸாதிக் (உண்மையின் உறைவிடம்) போகின்றார் என்றும் மக்கா நகர மக்கள் மனமுவந்து கூறி வந்தனர்.

அல் அமீன் அஸ்ஸாதிக் போன்ற பட்டங்கள் நம்மூரில் கிடைக்கும் டாக்டர் பட்டங்கள் போன்று என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் உள்ளபடி அப்படி வாழ்ந்தார்கள். பெருமானாரின் வாழ்க்கையை படித்து பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை விளங்கும்.

சரி நான் சொல்ல வந்த செய்தி பெருமானாரை (ஸல்) குரான் ஷரீஃப் மேன்மேலும் பண்படுத்தியது என்பது தான் உண்மை. அது எப்படி என்பதை அடுத்தடுத்து வரும் அத்தியாயங்கள் விளக்குகிறது.

4

அந்த காலத்தில் மக்கா நகர மக்கள் தியானத்தில் மூழ்க தனிமையை நாடி மலை குகைக்கு செல்வது வழக்கம். அப்ரஹா என்பவன் யானை படையுடன் மக்காவில் அமைந்துள்ள தேவாலயத்தை இடிக்க வந்த போது பெருமானாரின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் தனிமையை நாடி ஹீரா குகையிலிருந்து விட்டு தான் திரும்பினார்கள். 

அப்படி தான் பெருமானாரும் தனிமையை நாடி ஹீரா எனும் மலை குகைக்கு சென்றார்கள். இரவு பகல் பாராமல் நாள், மாதம், வருடம் தெரியாமல் விளிப்பு நிலையில் இருக்கிறோமா உறக்க நிலையில் இருக்கிறோமா அல்லது இரண்டுக்கும் இடைபட்ட நிலையில் இருக்கிறோமா என்று கூட தெரியாமல் அந்த இருளில் தவம் செய்தார்கள். 

அப்போது ரமலான் மாதம், நள்ளிரவு, தேய்பிறை, ஒளிப்பிழம்பான உருவம் ஒன்று அவர்கள் முன் தோன்றியது, பெருமானார் (ஸல்) அந்த ஒளிப்பிழம்பை பார்த்து பயந்து நடுங்கினார்கள்,  பேச துணியவில்லை, என்ன செய்வது என்றே விளங்க வில்லை, எனினும் சில நாட்களாகவே அந்த உருவம் தான் தன்னை கனவிலும் நினைவிலும் பிடிக்க வந்த  அதே உருவம்  என்றும் அதுவே இப்போது முழுமையாக தன்னிடத்தில் காட்சியளிக்கிறது என்பதையும் உணர்ந்தார்கள். 

அந்த உருவம் அவர்கள் முன் வந்து, "ஓதுவீராக!" என்று கூறியது

'எனக்கு ஓத தெரியாதே..' என்றார்கள் எழுத படிக்க தெரியாத பெருமானார் (ஸல்) அவர்கள்

அந்த உருவம் அவர்களை இறுக கட்டி அணைத்தது. இதயத்தோடு இதயம் இணைத்தது. (இதை தான் சூபியாக்கள் (இறையன்பர்கள்) இதயத்திலிருந்து இதயத்திற்கு என்று கூறுகிறார்கள்)

இப்படியாக மேலே கூறியபடி மூன்று முறை நடந்த பிறகு குரான் ஷரீஃபின் முதல் அத்தியாயமானது அந்த உருவத்தில் தோன்றிய ஜிப்ரீல் (அலை) அவர்களால் ஓதிக் காண்பிக்கப்பட்டது. அதையே பெருமானாரும் ஓதினார்கள்.

ஒதி முடித்த பிறகு அந்த உருவம் மறைந்து விட்டது. அந்த நிலையில் பெருமானாரின் நிலையை சொல்லவே வேண்டாம். அச்சமும் திடுக்கமும் நிறைந்தவர்களாக ஹீரா குகையை விட்டு வீட்டிற்கு வந்து கதவை தட்டி அன்னை கதீஜாவிடம் "என்னை போர்த்துங்கள்!" என்று ஏக்கத்திலும் பயத்திலும் சொன்னார்கள்.

எந்த ஜிப்ரீல் (அலை) அவர்களை முதன் முதலில் பார்த்த போது பயந்து நடுங்கினார்களோ அதே ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு நம்பிக்கை, இஸ்லாம் மற்றும் முக்கியமாக இஹ்ஸான் பற்றியும் பெருமானார் (ஸல்) அவர்கள் விளக்க முடிந்ததற்கு காரணம் அதே குரான் ஷரீஃப் தான். (இதனை பற்றி விளக்கமாக இங்கே எழுத முடியாதமைக்கு வருந்துகிறேன்)

5

இப்படியாக குரான் ஷரீஃப் பல் வேறு சமயங்களில் அதாவது குறிப்பிட்ட ஒரே தடவையாக அல்லாமல் பெருமானார் (ஸல்) அவர்களின் இறுதி 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்டது.

பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், முந்தைய தூதுவர்கள் மற்றும் பிறர்களின் வாழ்க்கை சரித்திரங்கள், இறைவனை பற்றி அவனின் வல்லமை, ஆற்றல், அழகிய திருநாமங்கள்  பற்றிய வசனங்கள், சட்ட திட்டங்கள், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டல்கள் இப்படியாக மனிதனுடைய அறிவு ஆற்றலுக்கும் ஆன்மீக வாழ்விற்கும் உதவும் வசனங்களை கொண்டவையாக இறக்கியருளப்பட்டது.

இதில் உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்று வரும் போது ஒரு முறை உஹது யுத்தத்தின் போது சத்தியத்தின் எதிரிகளால் பெருமானாரின் பல் ஒன்று உடைந்து விட்டது. பெருமானார் (ஸல்) அவர்களின் முகம் எங்கும் இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அப்போது அதை துடைத்துக் கொண்டிருந்த அவர்கள், "தங்களிடம் அனுப்பப்பட்ட தூதரின் முகத்தை இப்படி உதிரத்தால் கோரப்படுத்தும் இவர்கள் எவ்வாறு வெற்றியடையப் போகிறார்கள்?" என்று வருத்தத்தோடு கூறினார்கள்.

இங்கே கவனிக்க வேண்டியது பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களாக முன் வந்து நான் தான் தூதுவர் என்று கூறவில்லை, அவர்களை இறைவன் அவ்வாறு தேர்ந்தெடுத்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுமாறு கேட்டுக் கொண்டான். அதற்காக அவர்கள் எந்த கூலியையும் மக்களிடம் பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இறைவனுக்காக அனுப்பப்பட்ட அவர்களை மக்கள் இவ்வாறு துன்புறுத்துகிறார்களே என்ற வருத்தத்தில் அவர்கள் அவ்வாறு கூறிவிட்டார்கள்.

ஆனால் இறைவனிடமிருந்து இப்படி செய்தி வந்தது, "உபதேசம் செய்வதை தவிர்த்து அவர்கள் விஷயத்தில் உமக்கு வேறு எந்த பொறுப்பும் கிடையாது!" 

இன்னொரு இடத்தில் பெருமானார் (ஸல்) அவர்களை பார்த்து, "உமக்கு ஏற்பட்ட துன்பங்களை சகித்துக் கொண்டு பொறுமையோடு செயலாற்றும்" என்றும் இறைவன் கேட்டுக் கொள்கிறான்

இப்படியாக பெருமானார் அவர்களின் சிறு சிறு செயல்களுக்கு எல்லாம் இறைவன் உடனே எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி விடுவான்.

பெருமானார் (ஸல்) அவர்களும் இறை கட்டளைக்கு அறிவுரைக்கு இணங்கி செயலாற்றி வெற்றியும் பெற்றார்கள்.

பெருமானாரை குரான் ஷரீஃப் மூலமாக பண்படுத்திய இறைவன், "நீர் சிறந்த குணசீலர்.." என்று சான்றிதழையும் அதே குரான் ஷரீஃபிலேயே வழங்கி விட்டான்.

இப்போது நான் இரண்டாவது மற்றும் மூன்றாவது அத்தியாயத்தின் இறுதியில் சொன்னதன் பொருள் விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.

6

குரான் ஷரீஃபிலே அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? முஹம்மது தன் வாயாலேயே தான் சொல்கிறார். இது இறைவனின் வார்த்தையன்று என்றும் தனது வாய்க்கு வந்தவாறு சொல்லினர்.

ஆனால் இப்படி பொய்யுரைத்தவர்களை அல்லது ஏற்க மறுத்தவர்களை பார்த்து இறைவன் குரான் ஷரீஃபின் மூலமாகவே சவால் விடுத்தான். நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் இதை விட சிறப்பான ஒரு வேதத்தை கொண்டு வாருங்கள் என்றும் அப்படி கொண்டு வரவே முடியாது என்றும் கூறினான். பிறகு ஒரு பத்து அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் என்றான், அதுவும் முடியாது போகவே ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் என்றும் சவால் விடுத்தான். 

இறைவன் சவால் விடுத்தது அரேபிய இலக்கிய புலமையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றெல்லாம் சொல்வார்களே அவர்களிடத்தில். அத்தகைய இலக்கிய மேதைகள், கவிஞர்கள் படித்து பார்த்தனர்.

இன்னா அஃதய்னா கல் கவ்ஸர்!
ஃப ஸல்லி லி ரப்பிக்க வன்ஹர்!
இன்ன ஷானி அக ஹுவல் அப்தர்

- குரான் ஷரீஃப் 108 : 1 - 3

இத்தகைய அழகும் ஆழமும் இலக்கிய நடையும் இலக்கன பிழையில்லாமையும் உள்ள அத்தியாயத்திற்கு போட்டியாக அவர்கள் ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வர முயன்றார்கள்;

அவர்களால் இப்படி தான் கடைசியில் கொண்டு வர முடிந்தது, உண்மையில் குரான் ஷரீஃபிடம் சரணடைய முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும்

மா ஹாதா கலாமுல் பஷர் (இது நிச்சயமாக மனிதனுடைய சொல்லன்று)

7

இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரியான அபுஜஹ்ல் தீப்பொறி கக்கினான், ".. முஹம்மதின் தலையை கொன்று வருபவர்களுக்கு என்னிடமிருந்து நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பு.." என்று கஃபாவின் ஹூபல் சிலையின் முன்னே ஆணையிட்டு சத்தியம் செய்தான்.

முப்பத்து மூன்று வயதுடைய இளைஞர் உருவிய வாளுடன் பாய்ந்து சென்றார் முஹம்மதின் தலையை கொய்து வருவதற்கு. வழியில் எதிர்பட்டவர் "எங்கே செல்கின்றீர்?" என்று கேட்டதற்கு "முஹம்மதின் தலையை துண்டிக்க" என்றார் அந்த இளைஞர்.

வழியில் எதிர்பட்ட அவரோ, "முஹம்மதின் தலையை துண்டிப்பது இருக்கட்டும், உம்முடைய தங்கையும் மைத்துனரும் முஹம்மதின் மார்க்கத்தில் சேர்ந்து விட்டனரே.." என்றதும் முஹம்மது நபிகளின் இல்லம் நோக்கி விரைந்த கால்கள் அவர் தம் தங்கையின் இல்லம் நோக்கி விரைந்தது அப்போது.

கதவு தாளிடப்பட்டிருந்தது. உள்ளே பேச்சுக் குரல். ஒட்டுக் கேட்டார். கப்பாப் என்பவர் குரான் ஷரீஃபை அழகொழுக ஓதும் குரல் கேட்டது. அந்த ஒலி நாதத்தில் லயிப்பு ஏற்பட்டு கதவை தட்டி உள்ளே நுழைந்து தங்கையிடம் என்ன "ஓதிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டார்

தங்கையும் மைத்துனரும் நடுக்கத்தில். கப்பாப் பயந்து போய் மறைவில். இளைஞரின் கோபம் தாக்குதலை தொடுத்தது. காயத்துடன் தங்கை இஸ்லாத்தில் சேர்ந்து விட்டதாகவும், ஓதிக் கொண்டிருந்தது குரான் ஷரீஃபின் வசனங்கள் என்றும் சொல்லவே அந்த குரான் ஷரீஃபின் வசனங்களை தன்னிடம் காண்பிக்குமாறு வலியுறுத்தி அதனை ஓதினார். 

கண்களில் கண்ணீர் வழிந்தோடியது, ஓதிக் கொண்டிருக்கும் போதே, "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்று அவர்களை அறியாமலேயே வாய் விட்டு கூறினார்கள். 

அப்படி கூறியது இஸ்லாத்திற்கு மாறிய தனது அடிமையை அடித்து ஓய்ந்து, "உன் மீது இரக்கப்பட்டு நான் உன்னை அடிப்பதை விடவில்லை நான் களைத்துப் போனதால் அடிப்பதை நிறுத்தி விட்டேன்" என்று முன்பு கூறி தங்கை வீட்டில் மேற்கூறிய சம்பவத்தில் இஸ்லாத்தை தழுவி பிற்காலத்தில் இஸ்லாமிய ஆட்சியில் இரண்டாவது கலிபாவாக (ஆட்சி தலைவர்) இஸ்லாமிய உலகை ஆண்ட ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் தான்.

இவ்வாறு குரானின் ஒலியே எத்தனையோ பேர்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்து இருக்கிறது.

8

குரான் ஷரீஃபில் நபியே நீர் கூறும் என்று ஆரம்பிக்குமே தவிர நபி இன்னது கூறினார் என்று இருக்காது. அதாவது குரானில் இருப்பது அனைத்துமே இறைவனின் பேச்சு தானே தவிர முஹம்மது நபிகளின் பேச்சு கிடையாது

குரான் ஷரீஃப் அரபி மொழியில் இறக்கியருளப்பட்டது. அந்த அரபி மொழி வேத மொழி மட்டுமல்ல இன்றைக்கு சவுதி அரேபியா மட்டுமின்றி துபாய் ஈராக் முதல் மொரோக்கோ வரை வழக்கு மொழியாகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான மொழிகளில் குரான் ஷரீஃப் இருந்தாலும் அவை எல்லாம் மூல மொழியான அரேபிய மொழியிலிருந்து அருளப்பட்டதை பதிவு செய்து பிற்காலத்தில் முறையாக தொகுக்கப்பட்டு அப்படியே ஒரு புள்ளியேனும் மாற்றமில்லாமல் மொழிமாற்றம் செய்யப்பட்டவையே ஆகும்

இன்னும் சில வார்த்தைகள், வேதங்கள் மக்களுக்காக என்றால் அதை ஏன் மக்களிடமிருந்து மறைக்க வேண்டும். ஒரு வேளை திருமறை என்பதில் வரும் 'மறை' என்பதை தவறாக 'மறைத்து வைப்பது' என்று புரிந்து கொண்டார்களோ என்னவோ?


ஆனால் குரான் ஷரீஃபை மக்களுக்கு எடுத்து கூறும்படியும் மக்கள் அனைவரும் ஓத வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஆகவே குரான் ஷரீஃபை மக்களுக்கு போதிக்க மதில் சுவர் மேல் எல்லாம் ஏற வேண்டியதில்லை. எல்லா சம்பூகன்களுக்கும் ஓதுவதற்கு அனுமதியுண்டு. குரான் என்றாலே "ஓதக்கூடியது" அல்லது "ஓதவேண்டியது" என்று தான் பொருள்

நான் எனது ரிபோர்டிங் ஆபிஸருடன் பள்ளிவாசலுக்கு நோன்பு திறக்க போயிருந்தேன். அங்கு கிராஅத் ஓதினார்கள். அதை கேட்டவுடன் இஸ்லாம் அல்லாதவரான அவர் கண் கலங்கி விட்டார். 


குரான் ஷரீஃப் அற்புதம் என்றால் அது வினைத் தொகையை போன்று அற்புதம் நிகழ்த்தியது, நிகழ்த்தி கொண்டிருக்கிறது, இன்னும் தொடர்ந்து நிகழ்த்தி கொண்டு தானிருக்கும்.

No comments: