Thursday, January 7, 2016

டிரஸ் கோட் - உடை கட்டுப்பாடு - (ஹிஜாப் அல்லது பர்தா)

இந்த பதிவுக்கு போறதுக்கு முன்னாடி மூன்று செய்திகள்

1. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

2. ஒரு பின்னூட்டத்தில் "இஸ்லாத்தின் மீது மரியாதை உள்ளது" என்று எழுதிய தோழர் சுகுணா திவாகருக்கு கோடி நன்றிகள்.

3. இஸ்லாமியர்களும் பெரியாரிஸ்டுகளும் இணையும் புள்ளி - என்ற ஒரு பதிவு கூட எழுத வேண்டி உள்ளது, இன்ஷா அல்லாஹ் வரும்..

---------------------------------------------------------------------------------------

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு சாயங்காலம் வேலையிடத்தில் என்னால் ஒரு  தேர்வு நடத்த முடியாமல் அதாவது exam invigilation செய்ய முடியாமல் போனது. என் வீட்டில் ஒரு அவசர தேவை இருந்ததால் தான் நான் அவ்வாற தேர்வு நடத்தாமல் வீட்டிற்கு அவசரமாக போக வேண்டியிருந்தது. 

ஆகையால், அன்றைய தினம் விடுப்பிலிருந்த எனது சக-ஊழியரை தொலைபேசியில் அழைத்து எனது பணியை அவர் ஏற்று நடத்தும் படி (take over) சொல்லி விட்டு நிர்வாக ஊழியர்களிடமும் நான் இன்னவரை தேர்வு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று தெரிவித்து விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.

அப்போது வேலையாக வெளியிலிருந்து அப்படியே அலுவலகத்துக்கு தேர்வு நடத்த வந்த அந்த சக-ஊழியர் காலில் சப்பாத்து போடாமல் செருப்பு அணிந்தவாறே வந்து விட்டார்.  அதை பார்த்த எங்களது மேலதிகாரி கன்னாபின்னாவென்று அவரை சத்தம் போட்டு திட்டி விட்டார்.

அதெப்படி நீ செருப்பு போட்டுட்டு வரலாம்? ஒரு நன்னெறி (ethics)இல்லையா, ஒழுக்கம் (discipline) வேண்டாமா? என்று இன்னும் என்னென்னவோ சொல்லி சத்தம் போட்டு திட்டி விட்டார்.

அவர் சத்தம் போட்டது சரியா? தவறா? என்று வாதிப்பதற்கு அல்ல இந்த பதிவு. 

அது மட்டுமல்லாமல் செருப்பு போட்டு கொண்டு வந்து விட்டதால் இவர் எப்படி ஒழுக்கம் தவறி விட்டார், அப்போ செருப்பு போட்டுட்டு வர்ரவங்க எல்லாம் ஒழுக்க கேடானவர்களா என்று அவரை சண்டை பிடிப்பதற்கு அல்லது தாழிக்கும் கவிதை எழுதுவதற்கு கூட அல்ல இந்த பதிவு.

அப்புறம் வேறு எதற்காம்? - நியாயமான கேள்வி - 

ஒவ்வொரு இடத்திற்கும் அந்தந்த இடத்திற்கு என்று உடுத்த தகுந்த ஆடை உள்ளது என்பதே இங்கே நாம் கவனிக்க வேண்டியதாக உள்ளது என்பதை சொல்லவே இந்த பதிவு.

பள்ளிகூடத்துல படிக்கும் போது யுனிஃபார்ம் எனப்படும் சமச்சீர் சீருடை கொடுப்பார்கள், அதை அணியாமல் வருபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை (disciplinary action) கூட எடுப்பதுண்டு. 

அதை எல்லாம் தவறு என்று சொல்லி விட முடியுமா? 

அல்லது யுனிஃபார்ம் போடாதவர்கள் எல்லாம் ஒழுக்க கேடானவர்கள் இல்லை என்று பள்ளிகூட நிர்வாகத்திடம் சண்டை தான் போட முடியுமா?

கட்டுமான தல வேலை, கப்பல் பட்டறை வேலை, உற்பத்தி துறை, பெட்ரோல் இரசாயன துறை வேலைகளுக்கு கூட பார்த்தீர்கள் என்றால் அதில் வேலை செய்யும் ஊழியர்கள் அந்தந்த வேலைக்கு என தகுந்த ஆடைகள் என்று உள்ளது, அதை மட்டுமே அணிய வேண்டும்.

உதாரணமாக, பாதுகாப்பு தலைக்கவசம், பாதுகாப்பு காலணி இவைகளை எல்லாம் கட்டாயமாக (mandatory) அணிய தான் வேண்டும்.
அப்படி பாதுகாப்பு உடைகளை போட்டு கொண்டு வேலை செய்வது அவர்களுக்கு அசௌகரிய குறைச்சலாக இருக்கலாம், 

அதை போடுவதும் போடாமல் விடுவதும் அவர்களவர்களது விருப்பம் என்று கூட விட்டு விடலாம். ஆனால் அரசாங்கம் இத்தகைய ஆடை கட்டுப்பாட்டை விதியாக்கி உள்ளது. ஏன்..?

உதாரணமாக இரசாயன உற்பத்தி துறையில் வேலை செய்பவர்கள் ஒரு வகை தீ தடுப்பு (fire retardant - அந்த ஆடையில் தீச்சுடரின் படம் கூட போட்டிருக்கும்) ஆடையை கட்டாயமாக அணிய வேண்டும். 

வேலையிடம் பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் இந்த தீ தடுப்பு ஆடை பற்றிய விதிகளே தேவை இல்லை என்று விட்டு விட முடியாது. உலகத்திலேயே மிக சிறந்த பாதுகாப்பான இடமாக இரசாயன தொழிற்சாலை அமைந்து இருந்தாலும் நாம் இத்தகைய தற்காப்பு ஆடைகளை அணிவதை தவறு என்று வாதிட முடியாது.

இந்த ஆடை கட்டுப்பாடு வேண்டுமானால் ஆபத்துகளை தடுக்க எடுக்கும் நடவடிக்கை வரிசைகளில் (hierarchy of control) கடைசி தடுப்பாக (last line of defence ஆக) இருக்கலாம், ஆனால் இதுவும் அவசியம் தான் என்பதை மறுக்க முடியாது.

இன்னும் மருத்துவர்களை பார்த்தீர்கள் என்றால் அறுவை சிகிச்சை செய்யும் போது உடல் முழுவதையும் மறைக்கும் ஹிஜாப் அணிந்து இருப்பார்கள், தலைமுடியையும் மறைத்திருப்பார்கள், இதெல்லாம் சுகாதாரம் (hygiene) என்று ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். 

இல்லை, இந்த மருத்துவச்சி ஹிஜாப் அணிந்திருக்கிறார், நான் இவரிடம் அறுவை சிகிச்சை செய்ய மாட்டேன் என்று சொன்னால் ஒருத்தரிடமும் நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவே முடியாது.

இன்னும் கறி, மீன் வெட்டுபவர்கள், பெரிய பெரிய ஹோட்டலில் சமைப்பவர்கள் எல்லாம் கூட உடலை மூடும் மேலங்கிகளும் தலை மூடிகளும் அணிந்திருப்பார்கள். எல்லாம் சுகாதாரம் தான். 
அதே போல தான் இஸ்லாம் இந்த சமுதாயத்தோடு கலந்த வாழ்க்கை வாழும் போது இத்தகைய ஆடை கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இது வேண்டுமென்றால் லாஸ்ட் லைன் ஆஃப் டிஃபன்சாக இருக்கலாம், ஆனால் இதுவும் நிச்சயமாக ஒரு பாதுகாப்பு அம்சம் தான், நல்ல சுகாதாரமான ஆடை தான்.

ஆண்களுக்கு காம வெறி வந்தால் இந்த இடம் (சமீபத்திய கருவறை உதாரணங்களை பொருத்தி பார்த்து கொள்ளவும்) என்று கிடையாது, பெண்களின் சம்மதம் தேவை என்ற விதிகள் கூட கிடையாது அவளின் சம்மதமின்றி கூட பலாத்காரம் செய்து கூட அவனது கீழான இச்சையை அல்லது வெறியை தீர்த்துக் கொள்ள முடியும். இதை எழுதுவதற்கே கஷ்டமாக தான் உள்ளது, ஆனால் அது தான் நிதர்சனம்.

இன்னும் நாட்டில் எத்தனை கற்பழிப்புகள், ஈவ் டீசிங்குகள் எத்தனை எத்தனை பிரச்சினைகள். இத்தனை பிரச்சினைகளுக்கு நவநாகரீக ஆடை முறையா தீர்வென்று சொல்கிறீர்கள்?

மரியாதைக்குறிய சகோதரி காயத்ரி சித்தார்த் அவர்களின் கவிதை ஒன்றை வாசித்த ஞாபகம் கூட வருகிறது, அதில் ஓரிடத்தில் எழுதியிருப்பார், ஒரு  ஆண்  அல்லது  காதலன் "நேர்மையாக முகம் பார்த்து" பேசியதாக எழுதியிருப்பார்.

எங்க ஹஜ்ரத் கூட என்கிட்டே சொன்னார்கள், 'பொம்பள புள்ளைங்க கிட்ட நீ பேசுனா முகத்த தவிர வேற எங்கேயும் ஒன் கண்ணு ஓட கூடாது.." என்று.

ஆனால் வேலையிடம் எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும் பாதுகாப்பு ஆடை அவசியம் என்று எப்படி நான் சொன்னேனோ அதே நியாயம் தான் ஆண்கள் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக உத்தமாமானவர்களாக இருந்தாலும் (ஒரு வாதத்திற்காகவே வைத்துக் கொண்டாலும்) இந்த மறைப்பு ஆடை (பர்தா) மிகவும் அவசியம். அது தான் லாஸ்ட் லைன் ஆஃப் டிஃபன்ஸ்.

சட்டம் என்ற படத்தில் அறை குறை ஆடையில் இருக்கும் மாதவியிடம் கமல்ஹாசன் சொல்வார் "பொருளை தொறந்து வச்சிருந்தா திருடன் வரத்தான் செய்வன்" என்று. 

அதுவும் தவிர, உடலை, தலை முடியை மறைத்து ஆடை அணிந்தால் இந்த கவுரவமான வேலை செய்ய முடியாது என்று எந்த வேலையாவது இருக்கிறதா?

ஈரான் நாட்டில் பெண்கள் மறைக்கும் ஆடை அணிந்து தீயணைப்பு படையினராக இருக்கிறார்கள், பத்திரிக்கை காரர்களாக இருக்கிறார்கள், கடைகளில் பணிபுரிகிறார்கள், மருத்துவர்களாக, வக்கீல்களாக இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி ஜெமிமா என்பவர் கூட "பர்தா அணிந்தவர்களே உண்மையான விடுதலைவாதிகள். பர்தா மூலமாக அடக்கியாளப்படுகிறார்கள் என்பதில் உண்மையில்லை" என்று சொன்னதை படித்தது நினைவிற்கு வருகிறது.

நான் எனது வகுப்பில் வேலையிட பாதுகாப்பை பற்றி நடத்திக் கொண்டிருக்கும் போது ஆடைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தேன். 

வேலைக்கு போகும் போது எப்படி உடுப்புகள் அணிந்து கொண்டு போக வேண்டும் வீட்டில் இருக்கும் போது அணியும் ஆடைகளை போன்று வேலையிடத்தில் அணியக் கூடாது என்பதை புரிய வைக்கலாம் என்று ஒரு கேள்வி கேட்டேன்.

அதாவது, 'பொண்ணு பாக்க போவும் போது எப்படி போவணும்?' என்று கேட்டேன்.

என் வகுப்பில் இருந்த ஒரு குசும்பன் வாய வச்சிகிட்டு சும்மா இல்லாம இப்படி சொன்னார், "சார், நான் பொண்ணு பாக்க போவும் போது பொண்டாட்டியோட தான் போவேன்.." என்று

இவரை என்ன செய்யலாம்..?

நான் சொன்னேன், "நான் உங்க புள்ளைக்கு கேக்கல... உங்களுக்கு கேக்குறேன்.." என்று

No comments: