Thursday, January 7, 2016

ஹஜ்ரத் கௌதுனா (றலி)

இன்றைக்கு ஒருவர் எஸ் எம் எஸ் அனுப்பினார், அதில், ‘உயிரோடிருக்கும் போது பாம்பு எறும்பை தின்கிறது, பாம்பு இறந்த பிறகு எறும்பு பாம்பை தின்கிறது - காலம் மாறிக்கிட்டே இருக்கும் மறந்துவிட வேண்டாம்” என்று (ஆங்கிலத்தில்) எச்சரிக்கும் தொனியில் இருந்தது.

நான் சேமித்த வைக்காத எண்களை கொண்ட அந்த நண்பருக்கு நான் திருப்பி அனுப்பினேன், “சரி, நான் இப்போ பாம்புங்கறீங்களா? அல்லது எறும்புங்கறீங்களா?” என்று திருப்பி அனுப்பினேன்.

அப்புறம், ‘சாரி சார், நான் ஜஸ்ட் ஷேர் பண்ணினேன், அவ்வளவு தான்..” என்று பதில் அனுப்பியிருந்தார்.

அவர் அனுப்பிய செய்தியில் உண்மை இருக்கிறது. இன்றைக்கு வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க, அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள மனிதன் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறான்.

ஒழுக்கம், பண்பு எல்லாம் பழைய சரக்காகி விட்டது. மனிதநேயமோ பழங்கதையாகி விட்டது.

கை. கால், கண், இதயம் உள்பட எல்லாம் இனி இயந்திரத்திலேயே செய்து விடலாம். அப்படி இல்லை என்றாலும் கவலையில்லை அதுவே இயந்திரங்களாக தான் காட்சியளிக்கிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், “மனித உடலில் ஒரு துண்டுச் சதை இருக்கிறது; அது நல்ல நிலையில் இருந்தால் தான் உடல் முழுவதுமே ஆரோக்கியமாக விளங்கும். அது கெட்டு சீரழியுமானால் உடல் உறுப்புகள் செயலிழந்து விடும். இது குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.”
அந்த சதைத் துண்டு மனித இருதயமே” என்று.

மனித இருதயங்களை எச்சரிக்கையோடு சரி செய்த சூஃபியாக்கள் வகுத்த மெய்ஞ்ஞான வழிமுறைகளுக்கு ‘தஸ்ஸவுஃப்பு” என்று பெயர். ‘தஸ்ஸவுஃப்பு’க்கு ‘தவ்ஹீது’ எனும் இறை ஓர்மையே மூலக்கரு.

‘தவ்ஹீது’ எனும் இந்த கோட்பாடு இறைவனோடு ஒன்றாக கலந்துவிடுவது அல்ல இறை பண்புகள் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருதயத்தை தூய்மைபடுத்திக் கொள்வதே தவ்ஹீது எனப்படும்.

சூஃபியிச குழந்தை பிறந்தது அரேபியாவில் தான் என்றாலும் அது அதிக போஷாக்குடன் வளர்ந்தது பாரசீகத்தில் தான்.

இந்த சமயத்தில் இஸ்லாம் அதன் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வெறும் அசைவற்ற உடலாக இருக்கும் நிலை ஏற்பட்டது. அரசாங்கங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப சட்டத்தை வளைக்க ஆரம்பித்தனர். உலமாக்கள் என பெயரளவில் உள்ளோர் அரசாங்கத்திற்கு ஒத்தூதீனர்.

இதனை தட்டிக் கேட்ட சூஃபியாக்களை ஷரியத்தை விட்டு விலகி விட்டதாக குறை கூறி ஷரியத்திற்கு பொருந்தாத வகையில் தண்டனையும் அளித்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை இமாம் அல்-கஸ்ஸாலி அவர்களையே சாரும். குரான் ஷரீஃப், ஹதீது ஆகியவற்றை வழுவறக் கற்றதோடு மக்களுக்கு புரியும் வகையிலும் உலமாக்களுக்கு புத்தி புகட்டும் வகையிலும் தனது ‘இஹ்யா உலூமித்தீன்’ எனும் சூபியாக்களின் வாழ்க்கையை விளக்கும் கருத்துக் கரூவூலத்தை உலகுக்கு படைத்தார்கள்.

திருக்குரான் ஷரீஃபுக்கும், ஹதீதுகளுக்கும் அவர்கள் கொடுத்த ஆழ்ந்த விளக்கம் சூஃபியிசத்தின் காப்பியங்களாகும்.

இவர்களின் காலம் கி.பி. 1058 லிருந்து 1111 வரை.

இவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தான் குத்பு நாயகம் மஹ்பூபே சுபுஹானி மஹ்சூகே ரஹ்மானி ஹஜ்ரத் கௌதுனா (றஹ்) அவர்களும் வாழ்ந்தார்கள்.

இவர்களின் காலம் கி.பி 1078 லிருந்து 1166 வரை.

- தொடரும்..

படிக்க வேண்டியவை:

http://sufibooks.info/Sufism/Memorial_of_Saints_Muslim_Saints_and_Mystics-Attar.pdf 
-------------------------
ஸூரத்து ஸாத் - வசனங்கள் 71 - 85

(நபியே! நினைவு கூர்வீராக!) “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்:


“நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்);


அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள்.


இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.


(இப்லீஸென்று யாரும் இல்லை, இறைவன் மனிதனை படைத்து அவனது ஆவியை மனிதனிடத்தில் ஊதி அவனை கண்ணியப்படுத்திய நிகழ்வு வரை)


“இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.


“நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.


(இப்லீஸாகிய அவன் தான் மேலானவன் என்பதற்கு ஒரு காரணத்தை கண்டு பிடிக்கிறான். 
அதாவது களி மண்ணால் படைக்கப்பட்ட ஒருவரை விட நெருப்பால் படைக்கப்பட்ட ஒருவர் மேலானவர் தானே என்கிறான். இது ஒரு வகையில் சரிதான். 
ஆனால் உண்மையிலேயே இங்கே பார்க்க வேண்டியது களிமண்னா அல்லது நெருப்பா என்பது அல்ல. 
மாறாக இறைவனால் பிரத்தியேகமாக ஆவி ஊதப்பட்ட களிமண்னா அதாவது இறைவனுடைய இயல்புகளின் ஒரு துளியை இறைவனாலேயே கொடுக்கப்பட்ட களிமண்னா அல்லது நெருப்பின் இயல்புகளை மட்டுமே கொண்ட நெருப்பா என்பதை தான். 
இப்லீஸின் கூட்டத்தார்கள் பார்க்க தவறுவதும் இதை தான்)


(அப்போது இறைவன்) “இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்” எனக் கூறினான்.


“இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்” (எனவும் இறைவன் கூறினான்).


“இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என்று அவன் கேட்டான்.


“நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே” என (அல்லாஹ்) கூறினான்.


“குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில்” (உனக்கு அவகாசம் உண்டு எனவும் கூறினான்).


அப்பொழுது: “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.


(நன்றாக கவனியுங்கள் வழிகெடுப்பதற்கு யாருடைய கண்ணியத்தை சாமர்த்தியமாக கொள்கிறான் என்பதை - இப்பொழுது புரிந்திருக்குமே இறைவனுடைய கண்ணியத்தை உயர்த்துவதாக புலம்புவதெல்லாம் யாவரையும் வழிகெடுக்கத்தான் என்பதை)


“(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர” (என்றான்).


(இப்லீஸ் ஒப்புக் கொள்கிறான் வழிகெடுப்பேன் தான், ஆனால் எல்லாரையும் வழிகெடுக்க முடியாது, யாரை என்றால்.. அந்தரங்க சுத்தியான் உன் அடியார்களைத் தவிர.. 


அந்தரங்க சுத்தியான அடியார்கள் யார்?


அவர்களுடைய கூட்டத்தில் நாம் எப்படி இணைவது?


அவர்களுடைய வழியை எப்படி கண்டுபிடிப்பது?


இதற்கு தான் ஃபாத்திஹா சூரா - 6 வது வசனம் கீழ்கண்டவாறு வருகிறது. 


(அது) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.)


(அதற்கு இறைவன்:) “அது உண்மை; உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான்.


“நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” (என்றான்)


-----------------------------------------------------------------------------------------------
மெய்ன்ஞ்ஞான பேரரசரான ஹஜ்ரத் கௌதுனா (றஹ்) அவர்கள் உலகில் இருக்கும் அத்தனை மெய்ஞ்ஞான தரீக்காக்கள் அத்தனைக்கு தாயான ’காதிரிய்யா தரீக்கா’ எனும் மெய்ஞ்ஞான பாதையின் ஸ்தாபகர் ஆவார்கள்.


வாளை கொண்டு இஸ்லாம் பரப்பட்டதாக அவிழ்த்து விடும் புழுகு மூட்டைகளை இன்றளவும் பொய்கள் என்று எடுத்துரைப்பதற்கு காதிரிய்யா தரீக்காவே வரலாற்று சான்றுகளாக உள்ளன. 


இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா இன்னும் ஏராளமான நாடுகளிலும் இஸ்லாம் வேரூன்றி நிலைத்து நிற்பதற்குக் காதிரியா தரீக்காவே முக்கிய காரணமாக அமைந்து இருக்கின்றது.
(இந்த உண்மைதனை வரலாற்றாசிரியர்கள் பலர் குறிப்பாக ஹெச்.ஏ.ஆர். கிப் என்பவர் எடுத்துரைக்க தயங்கியதில்லை)


அந்தரங்க சுத்தியான அந்த கூட்டத்தை தவிர மற்றவர்களை வழிகெடுப்பதாக இப்லீஸ் சொல்கிறான். தன் உள்ளத்தை சுத்தம் திக்ரின் மூலம் செய்யும் அந்த அந்தரங்க சுத்தியான கூட்டத்தை பார்க்கும் இப்லீஸின் கூட்டத்தாரின் கண்களுக்கு அன்று முதல் இன்று வரை எரிச்சலூட்டுவதாகவே இருந்து வருகிறது.

------------------

குரான் ஷரீஃப் வசனம்:

ஸூரத்துத் தாஹா - 42 வது வசனம்

”ஆகவே, நீரும் உம் சகோதரர்ரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்வீர்களாக! மேலும் என்னை நினைவு கூர்வதை விட்டும் சளைக்காதீர்கள். (... 
and do not, you both, slacken and become weak in My Remembrance)


இறைவன் மூஸா நபியை பிர்அவ்னிடம் அத்தாட்சிகளுடன் அனுப்பும் போது இறைவன் சொல்லி அனுப்பியது இது தான்.

 “ என்னை நினைவு கூர்வதை விட்டும் சளைக்காதீர்கள்”

நினைவு கூர்வது என்பது இறைவனின் அழகிய திருநாமங்களை நாவால் உச்சரிப்பது. அதாவது திக்ரு செய்வது.

மெய்நிலை கண்ட எங்கள் மெய்ஞ்ஞானி சொல்கிறார்கள்..

”...இறைவனை நினைவு கூர்ந்து துதிக்க முனையும் ஒருவர் துவக்கத்தில் இறைநாமத்தை நாவினால் உரக்க உச்சரிக்க வேண்டும். அதன் மூலம் படிப்படியாக இறைநினைவு உடல் முழுவதும் பரவி இருதயத்தைச் சென்றடைகிறது. பின்னர் அது ஆத்மாவைத் தொடுகிறது. மேலும் அது தொடர்ந்து சென்று இறை இரகசியங்களின் உறைவிடத்தையும் எட்டுகிறது. அதனையடுத்து இரகசியத்திலும் இரகசியமாக விளங்கும் ஆதிமூல வட்டத்தையும் அது சென்றடைகிறது...”

“...இதய உணர்வு அசைவுகள் வழியே இறைவனை நினைவு கூர்வதால் அல்லாஹ்வின் வல்லமையும் எழிலும் ஆகிய அத்தாட்சி உள்ளத்தே முகிழ்க்கிறது..”

இவ்வாறு இறைவனை நினைவு கூர்வதை விட்டும் சூஃபியாக்கள் ஒரு போதும் சளைத்ததில்லை.

சூஃபியாக்களை பொறுத்தவரை இறப்பு என்பது என்ன தெரியுமா?

இறைவனை மறந்திருப்பது தான்.

ஒரு விநாடியாவது அவர்கள் இறைவனை மறந்திருந்தால் அவர்கள் இறந்து விட்டதாகவே கருதினார்கள்.

அவர்கள் உறக்கத்தில் கூட இறைவனை மறப்பதில்லை...

அதனால் தான் பெருமானார் (ஸல்) அவர்கள்,

‘அறிந்தவர்களின் உறக்கம் அறியாதவர்களின் வணக்கத்தை விட சிறந்தது’

அறியாதவர்கள் இறைவனை இறைவணக்கத்தில் கூட நினைக்க வேண்டிய  முறைப்படி நினைப்பதில்லை

இதோ தீனை உயிர்ப்பித்தவர்களின் ஞான மொழிகள்...

”அறியாமையை மயக்கம் என்றும் உறக்கம் என்றும் கூறலாம். மயக்கத்தையும் உறக்கத்தையும் உதறிவிடுவோரே இருள் சூழாத இதயம் பெற்றிருப்பர்...”

”தூய உள்ளங்கள் தூங்குவதில்லை..”

”மெய்யடியார்களின் அகவாழ்க்கையில் உறக்கத்துக்கும், விழிப்புக்கும் இடையே வேறுபாடில்லை.”

இவர்கள் மெய்யடியார்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதை தன் அனுபவத்திலிருந்தே சொல்கிறார்கள்.

இவ்வாறு இறைவனை நினைவு கூர்ந்து பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்தது போல் தங்களை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார்கள்.

அவ்வாறு முழுமையாக ஒப்படைத்து விடுவதை பற்றி இந்த அவ்லியாக்களின் அரசர் குறிப்பிடுகையில்..

“ஒரு இறந்த உடல் எப்படி தன்னை குளிப்பாட்டுபவனின் கையில் ஒப்படைத்து விடுமோ அப்படி ஒரு அடியான் இறைவனிடம் தன்னை ஒப்படைக்க வேண்டும். அதுதான் சரியான தவக்குல்”

என்று கூறுகிறார்கள்.

அவர்கள் தங்களின் இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டதை பார்க்கும் எல்லா கண்களுக்கும் புலப்படுவதில்லை. அவர்கள் குகை வாசிகளை போன்றவர்கள்.

”...மேலும் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்.”

ஸீரத்து கஹ்ஃபு - 18வது வசனம்

நினைவு கூர்ந்து தங்களை முழுமையாக இறைவனிடம் ஒப்படைப்பதையே குறிகோளாக கொண்டவர்கள் இவர்கள்.

ஸூரத்து கஹ்ஃபு  28 வது வசனம்:

(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன்  இச்சையை பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகி விட்டது.”

மேலே கண்ட வசனம் அஸ்ஹாபுஸ் ஸுஃபா எனப்படும் திண்ணை தோழர்களை பற்றியது.

படிக்கவும்: http://www.sufiway.net/ar_org_Suf.html

திண்ணை தோழர்களின் சங்கிலித் தொடர் தான் சூஃபியாக்கள் என்றழைக்கப்பட்ட இறைநேசச் செல்வர்கள்.

அவர்களின் வழியில் அவர்களை விட்டும் நம் கண்களை திருப்பி விடாத வரம்பு மீறிய கூட்டத்தில் சேராதவர்களாக நம்மை இறைவன் காத்தருள வேண்டும்.
------------------------------------------------------------------------------------
ஹஜ்ரத் கௌதுனா (றஹ்) அவர்களின் மொழிகள்:

”தங்களின் தனித்தன்மை, தனிப் பேராற்றலை இன்னதென அறிந்து, சீரிய முறையில் செயல்படுவோரே இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவர்.”

”மனிதத் தன்மையை மாசுபடுத்துவோர் இழப்படைந்தவராகிறார்கள்.”

--------------------------------------------------------------------------------------

No comments: