Thursday, January 7, 2016

குரான் ஷரீஃபின் சவால்

இந்த பதிவு மரியாதைக்குரிய திரு கோ.வி.கண்ணனின் குரான் ஷரீஃபை புரிந்து கொள்ளுதல் என்ற எனது பதிவில் பின்னூட்ட கேள்விகளுக்கு பதில் எழுதும் முயற்சியாக எழுதப்படுகிறது.

கேள்வி 1. 
குரான் ஷரீஃபில் வரும் ‘இது போல் இன்னொரு குரான் ஷரீஃபை கொண்டு வருவது’ என்ற சவால் இன்னமும் அப்படியே இருக்கிறது என்று இஸ்லாமிய அன்பர்கள் (பிறரை) ஏளனம் செய்வது பற்றிய என் கருத்து என்ன?

கேள்வி 2
குரான் ஷரீஃபில் வரும் மேலே கூறப்பட்ட அந்த சவால்கள் பதினான்கு நூற்றாண்டுகளாகியும் யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை என்று விளக்கம் அளிக்கப்படுவதை பற்றி நான் என்ன நினைக்கிறேன்.

கேள்வி 3
அளவற்று (அல்லது எக்ஸ்ட்ராவாக) என்னை புகழுங்கள் என்று அல்லா கூறியதாக குரான் ஷரீஃபில் எங்காவது வசனம் உள்ளதா?

-----------------------------------------------------------------

இந்த பதிவில் முதல் இரண்டு கேள்விகளும் ஒரே திசையில் பயணிப்பதால் அதற்கு மட்டும் பதிலளிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு விஷயத்தை நான் சொல்லிக்கிறேன், 

அதுவும் தவிர முதல் இரண்டு கேள்வியில் எனக்கு பிடித்த விஷயம் நான் என்ன நினைக்கிறேன் என்று என் கருத்தை கேட்டது,  இது ஏன் எனக்கு பிடித்திருக்கிறது என்னை போய் கருத்து கேட்கிறீர்களே நான் பெரிய ஆளாயிட்டேன் என்ற பெருமிதத்தால் நிச்சயமாக அல்ல, 

மாறாக, குரான் ஷரீஃபை மொழி பெயர்க்கும் போது கூட ‘குரான் ஷரீஃப் இப்படி சொல்கிறது அப்படி சொல்கிறது’ என்று யாரும் சொல்ல மாட்டார்கள் ’தோராயமாக குரான் ஷரீஃப் என்ன சொல்கிறது என்றால்’ 'an approximation of the meaning of what the Quran says is ..' என்று தான் ஆரம்பிப்பார்கள்,

அதாவது நான் புரிந்து கொண்டதை என் கருத்தாக எழுதுகிறேன், ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடுவது போல் என் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல - மற்றவை உங்கள் கருத்து.
-------------------------------------------------------------------------

முதல் இரண்டு கேள்விகளிலும் ஒரு விஷயம் பிராதனமாக சொல்லப்படுவது என்னவென்றால் குரான் ஷரீஃபில் வரும் சவால் பற்றியது.

அந்த சவால் என்ன என்று விபரமாக அறிவதுடன் அது எந்த கட்டத்தில் வருகிறது என்பதையும் அலசுவது அவசியமாகிறது.

அரபுக்காரர்கள் சிலைகளை வணங்கினார்கள், செத்ததை தின்று கொண்டிருந்தார்கள், உறவுகளை துண்டித்தார்கள், அண்டை வீட்டுக்காரரை துன்புறுத்தினார்கள், பலவான்கள் பலவீனமானவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

இந்த காலகட்டத்தில் 40 வயதை கடந்த ஒருவர், எழுத படிக்க தெரியாதவர், ஒரு கவிதை கூட எழுதாதவர், ஒரு சொற்பொழிவை கூட ஆற்றாதவர், அல்-அமீன் (நேர்மையின் இருப்பிடம்), ஸாதிக் (உண்மையின் உறைவிடம்) (-முஹம்மது நபிகளை வசைக் கவிதைகள் இயற்றும் போது கூட அல்-அமீன் என்றே இயற்றினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்) என்ற பெயருடைய ஒருவர் தன்னை இறைவனின் தூதர் எனவும் தனக்கு இறைவனால் வேத வசனங்கள் இறங்கப்படுகிறது எனவும் கூறுகிறார்.

தேவ தூதர் என்றால் அது யூத குலத்தில் தான் பிறக்கும் என்றும் யூதர்கள் மட்டும் தான் அறிஞர்கள் என்றும் (நம் நாட்டு கதை மாதிரி இருக்குல்ல..! உயர் ஜாதியிலிருந்து பெரியார் வரைக்கும் எல்லோரும் ஞாபகத்துக்கு வருவார்களே..!) மூட நம்பிக்கையில் வாழ்ந்து வந்த அரேபியர்களுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளித்தாலும் அவர்கள் வேத வசனங்கள் என்று சொல்லுகின்றவற்றை பின்பற்றுவதில் பிரச்சினை இருந்தது.

அப்படி என்ன சொன்னார்கள் என்றால் சிலை வணக்கத்தை கைவிட சொன்னார்கள், பேச்சில் உண்மை, வாக்கை காப்பாற்றுவது, வர்க்க வேறுபாடுகளை கலைவது, அமானித பொருள்களுக்கு (நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருள்) துரோகம் செய்யாமல் இருப்பது இப்படி பலவற்றை எடுத்து கூறினார்கள்.

இதை எல்லாம் எந்த கூட்டத்திடம் சொல்கிறார்கள் தெரியுமா..?, உதாரணமாக ஒரு சம்பவம் சொல்கிறேன்,  இம்ரவுல் கைஸ் என்று ஒருவன் இருந்தான், அவனது தந்தையை இன்னொருவன் கொன்று விட்டான். பழிக்கு பழி வாங்க (இந்தி, தமிழ் சினிமாவை போல்) அந்த கால வழக்கப்படி கடவுள் சிலையின் முன்னர் மூன்று அம்புகளை போட்டான், அதில் ஒன்றில் ‘சரி’ (-அதாவது கொல்லவும்) என்றும், இன்னொன்றில் ‘வேண்டாம்’ என்றும், மூன்றாவதில் எதுவும் எழுதாமலும் இருந்தது. கண்களை மூடிக் கொண்டு மூன்று முறை எடுத்தும் ‘வேண்டாம்’ என்று வரவே கடவுள் சிலையை பார்த்து, ‘உங்க அப்பனை கொன்னிருந்தால் இப்படி தான் வேண்டாம்னு சொல்லுவியா?’ என்று கேட்டுவிட்டு அம்புகளை உடைத்து அந்த கல்லுருவத்தின் முகத்தில் எறிந்து விட்டு சென்றான்.

சமூக வாழ்க்கை இன்னும் மோசம், இஸ்லாம் அந்த மக்களிடையே தோன்றியதற்கு முந்தைய ஐம்பது ஆண்டுகளில் நூற்று முப்பத்திரெண்டு போர்கள் நடந்து ரத்தம் சிந்தப்பட்டது. 

இந்த கூட்டத்தில் போய் ஒருத்தர் இதெல்லாம் கூடாது நான் தான் இறைவனின் தூதர் என்று சொல்வதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு பெரிய சுமையை இறைவன் முஹம்மது நபிகளின் மீது இறைவன் விதித்தான். 

இத்தனை காலம் கஃபாவில் இருக்கும் கடவுள் சிலையால் இருந்த மதிப்பும், கடவுள் குடும்பத்தினர் என்ற மரியாதையும் போய் விடுமோ என்ற பயமும் (நம்ம ஊர் கதை தான்) பணக்காரன் ஏழை என்ற வர்க்க பேதங்களை ஒழிந்து போவதையும் அந்த அரபுகள் விரும்பவில்லை.

இதன் காரணத்தால் நபிகள் நாயகம் போகும் இடமெல்லாம் அவர்களை பின் தொடர்ந்து சென்று வசைக் கவிதைகள் பாடுவது, பைத்தியக்காரன், பிசாசு பிடித்திருக்கிறது என்பது அவர்கள் ஏதாவது பேச ஆரம்பித்தால் அவர்கள் பேச்சு யார் காதிலும் விழாமல் இருக்க கத்தி கூச்சலிடுவார்கள். கல்லால் அடித்தார்கள், குப்பைகளை கொட்டினார்கள்.

அவர்கள் செய்த இன்னொரு முயற்சி பதவி தருகிறேன், அதிகாரம் தருகிறேன், அழகிய பெண்ணை மணமுடித்து தருகிறேன் இப்படி ஆசை வார்த்தை காட்டியது.

முஹம்மது நபிகள் திடமாக நின்றார்கள், ‘ஒரு கையில் சூரியனையும் இன்னொரு கையில் சந்திரனையும் சேர்த்து தந்தாலும் என்னுடைய கொள்கையை விடமாட்டேன்..’ என்று அந்த கொள்கை பிடிப்போடு பிடி கொடுக்காமல் இருந்தார்கள்.

அவர்களை தொல்லைகள் கொடுத்து பார்த்து எதுவும் சரிபட்டு வராமல் போகவே, அரேபியர்களின் அடுத்த கட்ட முயற்சியாக ‘அவர் சொல்வது எல்லாம் அவரே சொல்வது தான்’ என்றும் ‘அங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது இங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது’ என்றும் குற்றம் சுமத்தி தோற்கடிக்க பார்த்தது தான்.

இப்போது தான் வருகிறது அந்த சவால் செய்தி, இப்படி சவால் விடுவது வழக்கமாக நபிமார்களுக்கு வரும் பிரச்சினை தான்.

உதாரணமாக மூஸா நபி காலத்தில் தந்திரங்கள் செய்வது பிரபலமாக இருந்தது (excelled at magical trickery). மூஸா நபிக்கும் மந்திரவாதிகளுக்கும் நடந்த சவாலை பற்றி டென் கமாண்ட்மேண்ட்ஸ் படங்களை பார்த்திருக்கலாம். அதுவும் இறைவனால் அந்த கால மக்களுக்கு விடப்பட்ட சவால் தான்.

மூஸா நபியவர்களுடன் போட்டியிட்ட அந்த மந்திரவாதிகள் கட்டையை தூக்கி எறியும் போதும் பாம்பு வரத்தான் செய்தது, ஆனால் என்ன மூஸா நபி எறிந்த கட்டையிலிருந்து வெளிப்பட்ட அந்த பாம்பு மந்திரவாதிகளின் பாம்பையே விழுங்கி விட்டது.  

அதே போல் ஜீஸஸ் என்று கிறிஸ்தவர்களால் வணங்கப்படும் ஈஸா நபியவர்களின் கால கட்டத்தில் மருத்துவம் பிராதனமாக இருந்தது (excelled at matters of medicine). அதனால் தான் எல்லோரையும் மிகைக்க கூடிய அளவுக்கு அவர்கள் இறந்தவர்களை உயிர்பிப்பது வரை செய்து காட்டினார்கள்.

இதன் அடிப்படையில் முஹம்மது நபிகளின் கால கட்டத்தில் இலக்கியம் பெரிதும் மதிக்கப்பட்டது. ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் போது அவரால் கவிதைகள் படைக்க முடியுமா என்று பார்த்து தான் தேர்ந்தெடுப்பார்கள்.

அவர்களிடம் தான் இறைவன் மற்ற நபிமார்களின் கால கட்டத்தில் அந்த காலத்துக்கு தேவையான சவால்கள் உருவானதோ அதே மாதிரி தான் இலக்கியத்திலேயே சவாலை விடுத்தான்.

அந்த சவால் நியாயமானது தான், உதாரணமா ஒரு கம்ப்யூட்டர் புரொகிரமர் கிட்டே போய் இந்தாப்பா உலகத்துல இல்லாத ஒரு புது கெமிக்கல் பார்முலா எழுதி கொண்டு வா என்று கெமிஸ்ட் கிட்டே வைக்க வேண்டிய சவாலை அது வைக்கவில்லை.

கவிதையில் சிறந்தவர்களிடம், இலக்கியத்தில் பழம் தின்று கொட்டை போட்டதற்காக தங்களை தாங்களே கௌரவப் படுத்தி கொண்டவர்களிடம் அந்த சவாலை வைத்தது. அதுவும் தவிர, அப்படி சவாலை வைத்ததும் முஹம்மது நபியல்ல, இறைவன் தான்.

முதல் சவால்:

ஆகவே (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்... நேரான வழியை அறிவிக்கக் கூடிய (மிக்க மேலானதொரு) வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதைப் பின்பற்றலாம் என்று நீர் கூறும் 

சூரா கஸஸ் 28:49

இது அல்லாஹ் கிட்டேயிருந்து வரவில்லை, அவரே தான் சொல்கிறார் என்று சொன்னார்களா..? அதற்காக அப்படி உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விடமிருந்து வேதத்தை கொண்டு வாருங்கள் என்று சவால் விடுகிறது.

இந்த வசனத்தில் இருக்கும் அழகு சும்மா எதையாவது கொண்டு வந்து இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறி விட கூடாது என்பதற்காக நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் என்ற அந்த வார்த்தை. எப்படி..?

இரண்டாவது சவால்:

நபியே! அவர்களை நோக்கி நீர் கூறும்: இதைப்போன்று கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு சாத்தியமான யாவரையும் (இதற்காக) அழைத்து (உங்களுக்குத் துணையாக)க் கொள்ளுங்கள். (மெய்யாகவே இது கற்பனையென்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யலாமே!) 

சூரா ஹூது 11:13

இந்த இரண்டாவது சவாலில் கற்பனை செய்து பார்த்து பத்தே பத்து அத்தியாயத்தை கொண்டு வாருங்கள் என்கிறது. 

மூன்றாவது சவால்

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (நீங்களும்) அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (உங்களுக்கு உதவியாக) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க் கொண்டு இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தை அமைத்துக் கொண்டு வாருங்கள்

சூரா பகரா 02:23

அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் இஸ்லாத்தை பொய்யென புரட்டென கூறி ஒழித்து கட்ட துடித்து வாய்ப்பை எண்ணி காத்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பல்லவா இது..?

வலிய வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் முயற்சி செய்தும் பார்த்தார்கள்.. முந்தைய நபிமார்களிடத்திலே அவர்களின் எதிரிகள் எவ்வாறு படுதோல்வி அடைந்தார்களோ அதே போல் தான் இவர்களும் படுதோல்வி அடைந்தார்கள். இது நபிமார்களின் வரலாறுகளில் காணப்படாத செய்தி அல்ல.

நான் என்னா சொல்றேன், அதுவும் தவிர, இன்றைக்கு அரபிங்கறது செத்த மொழி அல்ல, வாழும் மொழி தான், இன்னமுமா அந்த சவால் இருக்கிறது என்ற கேள்வியை விடுத்து இதோ இருக்கிறதே என்று ஒரு அத்தியாயத்தையேனும் காட்டுவது அல்லது புதிதாக எழுதி கொண்டு வந்து வாதிடுவது தான் அறிவுடைமை என்கிறேன்.

எப்படி கொண்டுட்டு வரணும் தெரியுமா..?

இன்னா அஃதய்னா கல் கவ்ஸர்!
ஃப ஸல்லி லி ரப்பிக்க வன்ஹர்!
இன்ன ஷானி அக ஹுவல் அப்தர்!

சூரா அல்கவ்ஸர் 108: 1-3

 இப்படிப்பட்ட அழகும் ஆழமும் எழிலும் கருத்தேற்றமும் மிக்க வசனத்திற்கொப்ப அரபிப் பெரும் புலவர்களை எல்லாம் துணையாக அழைத்துக் கொண்டு உண்மையாளர்களாக இருந்தால் கொண்டு வாருங்கள் என்று நான் அல்ல இறைவன் சவால் விடுகிறான்.

அது முஸ்லீம்கள் ஏளனமாக கேட்பதாக கூறுகிறீர்கள்? முதலில் இது முஸ்லீம்களின் சவாலே அல்ல, இது இறைவனின் சவால், அதுவும் தவிர, இது இறைவேதம் அல்ல என்று ஏளனம் செய்தார்களே அவர்களுக்காக சொல்லப்பட்டது.

என் பார்வைக்கு உட்பட்ட கருத்தை பதிய வைத்திருக்கிறேன். உங்களின் கேள்விக்கு ஓஹோன்னு இல்லைன்னாலும் ஓரளவுக்கு பதில் சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன்.

------------------------------------------------------------------------

உங்களின் மூன்றாவது கேள்வி அதாங்க உருவகம், உருவம், இணைவைத்தல், பாவம், அப்புறம் எக்ஸ்ட்ரா புகழ்ச்சி இதெல்லாம் தனிப் பதிவு.
-----------------------------------------------------------------------

ஒரு கேள்வி கேட்டா ஆதம் காலத்து கதைலேந்து ஆரம்பிப்பான் என்று இந்த கொடுமையே போதும் என்று நீங்கள் சொன்னாலும் சரியே!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதை தொடர்ந்து பின்னூட்ட விவாதங்கள்:

கேள்வி:
//என் பார்வைக்கு உட்பட்ட கருத்தை பதிய வைத்திருக்கிறேன். உங்களின் கேள்விக்கு ஓஹோன்னு இல்லைன்னாலும் ஓரளவுக்கு பதில் சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன்.//

மிக்க நன்றி இஸ்மாயில் ! 

நீங்கள் குரானில் கவிதை நயம், பொருள் நயம் இருக்கிறது என்பதாக சொல்லி முடித்து இருக்கிறீர்கள். அந்த அரைகூவல்களின் சாரம் குரான் வெளிப்பட்டகாலத்திலேயே சிலருக்கு அதன் மீது அவநம்பிக்கைஅல்லது ஐயம் இருந்தது அதற்காக அல்லா எழுத படிக்கத் தெரியாதவரிடமிருந்து இப்படி ஒரு வசன(கவிதை)கள் வந்திருக்க முடியுமா ? என்று கேட்டதாகவே வைத்துக் கொள்வோம். அதைப் பற்றி அது அல்லாவிடம் இருந்து வந்திருக்குமா என்பதற்கெல்லாம் எனக்கு கருத்து எதுவும் இல்லை.

ஆனால் கவிஞர்களைப் பொருத்த அளவில் ஒவ்வொரு கவிஞரும் தனித்தன்மை வாய்ந்தவரே, கம்பனைப் போல் இன்னொரு கவிஞனோ வள்ளுவன் போல் இன்னொரு வள்ளுவனோ வந்துவிட முடியாது. வள்ளுவரோ, கம்பனோ என்னை மாதிரி இன்னொருவர் எழுத முடியுமா ? என்று கேட்டாலும் அது முறியடிக்க முடியாத ஒன்று தான். உருது கவிஞர் உமர்கயாம் போல் இன்னொருவர் வர முடியாது, வேறொருவர் வெறொருவராகத்தான் வருவார். எனவே, இதைச் சவாலாக ஏற்றுக் கொள்ளவோ, அதே போல் மறுக்கவோ ஒன்றுமே இல்லை.

குரான் வெளிப்பட்ட காலத்திலேயே (சூட்டோடு சூடாக இருந்த அந்த காலத்திலேயே) அதன் மீது சந்தேகம் இருந்தது அந்த வசனத்தின் வழியாக உறுதிபட்டுள்ளது என்பதை நினைக்க வேண்டும். 1400 ஆண்டுகள் கழித்தும் யாரும் கேள்வியே எழுப்பக் கூடாது, ஐயப்படக் கூடாது என்பதில் எதும் ஞாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

அவரவர் வேதங்களிலும் அதே போன்ற பற்றுதல்கள் தான் அவரவர் வைத்திருப்பார்கள்

பதில்:

கோ.வி. கண்ணன் சார்,

ஏன், கம்பனை போன்று இளைய கம்பன் எழுதலாம். பாரதியை போன்று பாரதிதாசன் எழுதலாம். எஸ்.பி.பியை போல் மனோ பாடலாம்.

சேக்ஸ்பியரின் சான்னட் எனப்படும் அருமையான கவிதைகளை ஆழ்ந்து படித்து பல பேர் அதே 10 சிலபில்சை கொண்ட 14 வரிகளில் குறிப்பிட்ட iambic pentameter என்ற அளவுகோலை உடைய கவிதையை எத்தனையோ பேர் எழுதியதை இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

தாஜ்மஹாலை போன்று இன்னொரு கட்டிடம் எழுப்பி விட போகிறார்களோ என்று கையை வெட்டிய சம்பவம் எல்லாம் வரலாறு பார்த்திருக்கிறது.

ஆகையினால், சவாலை நீங்கள் அல்லது உங்களை போன்ற சகோதரர்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்பது பிரச்சினையில்லை. 

அந்த காலத்தில் அரேபியர்கள் ஏற்றுக் கொண்டு முயற்சி செய்து பார்த்து தோல்வி அடைந்து இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

சந்தேகம் இருந்தது என்பதை நான் ஏன் நினைக்க வேண்டும், சந்தேகப்படுபவர்கள் நினைத்து கொள்ளட்டும்.

முதலில் 1400 ஆண்டுகள் ஆன பிறகும்.. என்கிற ரீதியில் நீங்கள் ஒரு வலைப்பதிவராக இருந்து கொண்டு சொல்வது எனக்கு பெரிதும் ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனெனில் வலைப்பதிவர்களுக்கு 2000 3000 ஆண்டுகள் என்பதே ”சமீபம்” தானே..

அதுவும் தவிர ‘போன ஜென்மத்துல செஞ்ச பாவாம்’ன்னு சொல்லி ஜென்மத்தையெல்லாம் கணக்கெடுத்த நமக்கு 1400 வருஷம் ஒரு பெரிய விஷயமா.. என்ன..?

உதாரணமாக, ஒருத்தர் போன ஜென்மத்துல நாய துன்புறுத்தினாருன்னு சொல்லி அவர அந்த நாய்க்கே கல்யாணம் முடிச்சு வச்ச கதையெல்லாம் இருக்கு. 
(முற்றுப்புள்ளி)


No comments: