Thursday, January 7, 2016

மூன்றாவது கடமையின் மூன்று வகைகள், இமாம் கஜ்ஜாலி (ரஹ்)

நோன்பின் நடுப்பகுதியில் இருக்கின்ற இந்த தருணத்திலே நாம் அனைவரும் இபாதத் எனும் வழிபாடுகளில் மூழ்கியிருப்போம். சஹர் நேரத்தில் விழித்து சாப்பிட ஆரம்பித்தும் சஹர் வரைக்குமே விழித்திருந்து குரான் ஷரீஃப் ஓதுவதிலும் திக்ரு செய்வதிலும் நம் பொழுதுகள் இறைதிருப்தியில் கழிந்து கொண்டிருக்கும்.

நோன்பானது முஸ்லீமானவர்களுக்கு ஐந்து கடமைகளுள் மூன்றாவது கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்து ஒருவர் நோன்பில் சஹர் வரை விழித்து கொண்டிருப்பார். சஹர் சாப்பிடும் நேரம் வரும் வரை நொறுக்கு தீனியும் சஹரில் தீனையே நொறுக்கியும் தின்று தீர்ப்பார். சுபுஹுக்கு பாங்கு சொல்லும் நேரம் தான் அவர் தூங்க ஆரம்பிக்கும் நேரம். அப்புறமா அவர் மக்ரிபுக்கு எழுப்பி விட்டால் எழுந்து நோன்பு திறந்து விடுவார்.

இவரை போன்றவர்கள் சந்தித்தால் முதலில் கேக்கும் கேள்வியே, 'இன்னைக்கு சஹருக்கு என்ன சாப்பிட்டீயோம்?' என்பது தான்.

அதற்கு பதில் இப்படி வரும், 'இன்னைக்கி வந்து பொறிச்ச எறைச்சியும் கட்லெட்டும் நேத்து கோழியும் குப்பத்தாவும்' என்று

அத்தோடு நின்று விடாது, அடுத்த கேள்வி தொடரும், 'நோன்பு தொறக்க என்னா சாப்பிடலாம்..?' என்று

பதில் பக்காவா இருக்கும், 'முர்தபாவும் முட்டை பிராட்டாவும்' என்று

இப்படியாக மூன்றாம் கடமையை முப்பது நாளும் முழுசாக நிறைவேற்றி விடுவார்கள். இவர்கள் ரொம்பவும் ஸ்டிரைட் ஃபார்வேர்ட். வெள்ளை நூல் ஆரம்பித்த நொடியிலிருந்து கருப்பு நூல் வரும் வரையில் (சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை) எதையும் சாப்பிட மாட்டார்கள், உண்ணவும் மாட்டார்கள். 

'நோன்பாளியின் உறக்கம் கூட இபாதத்' என்ற மொழியில் இவர்கள் சஹருக்கு தூங்கி மக்ரிபுக்கு எழுவது கூட இபாதத் புரிந்ததாக  அர்த்தப் படுத்திக் கொள்ளப்படும்.

நோன்பு குறித்து எவ்வளவோ புத்தகங்களும் கட்டுரைகளும் அருமையாக எழுதப்பட்டிருந்தாலுமே கூட இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்கள் இஹ்யா உலூமித்தீனில் எழுதியவைகளே காலம் கடந்தும் இன்னும் கல்பில் நிற்கின்றன.

அவர்கள் நோன்பை மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள். முதலாவதாக நோன்பு என்று இவர்கள் குறிப்பிடுவது நான் மேலே குறிப்பிட்டவர்களை போன்றும் இன்னும் ஏராளமானோரை போன்றும் கடமைக்காக பிடிக்கும் நோன்பு, 

இரண்டாவது நோன்பு எனப்படுவது சில குறிப்பிட்ட நபர்கள் பிடிக்கும் நோன்பாகும். இது முந்தையதை விட சிறந்தது.

மூன்றாவது நோன்பு மிகவும் மேலானவர்களுக்கான நோன்பாகும். இது முந்தைய இரண்டையும் விட மிகவும் சிறந்தது என்று எழுதவும் வேண்டுமோ?

முதலாவது வகையை பற்றி ஏற்கனவே நான் உதாரணம் கொடுத்திருக்கிறேன் என்றாலும் பொதுவாக இது பெரும்பான்மையானவர்களின் நோன்பை குறிக்கும்.

அத்தகையோர் நோன்பு காலத்தில் சோறு சாப்பிட மாட்டார்கள், தண்ணீர் அருந்த மாட்டார்கள், இன்னும் செக்ஸிலும் ஈடுபட மாட்டார்கள். இவர்களை 'நம்பிக்கையாளர்' என்ற அடைமொழியை காப்பாற்றியவர்கள் என்றும் சொல்லலாம்.

இரண்டாவது வகையினர் ஒரு படி மேலே போய் அவர்கள் பசித்திருப்பது மட்டுமின்றி இன்னும் தீய காரியங்களில் எதிலும் ஈடுபட மாட்டார்கள். 

என்னுடைய பங்களாதேஷ் நண்பர் ஒருவர் நோன்பு திறக்க சாப்பாடு வாங்க கடைக்கு போனார். கடைக்காரர் அப்போது தான் சாப்பிட போகிறார் என்று நினைத்து தட்டில் வைத்து கொடுக்கவும், என் நண்பர், இங்கே சாப்பிட அல்ல என்றும் நோன்பு திறப்ப்பதற்கு என்றும் பேக்கட்டில் கட்டி தரவும் எனவும் கேட்டார்.

அதற்கு அவர் சட்டென்று கடுமொழிகளை பயன்படுத்தி முதலிலேயே சொல்லி தொலைக்க வேண்டியது தானே என்கிற ரீதியில் கோபத்தை தூண்டவே, என் நண்பர், ஒரு வார்த்தை பதில் சொல்லாமல் அழகிய மௌணத்தை கடைபிடித்து பொறுமையாக இருந்து மன்னித்து விடுங்கள் என்று சொல்லி விட்டு உணவை கட்டிக் கொண்டு வந்து விட்டார்.

இந்த ரமாலான் தான் அவரை இப்படி மாற்றி வைத்தது. இல்லையென்றால் இவரும் பதிலுக்கு பதில் பேசியிருப்பார். ஆனால் இந்த நோன்பானது அவர்ருக்கு கேரக்டரை கற்றுக் கொடுத்திருந்தது.

இப்படியாக நோன்பு காலத்தில் தன் கைகள் செய்யும் தீவினையிலிருந்தும், தன் நாவு செய்யும் தீவினையிலிருந்தும் இன்னும் காது, கால், பார்வை எனும் அனைத்து உறுப்புகளும் செய்யும் தீய செயல்களிலிருந்தும் விலகியே இருப்பார்கள். முடிந்த வரை நல்லதே பேசுவார்கள். இல்லை என்றால் மௌணத்திலேயே இருப்பார்கள். 

இவர்கள் முதலில் வரும் வகையினரை விட ஒரு படி மேலானவர்கள் என்று சொல்லலாம்.

மூன்றாவது வகை நோன்பு என்பது நபிமார்களுக்கும், இறை நெறுக்கத்தை உடைய சூஃபியாக்களுக்கும் உடையது என்று சொல்லலாம். இவர்களின் நோன்பில் இறைவனை பற்றிய சிந்தனையை தவிர்த்து வேறு எதிலுமே சிந்தனையை கூட செலுத்த மாட்டார்கள்.

இவர்கள் காணக் கிடைக்க மாட்டார்கள் என்றாலும் இது சாத்தியப்படுமா? என்றும் பலர் திகைக்கிறார்கள். வேறு சிலரோ இப்படி எல்லாம்  யாரும்  இருக்கவே முடியாது என்றும் அடித்து சொல்வார்கள். வெகு சிலர் மட்டுமே இந்த நிலையை அடைய முயற்சியும் பயிற்சியும் மேற்கொண்டு தனக்குள்ளாகவே போராட்டம் நடத்திக் கொண்டிருப்பார்கள்.


 இணைப்பு: http://baalawi.com/articles/fiqh/661-al-imam-al-ghazali-on-fasting-from-book-of-forty-principles-from-the-foundations-of-religion.html

No comments: