Thursday, January 7, 2016

ஏ ஃபார் ஆல்கஹால் - ஹராம்

1

ஒரு குடிமகன் போலீஸுக்கு டெலிபோன் செய்து அழுதிருக்கிறான், "சார், திருடன் என்னோட கார்லேந்து டேஷ் போர்ட், ஸ்டியரிங், பிரேக் பெடல் இவ்வளவு ஏன் ஆக்ஸிலேட்டரையும் விட்டு வைக்காம எல்லாத்தையும் திருடிட்டு போயிட்டான் சார், நீங்க தான் எப்படியாவது திருடனை கண்டு பிடிச்சு என் சாமான எல்லாம் திருப்பி தரணும்.." என்றானாம்..

போலீஸ்காரர்கள் இது குறித்து கண்டுபிடிக்க தீவிரமாக இறங்கிய போது போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு டெலிபோன் வந்தது, எடுத்து பேசினால், கொஞ்ச நேரத்துக்கு முந்தி பேசுன அதே வாய்ஸ், 'பராவாயில்லை' இடையில் வந்த விக்கலை தொடர்ந்து 'நான் தான் தெரியாம பின் சீட்டில ஏறிட்டேன்' என்றதும் 'டொக்..' 

டெலிபோன் துண்டிக்கப்பட்டு விட்டதாம்..

மதுபானம் அருந்துபவர்கள் பற்றி பரவலாக ஆங்கிலத்தில்  இணையத்தில்  புழங்கப்படும் ஜோக் இது. 

இன்னொரு குடிமகன் நன்றாக குடித்து விட்டு பேருந்தில் ஏறியிருக்கிறார். பேருந்தில் ஒரு பெண்மணியின் அருகில் போய் அமர்ந்திருக்கிறார். அந்த பெண்மணி இந்த குடிமகனிடம், 'நீ குடித்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள்.

அதற்கு அவன் 'ஃப்பூ' என்று ஊதி 'ஆமாம்' என்று தலையை ஆட்டியிருக்கிறான்.

உடனே அந்த பெண்மணி கோபமாக 'நிச்சயமாக சொல்கிறேன்.. நீ நரகத்திற்கு தான் செல்வாய்..' என்றார்களாம்

உடனே அந்த குடிமகன் பேருந்திலிருந்து குதித்து விட்டு, 'நல்ல வேலை சொன்னீர்கள், நான் அங்கே போகவில்லை' என்றானாம்..

குடிமகன்கள் நரகத்திற்கு செல்வது ஒருபுறமிருக்கட்டும், சொர்க்கத்தில் மது கிடைக்குமாமே? அதுவும் குரான் ஷரீஃப் சொல்கிறதாமே? 

2

நானும் எனது சீன நண்பர் ஒருவரும் 'கோபி தியம்' என்ற உணவு கடைத் தொகுதிக்கு சென்றோம், அங்கே அவர் சீனவங்க கடையில் 'வெள்ளை சோறும், கோழியும்' வாங்கினார். நான் போய் முஸ்லீம் ஃபுட் கடையில் 'வெள்ளை சோறும் கோழியும்' வாங்கி வந்தேன்.

இருவரும் அருகருகே அமர்ந்தோம். அவரவர் உணவை அவரவர் சாப்பிட்டோம். அவர் சாப்பிட்டதும் வெள்ளை சோறு கோழி தான் நான் சாப்பிட்டதும் வெள்ளை சோறு கோழி தான். இரண்டுமே ஒன்று தான் ஆனாக்கா வேற வேற..

அது எப்படி வேற வேற , 'ஃபோஃத் சிக்கன் வாட்? ஸோ, சேம் வாட்?' என்று நீங்கள் கேக்கலாம், நான், 'யெஸ், சேம் சேம்.. பட்.. டிஃபரெண்ட்..' என்று பதில் சொல்வேன்.

எப்படி? சேம்.. சேம்.. பட் டிஃபரெண்ட்..?

முதலில் சேம் சேமை பார்ப்போம்.. 

கோழியை மட்டும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.. நாங்கள் இருவரும் சாப்பிட்டதற்கும் பெயர் கோழி தான்.. இரண்டுமே ஒரே தாய் வயிற்றில் பிறந்து ஒரே பண்ணையில் வளர்ந்து ஒரே தீனியை தின்று வளர்ந்தது என்றும் வைத்துக் கொள்வோம்.. அந்த வகையில் சேம் சேம் தான்..

ஆனால் டிஃபரெண்ட்.. எப்படியெனில்.. எனது நண்பர் சாப்பிட்ட கோழியானது இறைவன் பெயர் சொல்லி அறுக்கப்படவில்லை. ஆகையினால், நான் சாப்பிட முடியாது. அந்த கோழி எனக்கு ஹராமாகிறது. அந்த வகையில் இரண்டும் வேறு வேறாகிறது.


3

மதுவை தடை செய்வதற்கான குரான் ஷரீஃப் கூறும் காரணம்..
-------------------------------------------------------

A.

"(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" ......"

ஸூரத்துல் பகரா
வசனம் 2:219

--------------------------------------------
B.

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

ஸூரத்துல் மாயிதா
வசனம் 5:90

-----------------------------------------------

ஆக, குரான் ஷரீஃப் மதுபானத்தை தடை செய்வதற்கான காரணம் (In Summary from A and B) அதிலுள்ள பலனை விட கேடுகள் அதிகம் என்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாக இருப்பதும், தவிர்த்தால் வெற்றியடையலாம் என்பதுமேயாகும்.

4

வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தில் வழங்கப்படும் மதுவை பற்றி குரான் ஷரீஃப் சொல்வதை இனி படித்து புரிந்து கொள்வோம்..

-------------------------------------------------------

A.

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும்(rivers of incorruptibe water), தன் சுவை மாறாத பாலாறுகளும் (rivers of milk of which of the taste never deteriorates)அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், (rivers of wine of joyous taste for the drinkers), தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன (and rivers of clear and pure honey); இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தககயோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?

ஸூரத்து முஹம்மது (ஸல்)
வசனம் 47:15

மேலே கூறப்பட்ட வசனத்தில் பிரதானமாக இருப்பது இந்த உலகத்தில் இறைவனுக்கு பயந்து தனிமையிலும் தீய காரியங்களை செய்யாமல்
பயபக்தியுடன் இருந்த காரணத்தால் பாலாறும் தேனாறும் ஓடும் சுவர்கத்தில் இருப்பவர்களும் தீய காரியங்களில் ஈடுபட்டதினால் கொதிக்கும் நீர் குடித்து
குடல் துண்டாகி இருப்பவர்களும் சமமா? என்று கேட்கிறது..

ஆனால்  சுவர்க்கத்தை பற்றி கூறும் போது 'அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும்..' என்று வந்துள்ளதே.. அப்படி என்றால் இங்கே அனுமதிக்கப்படாத மது சொர்க்கத்தில் அருந்த அனுமதியுண்டா?

5
---------------------------------------------------------
இது வரை..

1.வது அத்தியாயம்:
சொர்க்கத்தில் மது அனுமதிக்கப்படுகிறதாமே? என்ற கேள்வி எழுந்தது

2.வது அத்தியாயம்:
இந்த உலகத்தில் அனுமதிக்கப்பட்ட உணவில் (உதாரணமாக கோழி கறி) கூட இறைவன்  பெயர் சொல்லி அறுக்கப்பட வில்லை என்றால் அனுமதி கிடையாது.

3.வது அத்தியாயம்:
மதுவை தடை செய்வதற்கான குரான் ஷரீஃப் கூறும் காரணம்

4வது அத்தியாயம்:

நல்லவர்களான சுவர்க்கவாசிகளுக்கு வழங்கப்படுவதாக வரும் குரான் ஷரீஃப் வசனத்தில் 'மதுரச ஆறுகளும்..' இருப்பதாக சொல்லப்படுவது
-----------------------------------------
6

இனி,

சொர்க்கத்தில் வழங்கப்படுவதாக கூறப்படும் 'மதுரசம்' எத்தகையது என்பது பற்றிய குரான் ஷரீஃப் வசனங்கள்:

A.
83:22 -  நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) "நயீம்" என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

83:23 - ஆசனங்களில் அமர்ந்து பார்ப்பார்கள்

83:24 - அவர்களுடைய முகங்களிலிருந்தே பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்

83:25 - முத்திரையிடப்பட்ட தெளிவான மதுவிலிருந்து அவர்கள்  புகட்டப்படுவார்கள்

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்
வசனம் 83: 22 - 25.
------------------------------------------
B.

அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு பரிசுத்தமான பானமும் புகட்டுவான் (their Lord having given them a cleansed drink).

ஸூரத்துத் தஹ்ர்
வசனம் 76: 21
-----------------------------------------------------
C.

37:43 இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் - 

37:44 ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).

37:45 தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும்.

37: 46 (அது) மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது.

37:47 அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்திதடுமாறுபவர்களும் அல்லர்.

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்
வசனம் 37:43 - 47
--------------------------------------------------------------------------

D.

56:17 நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காக) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்

56:18 தெளிந்த பானங்களால் நிரம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்)

56:19 (அப்பானங்களை பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள்.

ஸூரத்து வாகிஆ
வசனம் 56: 17 - 19

7

சுவர்க்கத்தில் வழங்கப்படுவதாக சொல்லப்படும் மதுவானது எத்தகையது என்றால்:

1. முத்திரையிடப்பட்ட தெளிவானது

2. பரிசுத்தமான பானம்

3. தெளிவான பானம்

4. மிக்க வெண்மையானது, அருந்துவோருக்கு மதுரமானது

5. அதில் கெடுதியும் இராது - அதை அருந்தினால் புத்தி தடுமாற்றமும் இராது

6. அதை அருந்தினால், 'தலைவலி' போன்ற தலை சம்மந்தப்பட்ட நோயும் ஏற்படாது - மதிமயக்கமும் ஏற்படாது
8

இறுதியாக, மதுபானம் அதில் இருக்கும் கெடுதிகளால் தான் குடிப்பதற்கு அனுமதியில்லை. அத்தகைய கேடுகளை எடுத்து விட்டால் அதில் இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்ட பலன்கள் மட்டும் எஞ்சி நிற்கும். அதை அருந்துவதில் தவறேதும் இல்லை.

(2வது அத்தியாயத்தில் சொல்லப்பட்டதை பார்க்கவும்) நானும் எனது சீன நண்பரும் இருவருமே கோழி கறி தான் சாப்பிட்டோம் என்றாலும் 'இறைவன் பெயர் சொல்லி அறுக்கப்பட்டதன்' காராணமாகவே இரண்டும் வேறு வேறாகும் போது 'பயபக்தியுடையவர்களுக்கு பரிசாக இறைவனே வழங்கும்' மதுபானத்தில் மட்டும் வித்தியாசம் இல்லாமல் போய் விடுமா..?

சுருக்கமா சிங்கப்பூர் ஸ்டைலில் சொல்லணும்னா இரண்டும் "சேம்.. சேம்.. பட் டிஃபரெண்ட்.."

No comments: