Thursday, January 7, 2016

குரான் ஷரீஃபில் மனைவியை அடிக்க சொல்வது பற்றி...

முஹல்லாவாசி ஒருவரின் மனைவி தனது கணவருக்கு தெரியாமல் வேறு ஒருவனோடு தொடர்பு வைத்திருந்தார். கணவனுக்கு தெரிந்த மறுநாளே கணவரையும், தான் பெற்றெடுத்த இரண்டு பிள்ளை கனியமுதுகளையும் விட்டு விட்டு ஓடிப் போய் விட்டார்.

கணவரோ ஒரு கட்டத்தில் இப்படி சொன்னார், ‘அவர் அவனை விட்டு விட்டு திரும்ப திருந்தி வருவாரேயானால் நான் ஒரு பேச்சு பேசாமல் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று.

-----------------------------------------------------------

இன்னொரு முஹல்லாவாசி எப்போதும் அரை கை சட்டை போடுபவர். நிகாஹ் முடிந்த பிறகு மாப்பிள்ளை மாதிரி முழுகை சட்டை அணிந்தவாறு வந்தார்.

‘சூப்பரா இக்கிதுங்கணி..’ என்றால் ‘எல்லாம் அவன் செயல்’ என்பது போல்

‘எல்லாம் பொண்டாட்டி செயல்..’ என்றார்.

ஆஹா நம்மளும் நிகாஹுக்கு பிறகு இப்படி தான் முழுகை சட்டை எல்லாம் போட்டு அசத்தணும் என்ற ஆசை வந்தது.

ஒரு நாள் முழுகை சட்டையின் ரகசியம் உடைந்தது.

உடைந்த ரகசியம் இது தான்,  ’அவரது மனைவியோடு சண்டையிட்டதில் அவரது மனைவி கையெல்லாம் கீறி விட்டு கை பூரா ரத்தம் தோய்ந்த கோடுகளாய் காட்சி தந்தது.

அது வெளியே தெரியாமல் இருக்கவே இந்த முழு கை சட்டை ஏற்பாடு.

இதையெல்லாம் அவர் வாயாலேயே கேட்டு தெரிந்த பிறகு என்னை பார்த்து இப்படி கேட்டார், ‘உங்களுக்கு எப்போ நிகாஹ்’ என்று.

இன்னொரு அடி(னு)பவசாலி இப்படி சொன்னார், ‘ஏங்க நம்ம கதைய எல்லாம் சொல்லி அவர பயமுறுத்துறீங்க.. நீங்க பயப்படாதீங்க தம்பி.. நம்ம ம்மா வாப்பா நம்மள அடிச்சதில்ல... நம்மட வாத்தியார் நம்மள அடிச்சதில்ல... அத மாதிரி தான்...’ என்றார்.

நிகாஹ் செய்துகொள்ள அல்ல நிகாஹ் என்ற இந்தி படத்தை பார்க்கவே கூட முதன்முதலாய் பயம் வந்தது.

-------------------------------------------

பொண்டாட்டிட்ட அடிவாங்கிய உண்மை சம்பவம் ஒரு பக்கமா இருக்கட்டும். குரான் ஷரீஃபில் ”...மனைவியை அடியுங்கள்...” என்று ஒரு வசனமே இருக்குதாமே..

இந்த வசனம் பற்றி பல பேர் பலவிதமாக சொல்கிறார்கள்.

’இஸ்லாம் வெளிப்படையாகவே மனைவியை அடிக்க சொல்வதால் இது சர்வ நிச்சயமாக ஒரு ஆணாதிக்க மதம்..’

‘மனைவியை அடிப்பதா... முதல்ல அடி வாங்காம இருக்க வழி இருக்கான்னு சொல்லுங்க...’

’அடிக்க சொல்ல ஒரு வேதம் எதற்கு... இதை தான் எல்லா குடிமகன்களும் செய்றாங்களே..’

இன்னும் எப்படியெல்லாம் வாய்க்கு வருதோ எப்படியெல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்களோ அப்படியெல்லாம் போட்டு வறுத்து எடுக்கிறார்கள்.

சிலர் ’குரான் ஷரீஃப் அப்படி தவறாக வழிகாட்டினாலும் எல்லா முஸ்லீமும் அப்படி செய்வதில்லை..’ என்றும் சொல்கிறார்கள்.

சில பேர் தெரியாதமாறி, ‘உங்க மதத்துல பொண்டாட்டிய அடிக்க சொல்லியிருக்கா, என்ன..?’  என்று மூக்குடைப்பது போல் வாயடைக்காமல் பேசுவார்கள்.

‘சரி நீங்க என்ன இல்லைன்னு சொல்ல போறீங்களான்னு..’ படிக்கிற ஒன்னு ரெண்டு பேரும் என்ன பார்த்து கேப்பீங்கன்னு எனக்கு தெரியும்.

இப்போ போலீஸ்காரங்கள பாத்தீங்கன்னா கையில லத்தி, இடுப்புல துப்பாக்கி எல்லாம் வச்சிருப்பாங்க... அதுக்கு என்னா அர்த்தம்...? எல்லாத்தையும் சும்மா அடிச்சிகிட்டே இருங்கன்னா அர்த்தம்.. இல்லை பாக்குறவங்கள எல்லாம் சுடுங்கன்னு அர்த்தமா..?

இப்படி பதில் கேள்வி எழுப்பி ’அடியுங்கள்’ என்று வார்த்தையை நியாயப்படுத்த போகிறீர்களா..? என்று கேட்கவும் கூடும்.

’அல்லது டாக்டர் கையில கத்தி இருக்குற மாதிரி உடலை காயப்படுத்தி கட்டுப்போடுவது உடலில் இருக்கிற வியாதியை போக்க எடுக்கப்படும் நியாயமான நடவடிக்கை தான்’ என்று விளக்கம் தரப் போகிறீர்களா என்று வினவவும் கூடும்...

‘கிராமத்துல மனப்பிறழ்வு அல்லது சாமி வந்த போது ஒரு மாதிரி வேப்பிலை வைத்துக் கொண்டு அடிப்பார்களே... அந்த மாதிரி அடி தான் இது.. அந்த மாதிரி பிடித்திருக்கிறது நீங்க எடுக்கப்படும் நியாய அடி வைத்தியம் தான் இது...’ என்று அதிரடியாய் கூறப் போகிறீர்களா என்று தோன்றவும் கூடும்.

-------------------------------------------

குரான் ஷரீஃபில் ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) என்ற

- 4வது அத்தியாயம் -

- 34 வது வசனம் -

”.... எந்த பெண்கள் விஷயத்தில் - அவர்கள் மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். அவர்களை படுக்கையிலிருந்து விலக்கி விடுங்கள். அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிபட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்”

--------------------------------------------------

மேலே உள்ள இறைவசனத்தில் கணவனுக்கு மாறு செய்யும் பெண்களை பற்றிய விவகாரத்திற்கு மூன்று வழிகள் சல்யுசன்ஸ் சொல்லப்படுகிறது.

இப்போது கணவன், மனைவி இருவரும் இனிய இல்லறம் நடத்தி வருகிறார்கள் என்று வையுங்கள். (ஒவ்வொருவரும் அவரவரை பொருத்தி பார்த்துக் கொள்வது நல்லது)

இப்போது அந்த கணவருக்கு ஒரு செய்தி கிடைக்கிறது.  அதாகப்பட்டது அந்த மனைவி இன்னொருவரோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்று.

’ஒரு நிமிஷம்.. நிறுத்துங்கள்’ என்ற குரல் கேட்கிறது.

குரல் தொடர்கிறது, ‘ஏங்க.. மேலே உள்ள இறைவசனத்துல, மாறு செய்வார்கள் என்று தானே வருகிறது.. அதெப்படி நீங்க இந்த இன்னொருவரோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்ற உதாரணத்தை தரலாம்.. வேறொரு உதாரணம் பொருந்தி வராதா..’ என்று கேட்டது.

இதே வசனத்தின் முந்தைய பகுதியை பார்த்தீர்கள் என்றால் இப்படி வருகிறது, “..இல்லாத சமயத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவற்றை அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு பாதுகாத்து கொள்வார்கள்..’ என்று வருகிறது.

கணவன் இருக்கும் போது மனம் குளிர வைத்து விடுவதோடு யாரும் இல்லாத போதும் கணவனுடைய மான மரியாதைக்கு களங்கம் கற்பிக்காமல் இருக்க வேண்டும் என்பதே நல்ல மனைவிக்கு அடையாளம்.

யாரும் இல்லாத சமயத்திலும் பாதுகாக்கப்பட வேண்டிய எதுவும் இதை குறிக்கும் என்றாலும் நான் சொன்ன உதாரணம் முதன்மை பெறுகிறது என்பதால் தான் இதனை குறிப்பிடுகிறேன்.

அதுவும் தவிர, மாறு செய்வது என்ற வார்த்தைக்கு ’நுஸுஜஹுன்ன’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதே நுஸுஜன்’ என்ற வார்த்தை இதே ஸூரத்துன்னிஸாவுன் எனும் அத்தியாயம் 128வது வசனத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த வசனத்தில் மனைவிக்கு மாறு செய்யும் கணவர்களை பற்றி பேசுகிறது.

மனைவி கணவனுக்கு மாறு செய்வதும், கணவன் மனைவிக்கு மாறு செய்வதும் இரண்டுக்குமே இந்த ஒரு விஷயம் இயல்பாகவே பொருந்தி வரும். இதுவும் ஒரு காரணம் இந்த உதாரணத்தை கொண்டு பேசுவதற்கு..

இனி தொடர்வோம்..

மனைவியின் எக்ஸ்ட்ரா மாரிடல் அஃப்ஃபேர்ஸை கேட்ட உடனே சாதாரணமா ஊர் உலகத்துல என்ன நடக்குது..?

கணவனுக்கு கோபம் கொப்பளிக்கும். கண்கள் சிவக்கும். வீட்டிற்கு வந்து கண்ணை மூடிக் கொண்டு காதை பொத்திக் கொண்டு மனைவியை அடித்து கவரிமான் ரேஞ்சுக்கு கொன்று போட்டு விடுவார். எத்தனையோ செய்திகள். எத்தனையோ வரலாறுகள்.

குரான் ஷரீஃப் சொல்கிறது, அதெல்லாம் செய்ய கூடாது. நான் மூன்று வழிகள் சொல்கிறேன். அதை தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

-----------------------------------------------------------

முதல் வழி:

ஒரு மாதிரி கவுன்சிலிங். அட்மோனிஷ். அட்வைஸ். அறிவுறை, நல்லுபதேசம், எப்படி வெர்பலாக பேசி புரிய வைக்க முடியுமோ அப்படி தவறை உணர வைக்க வேண்டும். இதுவே மிகவும் சவாலான விஷயம் தான்.

ஊர் உலகம் மனைவியை ஒரு மாதிரி பேச ஆரம்பித்த உடனேயே வெளியில் தலை காட்ட முடியாத நிலைமையில் இருப்பதாக உணர்வார்கள்.

இந்த நேரத்தில் தான் போய் பொண்டாட்டியோடு சமாதானம் பேச சொல்கிறது குரான் ஷரீஃப்.

சரி, கள்ளக் காதலனின் ஆசை வார்த்தைகளில் கணவரின் அர்த்தமுள்ள வார்த்தைகள் காணாமல் போய் தொடர்பு தொடர்கிறது என்று வையுங்கள்.

------------------------------------------------------

இரண்டாவது வழி:

முதல் வழியில் பேச சொன்ன குரான் ஷரீஃப் இந்த இரண்டாவது வழியில் பேசாமல் இருக்க சொல்கிறது. அவர்களுடன் எந்த தருணத்திலும் மகிழ்வாக இருக்க கூடாது. அட்வைஸ் பண்ணி பார்த்து சரி வரவில்லை என்றால் அவாய்ட் செய்ய வேண்டும்.

இத்தகைய உங்களது நடவடிக்கையால் குடும்பத்தில் மாற்றம் கொண்டு வரலாம், ஆனால் இதுவும் சரிப்பட்டு வராமல், ‘அப்பாடா.. இப்ப தான் நிம்மதியாக இருக்கு..’ என்கிற தொனியில் நடந்து கொண்டு தொடர்ந்து மாறு செய்து கொண்டு நடந்தால் மூன்றாவது வழி.

-------------------------------------------------------

மூன்றாவது வழி:

அடியுங்கள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கருணையோடு அடிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பிரேக்கெட்டில் இலேசாக என்று சேர்க்கவும் பட்டுள்ளது.

இப்பொழுது நாம் அரபியில் என்ன பதம் பயன்படுத்தப் படுகிறது என்று பார்த்து விடுவது நலம்.

’வழ்ரிபூஹுன்ன..’ என்ற அரபி பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த வார்த்தை ’யழ்ரிப்’ என்ற மூல வார்த்தையிலிருந்து பிறந்த வார்த்தை. இந்த மூல வார்த்தையை குரான் ஷரீஃபில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

உதாரணமாக:
ஸூரத்துர் ரஃது (இடி) எனும்
-13 வது அத்தியாயம் -
-17 வது வசனம் -

’.... கதாலிக யழ்ரிபுல்லாஹுல் ஹக்க வல் பாதில்...’

இங்கே யழ்ரிப் என்ற பதத்திற்கு அடிப்பது என்று பொருள் கொண்டால் கொஞ்சம் கூட பொருந்தாமல் இப்படி வரும்..

‘... இவ்வாறு சத்தியத்தையும் அசத்தியத்தையும் அல்லாஹ் அடிக்கிறான்...” என்று

ஆனால் ’யழ்ரிப்’ என்ற வார்த்தைக்கு ‘எக்ஸ்பிளெய்ன்’ என்று ஆங்கிலத்தில் சொல்வோமே.. அந்த அர்த்தம் தான் பொருந்தும் படியாக இருக்கும்..

எப்படி?

‘... இவ்வாறு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் விளக்கமளிக்கிறான்...’ என்று.

இவ்வாறு இந்த பதம் இன்னும் பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப் படுகிறது. குரான் ஷரீஃபில் மட்டுமே பத்து அர்த்தங்கள் இடத்திற்கு தக்கவாறு இடம் பெறுகிறதாம். அதில் ஒன்று தான் மேலே கண்ட உதாரணம்.

இன்னும் குரான் ஷரீஃபில் சொல்லப்படாத பல்வேறு அர்த்தங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. பழைய அரபிய அகராதியில் அதிகமான அர்த்தங்களை கொண்ட வார்த்தையாக இந்த ‘யழ்ரிப்’ என்ற வார்த்தையே இடம் பெறுகிறதாம்.

ஒரு வார்த்தைக்கு பல அர்த்தம் வரும் போது இப்படி தான் மொழி பெயர்ப்பு தடுமாறுகிறது.

உதாரணமாக ‘அடிப்பது’ என்ற தமிழ் வார்த்தையையே எடுத்துக் கொண்டாலும் பல இடங்களில் பல மாதிரி உபயோகப்படுத்தப்பவதை பேச்சு வழக்கில் காண முடியும்.

‘தண்ணி அடிக்கலாமா?’ என்றால் என்ன அர்த்தம்..

பச்சை தண்ணீரை ஓங்கி அடிப்பது என்று அர்த்தம் சொல்ல மாட்டோம் இல்லையா?

அதே போல் ’பரீச்சைல காப்பி அடிக்க கூடாது’ என்றால் என்ன அர்த்தம்...

ஆங்கிலத்திலும் இதே போல் ‘beat‘ என்ற வார்த்தை பலவாறு பயன்படுத்த முடியும்.

உதாரணமாக, ‘இந்தியா பீட் பாகிஸ்தான் இன் தி வேர்ல்ட் கப் செமி ஃபைனல்’ என்றால் என்ன அர்த்தம்?

beating around the bush' என்ற phraseல் வரும் ’பீட்’டுக்கு என்ன அர்த்தம்?


எல்லாத்துக்கும் கையால் அடிப்பது என்று பொருள் கொடுக்க முடியுமா?


குரான் ஷரீஃபில் இதே ஸீரத்துன்னிஸாவில் 19வது வசனத்தில் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என இறைவன் கூறுகிறான்.


“... இன்னும், அவர்களோடு கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்” என்று மனைவியிடம் கனிவோடு நடந்து கொள்ளுங்கள், வெறுக்காதீர்கள், வெறுக்கின்ற ஒன்றில் தான் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்துள்ளான்’ என்று பாடம் நடத்தப்படுகிறது.


இப்படியாபட்ட வசனங்களை உடைய குரான் ஷரீஃபில் ‘அடிக்க’ சொல்லி வருவதாவது...?


அர்த்தம் கொடுப்பதில் தான் தவறு நடந்திருக்க வேண்டும்.


’யழ்ரிப்’ என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகள் கையாளப்படுகிறது.
1. beat
2. strike


இணையத்தில் மெர்ரியம்-வெப்ஸ்டெர் என்ற அகராதி உள்ளது.


இதில் மேலே உள்ள இரண்டு வார்த்தைக்குமே (verb) நிறைய அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன...


இங்கே வந்து ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு அதனை தீர்க்கும் வழிகளை சொல்லி கொண்டு வருகிறது. 


இங்கே அடிப்பது என்று கையால் அடிப்பது என்று புரிந்து கொண்டால் அர்த்தம் போட்டால் அது எப்படி பிரச்சினையை தீர்க்க முடியும் என்று எனக்கு விளங்கவில்லை.


அப்போ, அடிக்க அடிக்க தொடர்பு தொடர்ந்து கொண்டே இருந்தால் பரவாயில்லையா?


இப்படி பலவாறாக யோசித்து தான் ஒரு அர்த்தம் கொடுக்க முடியுமே தவிர.. இது தான் என்று முடிவுக்கு வர முடியாது. அடித்து கூறவும் முடியாது...


என்னளவில் கேட்டால் 'strike them out'  அதாவது ‘வெளியேற்றி விடுங்கள்’ என்று தான் மூன்றாவது வழியாக நான் புரிந்து கொள்வேன்.


நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

No comments: