Thursday, January 7, 2016

புர்தாஹ் ஷரீஃப்

எங்கள் வீட்டில் உள்ள சுவர்கள் யாவும் கவிதை போர்வையால்போர்த்தப் பட்டிருக்கும்.

யாரை பற்றிய கவிதையாக இருக்கும்..?

நிச்சயமாக, பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்பாடும் கவிதைகள் தான்.

பெருமானார் (ஸல்) அவர்களை பற்றி புகழப்படாத முஸ்லீம் நாவுகளே இருக்காது. அப்படி பாடப்பட்டவைகளிலேயே மிகவும் உயர்வானது என்று இன்றளவும் உலகம் முழுக்க பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புகழ்ப்பாடல் தான் எங்கள் இல்லத்து சுவரை அலங்கரித்த கஸீதத்துல் புர்தாஹ் எனும் கவிதை போர்வை.

கவிக்கோ அப்துற் றஹ்மான் அவர்கள் சொல்வார்கள் ’பெருமானாரை புகழ்வது என்பது நாவை புனித நீராட்டுவதாகும்’ என்று. மேலும், அவர்கள், ’இறைவனாலேயே புகழப்பட்ட ஒருவரை மனிதன் என்ன புகழ்ந்துவிட முடியும்?’ என்ற கேள்வியையும் முன் வைத்திருப்பார்கள்.

வாணியம்பாடி கவிஞரை தொடர்ந்து வானம்பாடி கவிஞர் மு.மேத்தா அவர்கள் எழுதினார்கள்..

எழுதப் படிக்கத்
தெரியாதவர் தான்...
ஆனால்
இவர் தான்
பூமியின் புத்தகம்!

என்று..

இந்த பூமியின் புத்தகத்தை பற்றிய புகழ்வரிகள் தான் இந்த கஸீதத்துல் புர்தாஹ் என்பது.

இது எங்களது ஹஜ்ரத் வீட்டில் அவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு ஞாயிறு இரவில் பயபக்தியோடு அமர்ந்து மெதுவான குரலில் (மைக் வைத்து சத்தம் போட்டு கத்து கத்துன்னு கத்திகிட்டு அல்ல) ஓதுவார்கள்.

இந்த புர்தாஹ் ஷரீஃபில் அமருவதற்கு எங்கள் ஹஜ்ரத்திடம் அனுமதி கேட்க வேண்டும். அவ்வளவு சீக்கிரம் அந்த அனுமதி கிடைத்து விடாது.

‘நாளைக்கு வா.. சொல்கிறேன்” என்று நிறைய நாள் ஓடி விடும். இது நமக்கு சரிபட்டு வராது என்று நாளோடு சேர்ந்துக் கொண்டு ஓடியவர்களும் உண்டு.

எனக்கு நான் கேட்ட உடனேயே உட்கார அனுமதி கிடைத்த அதிசயமும் பாக்கியமும் நிகழ்ந்தது.

ஹஜ்ரத் அவர்கள் வீட்டில் வாரா வாரம் புர்தா ஷரீஃப் அல்லாமல் மார்க்க விளக்க பாடமும் நடைபெறும். பல பயிற்சிகளுக்கான செய்முறை விளக்கமும் கொடுப்பார்கள். அந்த கூட்டத்திலே அமரும் அறிய வாய்ப்பினையும் நான் பெற்றுள்ளேன்.

ஒரு முறை ஹஜ்ரத் அவர்கள், “யாராவது நான் எழுதிய இஹ்யா உலுமித்தீனை  சமுதாய வாழ்வுங்கற புஸ்தகத்துல உயிரின் பிறப்பை பற்றி எழுதியிருக்கிறேன்.. படிச்சிருந்தா அத பத்தி தெரிஞ்சவங்க.. கைய தூக்குங்க..’ என்றார்கள்.

ஒருத்தர் கையை தவிர வேறு எந்த கையும் எழவில்லை..

அந்த கைக்குறியவரிடம்..

‘எங்கே அதுல என்ன எழுதியிருக்கேன்.. நீ சொல்லு..’ என்று ஹஜ்ரத் அவர்கள் சொன்னார்கள்.

அவரும் அவருக்கு தெரிந்ததை சொன்னார் ‘... இது தான் எழுதியிருந்தீங்க ஹஜ்ரத்..’ என்று..

உடனே சேஃப்டி ஹாஜா மெய்தீன் நானா அவரை பார்த்து ‘இவர் நல்லா வருவார்ன்னு’ சொன்னாஹா..

எனக்கு இந்த புர்தாஹ் ஷரீஃபில் அமர அனுமதி கிடைத்ததே நான் நல்லா வந்துட்டேன்னு தான் நான் புரிந்து கொண்டேன். சேஃப்டி ஹாஜா மெய்தீன் நானா சொன்னது என்னை பார்த்து தான்.

உலகின் மிக சிறந்த மனிதரான புனிதரான உயிரினும் மேலான பெருமானாரை (ஸல்) பற்றிய புகழ்ப்பாவில் மிக சிறந்ததாக கருதப்படும் இந்த புர்தாஹ் ஷரீஃபை எழுதியவ்ர்கள் இமாம் ஷர்பத்தீன் முஹம்மது பூஸீரி (ரஹ்) அவர்கள்.

இவர்கள் பெருமானாரை நேரில் சந்தித்ததே கிடையாது. இவர்களின் காலம் ஹிஜ்ரி 608 முதல் 696 (அல்லது 697) வரை. 87 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து மறைந்து போனார்கள். இவர்கள் பிறந்தது எகிப்தில் உள்ள அல் பூசிர் என்ற ஊரில்.

                                              
                                       இமாம் பூஸீரி (றஹ்) அவர்களின் மஜாரே - ஷரீஃப்

இவர்கள் இள வயதினராக இருக்கும் போதே திருக்குரானை மனனம் செய்து ஹாஃபிஸ் ஆனார்கள். பின்பு பிரபல அரபி மதரஸாவான ஜாமிஉல் அஜ்ஹரில் கல்வி கற்று, பல கலைகளில் தேர்ச்சியும் பெற்றார்கள். அரபி இலக்கன இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்ற இவர்கள் அரசாங்க உத்தியோகத்திலும் பதவி வகித்துள்ளார்கள்.

இமாமவர்களுக்கு ஒரு முறை ‘பாரிச வாய்வு’ நோய் ஏற்பட்டு உடலின் பகுதிகள் விளங்காமல் படுத்த படுக்கையில் இருந்தார்கள். அப்போது பெருமானார் (ஸல்) அவர்களை கனவில் கண்டு இந்த உலக பிரசித்தி பெற்ற புர்தாஹ் (போர்வை) எனும் கவிதையை பெருமானார் (ஸல்) அவர்களின் முன்னிலையிலேயே பாடினார்கள்.

இந்த கவிதையின் சிறப்பு இதன் 10 பகுதிகளில் உள்ள 160 பாடல்களும் ‘மீம்’ என்ற அரபு எழுத்தில் தான் முடிவடையும். பெருமானார் (ஸல்) அவர்களின் திருப்பெயரில் வரும் துவக்க எழுத்தும் இதே ‘மீம்’ என்ற எழுத்து தான்.

இந்த கவிதைக்கு புர்தாஹ் என்ற பெயர் வரக் காரணம் பெருமானார் (ஸல்) அவர்கள் கனவில் இமாமவர்களுக்கு அவர்களது போர்வையை போர்த்தினார்கள்.

(இதே போல் தான் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களை காணாமலே அவர்கள் மீது உயிரையே வைத்திருந்த உவைஸ் கர்னீ (றலி) அவர்களுக்கு தக்க அடையாளத்தை சொல்லி போர்வையை பரி சாக கொடுத்து அனுப்பியுள்ளார்கள். )

இதன் காரணமாகவே இதற்கு கஸீதத்துல் புர்தாஹ் என்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த கனவிற்கு பிறகு இமாமவர்கள் பரிபூரண குணம் அடைந்து விட்டார்கள்.

ஒருவருக்கும் இந்த கஸீதாவை பற்றி தெரியாத நிலையில் அவ்வூர் வாசி ஒருவர் அடுத்த நாளே இமாமிடம் வந்து ‘உங்கள் கஸீதாவை காட்டுங்கள்..’ என்று கேட்க

‘எந்த கஸீதா வேண்டும்’ என்று இமாமவர்கள் பதிலுக்கு கேட்க

உடனே அந்த ஊர்வாசி, ‘அமின் ததக்குறி ஜீரானின் பி தீஸலமி என்று ஆரம்பிக்கும் கஸீதாவை தான் நான் கேட்கிறேன்..’ என்று சொல்லவும்..

(அமின் த தக்குறி ஜீரானின் பி தீஸலமி
மஜஜ்த தம் அன் ஜரா மின்ம் முக்லதின் பிதமி

தீ ஸலமெனும் (தீ ஸலமென்பது மக்காவிற்கும் மதினாவிற்கும் இடையில் உள்ள ஓரிடம்) ஸ்தலத்தின் அயலகத்தாரை (பெருமானார் (ஸல்) அவர்களையும் அவர்களின் அருமை தோழர்களான ஷஹாபா பெருமக்களையும் குறிக்கும்) நினைத்ததினாலோ
நேந்திரத்திலிருந்து ஓடும் கண்னீரை உதிரத்தால் கலந்தாய் (இரத்தக் கண்ணீர்) வடிக்கின்றாய்?

இமாமவர்களின் மனசாட்சி இமாமவர்களை பார்த்து கேட்பது போல் அமைந்திருக்கும் இந்த கவிதையே புர்தாஹ் ஷரீஃபில் இடம் பெற்றிருக்கும் முதல் புகழ்ப்பாவாகும்)

இமாமவர்கள் ‘இதை நான் வெளியிடாதிருக்கும் போது உங்களுக்கு எப்படி தெரியும்’ என்று வினவ..

‘நீங்கள் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் முன்னிலையில் பாடி காண்பித்த போது நானும் கூட இருந்தேன்..’ என்று கூறினார்கள்.

அதை தொடர்ந்து இந்த கஸீதாவை பற்றி கேள்விப்பட்ட எகிப்து நாட்டு மன்னரான அத்தாஹிர் என்பவரின் மந்திரி பஹாவுத்தீன் அவர்கள் இமாமிடமிருந்து ஒரு பிரதியை பெற்று கொண்டார்கள்.

இதன் பின்பே உலகம் முழுதும் பாரசீகம், உர்து, பஞ்சாபி, பெர்பர், துருக்கிஷ், ஜெர்மன், பிரென்ச், மற்றும் நம் தமிழோடு சேர்த்து எண்ணற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு சிரத்தையோடு பெருமானாரை (ஸல்) அவர்களை பற்றி என்பதால் புனிதமாகவும் கருதி ஓதி வரப்படுகிறது.

பொதுவாகவே நபிமார்கள் என்றாலே அவர்கள் ஏதாவது அற்புதங்கள் (முஃஜிஸாத்) நிகழ்த்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள். அது அந்தந்த காலத்துக்கு ஏற்றவாறு அப்போது தோன்றிய நபிமார்களால் அவ்வாறான அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டும் வந்துள்ளது.

மூஸா நபியவர்கள் செய்த தடியை வைத்து கடலை பிளந்த அற்புதமும் ஈஸா நபியவர்கள் மரித்தவர்களையே உயிர்பித்த அற்புதமும் நிகழ்ந்தேறியிருக்கின்றன.

என்றாலும்,

இதே புர்தாஹ் ஷரீபில் ஒரு பாடல் வருகிறது...

46 ஆவது பாடல்

லவ் னாஸபத் கத்ரஹு ஆயாதுஹு இழமன்
அஹ்யாஸ்முஹூ ஹீன யுத் ஆதா ரிஸார்ரிமமி

அவர்களது (பெருமானார் (ஸல்)) கீர்த்திக்கு அவரது அற்புதங்கள்  மகத்துவத்தில் நிகராக இருப்பின்
அவர்களது திருநாமம் உச்சரிக்கப்படும் சமயத்து (மடிந்து) மக்கிப்போன எலும்பையும் உயிர்ப்பித்துவிடும்.
(ஆகவே, அவர்களது சொந்த கீர்த்திக்கு அற்புதங்கள் நிகரானவையல்ல)

என்று இமாமவர்கள் பாடுகிறார்கள்.


புர்தாஹ் ஷரீஃப் பற்றிய இணைப்பு:

http://www.deenislam.co.uk/burdah/burdah.htm 

No comments: