Thursday, January 7, 2016

முரண்பாடுகள்

உலக நாட்டாமையின் முன்னாள் அதிபர் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கொன்று குவிக்கும் கொலை வெறியாட்டத்தை துவக்கிய போது இப்படி சொன்னார், “நீங்கள் எங்களுடன் இருங்கள், இல்லையென்றால் தீவிரவாதிகளாக இருங்கள்” என்று.

இவ்வகையான பேச்சை False Dichotomy என்பார்கள். 


கிட்டதட்ட இந்த நிலை தான் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை பல முஸ்லீம்களுக்கு வந்திருக்கிறது.


குரைஷிகள் எனும் கோத்திரம் மக்கமா நகரிலே பெரிய குடும்ப கிளைகளை கொண்ட இனம். 


இதில் பல குடும்ப கிளைகளில் பனு அப்து முனாஃப் இப்னு குசை எனும் குலமும் ஒன்று.


இந்த குலத்தில்  உதித்த பனு ஹாஷிம் குடும்பத்தாரில் வந்தவர்கள் தான் பெருமானார் (ஸல்), அலி (ரலி), ஹம்ஜா (ரலி) அவர்கள் யாவரும்..


இதே குலத்தில் பனு ஷம்ஸ் குடும்பத்தில் வந்த பனு உமைய்யா குடும்பத்தாரில் (ஷம்ஸ் அவர்களின் வளர்ப்பு மகன் தான் உமைய்யா அவர்கள் என்றும் ரத்த சொந்தம் அல்ல என்பதையும் ஷியாக்கள் சுட்டி காட்டியிருக்கிரார்கள்) உஸ்மான் இப்னு அஃபான் (ரலி), அபு சுஃப்யான் அவர்கள்,  முஆவியா (ரலி) அவர்கள், யஜித் யாவரும்..


பனு ஹாஷிம் குடும்பத்தாருக்கும் பனு உமைய்யா குடும்பத்தாருக்கும் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே ஒத்து போகாத நிலை இருந்து வந்ததாக வரலாறு சொல்கிறது.


அந்த பகை பெருமானார் (ஸல்) காலத்தில் நடந்த பத்ரு யுத்தத்தில் ஹாஷிம் குடும்பத்தாரில் வந்த ஹம்ஜா (ரலி) அவர்கள் உமைய்யா குடும்பத்தாரில் வந்த உத்பா இப்னு ரபியா அவர்களை கொன்றதிலிருந்து உஹது போரில் பதிலுக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக உத்பாவின் மகளான ஹிந்த் என்பவர்கள் ஹம்ஜா (ரலி) அவர்களின் கொல்ல வைத்து குடலை உருவியெடுத்தையும் தாண்டி தொடர்ந்து கொண்டே இருந்தது.


பெருமானார் (ஸல்) அவர்களின் மக்கா வெற்றிக்கு பிறகு உமையாக்களின் குடும்பத்தாரில் வந்தவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் கரம் பிடித்து தூய இஸ்லாத்தில் இணைத்து கொண்டாட்ர்கள். 


பகை இத்தோடு ஒழிந்தது என்று நிம்மதியாக இருக்க முடியவில்லை..


மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் ஒரு கதை சொன்னார்கள், 


ஒரு பாம்பு ஒன்று நல்ல குளிர்காலத்தில் தன் உடலை வெளியே காட்ட முடியாமல் நடுங்கி ஒடுங்கி சுருங்கி படுத்து கொண்டதாம். ஆஹா பாம்பு இனி தலை தூக்காது என்று அதோடு நெருங்கி அதை அலட்சியமாக விட்டு விட்டால் கோடை காலம் தொடங்கியதும் அந்த பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தலை தூக்க ஆரம்பிக்குமாம். 


மௌலானா அவர்கள் நம் உள்ளத்திலே தோன்றுகின்ற துர் எண்ணங்கள் நாம் நல்லது செய்து கொண்டிருக்கும் போது மறைந்திருப்பதை பார்த்து ஏமாந்து விடக் கூடாது. அதற்கு எப்போது வேண்டுமானாலும் கோடை காலம் பிறக்கும் என்ற கருத்தின் அடிப்படையிலே அவ்வாறு கூறியிருப்பார்கள்.


அப்படி தான் இரு குலத்தாருக்கும் ஏற்பட்ட பகையானது மூன்றாவது கலிபாவும் உமையாக்களின் குலத்தில் வந்தவர்களுமான ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களின் ஷஹீது வரை அடங்கி இருந்தது. அதன் பிறகு அந்த பகை தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தது. 


அப்போது முஸ்லீம்களுக்கு இடையே ஆரம்பிக்கப்பட்ட அரசியல் பிளவு தான் ‘ஒன்று நீங்கள் எங்களோடு இருங்கள், அல்லது எங்கள் அரசியல் எதிரிகளாக இருங்கள்” 


அதாவது (நாகூர் பாஷையில்) ஒன்று சுன்னி மரைக்கானாக இருங்கள் அல்லது சியா மரைக்கானாக இருங்கள் என்ற false dichotomy எனும் கருத்தியலில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.


ரெஸ்டாரண்ட்டில் ‘டீயா, காபியா’ என்று கேட்பது போல் 


‘நீங்க சுன்னியா சியாவா’ என்றெல்லாம் கேட்கப்பட்டது (இப்போது சுன்னியிலே இருந்தால் ‘சுன்னத்து ஜமாத்தா வஹ்ஹாபியா?’ என்ற கேள்வி)


நான் சொல்வது தான் முற்றிலும் சரி, நீ சொல்வது முற்றிலும் தவறு என்று இருபாலரும் இருபக்கமாக நின்று கொண்டு கவிக்கோ அப்துற் றஹ்மான் அவர்கள் சொல்வது போல் ஒற்றுமை எனும் கயிற்றை ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்து இழுத்து பிச்சு போட்டு விட்டார்கள். 


ஜபருல்லாஹ் நானாவோ ஆபிதீன் நானாவோ சொன்னது போல் இனி புதிதாக தான் ஒரு கயிறு செய்ய வேண்டும்.

No comments: